கொடிக் கம்பங்கள் அகற்றும் உத்தரவு:அக்கறை காட்டட்டும் அரசு!
- தமிழ்நாட்டில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்குத் தடை கோரிய மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
- பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் வைக்கப்படுவதால் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை மனதில் கொண்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு பின்பற்றப்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
- தமிழ்நாடு முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்குச் சொந்தமான இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தனி நீதிபதி 2025 ஜனவரி 27இல் உத்தரவிட்டார்.
- இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மதுரை கொடிக்குளத்தைச் சேர்ந்த அமாவாசை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்தார். இதை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய மறுத்து, மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
- இந்த வழக்கில் சாலை ஓரங்களில் கொடிகள் வைப்பது கட்சிகளின் ஜனநாயக உரிமை என்று தமிழ்நாடு அரசு முன்வைத்த வாதத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சட்ட விதிகளின்படி பொது இடங்களில் அரசியல் கட்சிகளுக்கோ அமைப்புகளுக்கோ கொடிக் கம்பம் வைக்கும் அனுமதியை வழங்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், சாலைகளில் கொடிக்கம்பங்கள் அமைக்க வேண்டும் என்பதை ஜனநாயக உரிமையாகக் கருத முடியாது என்றும் உத்தரவில் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
- மேலும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் தங்களுக்குச் சொந்தமான இடங்களில் கொடிக் கம்பங்களை வைத்துக்கொள்ள வேண்டும்; அதற்கான வழிகாட்டுதல்களை அரசு உருவாக்க வேண்டும் என்கிற தனி நீதிபதியின் உத்தரவை அரசு கண்டிப்பாகச் செயல்படுத்த முன்வர வேண்டும். ஏற்கெனவே நகரச் சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்படாத கொடிக் கம்பங்களையும் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் 2019இல் உத்தரவிட்டதும் கவனிக்கத்தக்கது.
- கொடிக் கம்பங்கள் மட்டுமல்ல, சாலையோரங்களையும், நடைபாதையையும் ஆக்கிரமித்து ஃபிளக்ஸ் போர்டுகள் அமைக்கப்படுவதும் அதிகரித்திருக்கிறது. அரசியல் கட்சிகள், அமைப்புகள் மட்டுமல்லாமல் தனி நபர்களும் ஃபிளக்ஸ் போர்டுகள் வைக்கின்றனர். இவற்றால் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு, உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
- 2017இல் கோவையில் சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட அலங்கார வளைவால் ஏற்பட்ட விபத்தில் ரகு என்கிற இளைஞரும், 2019இல் சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த ஃபிளக்ஸ் போர்டு விழுந்து சுபஸ்ரீ என்கிற இளம் பெண்ணும் 2021இல் விழுப்புரத்தில் கட்சிக்கொடிக் கம்பம் நட்ட 13 வயதுச் சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கியும் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது. சுபஸ்ரீ வழக்கில் இனி ஃபிளக்ஸ் போர்டுகள் வைக்க மாட்டோம் என்று சில அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்தன.
- கொடிக் கம்பங்கள், ஃபிளக்ஸ் போர்டுகள் தொடர்பாக நீதிமன்றங்கள் அவ்வப்போது உத்தரவு பிறப்பித்தாலும், அவை சரிவர நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அதேநேரத்தில் ஃபிளக்ஸ்கள், கொடிக் கம்பங்களை அமைப்பதில் விதிமீறல்கள் நடப்பதாகவும், அவற்றை அரசு இயந்திரம் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் எழும் குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளிவிட முடியாது.
- எனவே, இனியாவது பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்கள், சட்டவிரோத ஃபிளக்ஸ் போர்டுகளை அகற்றுவதில் உள்ளாட்சி அமைப்புகள், மாநில அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகியவை முனைப்புக் காட்ட வேண்டும். மக்களுக்கு இடையூறாகவும் உயிருக்கு ஊறு விளைவிக்கும் இவற்றை இனியும் அனுமதிக்கக் கூடாது.
நன்றி: இந்து தமிழ் திசை (11 – 03 – 2025)