TNPSC Thervupettagam

கொள்ளை நோயும் நிதி ஒதுக்கீடும்!

October 24 , 2020 1548 days 696 0
  • திடீரென்று தாக்கும் வினோதமான கொள்ளை நோய்களை எதிர்கொள்ளும் திறமையை அறிவியலும், மருத்துவமும் பெறவில்லை என்பது கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று வெளிப்படுத்தியிருக்கும் மிகப் பெரிய எதார்த்தம்.
  • நம்முடைய சுகாதாரக் கட்டமைப்பும், மருத்துவ அறிவியலும் திடீரென்று தாக்கும் நோய்த்தொற்றுகளை எதிர்கொள்வதற்கான தயார் நிலையிலும் இல்லை; வலிமையுடனும் இல்லை.
  • இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும்கூட, மிக முக்கியமான காரணம், நமது மருத்துவக் கட்டமைப்பு உலக மக்கள்தொகைக்கு ஏற்ப விரிவுபடுத்தப்படவில்லை.
  • மேலும், இந்தத் துறைக்கு போதுமான அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததையும்கூடக் காரணமாக கூறலாம்.
  • 21-ஆவது நூற்றாண்டில் மனிதனின் சராசரி வயது தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீடு உலக அளவில் தேக்க நிலையை அடைந்திருக்கிறது அல்லது குறைந்து வருகிறது.
  • இதில் ஒரு சில நாடுகள் கவனமுடன் செயல்பட்டாலும்கூட, எதிர்பாராத நோய்த்தொற்றுகளை எதிர்கொள்ளும் வலிமை பெற்றவையாக அவை இல்லை.
  • மற்றவா்களுக்குப் பரவாத, தொற்று நோய்கள் அல்லாத வியாதிகளை எதிர்கொள்ளும் மருந்துகள், அறுவை சிகிச்சை முறைகள், மருத்துவ முறைகள் ஆகியவற்றில்தான் மருத்துவ ஆராய்ச்சிகள் கவனம் செலுத்துகின்றன.
  • 2016-ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம், பொது சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீடு குறித்த உலக அளவிலான போக்குக் குறித்து ஓா் அறிக்கையை வெளியிட்டது.
  • அதன் அடிப்படையில், உலகிலுள்ள நாடுகள் அனைத்தும் பொது சுகாதாரத்துக்காக செலவிடும் தொகை 7.5 டிரில்லியன் டாலா் (சுமார் ரூ.554 லட்சம் கோடி) என்று கணக்கிடப்பட்டது.
  • இது அன்றைய நிலவரப்படி, உலகின் மொத்த ஜிடிபி-யில் 10%. வேடிக்கை என்னவென்றால், 2000-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து 16 ஆண்டுகளாக இதே நிலைமைதான் தொடா்ந்த வந்தது. 2016-க்குப் பிறகும்கூட, இந்தப் புள்ளிவிவரத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை.
  • அந்த அறிக்கையின்படி, அதிக வருவாய், மிதமான வருவாய், குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்குக்கிடையே பொது சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் மிகப் பெரிய வேறுபாடுகள் காணப்பட்டன.
  • ஏழை நாடுகள் மொத்த ஜிடிபி-யில் 1.5% அளவில் பொது சுகாதாரத்துக்காக ஒதுக்கீடு செய்தாலே அதிகம். பணக்கார நாடுகளின் அதிகபட்ச ஒதுக்கீடு ஜிடிபி-யில் 6% அளவில்தான் சராசரியாகக் காணப்பட்டது.
  • கொவைட் 19 நோய்த்தொற்றுக்கு முன்னா் வரை பெரும்பாலான நாடுகள் பொது சுகாதாரத்துக்காக பரிந்துரைக்கப்பட்ட ஒதுக்கீட்டை விட குறைவாகத்தான் செலவிட்டன என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது.
  • சில நாடுகளில் இந்த பிரச்னை அரசியல் ரீதியாக ஆளுங்கட்சிகளுக்கு எதிரான மனோநிலையை உருவாக்கினாலும்கூட, பெரும்பாலான நாடுகளில் இது குறித்த விழிப்புணா்வோ விமா்சனங்களோ எழுப்பப்படவில்லை.
  • கொவைட் 19 நோய்த்தொற்றை எதிர்கொள்ள முடியாமல் கட்டமைப்பு வசதிகள் திணறத் தொடங்கி, போதுமான அளவில் மருத்துவா்களும், செவிலியா்களும், மருத்துவப் பணியாளா்களும், மருத்துவமனைப் படுக்கைகளும் இல்லாத நிலை ஏற்பட்டபோதுதான் அநேகமாக உலகிலுள்ள அத்தனை நாடுகளுமே பொது சுகாதாரத்தை புறக்கணித்ததன் விளைவை உணரத் தொடங்கின.
  • பொது சுகாதாரக் கட்டமைப்பின் பல அடுக்குகள் போதுமான அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்ததன் இடைவெளியை கொள்ளை நோய்த்தொற்று வெளிப்படுத்தியது. இந்தியாவும்கூட மிகக் குறைந்த பொது சுகாதார நிதி ஒதுக்கீட்டின் விளைவை இப்போது எதிர்கொள்கிறது.
  • மத்திய - மாநில அரசுகள் சுகாதாரத்துக்காவும், மருத்துவக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காகவுமான நிதி ஒதுக்கீட்டை ஆண்டுதோறும் பட்ஜெட்டில் அதிகரித்தாலும்கூட, ஜிடிபி விழுக்காடு என்று பார்க்கும்போது தேக்க நிலையோ ஒதுக்கீட்டுக் குறைவோதான் காணப்படுகிறது.

