- இன்றைய ‘உடல் பருமன்’ யுகத்தில், நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இருபாலரையும் அதிகம் அச்சுறுத்தும் வார்த்தை இதுதான். கெட்ட கொழுப்பு, நல்ல கொழுப்பு, எல்டிஎல், ஹைச்டிஎல்… என அவரவருக்குத் தெரிந்த பெயர்களில் குழப்புவார்கள்.
- நீங்கள் ‘தேவர் மகன்’ வடிவேலுபோல் ஒல்லியாக இருக்கும்போது தெருவில் நடந்து போனால், ஒரு பூச்சிகூட கண்டுகொள்ளாது. ஏதோ ஆசைப்பட்டு, வாய் ருசிக்குச் சாப்பிட்டு, ‘தெனாலிராமன்’ வடிவேலுபோல் உடல் பெருத்து, முன் வயிற்றில் தொப்பை விழத்தொடங்கினால்போதும், படாத கண்ணெல்லாம் பட்டுத் தொலைக்கும்.
- “உடம்பைக் குறைங்க. எதுக்கும் ஒரு தரம் பிஎம்ஐ, கொலஸ்டிரால் எல்லாம் பார்த்துக்கோங்க… கொழுப்பு கூடுறமாதிரி தெரியுது. வெறும் வயித்துல ‘லிப்பிட் புரோஃபைல்’ பார்த்தா கரெக்டா இருக்கும்…” இப்படியான இலவச ஆலோசனைகள் மத்தியமரிடமிருந்து கட்டாயம் கிடைக்கும்.
- “கொழுப்பு இல்லாத பால் குடிங்க. கொலஸ்டிரால் இல்லாத எண்ணெயை வாங்குங்க” என்றெல்லாம் ஊடகங்கள் போதாத குறைக்குப் பாடம் நடத்தும். உங்களுக்கோ குழப்பம் கூடிவிடும்.
- உடல் பருமனுக்கும் கொலஸ்டிராலுக்கும் என்ன சம்பந்தம்? கொலஸ்டிராலை ஏன் அந்தக் கால வில்லன் நடிகர் நம்பியாரைப் பார்ப்பதுபோலவே பார்க்கிறோம்? வாருங்கள், அதையும் பார்த்துவிடலாம்.
கொலஸ்டிரால் விரோதியல்ல!
- எல்லோரும் நினைப்பதுபோல் கொலஸ்டிரால் நமக்கு விரோதியல்ல! அது ஒரு சாதுவான சத்துப் பொருள். அதிக சக்தி தருகிற, நம் ஆரோக்கியத்துக்கு அவசியமான ஒரு கொழுப்புப் பொருள். நம் உடல் கார்போஹைட்ரேட்டைத் தயாரிப்பதில்லை; புரோட்டீனைத் தயாரிப்பதில்லை. ஆனால், கொலஸ்டிராலை மட்டும் தயாரித்துக்கொள்கிறது. அப்படியானால், நமக்குத் தேவையான ஒரு ‘விஐபி’யாகத்தானே அது இருக்க வேண்டும்?
- கல்லீரல், குடல், அட்ரீனல், ஆண்களுக்கு விரைகள், பெண்களுக்குச் சினைப்பைகள் என உடலில் பல இடங்களில் கொலஸ்டிரால் ஃபேக்டரிகள் இருக்கின்றன. இவை தினமும் 700 மில்லி கிராம் கொலஸ்டிராலைத் தயாரிக்கின்றன. உங்கள் எடை 70 கிலோவாக இருந்தால், நீங்கள் சுத்த சைவமாகவே இருந்தாலும் சரி, உங்கள் உடலில் 140 கிராம் கொலஸ்டிரால் கட்டாயம் இருக்கும்.
ஏன்? என்ன அவசியம்?
