TNPSC Thervupettagam

கொத்தடிமை முறை ஒழிப்பு தேவை உடனடி முன்னுரிமை

November 1 , 2023 426 days 269 0
  • இந்தியாவில் 1978இலிருந்து 2023 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் 3,15,302 பேர் கொத்தடிமை முறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர், ஜவுளி - திறன்வளர்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்டவர்களில் 94 சதவீதத்தினருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டிருக்கிறது. எனினும், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் கொத்தடிமை முறையில் சிக்கியுள்ள 1.84 கோடிப் பேரும் மீட்கப்பட்டு, இந்தியாவில் கொத்தடிமை முறை ஒழிக்கப்படும் என்னும் இலக்கை 2016இல் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்த நிலையில், அந்த அறிவிப்புக்குப் பிறகு, 32,873 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர்.
  • கொத்தடிமை முறையை முற்றிலும் ஒழிக்கும் மத்திய அரசின் இலக்கை அடைய நாம் இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியிருப்பதையே இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன.
  • ஒருவர் தான் கொடுத்த கடனுக்காகக் கடன் வாங்கியவரையும் அவருடைய குடும்ப உறுப்பினர்களையும் அல்லது அவரைச் சார்ந்திருப்போரையும் தனது பணியாளர்களாக நியமித்துக்கொண்டு, அடிமைபோல் நடத்துவதே கொத்தடிமை முறையாகும். நவீனகால அடிமைத்தனமான கொத்தடிமை முறை இந்தியாவில் 1976இல் சட்டம் இயற்றித் தடை செய்யப்பட்டது. ஆனாலும் இன்றளவும் இந்தக் கொடுமை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. மீட்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதிலும் சுணக்கம் காணப்படுகிறது.
  • 2022 பிப்ரவரியில் கொத்தடிமை முறையிலிருந்து மீட்கப்படும் தொழிலாளிக்கு ரூ.30,000 உடனடியாக வழங்கும் வகையில் அரசின் மறுவாழ்வுத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. மீட்கப்படும் ஆண்களுக்கு ரூ.1 லட்சம், பெண்கள், குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம், திருநர்கள் - பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் மொத்த நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது வரவேற்கத்தக்கது. அத்துடன் வீடு, விவசாய நிலம், மலிவுவிலைக் குடியிருப்புகள் ஆகிய பணம் அல்லாத உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.
  • கொத்தடிமை முறையில் சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் ஆட்சியர்/துணை ஆட்சியர் அதற்கான விடுவிப்புச் சான்றிதழை வழங்கினால்தான், மீட்கப்பட்டவர்கள் அரசு நிவாரணத்தையும் பிற உதவிகளையும் பெற முடியும். ஆனால். இந்தச் சான்றிதழைத் தருவதில் தேவையற்ற தாமதம் நிலவுகிறது. கொத்தடிமை முறையை ஒழிப்பதற்கான தேசியப் பிரச்சாரக் குழு என்னும் அரசுசாரா அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின்படி 2022இல் மீட்கப்பட்ட 212 பேரில் 141 பேருக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டு, அவர்களில் 27 பேருக்கு உடனடி நிவாரணத் தொகையான ரூ.30,000 வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு இதுவரை மீட்கப்பட்டுள்ள ஒருவருக்குக்கூட விடுவிப்புச் சான்றிதழும் மறுவாழ்வு உதவிகளும் வழங்கப்படவில்லை.
  • கொத்தடிமை முறை தொடர்வது தெரியவந்தால், அரசுக்கு அவப்பெயர் கிடைக்கும் என்று மாநில அரசுகள் கருதுவதே இதற்கு முதன்மையான காரணம் என்று செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர். அதோடு, கொத்தடிமை முறையை அடையாளம் காண்பதற்கு அதிகாரிகளுக்குப் போதிய விழிப்புணர்வும் பயிற்சியும் இல்லை என்பதும் தாமதத்துக்கான காரணமாகச் சொல்லப்படுகிறது.
  • கொடிய மனித உரிமை மீறலான கொத்தடிமை முறையை முற்றிலும் ஒழிப்பதை முன்னுரிமையாகக் கொண்டு, மத்திய - மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மீட்புப் பணிகளிலும் நிவாரணம், மறுவாழ்வு அளிப்பதிலும் நிலவும் தாமதம் களையப்பட வேண்டும். விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், மாவட்ட அளவிலான கணக்கெடுப்புகள் உரிய கால இடைவெளியில் நடத்தப்பட்டு, பொதுமக்கள் பங்கேற்புடன் கொத்தடிமை முறை இல்லாத இந்தியா உருவாக்கப்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்