TNPSC Thervupettagam

கொலை செய்யும் நம் கரிசனம்

November 23 , 2024 55 days 95 0

கொலை செய்யும் நம் கரிசனம்

  • பிரபல சுற்றுலாத் தலங்கள், காடுகளுக்கு அருகில் இருக்கும் பகுதிகள், கோயில்கள் போன்ற பகுதிகளுக்குச் சென்றால் இந்தக் காட்சியை நீங்கள் தவறாது காணலாம். வீசி எறியப்படும் உணவுக்குப் போட்டிபோட்டு மோதும் குரங்குகள் அங்கே கூட்டம் கூட்டமாக இருக்கும். இப்படிச் சீறிச்செல்லும் குரங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறந்து போகின்றன. அப்படி இறந்து போன ஓர் இளம் குரங்கை அண்மையில் பார்க்க நேர்ந்தது.
  • அங்கே என்ன நடக்கிறது என்று சிறிது நேரம் கவனித்தோம். அவ்வளவு நேரம் குடும்பத்தோடு விளையாடிக்கொண்டிருந்த ஒரு குரங்கு திடீரென்று அசைவற்று இருப்பதை, மற்ற குரங்குகளால் ஏற்க முடியவில்லை. இறந்துபோன குரங்கின் கை, கால்களைப் பிடித்து இழுப்பது, வாலைப் பிடித்து இழுப்பது, தட்டி எழுப்புவது, பேன் பார்ப்பது, சில வாகனங்களைக் கோபமாகத் துரத்துவது என்று தமக்குரிய வழியில் உணர்வுகளை அவை வெளிப்படுத்தின.
  • மனிதர்களான நாமும் கிட்டத்தட்ட இப்படித் தானே இருப்போம். நிறைய குரங்குகள், இறந்து போன குரங்கின் முகத்திற்கு நேரே முகம் வைத்தன. இந்த நடவடிக்கை, மூச்சுக் காற்று இல்லாததை உறுதிசெய்யவா அல்லது சோகத்தை வெளிப்படுத்தும் முறையா என்பது எனக்குத் தெரியவில்லை. கண்ணீர் சிந்தி அழுவது மட்டுமே வலியின் வெளிப்பாடு அல்லவே. இந்தக் காட்சி என் மனதை வெகுவாக பாதித்தது.
  • இறந்துபோன குரங்கின் மீது மீண்டும் ஏற்றிவிட வேண்டாம் எனப் பல வண்டிகள் வளைந்து சென்றன. அப்படியே விட்டால் ஏதோ ஒரு வண்டியில் நிச்சயம் அது மீண்டும் அரைபடும். இறந்த சடலமாவது மரியாதையோடு இருக்கட்டும் என்று பெரும்முயற்சிக்குப் பின் ஓரமாக அதை அப்புறப்படுத்தினோம்.
  • மனிதர்கள் குரங்குகளுக்கு உணவளிப் பதால் ஏற்படும் பாதிப்புகள், குரங்குகளின் இயல்பான பண்புகள், அவற்றின் குடும்பம், சமூகக் கட்டமைப்பு, மோதல்கள், விபத்துகள், பொருள்சேதம், ஏன் உணவளிக்கக் கூடாது முதலான கருத்துகளை உள்ளடக்கி, “உண்டி கொடுத்தோம், உயிர் கொடுத்தோமா?” என்கிற தலைப்பில் காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ப.ஜெகநாதன் ‘இந்து தமிழ் திசை’ ‘உயிர் மூச்சு’ பகுதியில் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் பிரச்சினை அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை.

‘ஐயோ பாவம்’ என்னும் போலி கரிசனம்:

  • இப்படித்தான் விலங்குகளுக்கு உணவளிக்கும் நமது கரிசனம் பல கொலை களைச் செய்கிறது. எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், “ஐயோ பாவம்னு இவரே சாப்பாடு போடுவாராம், அப்புறம் ரோட்டில் அடிபட்டுப் செத்தா மறுபடியும் இவரே ஐயோ பாவம்னு உச்சுக் கொட்டுவாராம்.”
  • காடுகள் செழிப்பாக இருப்பதற்கு, குரங்குகளும் காட்டிற்குள்தான் உணவு தேட வேண்டும். இன்றைய சூழலில், இயற்கையான வாழிடங்கள் சுருங்கிக்கொண்டே செல்வதும் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றுதான்; அதற்காக, “காட்டுல எதுவும் சாப்பிடக் கிடைக்காமதான் ரோட்டுக்கு வருது, நாங்க சாப்பாடு போடுறோம்” என்று பேசுவது முறையல்ல.
  • இயற்கையாக வாழும் விலங்குகளுக்கு உணவளிப்பதை ஒரு வழக்கமாகவே கொண்டிருப்போர், ஒட்டுமொத்தக் குரங்கு களையும் குத்தகைக்கு எடுத்து மறுவாழ்வு அளிப்பதுபோல கூச்சமின்றிப் பெருமை பீற்றிக்கொள்கிறார்கள். உண்மையில், ஐயோ பாவம் என்கிற போலிக் கரிசனப் போர்வையில் பாவத்தையே நாம் செய்துகொண்டிருக்கிறோம்.
  • தற்போது பிறக்கும் குரங்குக் குட்டிகளுக்கு உண்மையான காடு எதுவென்றே தெரியாது. பிறந்தது முதல் வாழ்நாள் முழுவதையும் சாலை ஓரத்திலேயே கழிக்கும் அவல நிலை அவற்றுக்கு ஏற்படுகிறது. உணவு போடுவதில் பீறிடும் நமது கரிசனம், ஏனோ குரங்குகளின் வாழிடங்களை மேம்படுத்துவதிலும் அவை கையேந்தாமல் காட்டில் உணவு தேடிக்கொள்வதையும் விரும்பு வதில்லை. ஏனெனில், அதைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தைப் பெறாமல், நாம் செய்வது மிகப் பெரிய நற்காரியம் என்று நம் மனம் ஏற்படுத்தியுள்ள பிம்பத்தை உடைக்க நம்முடைய தற்பெருமை இடம் கொடுப் பதில்லை.

