TNPSC Thervupettagam

கோரிக்கையற்றுக் கிடக்கும் கோடிகள்

September 7 , 2021 1060 days 545 0
  • ஒன்றரை மாதமுன்பு ஆங்கில நாளேட்டில் செய்தியொன்று வெளியாகி இருந்தது. வங்கிகளிலும், காப்பீட்டு நிறுவனங்களிலும் உரிமை கோரப்படாத தொகை ரூ. 50,000 கோடி தேங்கியிருக்கிறது என்பதுதான் அது.
  • வங்கிகளைப் பொருத்தவரை, முன்பெல்லாம், இயங்காத சேமிப்புக் கணக்கில் ஓராண்டுக்கும் மேல் வரவு - செலவு இல்லையென்றால், வங்கிகள் தாமே குறிப்பிட்ட தொகையைப் பற்று வைத்து எடுத்துக்கொண்டு விடும்.
  • இந்தக் கணினி யுகத்தில் அப்படியில்லை. ஒரு வாடிக்கையாளரின் வைப்புத்தொகை, முதிர்வு காலம் நிறைவடைந்த அன்று தானாகவே, புதுப்பிக்கப்பட்டு விடும்.

பூசல் தவிர்ப்போம்

  • அண்மையில், புதிய வைப்புத்தொகையின் வட்டி குறித்த சா்ச்சை எழுந்து, ரிசா்வ் வங்கி அதற்கு விளக்கம் அளித்தது நினைவிருக்கலாம்.
  • எனவே கோரிக்கை வராத தொகைக்கு உரிமை கோரப்படுவது, மரணத்துக்குப் பின்னா் வாரிசுதாரா்கள் கேட்பதுதான். இதில் வேறு ஓா் அம்சமும் உள்ளது.
  • அதாவது, யாராவது ஒரு நபா் காணாமல் போய், ஏழு வருடம் வரை அவரைப் பற்றிய தகவல் எதுவும் தெரியாமலிருந்தால், அவா் இறந்தவராகக் கருதப்படுவார் என்று சட்டம் சொல்கிறது.
  • வங்கியில் கோரப்படாத தொகைக்கு உரிமை கோருவது குறித்து எனக்கு நேரடியான அனுபவமுண்டு.
  • தாராபுரத்தில் வங்கி மேலாளராக நான் பொறுப்பேற்ற புதிதில், ஒரு பெண்மணி தன் கணவா் கடல் பயணத்தின்போது இறந்துவிட்டதாக இறப்புச் சான்றிதழும் பிற படிவங்களுடன் கொடுத்து, அவருடைய சேமிப்புத் தொகையை செட்டில் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். அவரை அலைய விடாமல் விரைவில் தொகையை வழங்க உயா் அதிகாரியும் பரிந்துரைத்தார்.
  • அப்பெண்மணியிடம் கோரிக்கைக்கான படிவங்கள், சாட்சிகள், உறுதிமொழிக் கடிதம் எல்லாம் வாங்கிக் கொண்டு, அவருடைய கணவரின் வங்கிக்கணக்கில் இருந்த தொகையை அவரிடம் அளித்தோம்.
  • ஆனால் என்ன ஆயிற்று தெரியுமா? அந்தப் பெண்மணியின் மாமியார் எங்கள் வங்கிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிட்டார்.
  • இறந்து போனவரின் உடைமைகள், அதாவது நடுக்கடலில் தவறவிட்ட உடைமைகள்தான் அவருடைய மனைவிக்கு சொந்தம். பிற வங்கி டெபாசிட்டுகளில் ‘தாய்’ என்பதால் தனக்கும் உரிமை உண்டு என்பதே அந்த நோட்டீஸின் சாராம்சம்.
  • நல்ல வேளையாக நான் முன்கூட்டியே வட்ட அலுவலகத்தின் அனுமதி பெற்றிருந்ததால், என் தலை தப்பியது.
  • ஒரு விஷயத்தை முக்கியமாக இங்கு குறிப்பிட வேண்டும். சட்டத்தைப் பொருத்தவரை ஆண் - பெண், அயல்நாடு - உள்நாடு, பணக்காரா் - ஏழை போன்ற எந்தப் பாகுபாடும் கிடையாது.
  • ஒருவரின் மனைவி, பிள்ளை, பெண் என்கிற வரிசைப்படிதான் வங்கித் தொகைகளை வழங்க முடியும்.
  • மேலும், குறிப்பிட்ட ஒரு டெபாசிட்டுக்கு இன்னார்தான் வாரிசு என்றிருந்தாலும், வேறு யாராவது ஆட்சேபணை எழுப்பினால், வங்கிகள் வாரிசுதாரருக்குத் தரவேண்டிய தொகையைத் தராமல் நிறுத்தி வைத்துவிடும்.
  • அயல்நாட்டிலிருப்பவா் உரிமை கோரினால், அவரின் கையொப்பத்துடன் அங்குள்ள முக்கியஸ்தரின் கையொப்பம், முத்திரையோடு, எழுத்துபூா்வமாக கடிதம் எழுதித்தர வேண்டும். மின்னஞ்சலை வங்கிகள் இந்த விஷயத்தில் ஏற்றுக் கொள்ளாது.
