கொலஸ்டிரால் மாத்திரை யாருக்கு அவசியம்?
- என்னதான் வீட்டைப் பத்திரமாகப் பூட்டிக்கொண்டாலும் மேம்பட்ட பாதுகாப்புக்குக் கண்காணிப்பு கேமராவையும் பொருத்துகிறோம் அல்லவா? அதுமாதிரிதான், ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவைக் குறைக்கச் சரியான வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடித்தாலும் மருத்துவர்களாகிய நாங்கள் மாத்திரைகளையும் பலருக்குப் பரிந்துரைக்கிறோம்.
- இந்தப் பரிந்துரையில் பல விஷயங்கள் இருக்கின்றன. எல்லாரும் நினைக்கிற மாதிரி வெறுமனே கொலஸ்டிரால் எண்களை மட்டும் பார்த்து மாத்திரையைப் பரிந்துரைப்ப தில்லை. உங்கள் வாழ்க்கை முறையைப் பார்க்கிறோம். இணை நோய்களைக் கவனிக்கிறோம். உங்கள் கொலஸ்டிரால் அளவுகள் எந்த அளவில் இதயத்தைப் பாதிக்கும் என்பதைத் தெரிந்துகொள்கிறோம். ஏற்கெனவே இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். இத்தனை கணிப்புகளுக்குப் பிறகு தான் மாத்திரையைப் பரிந்துரைக்கிறோம்.
வாழ்க்கை முறை முக்கியம்:
- நான்கு பக்கங்களும் சரியாக அமைந்தால்தான் அது சதுரம். அதுமாதிரி, உங்கள் கொலஸ்டிரால் அளவுகளில் மொத்த கொலஸ்டிரால், டிரைகிளிசரைட்ஸ் (Triglycerides), எல்.டி.எல் (LDL), ஹெச்.டி.எல் (HDL) ஆகிய நான்கு அளவுகளும் சரியாக இருந்தால் அது ஆரோக் கியம். உங்களுக்கு கொலஸ்டிரால் பிரச்சினை இல்லை என்று சந்தோஷப் படலாம். அதே நேரம் கொலஸ்டிரால் கூடியிருக்கிறது என்றாலே மாத்திரை போட வேண்டும் என்று அவசரப்பட வேண்டாம். என்னிடம் சிகிச்சை பெற ஒரு வாலிபர் வந்தார்.
- அவராகவே கொலஸ்டிரால் பரிசோதனை செய்துகொண்டு வந்திருந்தார். எல்.டி.எல். கொலஸ்டிரால் கொஞ்சம் கூடுதலாக இருந்தது. பதறிப்போனார். கொலஸ்டிராலுக்கு மாத்திரை கேட்டார். உங்களுக்கு மாத்திரை தேவையில்லை என்று சொன்னேன். அவர் அதை நம்ப மறுத்தார். காரணம், கூகுள்/யூடியூப் நடத்திய பாடம். கெட்ட கொலஸ்டிரால் எண் உயர்ந்தாலே மாத்திரை போட்டுக் கொள்ள வேண்டும் என்கிற தவறான கற்பிதம்.
- ஒன்று சொல்கிறேன். உங்களுக்கு வயது 40க்குள்தான் இருக்கிறது. உங்கள் குடும்ப வரலாற்றில் யாருக்கும் மாரடைப்பு ஏற்பட்டிருக்க வில்லை; இளம் வயது மரணங்கள் இல்லை. உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரக நோய், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் என்று எந்தப் பிரச்சினையும் உங்களுக்கு இல்லை.
- எல்.டி.எல் கொலஸ்டிரால் மட்டுமே கூடுதலாக இருக்கிறது என்றால், கொலஸ்டிரால் பிரச்சினை மிகவும் சிறிய அளவில்தான் இருக்கிறது என்று பொருள். உங்களுக்குச் சரியான வாழ்க்கை முறை மட்டும் போதும். ‘ஸ்டாடின்’ மாத்திரை தேவையில்லை. இதைத்தான் அந்த வாலிபருக்குச் சொன்னேன்.
- இங்கு ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். சரியான வாழ்க்கை முறை பயனாளியின் வாழ்க்கை முழுவதும் தேவைப்படும் அச்சாணி. அச்சாணி கழன்றுவிட்டால் சக்கரம் சுழலாது. வாழ்க்கை முறையைச் சரியாகப் பின்பற்றவில்லை என்றால் கொஞ்சமே அதிகரித்த கொலஸ்டிரால்கூடக் குறைவதற்கு அடம்பிடிக்கும். அப்போது மாத்திரை தேவைப்படும். ஆக, உங்களுக்கு கொலஸ்டிரால் மாத்திரை அவசியமா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பவை கெட்ட கொலஸ்டிரால் எண்கள் மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கை முறையும்தான்.
