TNPSC Thervupettagam

கொலம்பஸும் குழப்பமும்

September 3 , 2024 85 days 141 0

கொலம்பஸும் குழப்பமும்

  • கிறிஸ்டோபர் கொலம்பஸைப் பற்றித் தெரியாதவர்கள் குறைவு. இந்தியாவைக் கண்டறிந்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு கப்பலில் புறப்பட்டவர், இறுதியில் கண்டுடறிந்தது இந்தியாவை அல்ல, அமெரிக்காவை!
  • சிறு வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். அப்படித்தான் கொலம்பஸுக்கும் ஒரு கனவு இருந்தது. புதிய நாடுகளைக் கண்டறிய வேண்டும் என்கிற கனவு.
  • இந்தக் கனவை நனவாக்க பதினான்காவது வயதிலேயே மாலுமியானார் கொலம்பஸ். 1476ஆம் ஆண்டு கடல் வழியாக ஐஸ்லாந்திற்கும் இங்கிலாந்திற்கும் கொலம்பஸ் சென்றார். ஆனால், ஆசியாவுக்கு முக்கியமாக இந்தியாவுக்குக் கடல்வழி மார்க்கத்தைக் கண்டறிய வேண்டும் என்பதுதான் அவரது தனியாத ஆர்வம்.
  • இதற்குப் பல காரணங்கள் இருந்தன. புதிய நாடுகளைக் கண்டறிய வேண்டும் என்கிற ஆசை ஒரு காரணமாக இருந்தாலும், முக்கியமான வேறு ஒரு காரணமும் இருந்தது. நிறைய பொருள் சேர்த்துப் பெரும் பணக்காரனாக மாற வேண்டும் என்பதுதான் அது. அதற்கு ஒரே வழி வணிகம் செய்வதுதான் என்று முடிவெடுத்தார். அதுவும் அப்போது இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் தயாராகும் பொருள்களுக்கு ஐரோப்பாவில் நல்ல விலை இருப்பதை அறிந்தார். முறையான கடல்வழி மார்க்கம் இல்லாத அந்தக் காலக்கட்டத்தில் மொத்த வணிகமும் தரை வழியாகத்தான் நடைபெற்றன. அப்போது ஆசியாவின் வர்த்தக மையமாக மலேசியா இருந்தது என்று வரலாறு கூறுகிறது.
  • இந்தியா, சீனா, இந்தோனோசியா, மத்தியத் தரைக்கடல் நாடுகளில் இருந்து வரும் அரேபியர்கள் மலேசியாவில் கூடுவார்கள். தாங்கள் கொண்டு வந்த பேரீச்சம்பழம், கலை நயமிக்க தரை விரிப்புகள், அரேபியக் குதிரைகள் ஆகியவற்றைக் கொடுத்துவிட்டு, அவற்றுக்கு ஈடாகப் பருத்தி மற்றும் சீனப் பட்டு ஆடைகள், மிளகு, கிராம்பு போன்ற நறுமணப் பொருள்கள், பவளம், கோமேதகம் போன்ற விலையுயர்ந்த கற்கள் போன்றவற்றை வாங்கிக்கொள்வார்கள். அவற்றை ஒட்டகங்களின் முதுகில் ஏற்றிக்கொண்டு தரைவழி மார்க்கமாக ஐரோப்பாவை அடைவார்கள். அங்கே இந்தப் பொருள்களை ஐரோப்பியர்கள் தங்கம் கொடுத்து வாங்குவார்கள்.
  • ஐரோப்பாவில் மிளகு, கிராம்பு போன்ற நறுமணப் பொருள்களுக்கு அப்போது அதிக கிராக்கி இருக்கும். விலையும் அதிகம். ஏனெனில், குளிர்காலத்தில் மாமிசங்களைப் பதப்படுத்தி வைப்பதற்கு அவை உதவின. அத்தியாவசியத் தேவையான இந்த நறுமணப் பொருள்கள், இந்தியாவில் இருந்து வருகின்றன என்பது ஐரோப்பியர்களுக்கு தெரியும். ஆனால், இந்தியா எங்கிருக்கிறது என்பது தெரியாது.

