TNPSC Thervupettagam

கொடுத்தல் உறுதிமொழியும் ஒப்புரவறிதலும்

December 28 , 2022 675 days 359 0
  • மேற்குலக நாடுகளில் இப்போது பரவி வரும் ஒரு கருத்தியல் "கொடுத்தல் உறுதிமொழி' என்பதாகும். இதை ஆங்கிலத்தில் "தி கிவிங் பிளெட்ஜ்' என்று குறிப்பிடுவார்கள். இதன் பொருள் "உதவி தேவைப்படுபவர்களுக்குக் கொடுத்து உதவ உறுதி பூணுவது' என்பதாகும். இத்திட்டத்தின்படி ஒவ்வொரு கோடீஸ்வரரும் தன்னிடம் இருக்கும் செல்வத்தில் பாதியை அறச்செயல்களுக்குப் பயன்படுத்த உறுதி பூண வேண்டும்; அதற்கான ஒரு ஒப்புதல் கடிதத்தை அதற்கென உள்ள அமைப்பில் கொடுத்து வைத்துவிடவேண்டும்.
  • "கொடுத்தல் உறுதிமொழி' அமைப்பினை உலகப் பெரும் பணக்காரர்களான பில்கேட்ஸும் வாரன் பப்பெட்டும் இணைந்து தொடங்கினர். 2010-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் உறுப்பினர்களாகப் பலர் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த அமைப்பில் உறுப்பினர்களைச் சேர்க்க, பில்கேட்ஸ், வாரன் பப்பெட் இருவரும் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக 2011-ஆம் ஆண்டில் 81 கோடீஸ்வரர்கள் இதில் இணைந்தனர்.
  • இதில் செலவழிக்க உறுதி செய்யப்பட்ட தொகை ரூ. 12,500 கோடியாக இருந்தது. இது படிப்படியாக வளர்ந்து 2017-ஆம் ஆண்டில் 158 உறுப்பினர்களைக் கொண்டதாக மாறியது. இப்போது இந்த அமைப்பில் 236 பேர் இணைந்திருக்கின்றனர்; இந்த அமைப்புக்கு உறுதிப்படுத்தப்பட்ட நன்கொடைத் தொகை சுமார் ரூ. 60,000 கோடி என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
  • இந்த அமைப்பில் உறுப்பினர்களாக விரும்புபவர்கள், ஒரு கடிதத்தின் மூலம் தங்கள் விருப்பத்தினைத் தெரிவித்துத் தாங்கள் செலவிடத் தயாராக இருக்கும் தொகையையும் குறிப்பிட வேண்டும். உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்குத் தேவைப்படும் தருணத்தில் இந்தத் தொகை செலவிடப்படும். இயற்கைப் பேரிடர், அரசியல், சமூகச் சூழ்நிலை காரணமாக ஏற்படும் பேரிழப்புகள் போன்றவற்றால் மக்கள் துன்பத்திற்கு ஆளாகும்போது தக்க சான்றாதாரங்களின் பேரில் இத்தொகை செலவிடப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
  • பொதுவான நன்கொடைகளுக்கும் இந்த கொடுத்தல் உறுதிமொழிக்கும் உள்ள வேறுபாடு நிதி வழங்கப்படும் நேரத்தில் மட்டுமே உள்ளது. நன்கொடை என்பது கேட்ட உடனே வழங்கப்படுவது; கொடுத்தல் உறுதிமொழி என்பது உதவி தேவைப்படும்போது வழங்கப்படுவது. உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர்கள் அல்லது அவர்களின் சார்பாளர்கள் புகைப்படங்கள், காணொலிகள் போன்றவற்றின் மூலமாகத் தேவைப்படும் உதவி குறித்து விண்ணப்பித்து நிதியுதவியைப் பெறலாம் என்பது இந்த அமைப்பு பின்பற்றும் நடைமுறையாகும்.