- வழக்கத்தில், வயது ஆக ஆக கொலஸ்டிரால் பிரச்சினை செய்யும் என்பது பொதுவான விதி. ஆனாலும், இது எல்லாருக்கும் பொருந்து வதில்லை. வயதான காலத்தில் கொலஸ்டிரால் பிரச்சினை இல்லாத வர்களையும் மருத்து வர்களாகிய நாங்கள் பார்த்திருக்கிறோம். அதற்கு அவர்களுடைய ஆரோக்கிய மிக்க வாழ்க்கை முறையே காரணம். கொலஸ்டிரால் மாத்திரை யாருக்கு அவசியம்?
மரபணுக் குறைபாடு:
- குடும்ப வரலாற்றில் தீவிர மரபணுக் குறைபாடு உள்ளவர்களுக்கு (Familial Hypercholesterolemia) 100 மி.லி. ரத்தத்தில் 190 மி. கிராம் அளவுக்கு மேல் கெட்ட கொலஸ்டிரால் இருக்கக்கூடும். இவர்களுக்கு கொலஸ்டிரால் காரணமாக இளம் வயதிலேயே மாரடைப்புப் பிரச்சினை ஏற்படும் ஆபத்து உண்டு. இது மிக மிக அரிதாக நிகழக்கூடியதுதான் என்றாலும், இவர்களுக்கு கொலஸ்டிரால் பிரச்சினை பெரிய அளவில் இருக்கிறது என்று பொருள்.
- காரணம், இவர்களுக்குக் கல்லீரலில் கெட்ட கொலஸ்டிராலை அப்புறப்படுத்தும் மரபணு பிறவியி லேயே இல்லாமல் போய்விட்டது. அப்படி அப்புறப்படுத்தும் வேலையை இனிமேல் ‘ஸ்டாடின்’ மாத்திரைதான் இவர்களுக்குச் செய்ய முடியும். இவர்கள் இந்த மாத்திரையைக் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அடுத்து, ஆஞ்சைனா (Angina) நெஞ்சு வலி வந்தவர்கள், மாரடைப்பு வந்து ஆஞ்சியோ பிளாஸ்டி (Angioplasty) அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை (Bypass Operation) மேற்கொண்டிருப்ப வர்கள் கட்டாயம் கொலஸ்டிரால் மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும். காரணம், மாரடைப்பை ஏற்படுத்திய இதயத் தமனியில் சிறு தழும்பு உண்டாகியிருக்கும்.
- ரத்தத்தில் சுற்றும் கொலஸ்டிரால் அந்த இடத்துக்கு வந்து சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொள்ளும். மறுபடியும் இவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான சாத்தியம் கூடும். இதைத் தடுக்கவே வாழ்நாள் முழுவதும் இவர்கள் கொலஸ்டிரால் மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம்.
மாரடைப்புக்கான மதிப்பெண்கள்:
- கொலஸ்டிரால் பிரச்சினை பெரிதாக இருக்கிறது என்று சொல்வதற்குச் சில அளவீடுகளும் மதிப்பெண்களும் இருக் கின்றன. ‘மாரடைப்புக்குச் சாத்தியம் கூறும் மதிப்பெண்கள்’ (ASCVD Risk Score) என்று இதைச் சொல்கிறோம். மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களை வைத்து ஆசிரியர்கள் அந்தந்த வகுப்பில் பாஸ், பெயில் போடுவதைப்போல மருத்துவர்களான நாங்கள் மாரடைப்புக்குச் சாத்தியம் கூறும் மதிப்பெண்களை வைத்து, கொலஸ்டிரால் மாத்திரை அவசியமா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறோம். இதற்கு உதவ நம்பகமான சில கால்குலேட்டர்கள் இணையத்தில் கிடைக்கின்றன. உதாரணத்துக்கு, PREVENT ONLINE கால்குலேட்டர். நீங்களும் இதைப் பயன்படுத்த முடியும்.
எப்படிப் பயன்படுத்துவது?
- 30லிருந்து 79 வயது வரை உள்ள வர்கள் இந்த கால்குலேட்டரைப் பயன்படுத்தலாம். அடுத்த 10 ஆண்டு களில் உங்களுக்கு மாரடைப்பு ஆபத்து எந்த அளவுக்கு இருக்கிறது என்பதையும், கொலஸ்டிரால் மாத்திரை அவசியமா, இல்லையா என்பதையும் இதில் தெரிந்து கொள்ளலாம். உங்கள் வயது, கொலஸ்டிரால் அளவு, ரத்த அழுத்தம், பி.எம்.ஐ. (BMI), இ.ஜி.எஃப்.ஆர். (eGFR), சிறுநீரில் ஆல்புமின் - கிரியேட்டினின் விகிதம் (UACR), ஹெச்பிஏஒன்சி (HbA1C) ஆகியவற்றை இதில் உள்ளிட வேண்டும்.
