PREVIOUS
· சீனாவின் வூஹான் நகரில் கடந்த நவம்பர் மாதம் உருவான கரோனா நோய்த்தொற்று இப்போது இந்தியா, ஜப்பான், தைவான், பிலிப்பின்ஸ், ஹாங்காங், பிரான்ஸ் என்று நாடு விட்டு நாடு, கண்டம் விட்டுக் கண்டம் அதிவிரைவாகப் பரவிக் கொண்டிருக்கிறது.
· இந்த நோய்த்தொற்றை எப்படிக் கட்டுப்படுத்தப் போகிறோம், இதற்கு என்னதான் மருத்துவம் என்பது புரியாமல் உலகம் விழி பிதுங்கி நிற்கிறது.
"கரோனா வைரஸ்' என்கிற பொதுப் பெயரில் அழைக்கப்பட்டு வந்த நோய்த்தொற்றுக்கு "கொவைட் - 19' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த நோய்த்தொற்றால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,236 உள்பட உலகம் முழுவதிலுமாக பலியானவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 2,250.
சீனாவில்...
· சீனாவில் 889 பேர் புதிதாகக் "கொவைட் - 19' தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். பாதிப்புக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 75,467. சீனா மட்டுமல்லாமல், இந்தியா உள்ளிட்ட 27 நாடுகளில் "கொவைட் - 19' நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். சர்வதேச அளவில் பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்களின் எண்ணிக்கை நேற்றைய தகவல்படி 76,808 பேர்.
· இந்த "கொவைட் - 19' நோய்த்தொற்று, சீனாவிலுள்ள வூஹான் நகரின் மீன் மற்றும் இறைச்சி சந்தையிலிருந்து உருவாகியிருப்பது தெரியவந்திருக்கிறது. இந்தச் சந்தையில் உயிருள்ள மிருகங்களும், கால்நடைகளும், வன விலங்குகளும் இறைச்சிக்காக கொல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
· அங்கே உள்ள இறைச்சிக் கடைகளில் உயிருள்ள மயில்கள், எலிகள், பெருச்சாளிகள், நரிகள், முதலைகள், ஓநாய்க் குட்டிகள், ஆமைகள், பாம்புகள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட பல உயிருள்ள விலங்கினங்கள் வாடிக்கையாளர்களின் கண் முன்னால் இறைச்சிக்காகக் கொல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. எழுபதுக்கும் அதிகமான விலங்கினங்களின் கால், ரத்தம், குடல், மூளை உள்ளிட்ட உறுப்புகள் பட்டியலிடப்பட்டு விற்கப்படுகின்றன.
"சார்ஸ்' – நோய்த்தொற்று
· 2002-இல் சீனாவிலிருந்து உருவான "சார்ஸ்' என்கிற நோய்த்தொற்றுக்குக் காரணமாக இருந்தது நம்மால் மரநாய் என்று அழைக்கப்படும் "பாம் சிவட்' என்கிற கீரியைப் போன்ற காட்டு மிருகம். 2012-இல் உருவான "மெர்ஸ்' என்கிற நோய்த்தொற்று மத்திய கிழக்கு ஆசியாவில் உருவானது. இதற்குக் காரணம் ஒட்டகங்கள். கடந்த 1996 முதல் இதுவரை 11 முறைகள் பறவைக் காய்ச்சல் தாக்குதல்களுக்கு உள்ளாகிக் கோடிக்கணக்கான பறவைகள், குறிப்பாகக் கோழிகள் கொத்துக் கொத்தாகச் செத்து மடிந்திருக்கின்றன. கோழிகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவிய அந்த விஷக் காய்ச்சலின் தொடக்கமும் சீனாதான். வாத்துக் கழிவிலிருந்து பறவை இனங்களை மட்டுமல்லாமல் 60 நாடுகளில் மனிதர்களையும் தாக்கியது பறவைக் காய்ச்சல்.