- உடலில் செல்களின் வளர்ச்சிக்குக் கொலஸ்டிரால் அவசியம். மூளையின் செயல்பாட்டுக்குக் கொலஸ்டிரால் தேவை. கொழுப்பு உணவைச் செரிக்க, பித்தநீரைச் சுரக்க கொலஸ்டிரால்தான் தேவை. நரம்புகளைப் பாதுகாக்கும் சவ்வுகள் வளர வேண்டுமா? அதற்கும் கொலஸ்டிரால் வேண்டும். நம் உடலின் வெப்பம் சமச்சீராக இருக்க வேண்டுமானால் கொலஸ்டிரால் இருக்க வேண்டியது கட்டாயம்.
- டீன்ஏஜில் ஆணுக்கு மீசையும், பெண்ணுக்கு மார்புகளும் வளர வேண்டுமானால் கொலஸ்டிரால் இல்லாமல் முடியவே முடியாது. சுகம் காணும் தாம்பத்தியத்துக்கும் சுகப்பிரசவத்துக்கும் உதவுகிற ஸ்டீராய்டு ஹார்மோன்களுக்கு அடிப்படையே இந்தக் கொலஸ்டிரால்தான். இப்படிப் பல வழிகளில் நமக்குக் கைகொடுக்கும் நண்பனாகத்தானே கொலஸ்டிரால் இருக்கிறது! பிறகேன் அதை எதிரியாகப் பார்க்கிறோம்? கொலஸ்டிராலை இன்னும் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இந்தப் புதிர் விலகும்!
கொலஸ்டிராலில் இரண்டு வகை!
- நாணயத்துக்கு இரண்டு பக்கம் உண்டு, இல்லையா? அதுமாதிரிதான் கொலஸ்டிராலிலும் இரண்டு தினுஷு உண்டு! கெட்ட கொலஸ்டிரால், நல்ல கொலஸ்டிரால்! அது என்ன கெட்டது, நல்லது? சாதாரண கொலஸ்டிரால் அதன் ரசாயன முறைப்படி உடல் திசுவிலிருந்து ரத்தத்துக்குள் தனியாகப் போக முடியாது. அதை ரத்தத்தில் தூக்கிச் சென்று சுற்றுலா காண்பிக்கத் தனி வாகனம் தேவை. அதன் பெயர் ‘லிப்போ புரோட்டீன்’. கொலஸ்டிரால் இதன் முதுகில் ஏறிக்கொண்டு உடலில் ஊர்வலம் வரும்போதுதான் அதன் அடுத்த பக்கம் தெரிகிறது.
- ‘லோ டென்சிட்டி லிப்போ புரோட்டீன்’, ‘ஹை டென்சிட்டி லிப்போ புரோட்டீன்’ என்றெல்லாம் வாய்க்குள் நுழையாத பெயர்களைச் சொல்லி உங்களை இம்சைப்படுத்த விரும்பவில்லை. முதலாவதை எல்டிஎல் (LDL) என்றும், இரண்டாவதை ஹைச்டிஎல் (HDL) என்றும் நம் வசதிக்குச் சொல்லிக்கொள்ளலாம். இவற்றைத் தயாரிப்பதும் கல்லீரல்தான்.
சரி, இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
- சுருக்கமாகச் சொன்னால், ஹைச்டிஎல் நல்ல கொலஸ்டிரால். எல்டிஎல் கெட்ட கொலஸ்டிரால். எப்படி? அது செய்யும் காரியம் அப்படி. ரத்தத்தில் எல்டிஎல் பயணிக்கும்போது, போகிற போக்கில் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள சிறு சிறு பிளவுகளில் படியத் தொடங்குகிறது. இதனால் ரத்தக்குழாய் தடித்து ரத்த அழுத்தம் அதிகரிக்க வழிசெய்கிறது. அப்போது முதல் முறையாக ‘பிபி பேஷண்ட்’ என்ற முத்திரை குத்தப்படுகிறது. “உப்பைக் குறைங்க, கொழுப்பைக் குறைங்க” என்கிற ஆலோசனை ஆரம்பமாகிறது.
