TNPSC Thervupettagam

கொதிக்கும் பூவுலகு

August 2 , 2023 475 days 293 0
  • புவி வெப்பமாதலின் யுகம் முடிந்து ‘புவி கொதிக்கும்’ (global boiling) காலகட்டம் தொடங்கியிருப்பதாக, ஐ.நா. அவையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் ஜூலை 27 அன்று பேசியுள்ளார். இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள மனித குல வரலாற்றில், 2023 ஜூலை மாதம் மிக அதிக வெப்பம் நிலவிய மாதமாகப் பதிவாகியிருப்பதாகக் காலநிலை அறிவியலாளர்கள் அறிவித்துள்ளதன் பின்னணியில், குட்டர்ஸ் இப்படிப் பேசியிருக்கிறார். புவியின் வடக்கு அரைக்கோளத்தில் (Northern Hemisphere) நிலவிய கடும் வெப்பத்தை, ‘கொடூரக் கோடை’ என்று குறிப்பிட்ட அவர், ‘ஒட்டுமொத்தப் பூவுலகுக்கும் இது பேரழிவு’ என எச்சரித்துள்ளார்.
  • ஜூலை மாதம் தொடங்கியதிலிருந்தே உலகின் பல்வேறு பகுதிகளில், இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவாகிக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் அதிக வெப்பம் நிலவிய இந்த ஜூலை மாதம், ‘குறிப்பிடத்தகுந்ததும் முன்கணித்து இராததும்’ ஆக இருந்தது என உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனம் (WMO), ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபர்நிகஸ் காலநிலை மாற்றத்துக்கான சேவை (C3S) ஆகிய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
  • ஜூலை மாதத்தின் சராசரி வெப்பநிலை 16.95 டிகிரி செல்சியஸ் என்கிற அளவில் இதுவரை நிலவிவந்தது; ஆனால், அந்த அளவு வழக்கத்தைவிடத் தற்போது 0.2 டிகிரி செல்சியஸ் உயர்ந்திருக்கிறது. இது குறைவான அளவாகத் தோன்றலாம். ஆனால், ஒட்டுமொத்தப் புவிக்குமான சராசரி என்கிற அளவில், இது மிகவும் அதிகம் என அறிவியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

புவி வெப்பமாதல் என்றால் என்ன?