நிதி ஒதுக்கீடு

  • கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவின் பொது சுகாதாரத்துக்கான செலவு ஆண்டுக்கு ஆண்டு வேறுபட்டு வந்திருக்கிறது.
  • 2017-இல் இந்தியாவின் பொது சுகாதாரத்துக்கான செலவு ஜிடிபி-யில் 3.4% என்று உலக வங்கி கணித்திருந்தது. அதே ஆண்டில், இந்தியாவைப் போலவே நடுத்தர வருவாய் உள்ள ஏனைய வளரும் நாடுகள் தங்களது ஜிடிபி-யில் 5% அளவில் பொது சுகாதாரத்துக்காக ஒதுக்கீடு செய்திருந்தன.
  • கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகு ஆக்ஸ்ஃபாம் ஆய்வு, உலகில் மிகக் குறைந்த அளவு சுகாதாரத்துக்காக செலவிடும் நாடுகளில் நான்காவது இடத்தில் இந்தியா இருப்பதாகவும், பட்ஜெட்டில் 4% மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் குறிப்பிடுகிறது.
  • உலகிலேயே மிகவும் ஏழை நாடுகளின் வரிசையில் உள்ள புரூண்டியைவிட மொத்த ஜிடிபி-யில் ஒப்பிடும்போது இந்தியாவின் ஒதுக்கீடு வெறும் மூன்றில் ஒரு பங்குதான்.
  • உலக சுகாதார அமைப்பின்படி, குறைந்தபட்ச ஒதுக்கீடு ஜிடிபி-யில் 5% எனவும், பரிந்துரைக்கப்பட்ட ஒதுக்கீடு 15% எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
  • உலகில் ஏறத்தாழ 158 நாடுகள் இந்தியாவைப்போல குறைந்த அளவு ஒதுக்கீடு செய்கின்றன என்கிறது அந்த அறிக்கை.
  • அதிக ஒதுக்கீடு செய்வதாலேயே திடீா் கொள்ளை நோய்த்தொற்றுகளை எதிர்கொண்டுவிட முடியாதுதான். ஆனால், எதிர்கொள்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளுடன் தயாராக இருக்க வேண்டிய நிர்பந்தம் மனித இனத்துக்கு இருக்கிறது என்பதையே கொவைட் 19 உணா்த்துகிறது.

நன்றி: தினமணி (24-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்