- நாக்குக்கு அது புரிகிறதா? எது வேண்டாமோ அதைத்தான் அதிகம் தேடி ஓடுகிறது. நமக்கும் “சாப்பிட வேண்டிய வயதில் சாப்பிடாமல் பிறகு எப்போது சாப்பிடுவதாம்?” என்று சொல்லத் தோன்றிவிடுகிறது. வாரம் தவறாமல் வீக் எண்ட் பார்ட்டியில் சாப்பிட்ட பர்கரும் கிரில் சிக்கனும் கொடுத்த கூடுதல் கொலஸ்டிரால் ரத்தக்குழாயின் உள்ளளவைக் குறைத்துவிடுகிறது. இது ரத்த ஓட்டத்தைத் தடைசெய்கிறது. பாசி படிந்த தண்ணீர்க் குழாய் அடைத்துக்கொள்கிற மாதிரி அடைத்துக்கொள்கிறது.
- கொஞ்சம் யோசியுங்கள். இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாயில் இந்த எல்டிஎல் படிந்து அடைத்துவிட்டால் என்ன ஆகும்? மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும். நீங்கள் நெஞ்சுவலிக்காக டாக்டரிடம் சென்று, இசிஜி, ஆஞ்சியோகிராம் என ஏதாவது எடுத்துப் பார்த்திருந்தால், ‘அத்திரோஸ்கிலிரோஸிஸ் ஆரம்பமாகிவிட்டது. தர்ட்டி பர்சென்ட் அடைப்பு இருக்கு. கொலஸ்டிராலைக் கட்டுப்படுத்த வேண்டியது கட்டாயம்’ என்று உங்கள் கார்டியாலஜிஸ்ட் எச்சரித்திருப்பாரே, அது இதுதான்.
சரி, இதுவரை நண்பனாக இருந்த கொலஸ்டிரால் இப்போது எதிரியானது எப்படி?
- நம் கல்லீரல் தானாகவே கொலஸ்டிராலை தயாரிப்பது ஒரு புறம். நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்பிலிருந்து கொலஸ்டிராலைத் தயாரிப்பது இன்னொரு புறம். நாம் சாப்பிடும் உணவில் 20% வரை கொழுப்பு இருக்குமானால், இந்த இரண்டுவித கொலஸ்டிரால் உற்பத்தியும் சரியாகவே இருக்கும். அதாவது, தினமும் 27 கிராம் கொழுப்பு, 35 கிராம் நட்ஸ் மற்றும் விதைகள் எடுத்துக்கொண்டால் நெய், வெண்ணெய், பாமாயில் ஆகியவற்றைத் தினமும் 10 கிராமுக்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தால் கொழுப்பு குறித்து அச்சப்பட தேவையில்லை. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனமும் இணைந்து ஆய்வுசெய்து, வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் இது.
- இந்த அளவு அதிகமாகும்போதுதான் பிரச்சினை. அதிலும் குழம்பாக உட்கொள்ளப்படும் மாமிச உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்பைவிட வறுத்த, பொரித்த, எண்ணெயில் குளித்த, பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டில் உறங்குகிற உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்புதான் முக்கிய எதிரி. அளவுக்கு மீறி உடலுக்குள் நுழையும் இந்த வகை கொழுப்பைக் கல்லீரல் பித்தநீரில் சேமித்துக்கொள்ளும். தொப்பை விழுமளவுக்குக் கொழுப்புணவுகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது இதுவரை சேமித்துவைத்த கொழுப்பை கொலஸ்டிராலாக அது மாற்றிவிடும். அப்போது உடலுக்குள் கொலஸ்டிரால் உற்பத்தியாவது தேவைக்கு அதிகமாகும். பிறகென்ன, நம் ஆரோக்கியத்துக்கு ஆபத்து ஆரம்பமாகும்.
நண்பனும் எதிரிதான், எப்படி?
