- சமீபத்தில் என் மருத்துவமனைக்கு வந்திருந்த இரண்டு பேரின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசப் போகிறேன். அவர்கள் ஏற்கெனவே என்னிடம் சிகிச்சை பெற்று வருபவர்கள். இருவருக்குமே ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தது. அதைக் குறைக்க ‘ஸ்டாடின்’ (Statin) வகை மாத்திரையைச் சாப்பிடச் சொல்லியிருந்தேன்.
ஒருவர் பிரச்சினை இது
- “டாக்டர், நான் கொலஸ்ட்ராலைக் குறைக்க மூன்று மாதங்கள் மாத்திரை சாப்பிட்டேன். அது நார்மலுக்கு வந்தது. உடனே, மாத்திரையை நிறுத்திவிட்டேன். அடுத்த மூன்று மாதங்கள் நான் மாத்திரையைச் சாப்பிடவில்லை. இப்போது மறுபடியும் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரித்து விட்டது. என்ன காரணம், டாக்டர்? கொலஸ்ட்ராலைக் குறைக்க தொடர்ந்து மாத்திரை சாப்பிட வேண்டுமா?”
அடுத்தவர் பிரச்சினை இது
- “நான் ஆறு மாதங்களாக ஸ்டாடின் சாப்பிட்டு வருகிறேன். ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு ஓரளவுக்குத்தான் குறைந்துள்ளது. இன்னும் அது நார்மலுக்கு வரவில்லை. என்ன காரணம், டாக்டர்?”
- இவர்களுக்கு வந்த சந்தேகங்கள் போலவே நம் வாசகர்கள் பலருக்கும் சில சந்தர்ப்பங்களில் சந்தேகம் வந்திருக்கக்கூடும் அல்லது இனிமேல் வரக்கூடும். எனவே, கொலஸ்ட்ரால் குறித்தும், ‘ஸ்டாடின்’ மாத்திரை குறித்தும் சில மருத்துவ உண்மைகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
‘ஸ்டாடின்’ வகை மாத்திரைகள்
- நம் ரத்தத்தில் காணப்படும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த பலதரப்பட்ட மாத்திரைகள் பயன்படு கின்றன. அவற்றில் அதிக பயன்பாட்டில் உள்ளவை ‘ஸ்டாடின்’ வகை மாத்திரைகள். முக்கியமாக, ‘குறை அடர்த்திக் கொழுப்புப் புரதம்’ (Low-density lipoprotein - LDL) என அழைக்கப்படும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க இந்த மாத்திரைகள் உதவுகின்றன.
இந்த மாத்திரைகள் ஏன் அவசியம்?
- மாரடைப்பு, பக்கவாதம், ரத்தக் குழாய் அடைப்பு போன்றவை நம்மைப் பாதிப்பதற்கு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது ஒரு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. நாள்பட்ட தண்ணீர்க் குழாய்களில் பாசி படிந்து அடைப்பதைப்போல உடலிலுள்ள ரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ரால் படிந்து, அழற்சியை உண்டாக்கி, வீக்கத்தை ஏற்படுத்தி, அடைத்துக் கொள்வதுதான் இந்தப் பாதிப்புகளுக்கு அடிப்படை காரணம்.
- அவ்வாறு படிந்துள்ள கொலஸ்ட்ராலைக் கரைப்பதும் குறைப்பதும் அவசியம்; இனிமேல் படிவதைத் தடுக்க வேண்டியது முக்கியம். அதற்கு ஸ்டாடின் வகை மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
- அதேவேளை, கொலஸ்ட்ராலைக் குறைக்க மாத்திரை மட்டுமே போதும் என்று கருதுவதும் தவறு. ஒருவருடைய வயது, பாலினம், பரம்பரை, கல்லீரல் செய்யும் பணி ஆகிய நான்கும் சேர்ந்து தான் அவருடைய ரத்த கொலஸ்ட்ரால் அளவைத் தீர்மானிக்கின்றன. அடுத்து, அவருடைய உடல்வாகு (ஒல்லி உடல் அல்லது உடற்பருமன்), அவர் சாப்பிடும் உணவு, மேற்கொள்ளும் உடற்பயிற்சி, புகைப்பழக்கம், மது அருந்தும் பழக்கம், உறக்கமின்மை, மன அழுத்தம் போன்ற வாழ்க்கை முறைகள் எனப் பல்வேறு காரணிகள் அவரது கொலஸ்ட்ரால் அளவு கூடுவதற்கும் குறைவதற்கும் காரணமாகின்றன. அவற்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உணவில் கவனம் தேவை!