  • புவியின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பது, புவி வெப்பமாதல் (global warming) என்று வழங்கப் படுகிறது. 18-19 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியக் கண்டத்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவால், புதைபடிவ எரிபொருள்களை (fossil fuels) அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி முறையில் மேற்கத்திய நாடுகள் இறங்கின; நவீன உலகின் பொருளியல் முறையாக முதலாளித்துவம் உருப்பெற்றது. எந்த வரைமுறையும் இல்லாத, கட்டுப்பாடற்ற புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாடு, வளிமண்டலத்தில் கரியமில வாயு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்களின் (greenhouse gases) அளவை அதிகரித்தது.
  • புவியில் மனித குலம் தோன்றியதிலிருந்து தொழிற்புரட்சிக்கு முந்தைய காலம்வரை வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு 300 பி.பி.எம். (PPM – கன அளவில் 10 லட்சத்தில் ஒரு பங்கு) என்கிற அளவில் தொடர்ந்துவந்ததால், புவியின் சராசரி வெப்பநிலையும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உயரவில்லை. ஆனால், புதைபடிவ எரிபொருள்களின் தடையற்ற தொடர் பயன்பாடும் அதனால் இன்னும் வெளியேறிக்கொண்டிருக்கும் பசுங்குடில் வாயுக்களும் மிக மோசமான விளைவுகளைத் தற்போது ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு இன்று 418 பி.பி.எம்.
  • அளவைக் கடந்துவிட்டது
  • புவியின் சராசரி வெப்பநிலையோ தொழிற்புரட்சிக்கு முந்தைய காலகட்டத் துடன் ஒப்பிடுகையில், சுமார் ஒரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதிதீவிர வானிலை நிகழ்வுகள்: அமெரிக்காவின் ஃபுளோரிடாவில், கடற்பரப்பு வெப்பநிலை 101.1 டிகிரி ஃபாரன்ஹீட் (38 டிகிரி செல்சியல்) என்கிற புதிய உச்சத்தை எட்டியது, அறிவியலாளர்களைத் திகைக்க வைத்திருக்கிறது; காட்டுத்தீ பரவியதன் காரணமாகக் கிரேக்கத்தின் ரோட்ஸ் தீவிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சமீபத்தில் வெளியேற நேர்ந்தது; கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீயின் காரணமாக அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில் புகை சூழ்ந்தது; வட மேற்கு சீனாவில் சான்போ என்கிற சிற்றூரில் வெப்பநிலை ஜூலை 16 அன்று 52.2 டிகிரி செல்சியஸ் என்கிற புதிய உச்சத்தை எட்டியது; வடக்கு, மேற்கு இந்தியாவில் சமீபத்தில் பெய்த கனமழையின் விளைவுகளையும் நாம் பார்த்தோம்.
  • இப்படியாகப் புயல், மழை போன்ற இயல்பான வானிலை நிகழ்வுகள், புவி வெப்பமாதலால் தீவிரம் பெற்று அதிதீவிர வானிலை நிகழ்வுகளாக (extreme weather events) மாறியிருக்கின்றன; கணிப்பில் தவறுவதும் முன்கணிக்க முடியாததுமாகவும் அவை மாறியிருக்கின்றன. அந்த வகையில், உலகம் முழுவதும் அதிதீவிர வானிலை நிகழ்வுகள் இப்போது ‘புதிய இயல்பு’ (new normal) என்கிற நிலையை எட்டியிருக்கின்றன.

எல் நினோவின் தாக்கம்:

  • கிழக்கு பசிபிக் கடலை ஒட்டியுள்ள பகுதிகளில், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் காலநிலை நிகழ்வுகளின் தொகுப்புக்கு எல் நினோ தெற்கு அலைவு (El Nino Southern Oscillation) என்று பெயர்; இதில் முதன்மையாக இரண்டு நிலைகள் உண்டு: ஒன்று, எல் நினோ (El-Nino) எனப்படும் வெப்பமான காலகட்டம்; மற்றொன்று, லா நினா (La Nina) எனப்படும் குளிர்ந்த காலகட்டம்.
  • இரண்டுக்கும் இடையிலான சமநிலை (Neutral Phase) காலகட்டமும் உண்டு. தென் அமெரிக்கக் கடற்பகுதியில் ஏற்படும் இந்த நிகழ்வு, உலகெங்கிலும் உள்ள காலநிலையைப் பாதிக்கும் ஆற்றல் கொண்டது. குறிப்பாக, உலக நாடுகளின் சராசரி வெப்பநிலை, மழைப்பொழிவு ஆகியவை தெற்கு அலைவைப் பொறுத்தே அமையும். லா நினா (குளிர்ந்த காலகட்டம்) 2020 முதல் நிலவிவந்தாலும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் சராசரி வெப்பநிலை அதிகமாகவே இருந்தது.
  • தற்போது எல் நினோ தொடங்கிவிட்டதாகக் கூறப்படும் நிலையில், அதன் விளைவுகள் ஜூலை மாதத்தின் சராசரி வெப்பநிலையில் தாக்கம் செலுத்தியிருப்பதாகவே கருத முடியும். புவியின் சராசரி வெப்பநிலை, 1.5 டிகிரி செல்சியஸ் என்கிற அளவை மீறிவிடாமல், கட்டுக்குள் இருக்க வேண்டும் என அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். 1.5 டிகிரி செல்சியஸ் என்கிற மிக மோசமான நிலையைத் தவிர்ப்பதற்கு, ‘உடனடி நடவடிக்கை தேவை’ என குட்டர்ஸ் அறைகூவல் விடுக்கிறார். உலக நாடுகளின் தலைவர்கள் செவிமடுப்பார்களா?

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்