  • பில்கேட்ஸ், வாரன் பப்பெட் இருவரும் இந்த அமைப்பினைத் தொடங்குவதற்கு முன்னோடியாக ஸ்காட்லாந்தில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த ஆண்ட்ரூ கார்னகி இத்திட்டத்தைச் செயலில் காட்டினார். 1835-இல் பிறந்த கார்னகி, தனது 13-ஆவது வயதில் அமெரிக்காவிற்குச் சென்று ஒரு ரயில் நிலையப் பணியில் சேர்ந்து, முப்பதாவது வயதில் சொந்தத் தொழிலில் இறங்கி 40-ஆம் வயதிற்குள் பெரும் தொழிலதிபராக வளர்ந்தார்.
  • அமெரிக்க ஐக்கிய நாடு பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சியை அடைய இவரும் ஒரு காரணமாக அமைந்தார். ஆனாலும் மனநிறைவு அடையாத கார்னகி, அதிரடியான ஒரு முடிவை மேற்கொண்டார்; தனது சொத்துகள் அனைத்தையும் விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு நியூயார்க் நகரின் பொது நூலகத்திற்கு 50,00,000 டாலர்களை வழங்கினார்; பல கல்வி நிலையங்களைப் புதிதாகத் தொடங்கினார்; நூற்றுக்கணக்கான நூல்நிலையங்களை நாடெங்கிலும் நிறுவினார்.
  • செல்வமானது அனைவருக்கும் பயன்படும்போதுதான் முழுமையடைகிறது என்ற கருத்தை விளக்கி இவர் எழுதிய "தி காஸ்பெல் ஆஃப் வெல்த்' (செல்வத்தின் நற்செய்தி) என்ற புத்தகம் 1900 ஆண்டில் வெளிவந்தது.
  • இருபதாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட "கொடுத்தல் உறுதிமொழி' அமைப்பின் கருத்தியல் அடித்தளம் (ஐடியலாஜிகல் ஃபௌண்டேஷன்) தமிழில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனிதநேயம் மிக்க ஓர் அறிஞரால் முன்மொழியப்பட்டுள்ளது. உலகப் பொதுமறை எனப்படும் திருக்குறளில் வள்ளுவப் பேராசான் "ஒப்புரவறிதல்' என்ற தலைப்பில் எழுதியுள்ள பத்துக் குறட்பாக்கள் மேலே குறிப்பிட்ட "கொடுத்தல் உறுதிமொழி'யின் அடிப்படைக் கருத்துக்களுடன் ஒப்புமையுடையனவாக இருக்கின்றன.
  • "ஒப்புரவறிதல்' என்ற சொல்லின் பொருள், உலக நடையினை அறிந்து செய்தல். உலக நடை வேத நடை போல அறநூல்களில் கூறப்படுவதன்றித் தாமே அறிந்து செய்யுந்தன்மைத்தாதலின் ஒப்புரவறிதல் என்றார். பரிமேலழகரின் இக்கூற்று "கொடுத்தல் உறுதிமொழி'யின் அடிப்படைகளைத் தொட்டு நிற்கிறது.
  • கொடுத்தல் உறுதிமொழித் திட்டத்தில், தேவைப்படும் உதவியை வழங்குபவர் நேரில் தக்க சான்றுகளுடன் நன்கு உணர்ந்து தேவையான அளவிற்குக் கொடுப்பார். இந்த நடைமுறை பரிமேலழகர் கூறும் தாமே அறிந்து செய்யுந்தன்மைத்தாதலின்... என்ற கருத்துடன் இயைபுபட்டு நிற்பது விரித்துரையாமலே விளங்கும் .
  • "செல்வத்தின் நற்செய்தி' நூலை எழுதிய ஆண்ட்ரூ கார்னகி, செல்வத்தின் பயன் பிறருக்குக் கொடுப்பதில்தான் அடங்கியுள்ளது என்று கூறினார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மனித வாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்த வள்ளுவர்,

