- பெரியாரை அரசியலில் ஆற்றுப்படுத்தியவர்களாக ராஜாஜியையும், அவருக்கும் முன்னதாக சேலம் வரதராஜுலுவையும் சொல்வது வழக்கம். தவிர, பெரியாரின் சிந்தனைகளை அவரது இளம் வயதில் கூர்தீட்டியவர்களாக பா.வே.மாணிக்க நாயகர், மருதையா பிள்ளை, கைவல்ய சாமியார் ஆகியோரும் குறிப்பிடப்படுகிறார்கள்.
- எனினும், பெரியார் தேசிய இயக்கத்துக்குள் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே மக்கள் பணிகளில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டவர் என்பது பெரும்பாலும் பேசப்படுவதில்லை.
- இன்று கரோனாவைப் போல இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிளேக் என்னும் கொள்ளைநோய் பரவியது. அந்நோயின் பரவலும் மக்களிடம் எழுந்த அச்சமுமே பெரியாரைப் பொதுவாழ்க்கைக்குள் அழைத்துவந்தது.
- ஈரோட்டையும் உள்ளடக்கிய அன்றைய ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் பிளேக் நோய் பரவியதால் மக்கள் பரபரப்புக்கும் பீதிக்கும் ஆளானார்கள்.
- நகரங்களைக் காலிசெய்து வெளியேறினார்கள். ஏழைகள் என்ன செய்வது என்று கலங்கிநின்ற வேளையில், தானாக முன்வந்து உதவிகள் செய்தவர் அன்றைய ஈரோட்டு நகரசபை உறுப்பினரான பெரியார்.
- நோய் தாக்கி இறந்துபோனவர்களின் உடல்களை அகற்றுவதற்குப் போதிய நகர சபை ஊழியர்கள் இல்லாததால் தனது நண்பர்களைத் திரட்டி களப்பணிகளில் இறங்கினார் பெரியார்.
- தனது தோளிலேயே பிணங்களைச் சுமந்துசென்று எரியூட்டினார். பிளேக் நோய் தொடர்ந்து பரவாமல் இருக்கவும் நடவடிக்கைகளை எடுத்தார். அதன் காரணமாக மக்களின் பாராட்டுதல்களுக்கும் ஆளானார். அதுவே அவரது பொதுவாழ்வின் தொடக்கம்.
ராஜாஜியின் பாராட்டு
- பிளேக் கமிட்டியின் செயலாளராகப் பொறுப்பேற்றிருந்த பெரியார், தொடர்ந்து ஈரோட்டு நகர சபையின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- தொற்றுநோய்கள் பரவ முக்கியக் காரணம், பொது சுகாதார வசதிகள் சரியாக இல்லாததுதான் என்று உணர்ந்த அவர் அந்த வசதிகளை மேம்படுத்தினார்.
- ஈரோட்டில் அவர் மேற்கொண்ட சுகாதாரப் பணிகளை அவ்வப்போது ஈரோடு வந்துசெல்லும் சேலம் நகர சபைத் தலைவர் ராஜாஜி பாராட்டியதாக பெரியாரின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
- ராஜாஜியின் பாராட்டு அவரை மனநிறைவும் மகிழ்ச்சியும் கொள்ளச் செய்திருக்கிறது என்றாலும் பணிவோடு அவரிடம் அதை மறுத்து, ‘ஈரோடு, இயற்கையில் நல்ல சாக்கடை வெளியேற்ற வசதியும், ரொம்பவும் குறைந்த மைல் நீளமுள்ள ரோட்டமைப்பாகவும் அதிக பணம் வரும்படி உள்ள முனிசிபாலிடி ஆனதாலும், ஈரோடு உங்கள் கண்ணுக்கு அப்படித் தோன்றுகிறது’ என்று பதில் சொன்னார்.
- ஈரோட்டில் சுகாதாரத் திட்டங்களை நிறைவேற்றியதோடு சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றியும் தெருக்களுக்குக் காவிரியிலிருந்து குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்கியும் சிறந்த நகரக் கட்டமைப்பை உருவாக்கியவர் பெரியாரே.
- குடிநீர்த் திட்டங்களின் கல்வெட்டுகள் இன்றும் அவரின் பெயரை எதிர்வரும் தலைமுறைக்கு நினைவுபடுத்திக்கொண்டிருக்கின்றன.
- பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரம் வெறும் கடவுள் மறுப்பு மட்டுமில்லை, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வையும் உள்ளடக்கியது அது.