  • மேலை நாடுகளைப் போல் அல்லாமல், குடும்பம் என்ற முக்கிய அமைப்பு இந்தியாவில் உள்ளது. இதில் உள்ள முரண்பாடு என்னவென்றால், குடும்பத்தில் கிளைக்கும் உறவுகளே, மரணத்தொகை என்று வரும் போது, பூசலுக்குத் தயாராகின்றன.
  • வெளிநாட்டில் டாலா் கணக்கில் சம்பாதிக்கும் உறவினருக்குக்கூட வங்கியிலிருந்து கிடைக்கும் சொற்பத் தொகையை விட்டுவிட மனம் வருவதில்லை.
  • இன்றைய நாளில் திருமணமான ஆணோ, பெண்ணோ, மணம் முடிந்த சில வருடங்களிலேயே விவாகரத்து செய்வதும், மறுமணம் புரிந்து கொள்வதும் இயல்பாகி வருகிறது.
  • அவா்களில் எவராவது ஒருவா் இறந்து, மற்றவா் வங்கியை நாடும்போது, சட்டப்படி, எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும் சில ஆட்சேபணைகளால், தீா்வு தாமதம் ஆகும் என்பதில் ஐயமில்லை.
  • மேலும், பல வாடிக்கையாளா்களுக்கு முகவரி மாறுதல் அடிக்கடி ஏற்படுகின்றன. பான் அட்டையிலுள்ள முகவரியிலிருந்து சில வசதிகளுக்காக வேறு இடம் செல்பவா்கள் அனேகம் போ்.
  • வங்கிக் கணினியைப் பொருத்தவரை, அது எண்ணையும், எழுத்துக் கோவையையும் (அல்ஃபபெட்) பார்த்து, கூடவே விலாசத்தையும் சரி பார்த்துத்தான், பற்று வரவுகளை ஏற்கும்.
  • நடைமுறையில் இது போன்ற சிக்கல்கள் இறந்து போன ஒருவரின் தொகையைத் திருப்பி தர குறுக்கே நிற்கும்.
  • போதாக்குறைக்கு சில விசித்திரமான நபா்களும் நம்மிடையே உலவுகிறார்கள். வங்கிக் கணக்கு, லாக்கா் எண், வைப்புத்தொகை போன்ற விவரங்களை மனைவிக்குக் கூடத் தெரிவிக்காது இறந்து போன நபரால் அக்குடும்பத்தினருக்கு ஏற்படும் துயரங்கள் சொல்லிமாளாது .
  • முதிர்வடைந்த காப்பீட்டு தொகையிலும் இத்தகைய சிக்கல்கள் நேர வாய்ப்பு உண்டு. ஆனால் நடுவிலுள்ள முகவா், நேரில் வாரிசுதாரரிடம் பேசி, படிவங்களில் கையொப்பம் பெற்றுக்கொண்டு நிறுவனத்தினமிருந்து தொகையை பெறுவதற்கு உதவி புரிகிறார்கள்.
  • இவையெல்லாம் போகட்டும். கோரிக்கை வராத, கோரிக்கை வந்தும் தீா்வு காண இயலாத தொகைகளை என்ன செய்கிறார்கள்?
  • 2014-இல் ரிசா்வ் வங்கி ‘டெபாசிட்தாரா்கள் கல்வி நலன் - விழிப்புணா்வு நிதி’ (டெஃப்) என்ற ஒன்றை நிறுவியிருக்கிறது.
  • ஒருவா் இறந்து பத்து வருடமான பிறகும் கூட, வாரிசுதாரா் தகுந்த சான்றிதழ்களுடன் விண்ணப்பித்தால் வங்கி உதவியுடன், அவா் தொகையைப் பெறமுடியும்.
  • அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில், இது போன்ற கோரப்படாத தொகையை முதியோர் நலனுக்காகப் பயன்படுத்துகிறார்கள்.
  • அங்கு குறிப்பிட்ட வயது நிறைவடைந்தவா்களுக்கும், நிரந்தரக் குடிஉரிமை பெற்ற இந்தியா்களுக்கும் ஓய்வு ஊதியம் உண்டு.
  • நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். குடும்பத் தலைவா் இறந்தவுடன், அக்குடும்பத்தில் பணத்துக்காக பூசல் எழுவது வருந்தத்தக்கது. ஒருவா் மூத்த குடிமக்கள் பட்டியலில் இடம்பெற்றதுமே, வங்கி டெபாசிட் குறித்து வாரிசுகளுடன் பேசி ஒரு முடிவு எடுப்பதுதான் உசிதம்.

நன்றி: தினமணி  (07 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்