ராணியின் உதவி:

  • இந்தியாவிற்குக் கடல்வழி மார்க்கம் கண்டுபிடித்தால், அந்தப் பொருள்களை நேரடியாகக் கொள்முதல் செய்யலாம். மேலும், அரேபிய இடைத்தரகர்கள் வைப்பதுதான் விலை என்ற நிலையும் இருந்ததால், தேவையில்லாமல் இடைத்தரகர்கள் எதற்கு என்று நினைத்தனர்.
  • கொலம்பஸுக்கும் அந்த எண்ணம் இருந்தது. இந்தியாவுக்குக் கடல் வழி மார்க்கம் கண்டுபிடித்தால், அங்கிருந்து நேரடியாக நறுமணப் பொருள்களையும் பருத்தி உள்ளிட்ட துணி வகைகளையும் கொண்டு வந்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்று நினைத்தார். இது தவிர, இந்தியாவைப் பற்றி அரேபியர்கள் சொன்ன கதைகளும் அவருக்கு இந்தியாவைக் காணும் ஆவலைத் துாண்டின.
  • தனது முயற்சிக்கு உதவுமாறு அவர் இங்கிலாந்து மற்றும் போர்ச்சுகல் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார். ஆனால், அது வீண்முயற்சி என்று நினைத்ததாலோ என்னவோ அந்த இரு அரசாங்களும் உதவ மறுத்தன. இறுதியில் அவருக்குக் கைகொடுத்தவர் ஸ்பெயின் தேசத்தின் ராணி இசபெல்லா. கொலம்பஸுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ததோடு அவர் கண்டறியும் அனைத்துப் புதிய நிலங்களுக்கும் அவரையே ஆளுநராக நியமிப்பதாகவும் உறுதிகூறினார் ராணி இசபெல்லா. அதுமட்டுமல்ல புதிய தேசங்களில் இருந்து கொலம்பஸ் கொண்டுவரும் சொத்துகளில் பத்தில் ஒரு பங்கை அவருக்கே கொடுப்பதாகவும் உறுதியளித்து அனுப்பிவைத்தார்.

தொடங்கியது பயணம்:

