TNPSC Thervupettagam

கொலை வெறி கலாசாரம்

April 14 , 2021 1380 days 590 0
  • உலகமயச் சூழலில் அமெரிக்கர்கள் எதைச் செய்தாலும் அதை உலகம் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளும் போக்கு காணப்படுகிறது. இந்தப் பின்னணியில்தான், அமெரிக்காவில் அதிகரித்துவரும் துப்பாக்கி கலாசாரம் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
  • கடந்த மாதம் ஒருவார இடைவெளியில் நடந்த இரு வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் எந்த அளவுக்கு அமெரிக்க சமுதாயம் துப்பாக்கி வன்முறையின் பிடியில் சிக்கியிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
  • அமெரிக்காவுக்கு இது புதிதல்ல என்றாலும்கூட, இந்த ஆண்டு துப்பாக்கிச் சூட்டால் நடைபெறும் ஏழாவது கூட்டுக் கொலை இது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

அதிகரித்துவரும் துப்பாக்கி கலாசாரம்

  • கடந்த வாரம் அட்லாண்டாவில் துப்பாக்கி ஏந்திய ஒருவன் மூன்று வெவ்வேறு அழகு நிலையங்களில் எட்டு பெண்களைச் சுட்டுக் கொன்றான். அவர்களில் ஆறு பேர் ஆசிய - அமெரிக்கர்கள்.
  • அந்த சம்பவம் நடந்து ஆறு நாள்களுக்குப் பிறகு, கொலராடோ மாகாணத்தில் உள்ள கிங் சூப்பர்ஸ் என்கிற பல்பொருள் அங்காடியில் நுழைந்த ஒருவன் பத்து பேரை சுட்டுக் கொன்றிருக்கிறான்.
  • அட்லாண்டா துப்பாக்கிச் சூட்டுக்கு, ஆசியர்களுக்கு எதிரான இனவெறி காரணம் என்று சிலரும், கொலையாளி ஒரு பாலின மன நோயாளி என்று சிலரும் கருத்துத் தெரிவிக்கிறார்கள். ஆசியப் பெண்கள் பாலின கவர்ச்சி மிகுந்தவர்கள் என்பதால் அந்தக் கொலையாளி அவர்கள் மீது வெறித் தாக்குதல் நடத்தினார் என்று சில செய்திகள் தெரிவிக்கின்றன.
  • 2017-இல் லாஸ்வேகாஸில் ஒரு கலை நிகழ்ச்சிக்காகக் கூடியிருந்தவர்கள் மீது 64 வயது ஸ்டீபன் படோக் என்பவர் அருகிலிருந்த விடுதியிலிருந்து கொண்டு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 59 பேர் கொல்லப்பட்டனர்.
  • 500-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அந்த விடுதியின் 32-ஆவது மாடியிலிருந்து சக்தி வாய்ந்த துப்பாக்கியால் கொலைவெறித் தாக்குதல் நடத்திய ஸ்டீபன் படோக்கிடமிருந்து 23 தானியங்கி துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.
  • படோக் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துபோனார். அவர் எதற்காக அந்தக் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டார் என்பது இன்றுவரை புரியாத புதிராகத் தொடர்கிறது.
  • அமெரிக்க அதிபர்களால் எந்தவித ஆக்கபூர்வ நடவடிக்கையும் எடுக்க முடியாததால் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்கதையாக மாறியிருக்கின்றன. அமெரிக்காவில் சராசரியாக தினமும் 106 பேர் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • செவ்விந்தியர்களின் தாய் மண்ணாக இருந்த அமெரிக்காவில், பிரிட்டனிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் நாடு கடத்தப்பட்ட கைதிகள் குடியேறி ஆக்கிரமித்தனர். காடாக இருந்த அமெரிக்காவை வளப்படுத்த ஆப்பிரிக்காவிலிருந்து கருப்பர் இன மக்களை அடிமைகளாகக் கொண்டு வந்தனர். செவ்விந்தியர்களிடமிருந்தும், கருப்பின அடிமைகளிடமிருந்தும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அவர்களுக்கு அப்போது துப்பாக்கிகள் தேவைப்பட்டன.
  • அதனால், 1791-இல் அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் இரண்டாவது திருத்தத்தின்படி, ஒவ்வொரு குடிமகனும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஆயுதம் வைத்துக்கொள்வது உரிமையாக்கப்பட்டது.
  • அன்றைய சூழலில் தங்களின் பாதுகாப்புக்கும், தங்கள் சொத்துகளைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு ஆயுதங்கள் தேவைப்பட்டன. அமெரிக்கா பன்முகத் தன்மையுடைய முதிர்ச்சி பெற்ற ஜனநாயகமாக மாறிவிட்ட நிலையிலும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஆயுதங்களை வைத்துக்கொள்வது அடிப்படை உரிமை என்று பல அமெரிக்கர்கள் இப்போதும் கருதுகிறார்கள் என்பதுதான் விந்தை.
  • கைத்துப்பாக்கிகள், துப்பாக்கிகள் என்று தற்காப்புக்காக வைத்துக்கொண்ட நிலை மாறி, இப்போது ராணுவ பயன்பாட்டுக்கான தானியங்கி ஆயுதங்களை வைத்துக்கொள்ளும் அளவுக்கு துப்பாக்கி கலாசாரம் அமெரிக்காவில் வேரூன்றியிருக்கிறது.
  • 1791-இன் இரண்டாவது சட்டத் திருத்தத்தின்படி அமெரிக்காவின் மத்திய-மாநில அரசுகள் குடிமக்களின் துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமையில் மாற்றம் செய்வது தடுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் தேசிய துப்பாக்கிக் கழகம் மிகவும் செல்வாக்கு பெற்றது.
  • அந்தக் கழகமும், குடியரசுக் கட்சியும் துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமையில் எந்தவிதத் தலையீடு நடப்பதையும் தடுத்து விடுகின்றன.
  • கடந்த நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலின்போது ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இருந்த இப்போதைய அதிபர் ஜோ பைடன் தனது பிரசாரத்தின்போது, துப்பாக்கி வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் சட்டம் கொண்டு வருவதற்கு தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
  • இப்போது கொலராடோ துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் வீட்டிலேயே தயாரிக்கப்படும் துப்பாக்கிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நீதித்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
  • அதுபோன்றே, கைத்துப்பாக்கிகள் பயன்பாட்டுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கவும் சமூகத்துக்கு ஆபத்து விளைவிப்போர் என்று கருதப்படுபவர்களிடமிருந்து துப்பாக்கிகளை அகற்றவும் சட்டத் திருத்தங்கள் கொண்டு வருவதற்கு உத்தரவிட்டிருக்கிறார்.
  • 27 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க மக்களவை கொண்டு வந்த துப்பாக்கிக் கட்டுப்பாட்டு மசோதா இன்னும் நிறைவேறாத நிலையில், அதிபர் பைடனால் மட்டும் மாற்றங்கள் வந்துவிடுமா என்கிற நியாயமான சந்தேகம் எழுகிறது.
  • முற்றிலுமாக துப்பாக்கி கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி விழாவிட்டாலும் தானியங்கி ஆயுதங்கள் பயன்படுத்துவதற்கும், மனநோயால் பாதிக்கப்பட்டவர்களும், கிரிமினல் பின்னணி உள்ளவர்களும் துப்பாக்கிகள் வைத்திருப்பதற்கும் தடை கொண்டு வந்தாலே போதும், துப்பாக்கிச் சூடு கலாசாரத்துக்குக் கடிவாளம் போட்டதாகிவிடும்!

நன்றி: தினமணி  (14 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்