· அதிகரித்துவரும் மாமிச உணவுப் பழக்கம் "சார்ஸ்', பறவைக் காய்ச்சல், "மெர்ஸ்' இப்போது "கொவைட் - 19' உள்ளிட்ட நோய்த்தொற்று பாதிப்புகளுக்கு மிக முக்கியமான காரணம் என்று சமூகவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
வனவிலங்குகள்
· வளர்ச்சி என்கிற பெயரில் காடுகள் அழிக்கப்படுவதால், வனவிலங்குகளுக்கும், வளர்ப்பு மிருகங்களுக்குமான நேரடித் தொடர்புகள் அதிகரித்திருக்கின்றன. வனவிலங்குகள் வேறு வழியில்லாமல் மனித உறைவிடங்களுக்குள் தஞ்சமடைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அதனால் அவற்றை பாதிக்கும் நோய்த்தொற்றுகள் வளர்ப்பு மிருகங்களைத் தொற்றிக் கொள்கின்றன.
· இறைச்சிக் கடைகளும், சந்தைகளும்தான் நோய்த்தொற்றுகளின் ஊற்றுக்கண்கள். பல்வேறு பறவைகளும், விலங்குகளும் இறைச்சிக்காக ஒரே இடத்தில் வைக்கப்படும்போது, நோய்த்தொற்றுகள் அனைத்துக்கும் பரவுகின்றன. ஒரே கசாப்பு மேடையும், கத்தியும் பயன்படுத்தப்படுவதால், இறைச்சியின் மூலம் மனிதர்களுக்கு நோய்த்தொற்றுகள் பரவுவது தவிர்க்க இயலாததாகிறது. குறிப்பாக, கோழி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, ஒட்டக இறைச்சி ஆகியவைதான் மனிதர்களிடையே நோய்த்தொற்று பரவுவதற்கு முக்கியமான காரணங்கள்.
· சீனாவிலிருந்து பல்வேறு நோய்த்தொற்றுகள் உருவாகி வருவதில் வியப்பில்லை. அமெரிக்க சிவப்பு நரிகள், ஆஸ்திரேலிய வரிக்குதிரைகள், ஆப்பிரிக்க நெருப்புக் கோழிகள் உள்ளிட்ட 54 வனவிலங்குகளை வியாபார ரீதியில் வளர்த்து விற்பனை செய்ய சீன அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.
வர்த்தகம்
· பல்லி, எலி, பாம்பு, கீரி உள்ளிட்டவை சீனர்களால் பரவலாக உட்கொள்ளப்படுகின்றன. வெளவால்கள், எலி போன்றவற்றை முதலில் தாக்கும் நோய்த்தொற்றுகள் படிப்படியாக மனித உணவாகும் இறைச்சிகளின் மூலம் பரவும்போது, நம்மால் தடுக்க முடிவதில்லை.
· வனவிலங்கு வர்த்தகம் தடைசெய்யப்பட்டாலும்கூட இந்த ஆபத்திலிருந்து மனித இனம் தப்பிவிட முடியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. எலிகள், பெருச்சாளிகள், வெளவால்கள், பாம்புகள், தவளைகள் போன்றவை சீனர்களின் உணவாகவே இருப்பதால் அதன் விற்பனையைத் தடை செய்ய முடியாது.
· துரித உணவகங்களில் முழுமையாகச் சமைக்கப்படாத, அரைகுறையாக வேகவைக்கப்படும் மாமிச உணவுகள் விற்பனை செய்யப்படுவதைக் கண்காணிப்பதும் இயலாது. அதன் விளைவை மனித இனம் எதிர்கொள்கிறது.
· "கொவைட் - 19' நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மனிதர்களை அடையாளம் கண்டு குணப்படுத்த முயற்சிக்கிறோம். இதனால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான பறவை, விலங்கினங்கள இருக்கக்கூடுமே... அது குறித்தும் சிந்திக்க வேண்டாமா?
நன்றி: தினமணி (22-02-2020)