ஊக்குவிக்கும் சமூக வலைத்தளங்கள்:

  • குரங்குகள், பறவைகளுக்கு உணவளிப்பதை வீடியோ எடுத்துச் சமூக வலைத்தளங்களில் சிலர் பகிர்ந்துகொள்ளும்போது ‘உங்களைப் போன்ற நல்லவர்களால்தான் நாட்டில் மழை பெய்கிறது’, ‘கடவுளுக்கு நிகரானவர்’, ‘எல்லா ஆசியும் கிடைக்கட்டும்’, ‘வள்ளல் பணி மேலும் தொடரட்டும்’ என்பது போன்ற புரிதலின்றி பதியப்படும் பின்னூட்டங்கள், அச்செயல் செய்பவரை மேலும் ஊக்குவிக்கின்றன. அது தவறு என்று சுட்டிக்காட்டிப் பின்னூட்டம் இடும் நபரை மற்றவர்கள் பாய்ந்து பிறாண்டுகிறார்கள்.
  • பிரச்சினைகள் பெரிதாகும்போது பாராட்டிய அதே நபர்கள்தான் வசைபாடவும் செய்கிறார்கள். இதுபோலவே கிளிகள், பிற பறவைகளுக்கு உணவளிப்பவர்கள் அவர்களே ‘பறவை மனிதர்’ என்று பட்டம் சூட்டிக்கொள் கின்றனர். உண்மையாகப் பறவைகளின் பாதுகாப்பிற்குத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த இந்தியாவின் பறவை மனிதர் சாலிம் அலியை யாருமே கண்டுகொள்வதில்லை.

நாடு முழுவதும் பிரச்சினைகள்:

  • ஆந்திரா, ஹரியாணா, சண்டிகர், டெல்லி, கர்நாடகம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கேரளம், ஒடிசா, இமாச்சல பிரதேசம் முதலான மாநிலங்கள் யாவும் குரங்குத் தொல்லையைக் கட்டுப்படுத்த அவற்றை மொத்தமாகப் பிடித்து வேறு இடங்களில் விடுவது, குரங்குப் பூங்கா அமைப்பது, தொல்லை தரும் குரங்குகளை பயமுறுத்த கருமந்திகள்போல ஒலி எழுப்பும் நபர்களை வேலைக்கு அமர்த்துவது, கருத்தடை செய்வது, பழ வகை மரக்கன்றுகள் நடுவது, குரங்குகள் சேதப்படுத்தாத பயிர்களை விளைவிக்க ஊக்குவிப்பது, மறுவாழ்வு மையங்கள் உருவாக்குவது, வேளாண் நிலங்களில் தொல்லை தரும் குரங்குகளைக் கொல்ல உத்தரவிடுவது என்று வெவ்வேறு முறைகளைக் கையாளுகின்றன.

சட்டமும் தீர்வும்:

  • வனவிலங்குகளுக்கு உணவளிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று தமிழ்நாடு வனத்துறை பல எச்சரிக்கைப் பதாகைகள் வைத்திருப்பதுடன் தொடர்ச்சியாக விழிப்புணர்வுப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. சொற்ப எண்ணிக்கையிலான நபர்களைத் தவிர, வேறு யாரும் இவற்றை மதிப்பதில்லை. குரங்குகளுக்கு உணவளிப்பது விலங்கு நலனில் சேராது என்று டெல்லி உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. குரங்குகளுக்கு உணவளிக் காமல் இருப்பதே அறிவியல்பூர்வமான தீர்வு. இது உடனே நிகழக்கூடியது அல்ல. எனவே, இருக்கும் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • வனவிலங்குகளுக்கு உணவளித்தால் அபராதம் விதிக்க வேண்டும். உணவளிக்கும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வது, அதை மேலும் பகிர்ந்துகொள்வது போன்ற செயல்களைத் தடைசெய்ய வேண்டும். பிரச்சினைகளுக்கு அறிவியல்பூர்வமான தீர்வுகளைக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும். இயற்கையான வாழிடங்களைப் பாதுகாப்பதே இயற்கையின் மீது நாம் கொண்டிருக்கும் உண்மையான கரிசனம். இதுவே குரங்குகளுக்கும் பிற உயிர்களுக்கும் நாம் செய்யக்கூடிய ஆகச்சிறந்த நற்காரியம்.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்