TNPSC Thervupettagam

கோப்பை வென்ற ‘கோட்’கள்!

July 5 , 2024 190 days 173 0
  • பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகள் - அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்றிருக்கிறது. ஓர் அணியின் வெற்றிக்கு கூட்டு முயற்சிதான் காரணம் என்றாலும், இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்கு ‘கோட்’டாக (GOAT - Greatest Of All Time) சில வீரர்களும் இருந்திருக்கிறார்கள்.

ரோஹித் சர்மா:

  • ஆஸ்திரேலியாவில் 2022இல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் அரையிறுதியில் விளையாடிய பிறகு கேப்டன் ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் தலைகாட்டவில்லை. டி20 போட்டிகளில் ரோஹித் இனி அவ்ளோதான் என்று எண்ணிய வேளையில்தான், 2024 ஜனரிவரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ரீஎண்ட்ரி ஆனார்.
  • டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பதற்காகவே ரோஹித் அணிக்குள் வருகிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அந்த விமர்சனங்களுக்கு உலகக் கோப்பையை வென்று பதிலடிக் கொடுத்துவிட்டார் ரோஹித். 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோற்றதால் ஏற்பட்ட வலியை மறக்கடித்திருக்கிறார் ரோஹித். இத்தொடரில் கேப்டனாக ஜொலித்தது மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அசத்தினார்.
  • 8 இன்னிங்ஸ்களில் 257 ரன்கள் குவித்ததோடு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 92 ரன்களைக் குவித்தது பதிலடியாகவே அமைந்தது. இறுதிப் போட்டியில் ஓவர்களை மாற்றித் தருவதில் அவருடைய கேப்டன்சி திறமையும் வெளிப்பட்டது. இதுவரை நடைபெற்றுள்ள டி20 உலகக் கோப்பையில் எந்தப் போட்டியிலும் தோல்வியடையாமல் கோப்பை வென்ற ஒரே அணியாக இந்தியா மிளிர்ந்தது ரோஹித்தின் கேப்டன்சிக்கு கிடைத்த இன்னொரு மகுடம்.

ஜஸ்பிரீத் பும்ரா:

  • இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் வயிற்றுக்குள் செல்ல இருந்த வெற்றியை, தொண்டைக்குள் கையை விட்டு வெளியே கொண்டுவந்து, இந்தியா வசமாக்கியது சாட்சாத் பும்ராதான். கடைசி நான்கு ஓவர்களில் பும்ரா வீசிய இரண்டு ஓவர்கள்தான் இந்தியா பக்கம் வெற்றியைத் திருப்பியது. இத்தொடரில் மொத்தமாக பும்ரா 178 பந்துகளை வீசியதில் 110 டாட் பந்துகளாக அமைந்தன.
  • 124 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 15 விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்தியாவின் தொடர்ச்சியான வெற்றிக்கு வழிவகுத்தது. இவருடைய எகானமி விகிதம் 4.17 என்பது டி20 போட்டிகளில் ஆகச் சிறந்த பந்துவீச்சு. இந்த முறை பும்ரா தொடர் நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். அந்த வகையில் டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் வென்ற முதல் இந்திய வீரர் பும்ரா. மேலும் டி20 உலக் கோப்பை தொடரில் ஒரு ரன்கூட எடுக்காமல் தொடர் நாயகன் வென்ற முதல் வீரரும் இவரே.

ஹர்திக் பாண்ட்யா:

  • இந்திய அணி கோப்பையை வென்ற பிறகு மைதானத்தில் கண்ணீர் சிந்தி, கோடிக்கணக் கானவர்களின் இதயங்களை வென்றார் பாண்ட்யா. ஒரு பெரும் வெற்றிக்குப் பிறகு வெளிப்படும் ஆனந்தக் கண்ணீரின் பின்னணியில் வலி நிச்சயம் இருக்கும். அதை வெளிப்படுத்தும் வகையில்தான், கடந்த 6 மாதங்களாக தன்னுடைய வாழ்க்கையில் புயல் வீசியதை போட்டி முடிந்த பிறகு பாண்ட்யா குறிப்பிட்டார். இதற்கெல்லாம் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதன் மூலம் ஆசுவாசத்தைத் தேடிக்கொண்டார்.
  • இறுதிப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கோப்பையை வென்றதில் மட்டும் பாண்ட்யா பங்களிக்கவில்லை. இத்தொடர் முழுவதுமே ஆல்ரவுண்டர் பணியைச் சிறப்பாகவே செய்திருந்தார். 144 ரன்கள், 11 விக்கெட்டுகளை வீழ்த்தி தன்னுடைய ஆல்ரவுண்டர் பங்களிப்புக்கு நியாயம் சேர்த்தார். அணியின் துணைத் தலைவராக இந்தப் பங்களிப்பு இந்திய அணியின் வெற்றிக்கும் உதவியது. உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் ஹர்திக் பாண்ட்யா முதலிடம் பிடித்ததே இதெற்கெல்லாம் சாட்சி.

அர்ஷ்தீப் சிங்:

  • இந்த உலகக் கோப்பையின் வெற்றியில் பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு மிக அதிகம். இத்தொடரில் விளையாடிய 8 போட்டிகளில் 6 போட்டிகளில் முதலில்தான் இந்தியா பேட்டிங் செய்தது. ஒரு சில போட்டிகளில் இந்தியா குறைவான ரன்களை அடித்தாலும், எதிரணிகளைக் கட்டுப்படுத்துவதில் பந்துவீச்சாளர்கள் கூட்டாகச் செயல்பட்டனர். குறிப்பாக பும்ராவுக்குப் பிறகு அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சு மெச்சும்படி இருந்தது.
  • இளம் வீரரான அர்ஷ்தீப் இத்தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் ஃபரூக்கியுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக இறுதிப் போட்டியில் 19ஆவது ஓவரை கட்டுக்கோப்பாக வீசி இந்தியாவை வெற்றிக் கோட்டுக்கு அருகில் கொண்டுவந்து நிறுத்தினார்.
  • ஏற்கெனவே 2018இல் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் தலைமையில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை அணியில் கோப்பையை வென்ற அர்ஷ்தீப், இந்த முறை சீனியர் அணியிலும் உலகக் கோப்பையை வென்று சாதித்திருக்கிறார்.
  • உலகக் கோப்பையில் இந்த நால்வர் மட்டுமல்லாமல் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் வழிகாட்டலில் மற்ற சில வீரர்களும் சிறந்த பங்களிப்பை வழங்கத் தவறவில்லை. முக்கியமாக இறுதிப் போட்டியில் விராட் கோலி எடுத்த 76 ரன்கள், இத்தொடரில் சூரியகுமார் விளாசிய 199 ரன்கள், அற்புதமான இறுதிப் போட்டி கேட்ச், அவ்வப்போது ஆல்ரவுண்டர் பணியைத் திறம்பட செய்த அக்‌ஷர் பட்டேல், மீண்டும் சர்வதேசப் போட்டிகளுக்குத் திரும்பியுள்ள விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், சுழற்பந்து பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் என அனைவரும் ஓர் அணியாக ஒருங்கிணைந்து செயல்பட்டு 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் உலகக் கோப்பைக் கனவை நிறைவேற்றி யிருக்கிறார்கள்.

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்