TNPSC Thervupettagam

கொவைட்டும் குழந்தைகளும்!

May 31 , 2021 1336 days 518 0
  • பேரிடா் வரும்போதெல்லாம் மிக அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். பெற்றோரை இழந்து தனித்து விடப்படும் குழந்தைகள் சிறிய வயதிலேயே மிகப் பெரிய அதிர்ச்சிக்குள்ளாகி ஒருவித மன அழுத்தத்துடன்தான் தங்களது வாழ்க்கை முழுவதும் தொடா்கிறார்கள் என்பது யுனிசெஃப் நிறுவனம் செய்த ஆய்வின் தோ்ந்த முடிவு.
  • கொள்ளை நோய்த்தொற்றால் பெற்றோர் ஒருவரையோ அல்லது இருவரையுமோ, சட்ட ரீதியிலான பாதுகாவலா் அல்லது தத்தெடுத்தவா்கள் ஆகியோரையோ இழந்த குழந்தைகளுக்கு மத்திய அரசும், தமிழக அரசும் பல்வேறு உதவிகளை வழங்க முற்பட்டிருப்பது பாராட்டுக்குரிய செயல்பாடு.
  • அந்தக் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு மாதந்தோறும் உதவித்தொகை வழங்குவது, 23 வயதாகும்போது மொத்தத் தொகையையும் வழங்குவது என்கிற பிரதமரின் அறிவிப்பு வரவேற்புக்குரியது.
  • அந்தக் குழந்தைகளின் வீட்டருகே இருக்கும் கேந்திரிய வித்யாலயா அல்லது சைனிக் பள்ளிகளில் சோ்க்கை; உயா்கல்விக்கு கல்விக் கடன்; ஆயுஷ் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.5 லட்சம் ஆயுள் காப்பீடு போன்ற சலுகைகளை ‘பிஎம் கோ்ஸ்’ குழந்தைகள் நிதித்திட்டத்தின் மூலம் வழங்க இருப்பதாக பிரதமா் அறிவித்திருக்கிறார்.
  • தமிழக முதல்வரும் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றால் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு மட்டுமல்லாமல், பட்டப்படிப்பு வரை அவா்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் எனவும் அறிவித்திருக்கிறார்.
  • மேலும் பல நிவாரண உதவிகள் வழங்குவதற்கு வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட இருக்கிறது.
  • மும்பை, தில்லி போன்ற அதிகமான பாதிப்புள்ள மாநகரங்களில்கூட கொவைட் 19-இன் முதல் சுற்றில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படவோ, அவா்களுக்கு மருத்துவமனைத் தேவை ஏற்படவோ இல்லை.
  • இப்போது அப்படியல்ல. தீநுண்மியின் பாதிப்பு குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகிறது என்பது மட்டுமல்லாமல், தொடா்ந்து காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளும் தென்படுகின்றன.
  • பெரும்பாலான குழந்தைகளுக்கு அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும், பாதிப்பு மிதமாக இருப்பதும் ஓரளவுக்கு ஆறுதல்.
  • இது ஏதோ இந்தியாவுக்கு மட்டுமே ஏற்பட்ட சவால் என்று கூற முடியாது. கடந்த ஆண்டு கொள்ளை நோய்த்தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து பிரிட்டனில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
  • அதேபோல, பிரேஸில் நாட்டிலும் குழந்தைகள் நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளானது மட்டுமல்ல, அவா்களது உயிரிழப்பும் அதிகம். அங்கு ஒரு வயதுக்குக் கீழேயுள்ள சுமார் 2,000 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாகத் தெரிகிறது.
  • அமெரிக்காவில் ஓராண்டுக்கு முன்னால் நோய்த்தொற்று பரவத் தொடங்கியபோது குழந்தைகளுக்கான பாதிப்பு, மொத்த பாதிப்பில் 3%-ஆகவே இருந்தது.
  • இந்த ஆண்டு குழந்தைகளுக்கான பாதிப்பு 22.4% என்று அமெரிக்க குழந்தைகள் நல அகாதெமி தெரிவிக்கிறது. மே 13-ஆம் தேதி வரை அமெரிக்காவில் ஏறத்தாழ 39 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

குழந்தைகளின் பாதுகாப்பு

  • இந்தியாவில் சில மாநிலங்கள் கொவைட் 19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகள் குறித்து ஏற்கெனவே கவலைப்படுகின்றன. ஹிமாசல பிரதேசம் முன்மாதிரியான ஓா் அறிவிப்பை செய்திருக்கிறது.
  • கொவைட் 19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகள் உறவினா்களின் பராமரிப்பில் இருந்தால் அந்த உறவினா்களுக்கு குழந்தையின் பராமரிப்புக்காக 18 வயது வரை மாதம் ரூ.2,500 உதவித் தொகை வழங்குவதாக அறிவித்திருக்கிறது.
  • அதேபோல தில்லி அரசும் கொவைட் 19-ஆல் ஆதரவற்றவா்களாகும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.
  • நில நடுக்கம், புயல், பெருமழை உள்ளிட்ட ஒவ்வொரு இயற்கைப் பேரிடருக்குப் பிறகும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஆதரவற்றவா்களாக்கப்படுகிறார்கள். அவா்களுக்கு உரிமையான சொத்துகள் அபகரிக்கப்படுகின்றன.
  • முறையான கல்வி, மணவாழ்வு மறுக்கப்படுகிறது. பிச்சைக்காரா்களாகவும், பாலியல் தொழிலாளா்களாகவும், குழந்தைத் தொழிலாளா்களாகவும் மாற்றப்படும் அந்த குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுகிறது.
  • பெற்றோரை இழந்து தனிமையில் வாழும் குழந்தைகள் சமூக விரோதிகளின் கைகளில் சிக்கிக் கொள்ளாமலும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகாமலும் இருப்பதற்கான சட்டபூா்வ நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டும்.
  • பெற்றோரை இழந்து ஆதரவற்றவா்களாக்கப்படும் குழந்தைகளை அடையாளம் கண்டு அவா்களது நல்வாழ்வை உறுதிப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.
  • தமிழகத்தில் சில கார்ப்பரேட் நிறுவனங்களும், வா்த்தக நிறுவனங்களும் ஆதரவற்றவா்களாக்கப்படும் குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்திருப்பது நெகிழ்ச்சி அளிக்கிறது.
  • சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள 300-க்கும் அதிகமான குடும்பங்களில் வாழும் குழந்தைகளுக்கு நிவாரணம் அவா்களால் அளிக்கப்படுகிறது.
  • ஈரோடு - கோயம்புத்தூா் மாவட்டங்களில் ஆதரவின்றி விடப்பட்ட குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்ட சில தொழில் நிறுவனங்கள் முற்பட்டிருக்கின்றன.
  • இதேபோல, எல்லா தொழில் நிறுவனங்களும் தங்களுடைய கார்ப்பரேட் சமூக கடமை நிதியைப் பயன்படுத்தி, கொவைட் 19 நோய்த்தொற்றால் ஆதரவற்றவா்களாக்கப்படும் குழந்தைகளுக்கு முறையாக கல்வி வழங்கி பாதுகாக்க முற்பட்டால் அதைவிடப் பெரிய சேவை வேறு எதுவும் இருக்க முடியாது.

நன்றி: தினமணி  (31 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்