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு.

  • என்று கூறினார்.
  • சங்கப் புலவர்களுள் தலையாயவரான நக்கீரர், "செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்போம் எனினே தப்புன பலவே' என்று கூறினார். செல்வம் குறித்து மேலும் பல கருத்துகள் கூறப்பட்டி ருக்கின்றனவெனினும் இவை இரண்டும் இங்கு இன்றியமையாது வேண்டப்படுகின்றன. தாளாற்றி... என்று தொடங்கும் குறட் பாவிற்குப் பரிமேலழகர்,
  • "தகுதியுடையார்க்காயின் முயறலைச் செய்து ஈட்டிய பொருள் முழுவதும் ஒப்புரவு செய்தற்பயத்தவாம். பிறர்க்கு உதவாதார் பொருள் போலத் தாமே உண்டற் பொருட்டும் வைத்து இழத்தற் பொருட்டும் அன்று என்பதாயிற்று' என்று விளக்கம் கூறுவது கவனிக்கத்தக்கது.
  • எனவே ஒருவர் தனது முயற்சியினால் ஈட்டிய பொருளைப் பிறரின் இன்றியமையாத தேவைகளை நிறைவு செய்துகொள்ளத் தந்துதவலாம். இது "தாளாற்றித் தந்த பொருள்' என்று வள்ளுவரால் குறிப்பிடப்பட்டது.
  • "தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு' என்று திருவள்ளுவர் குறிப்பிட்டது மிக இன்றியமையாத கருத்து. ஒருவருக்கு உதவி செய்ய முற்படும்போது அந்த உதவிக்கு அவர் எவ்வகையில் தகுதியுடையவர் என்பதை ஆராய்ந்து செய்ய வேண்டும். ஒருவர் தான் பெற்ற உதவியை மறக்காமல் தன்னைப் போலவே துன்பத்தில் உழல்கிறவர்க்கும் உதவும் மனமுடையவராக இருக்கிறாரா, அல்லது பெற்றதைத் தானே வைத்துக் கொள்ளும் மனப்பாங்கு உடையவரா என்பதை அறிந்து செய்தல் வேண்டும்.
  • "வேளாண்மை' என்ற சொல்லுக்கு உபகாரம், ஈகை, உழவுத் தொழில், தியாகம், மெய் என்ற பொருள்களும் உண்டு. ஒருமுறை விதைக்கப்பட்ட விதையானது ஒன்று பலவாகக் கிளைத்து மீண்டும் எழுவதைப்போல ஒருவருக்குச் செய்யப்பட்ட உதவி, பலருக்கும் கிடைப்பதாக இருக்க வேண்டும் என்பதால்தான் கொடையைக் குறிக்க "வேளாண்மை' என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
  • தான் பெற்ற பொருளை ஒருவர் தானே வைத்துக் கொள்ளாமல் பிறருக்கும் பயன்படச்செய்ய வேண்டும். அவ்வாறு செய்பவரே "தக்கார்' எனப்படுவார். வள்ளுவர் குறிப்பிடும் "தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு' என்ற அடியில் வரும் "தக்கார்' பெற்றதைப் பிறருக்குக் கொடுக்கும் உள்ளமுடையவர் என்பதை உணர்தல் நல்லது.
  • வள்ளுவர் குறிப்பிடும் பண்புகளுடைய "தக்கார்' உண்மையிலேயே இருக்கிறார்களா என்ற ஐய வினாவுக்கு விடையும் சங்க இலக்கியத்திலேயே உள்ளது. புறநானூற்றில் பெருஞ்சித்திரனார் என்ற புலவர் திருந்துவேல் குமணனிடம் பெற்றுவந்த பரிசில்களை மனைவியிடம் கொடுத்து,"நீ இப்பரிசில்களை உனக்கென்று வைத்துக் கொள்ளாமல் உன்னை விரும்பியவர்களுக்கும் உன்னால் விரும்பப்பட்டவர்களுக்கும் உன் உறவினர்களுக்கும் நாம் முன்னர்ப் பசித்திருந்த காலத்தில் உதவி செய் தவருக்கும் இவர் இத்தகையோர் என்று ஆராயாது எல்லோருக்கும் கொடுப்பாயாக. கொடுப்பதற்கு என் அனுமதியையும் நீ எதிர்பார்க்கவேண்டாம்; என் அனுமதியின்றியே எல்லோருக்கும் கொடுப்பாயாக. இப்பொருள்களிருந்தால் நாம் வளமுடன் வாழலாம் என்று நினைத்துக் கொண்டு இப்பொருள்களைச் சேமித்து வைக்காமல் எல்லோருக்கும் கொடுப்பாயாக' என்று கூறுகிறார்.

உலக இலக்கியங்களில் எங்கும் காணக்கிடைக்காத தனித்தன்மை மிக்க அப்பாடல் பின்வருமாறு பாடப்பட்டுள்ளது:

நின் நயந்து உறைநர்க்கும் நீ

நயந்துறைநர்க்கும்

பல் மாண் கற்பின் நின் கிளை

முதலோர்க்கும்

கடும்பின் கடும்பசி தீர யாழ நின்

நெடுங்குறி யெதிர்ப்பை நல்கியோர்க்கும்

இன்னோர்க்கு என்னாது என்னொடும் சூழாது

வல்லாங்கு வாழ்தும் என்னாது ,நீயும்

எல்லோர்க்கும் கொடுமதி மனை

கிழவோயே

பழம் தூங்கு முதிரத்துக் கிழவன்

திருந்து வேல் குமணன் நல்கிய

வளனே (புறம்:163)

  • புறநானூற்றுப் புலவரான பெருஞ்சித்திரனார் மட்டுமல்ல; இவரைப் போன்ற ஆயிரமாயிரம் மக்கள் இந்நாட்டில் பண்டைக்காலத்தில் இத்தகைய நற்பண்புகளுடன் வாழ்ந்திருந்திருப்பார்கள்; அங்ஙனம் இருந்திருந்தால் மட்டுமே இதைப் போன்ற சிந்தனைகள் வெளிவந்திருப்பதற்கு வாய்ப்புண்டு.
  • இதைச் சரியாகக் கண்டெடுத்து ஒரு குறட்பாவாக வள்ளுவர் மாற்றித் தந்துள்ளார் என்பதிலே நமக்குப் பெருமை. "கொடுத்தல் உறுதிமொழி' என்ற நற்சிந்தனையை இந்நூற்றாண்டில் மேற்கு உலகினர் கண்டனர். இச்சிந்தனையை வள்ளுப் பேராசான் ஒரு விதியாகப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அமைத்து வைத்தார்; அவருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பண்டைத் தமிழர் இதை ஒரு வாழ்க்கை நெறியாக வாழ்ந்து காட்டினர்.
  • இத்தகைய செய்திகளைப் படிக்கும்போது இன்பத் தமிழ் மொழி பேசும் இந்நாட்டில் பிறப்பதற்கு "நல்ல மாதவம் செய்திருந்தோமோ' என்ற எண்ணம் தோன்றுகிறது; அதில் தவறில்லையே!

நன்றி: தினமணி (28 – 12 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்