  • 1492ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் நாள் 41 வயதில் தனது கனவை நோக்கிப் புறப்பட்டார் கொலம்பஸ். சாண்டா மரியா, நின்யா, பின்டா ஆகிய மூன்று கப்பல்களில் 100 ஊழியர்கள் அவருடன் பயணித்தனர். சுமார் இரண்டு மாதங்கள் கடலில் அலைந்த கொலம்பஸுக்கு அக்டோபர் 12ஆம் நாள் நிலம் கண்ணில் பட்டது.
  • இந்தியா அல்ல.
  • இந்தியாவையே கனவு கண்டுகொண்டிருந்ததால் இந்தியாவை அடைந்துவிட்டதாக எண்ணி மகிழ்ந்தார் கொலம்பஸ். ஆனால், அவர்கள் நங்கூரமிட்டது இந்தியா அல்ல வட அமெரிக்காவின் பகாமஸ் தீவு. இந்த விஷயம் அவருக்கு அப்போது மட்டுமல்ல, இறக்கும் வரை தெரியாது என்பதுதான் விசித்திரமான உண்மை. (1498ஆம் ஆண்டு வாஸ்கோடகாமாவால் இந்தியா கண்டறியப்பட்டது.) அதன் பிறகு அவர் மேலும் சில கடல் பயணங்கள் மேற்கொண்டு கெனேரித் தீவுகள், பனாமா போன்ற நாடுகளையும் பல சிறிய தீவுகளையும் கண்டறிந்தார்.
  • அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிப் பயணங்களால்தான் ஐரோப்பாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் இடையிலான கடல்வழி வர்த்தகத்திற்கு வழி பிறந்தது. ஸ்பெயினில் தங்கியிருந்த கொலம்பஸ் 1506ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் நாள் 55 வயதில் காலமானார். தனது கடைசி மூச்சு வரை இந்தியாவைக் கண்டுபிடித்துவிட்டதாகவே நம்பியிருந்தார் கொலம்பஸ்.
  • இறந்த பிறகு தனது உடலை, தான் முதன் முதலில் கண்டுபிடித்த பகுதியிலேயே புதைக்க வேண்டும் என்று உயில் எழுதிவிட்டு கொலம்பஸ் 1506ஆம் ஆண்டு இறந்துபோனார். அந்தக் காலக்கட்டத்தில் அமெரிக்காவில் தகுந்த தேவாலயங்கள் இல்லை. எனவே, அவரது உடல் ஸ்பெயின் வல்லாடோலிட்டில் புதைக்கப்பட்டது.
  • சில நாள்கள் கழித்து அவரது உடல் கல்லறையில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு, சிவைல் மடாலயத்துக்கு மாற்றப்பட்டது. 1542ஆம் ஆண்டு, மீண்டும் அந்த உடல் அங்கிருந்து எடுக்கப்பட்டு ஹிஸ்பனியோலா என்கிற இடத்துக்கு அனுப்பப்பட்டது. அதன் பிறகு அது தற்போது டொமினிகன் குடியரசின் தலைநகராக இருக்கும் சான்டோ டொமின்கோவில் புதைக்கப்பட்டது.
  • 17ஆம் நூற்றாண்டின் முடிவில், ஸ்பெயின் ஹிஸ்பானியோலாவின் மேற்குப் பகுதிகளை பிரான்சிடம் இழந்தது. அதன் காரணமாக கிறிஸ்டோபர் கொலம்பஸ்சின் உடல் கியூபாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 1898ஆம் ஆண்டு கியூபா சுதந்திரம் அடைந்த பிறகு, கொலம்பஸின் உடல் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடைசி முறையாகக் கடந்து, சீவைலில் இருக்கும் தேவாலயத்துக்குக் கொண்டு வந்து புதைக்கப்பட்டது.

கொலம்பஸ் நினைவகம்:

  • டொமினிகன் குடியரசின் தலைநகரில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்கிற பெயர் பொறிக்கப்பட்ட ஒரு பெட்டியில் இருந்து சில எலும்புகள் எடுக்கப்பட்டன. அவை அங்கே கொலம்பஸ் நினைவகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
  • ஆனாலும், சீவைலின் அருகே புதைக்கப்பட்ட கொலம்பஸின் சகோதரர் டிகோவின் டி.என்.ஏவும் அங்கே புதைக்கப்பட்ட கொலம்பஸின் உடல் என்று கருதப்படும் உடலின் டி.என்.ஏவும் ஒத்துப்போவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

செல்வச் செழிப்பு:

  • கொலம்பஸ் கண்டறியும் ஏதேனுமொரு நிலப்பகுதிக்கு அவரை ஆளுநராக நியமிப்பதாக அவருக்கு இசபெல்லா அரசி வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, கொலம்பஸ் கண்டறிந்த நிலப் பகுதிக்கு அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆனால், நிர்வாகி என்கிற முறையில் அவர் திறமையற்றவராக இருந்தார். எனவே, அவர் ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுக் கைவிலங்குடன் ஸ்பெயினுக்கு அனுப்பப்பட்டார். ஸ்பெயினில் அவர் விடுதலை செய்யப்பட்ட போதிலும் அதன் பின்னர் அவருக்கு நிர்வாகப் பதவி எதுவும் அளிக்கப்படவில்லை. அவர் இறுதி நாள்களில் வறுமையில் வாடி மாண்டதாகச் சிலர் கூறுவர். ஆனால் அது உண்மையல்ல. அவர் 1506இல் காலமான போது ஓரளவுக்குச் செல்வச் செழிப்புடனே இருந்தார்.

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்