- அடுத்து, உங்களுக்குச் சர்க்கரை நோய் உள்ளதா, புகைப் பழக்கம் உண்டா என்பதையும் தெரிவிக்க வேண்டும். ரத்தக் கொதிப்புக்கோ, கொலஸ்டி ராலைக் குறைப்பதற்கோ நீங்கள் மாத்திரை எடுத்துக் கொண்டிருந்தால் அந்த விவரங்களையும் கால்கு லேட்டர் கேட்கும். எல்லாவற்றையும் உள்ளிட்ட பிறகு, உங்களுக்கான மதிப்பெண் விகிதத்தைக் காட்டும்.
- அந்த விகிதம், 5%க்குள் இருந்தால் உங்களுக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு மாரடைப்பு ஆபத்து இல்லை என்று சந்தோஷப் படலாம். 5%-7.4%க்குள் இருந்தால், மிதமான ஆபத்து. உடனடியாக கொலஸ்டிராலைக் குறைக்கும் வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற வேண்டும். 7.5% – 19.9% என இருந்தால், நடுத்தர ஆபத்து; 20%க்கும் மேல் இருந்தால் ஆபத்து அதிகம். கடைசி இரண்டு நிலைமைகளுக்கும் கட்டாயம் கொலஸ்டிரால் மாத்திரையை மருத்துவரின் ஆலோசனைப் படி எடுத்துக்கொள்ள வேண்டும். இதிலிருந்து ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.
- கொலஸ்டிரால் மாத்திரை உங்களுக்கு அவசியமா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பது ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் அளவுகள் மட்டுமல்ல; உங்களுடன் உறவாடும் மோசமான உணவுப்பழக்கம், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், உறக்கமின்மை, மன அழுத்தம், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரக நோய் போன்ற மோச மான அம்சங்களும்தான்.
- இந்த அம்சங்களை உடன் வைத்திருப் போருக்கு கொலஸ்டிரால் மாத்திரை அவசியப்படும். கொலஸ்டிராலைக் குறைக்க மாத்திரை எடுத்துக்கொள்வது எவ் வளவு முக்கியமோ அதே அளவுக்கு ரத்தக் குழாய்களில் உள்காயங்களை ஏற்படுத்தும் இந்த அம்சங்களை ஒழிக்க வேண்டியதும் முக்கியம். அப்போது தான் மாரடைப்பு ஆபத்திலிருந்து நீங்கள் முழுவதுமாகத் தப்பிக்க முடியும்.
- கொலஸ்டிராலைக் குறைக்கும் அற்புத மருந்துகள்: கொலஸ்டிராலைக் குறைக்க நவீன மருத்துவத்தில் புகுந்துள்ள ‘ரிபேதா’ (Repatha) என்னும் ஊசி மருந்து, கல்லீரலில் கெட்ட கொலஸ்டிராலை (LDL) உற்பத்தி செய்ய வைக்கும் ‘பிசிஎஸ்கே9’ (PCSK9) எனும் மரபணு புரதத்தை அமைதிப்படுத்திவிடுகிறது. இதனால், கெட்ட கொலஸ்டிரால் உற்பத்தி தடைபடுகிறது. ‘இன்கிளிசிரான்’ (Inclisiran) என்னும் பெயரில் மற்றோர் ஊசி மருந்தும் வந்திருக்கிறது.
- இது கெட்ட கொலஸ்டிராலுக்கான மரபணுவை மாற்றக்கூடிய மருந்து (siRNA drug). குடும்ப வரலாற்றில் கெட்ட கொலஸ்டிரால் மிகவும் அதிகமாக இருப்ப வர்களுக்கும், ஏற்கெனவே மாரடைப்பு வந்து ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டென்ட் சிகிச்சை, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களுக்கும், கொலஸ்டிரால் மாத்திரைகளைச் சாப்பிட்டும் அதன் அளவு குறையாதவர்களுக்கும், கொலஸ்டிரால் மாத்திரை ஒத்துக்கொள்ளாத வர்களுக்கும் இவை பரிந்துரைக்கப்படுகின்றன.
- விலை அதிகம். இந்த இரண்டு மருந்துகளின் விலைகளும் சாமானியர்களுக்கும் எட்டும் வகையில் அமைந்தால், அடுத்த பத்து ஆண்டுகளில் பைபாஸ் அறுவைச் சிகிச்சைகளும் ஆஞ்சியோபிளாஸ்டி ஸ்டென்ட் பொருத்தும் சிகிச்சைகளும் கணிசமாகக் குறைந்துவிடும். அந்த அளவுக்கு இதயத்துக்குப் பாதுகாப்பு தரும் அற்புதமான மருந்துகள் இவை.
நன்றி: இந்து தமிழ் திசை (25 – 01 – 2025)