- ஈரோட்டில் 1930-ல் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பெரியார், பொது சுகாதாரம் குறித்து மக்களின் அறிவின்மையையும் அலட்சியத்தையும் கண்டித்துப் பேசியிருக்கிறார். ‘சுகாதாரத்தினால் என்ன பலனிருக்கின்றது என்பதே நமக்குத் தெரியாது... ஏன் வியாதி வந்தது? ஆகாரத்திலாவது, பானத்திலாவது, காற்றிலாவது என்ன கெடுதல் ஏற்பட்டது? சரீரத்தில் என்ன கோளாறு இருக்கின்றது என்கின்ற விஷயங்களில் கவனம் செலுத்துகின்ற அறிவோ படிப்போ நமக்குக் கிடையாது. நமது நாட்டு மக்கள் தங்கள் வீட்டுக் குப்பைகளைப் பக்கத்து வீட்டுக்கு முன்புறமாய்க் கொண்டுபோய்க் கொட்டுவதே வழக்கம்; பக்கத்து வீட்டுக்காரன் நமது வீட்டுக்கு முன்புறத்தில் கொண்டுவந்து கொட்டிவிட்டுப் போவது வழக்கம்’ என்று அவரது பேச்சு சற்று காட்டமாகவே அமைந்திருந்தது.
- மத நம்பிக்கையின் பெயரிலான பொதுக் கூடுகைகளில் சுகாதார வசதிகள் இல்லாமல் தொற்றுநோய் பரவுவதற்கு வாய்ப்புள்ளதையும் அவர் தொடர்ந்து தனது பேச்சிலும் எழுத்திலும் சுட்டிக்காட்டி வந்திருக்கிறார்.
சுகாதாரமே தீர்வு
- 1944-ல் கான்பூரில் நடந்த இந்திய பிற்படுத்தப்பட்ட இந்து வகுப்பினர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார் பெரியார்.
- இன இழிவு நீங்க அதற்குக் காரணமாய் இருக்கிற கடவுள், மத நம்பிக்கைகளைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்திய அவர் அதற்குப் பொது சுகாதாரத்தின் அவசியத்தையே உதாரணமாக்கி விளக்கினார்.
- ‘மலைக்காய்ச்சலால் அவதிப்படும் மக்கள் கொய்னா சாப்பிடுவதையே அதற்குப் பரிகாரம் என்று கருதுவார்களேயானால், அம்மக்களுக்கு மருந்து சாப்பிடுகிற வேலையும், மருந்து வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கிற வேலையும்தான் நடைபெறுமே தவிர, அவர்களுக்கும் அவர்களது சந்ததிகளுக்கும் மலைக்காய்ச்சல் ஏற்படுவது தடுக்கப்பட மாட்டாது. உண்மையில், மலைக்காய்ச்சலை ஒழிக்க வேண்டுமானால், ஆதாரமான அதை உற்பத்தி செய்கின்ற கொசுப் பூச்சிகள், விஷக் காற்றுகள் முதலியவைகளை ஒழிக்க வேண்டும், மறுபடியும் அவை உற்பத்தியாகாவண்ணம் குப்பைக்கூளங்களை நெருப்பு வைத்து எரித்து, அழுக்குத் தண்ணீர்க் குட்டைகளை மூட வேண்டும்.’
- நோய் முதல் நாடி தீர்க்காமல் நோயை ஒழிக்க முடியாது என்று நீண்டது அவர் விளக்கம்.
- இந்த கரோனா காலகட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் பொது சுகாதாரத்தில் காட்டிய தனிக்கவனம் கவனத்தில் கொள்ளத்தக்க ஒன்று.
- சாலைகளை அடிக்கடி சுத்தப்படுத்தி கிருமிநாசினி மருந்துகளைத் தெளித்தன. வழக்கமாக மேற்கொள்ளப்பட வேண்டிய அந்தப் பணி, ஒரு பெருந்தொற்று ஏற்படுத்திய அச்சத்தால் சிரத்தையுடன் மேற்கொள்ளப்பட்டது.
- அதற்கும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்றபோதும் மற்ற தொற்றுகளிலிருந்து மக்களைக் காக்க நிச்சயமாக அது உதவும். ஆனால், அத்தகு நடவடிக்கைகளில் ஏன் முன்கூட்டியே கவனம் செலுத்தப்படவில்லை?
- பெரியாரைப் பொறுத்தவரை தொற்றுநோய்கள் பரவுவதற்கு மக்களிடம் விழிப்புணர்வின்மையும் அலட்சியமுமே காரணம்.
- சாதி மத பேதங்களும், அதற்குக் காரணமான நம்பிக்கைகளும்கூட அவரது பார்வையில் கேடுதரும் நோய்கள்தான்.
- ஆனால், சமூக நோய்களை அகற்றும் பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்கு முன்னே பிளேக் என்னும் கொள்ளைநோயை எதிர்த்துக் களமிறங்கிவிட்டவர் அவர்.
- தொற்றுநோய்க் காலங்களில், அரசு அமைப்புகளின் உதவியைத் தாண்டி தன்னார்வலர்களின் பங்கேற்பும் அவசியம் என்பதை உணர்த்துகிறது அவரது வாழ்வு.
நன்றி: தி இந்து (17-09-2020)