- சரியான வோல்டேஜில் எரியும் வண்ண விளக்குகளின் வெளிச்சத்தை நம்மால் ரசிக்க முடியும். அதேநேரம் வோல்டேஜ் அதிகமாகி மின்னல்போல் வெளிச்சம் கொட்டினால் அதை ரசிக்க முடியுமா? அப்படித்தான் அளவோடு உணவு சாப்பிடும்வரை கொலஸ்டிரால் நமக்கு நண்பன். அளவுக்கு மீறி சாப்பிட்டு, உடல் பருமனுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டால், நண்பனும் எதிரிதான்.
- உடலின் அதிசயத்தைப் பாருங்கள். ஆபத்து இருக்கும் இடத்தில்தான் பாதுகாப்பும் இருக்கிறது. கெட்ட கொலஸ்டிராலைத் தயாரிக்கும் அதே கல்லீரல்தான் நல்ல கொலஸ்டிராலையும் தயாரிக்கிறது. நல்ல கொலஸ்டிரால் எனப் புகழப்படும் ஹைச்டிஎல் என்ன செய்கிறது தெரியுமா? இதய ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வந்து கல்லீரலுக்குக் கொடுக்கிறது. அதைக் கல்லீரலானது பித்தநீராக மாற்றி சிறுநீரிலும் மலத்திலும் வெளியேற்றுகிறது. நமக்கு உடல் பருமன் இருந்தாலும் உடனே மாரடைப்பு வராமல் பாதுகாப்பது ஹைச்டிஎல் மேற்கொள்ளும் இந்த மெக்கானிஸம்தான்.
- எதற்கும் ஓர் எல்லை உண்டல்லவா? எல்டிஎல் அதன் எல்லையைத் தாண்டினால், நாம் சுதாரித்துக்கொள்ள வேண்டும். உடல் பருமனைக் குறைக்க வேண்டும். இல்லாவிட்டால், எல்டிஎல்லின் கை ஓங்கிவிடும். ஹைச்டிஎல் அப்போது தூங்கிவிடும். அப்படியான ஒரு கெட்ட நாளில் மாரடைப்பு எனும் எம தூதன் எட்டிப் பார்ப்பதைத் தடுக்க முடியாது. எல்லாம் உடல் பருமனின் உபயம்!
சரியான கொலஸ்டிரால் அளவுகள் – அலர்ட்!
- மொத்த கொலஸ்டிரால் 200 மிகி/டெ.லி.வரை.
- எல்டிஎல் கொலஸ்டிரால் 100 மிகி/டெ.லி.க்கும் குறைவாக.
- டிரைகிளிசெரைட்ஸ் கொழுப்பு 150 மிகி/டெ.லி.க்கும் குறைவாக.
- ஆண்களுக்கு ஹைச்டிஎல் கொலஸ்டிரால் 40 மிகி/டெ.லி.க்கும் அதிகமாக.
- பெண்களுக்கு ஹைச்டிஎல் கொலஸ்டிரால் 55 மிகி/டெ.லி.க்கும் அதிகமாக.
நல்ல கொலஸ்டிரால் (ஹெச்.டி.எல்) அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
- தினமும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- உடல் பருமனைக் குறைக்க வேண்டும்.
- டிரான்ஸ் ஃபேட் (Trans fat) அதிகமுள்ள பேக்கரி பண்டங்களையும் சிப்ஸ், குக்கீஸ், பாக்கெட் உணவுகள், மீண்டும் மீண்டும் சூடுபடுத்திய எண்ணெயில் தயாரிக்கப்பட்ட பலகாரங்கள் போன்ற நொறுக்குத் தீனிகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.
- மது அருந்தக் கூடாது.
- புகைபிடிக்கக் கூடாது.
- தேவைப்பட்டால், ‘ஸ்டாடின்’ மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும்.
நன்றி: அருஞ்சொல் (07 – 07 – 2024)