- ரத்தத்தில் கொலஸ்ட்ரால் கூடுவதற்கு அதிகமாகக் கொழுப்புணவு சாப்பிடுவது ஒரு முக்கியமான காரணம் தான் என்றாலும், அது ஒன்று மட்டுமே காரணமல்ல. கொழுப்புணவைக் குறைத்துக் கொண்டு, மாவுச் சத்துள்ள அரிசி உணவை அதிகமாகச் சாப்பிட்டாலும், கல்லீரல் அந்த அதீத மாவுச் சத்தை கொலஸ்ட்ராலாக மாற்றி தனக்குள் சேமித்துக் கொள்ளும். ஆகவேதான், சைவம் சாப்பிடு பவர்களுக்கும் ஒல்லியாக இருப்பவர் களுக்கும் கூட ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கக்கூடும்.
- உணவைப் பொறுத்தவரை பட்டை தீட்டப்பட்ட தானிய உணவுகளைவிட முழுத்தானிய உணவு வகைகளை உண்பதும், வெள்ளை அரிசி, வெள்ளைச் சர்க்கரை, வெள்ளை உப்பு ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைப்பதும், துரித உணவு வகைகளைத் தவிர்ப்பதும், அதிகக் கொழுப்புள்ள இறைச்சி/எண்ணெய் வகைகளைக் குறைத்துக்கொள்வதும் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் முக்கிய வழிகள். மேலும், ஒமேகா – 3 கொழுப்பு அமிலம் அதிகமுள்ள சால்மன், வஞ்சிரம், ரத்த சூரை வகை மீன்களைச் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த முடியும்.
எதிரியாகும் ஊடுகொழுப்பு
- கொலஸ்ட்ரால் கூடுவதற்கு இன்னொரு முக்கியக் காரணம் ஊடு கொழுப்பு (Trans fat) அதிகமுள்ள உணவை அளவில்லாமல் உண்பது. இன்றைய இளம் வயதினரைக் கவர்ந் திழுக்கிற பீட்சா, பர்கர் போன்ற துரித உணவு வகைகள், கேக், பப்ஸ், ஐஸ்கிரீம், பாதாம்கீர், சாக்லெட் போன்ற பேக்கரி பண்டங்கள், பூந்தி, லட்டு, ஜிலேபி, அல்வா போன்ற இனிப்பு வகைகள், மிக்சர், முறுக்கு, போண்டா, சிப்ஸ், சமோசா போன்ற நொறுவைகள், டின்களில் அடைக்கப் படும் பதப்படுத்தப் பட்ட அசைவ உணவு வகைகள் ஆகியவற்றில் ஊடுகொழுப்பு அதிகம். முடிந்தவரை இவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். பதிலாக, நார்ச்சத்து மிகுந்த காய்கறி, பழங்கள் சாப்பிடுவதை அதிகப்படுத்தினால், உணவுக் கொழுப்பு ரத்தத்துக்குச் செல்வது கட்டுப்படும். அதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவும் கட்டுப்படும்.
குறைத்துக் கொள்க
- காபி, தேநீர், மென்பானங்கள், குளிர்பானங்கள் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டாலும் அவை மறைமுகமாக கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்யும். ஆகையால், இவற்றையும் குறைத்துக் கொள்ள வேண்டும். மொத்தத்தில் ஆரோக்கிய உணவுப்பழக்கம் இருந்தால் உடற்பருமன் ஏற்படுவதையும் தவிர்க் கலாம்; கொலஸ்ட்ரால் கூடுவதையும் தவிர்க்கலாம்; ஸ்டாடின் மாத்திரையிடம் தஞ்சம் அடைவதைத் தவிர்க்கலாம்.
மதுவும் புகையும் வேண்டாம்
- மது அருந்தும் பழக்கம் உள்ளவர் களுக்குக் கல்லீரல் பாதிப்பு ஏற்கெனவே இருக்கும். அப்போது கொலஸ்ட்ரால் உற்பத்தியாவது சீராக இருக்காது. அந்தச் சுரப்பு கூடுவதும் குறைவதுமாக இருக்கும். மேலும், ஸ்டாடின் மாத்திரைக்கே உரிய கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஆற்றலையும் மது குறைத்து விடும். இதுபோலவே, புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கும் புகையிலையில் உள்ள நச்சுகள் ஸ்டாடின் மாத்திரைக்கு எதிரியாகி விடும். இவர்களுக்கு ஸ்டாடின் மாத்திரை சரியாக வேலை செய்யாது.
உடற்பயிற்சி முக்கியம்
- கொலஸ்ட்ராலைக் குறைக்க முறையான உடற்பயிற்சிகளும் தேவை. நடைப்பயிற்சி அல்லது மெல்லோட்டம் நல்ல பலன் தரும். உடலில் அதிகப்படியாக உள்ள கலோரிகள் உடற்பயிற்சியில் செலவாகும். அப்போது உடல் எடை குறையும். கொழுப்பும் குறையும். தவிர, மன அழுத்தம் ஏற்படும்போது பலவகை ஸ்டீராய்டு ஹார்மோன்கள் அதிகமாகச் சுரக்கும். அவை கொலஸ்ட்ரால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆகவே, மன அழுத்தத்தைக் குறைப்பதும், தேவையான ஓய்வு எடுப்பதும் முக்கியம்.
- ஒரு நாட்டின் பாதுகாப்புக்குத் தரைப்படை அவசியம்தான். ஆனால், பெரிய பீரங்கிப் படை எதிரில் வரும்போது தரைப்படையால் மட்டும் போரில் வெற்றிபெற முடியாது. அதுபோல, கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் இத்தனை காரணிகள் இருக்கும்போது, கல்லீரலில் சில நொதிகள் சுரப்பதைக் கட்டுப்படுத்தி கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் ஸ்டாடின் மாத்திரையை மட்டும் நம்புவது அறியாமை.
யாருக்கு ஸ்டாடின் தேவை?
- புகைபிடிப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், நீரிழிவு உள்ளவர்கள், பரம்பரைரீதியில் குடும்பத்தில் யாருக்காவது மாரடைப்பு வந்தவர்கள் - ஏற்கெனவே மாரடைப்பு வந்து சிகிச்சையில் உள்ளவர்கள் ஆகியோருக்கு எல்.டி.எல். கொலஸ்ட்ரால் 70 மி.கி./டெ.லி.க்குக் குறைவாகவே இருக்க வேண்டும். இந்த அளவு அதிகமானால் ஸ்டாடின் மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
- கொலஸ்ட்ரால் மட்டுமே பிரச்சினை என்கிறவர்கள், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் கவனிக்க வேண்டும். அது நார்மலுக்கு வந்தவுடன், மருத்துவர் யோசனைப்படி ஸ்டாடின் அளவைக் குறைத்துக்கொள்ளலாம். அல்லது நிறுத்திக் கொள்ளலாம். மறுபடியும் கொலஸ்ட்ரால் கூடினால், மாத்திரையை மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- கொலஸ்ட்ராலைக் குறைக்க மாத்திரை சாப்பிடும் அனைவரும் உணவுக் கட்டுப்பாட்டையும் பின்பற்ற வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். மதுவை மறக்க வேண்டும். புகைப்பழக்கம் கூடாது. மன அமைதி வேண்டும். நிம்மதியான உறக்கமும் அவசியம். அப்போதுதான் ஸ்டாடின் மாத்திரையின் அளவைக் குறைக்கவோ நிறுத்தவோ முடியும்.
நன்றி: இந்து தமிழ் திசை (12– 08 – 2023)