TNPSC Thervupettagam

கோர்பசெவ் கடைசிக் கட்டுரை

September 9 , 2022 700 days 375 0
  • நாம் வாழும் இந்த உலகமயமாக்கப்பட்ட வையகம், பொலபொலவென நொறுங்கி வீழத் தக்கதாக எத்தனை பலவீனமாக உள்ளது; பெருங்குழப்ப பாதாளத்தில் சரிந்து வீழ்கிற பேராபத்து அதனை எவ்வாறு அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது என்பதை இந்தப் பெருந்தொற்று காலத்தில் கண்டோம். கரோனா வைரஸ் உண்டாக்கியிருக்கும் கொள்ளை நோய் எல்லா நாடுகளுக்கும் பொதுவான அச்சுறுத்தலாகக் கோரமுகம் காட்டி நிற்கிறது. எந்த நாடும் இதைத் தனியாக எதிர்கொள்ள முடியாது.
  • இந்தப் புதிய, கொடிய எதிரியை முறியடிக்க வேண்டியதே இன்றைய உடனடிச் சவால். அதேசமயம், கரோனாவுக்குப் பிந்தைய வாழ்க்கை குறித்தும், இன்றே நாம் சிந்திக்கத் தொடங்குவது அவசியம். ‘உலகம் இனி ஒருபோதும் இதே மாதிரியாக இருக்காது’ எனப் பலரும் இப்போது சொல்கிறார்கள். ஆனால் அது எத்தகையதாக இருக்கும்? அது, நாம் என்ன பாடங்களை கற்றுக்கொள்ளப்போகிறோம் என்பதைப் பொருத்தது ஆகும்.

அணு அச்சுறுத்தலுக்குத் தீர்வு

  • நாங்கள் 1980களின் மத்தியில், அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு எப்படித் தீர்வு கண்டோம் என்பதை இங்கே நினைவுகூர விரும்புகிறேன்.  அது, நமது பொது எதிரி; அது, நம் எல்லோருக்குமான அச்சுறுத்தல் என்பதை நாங்கள் புரிந்து கொண்டபோதுதான் தடை தகர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டது.
  • அணு ஆயுதப் போரில் எவரும் வெல்ல முடியாது என்றும், எனவே ஒருபோதும் அணு ஆயுதங்களைக் கொண்டு போரிடக் கூடாது என்றும் சோவியத் யூனியன், அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் தலைவர்களும் பிரகடனம் செய்தோம். பின்னர் ரெய்க்ஜாவிக் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான முதல் ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. அதில் 85% சதவீத அணு ஆயுதங்கள் இப்போது ஒழிக்கப்பட்டுவிட்டபோதிலும், அந்த அச்சுறுத்தல் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
  • இன்னும் வறுமை, ஏற்றத்தாழ்வு, சுற்றுச்சூழல் சீர்கேடு, பூமி வளங்களும் மாகடல்களின் வளங்களும் வற்றிப்போதல், புலம்பெயர்வோர் நெருக்கடி போன்ற உலகளாவிய சவால்கள் தொடர்கின்ற நிலையில், அவை இப்போது மிகவும் அவசர கவனத்துக்கு உரியவையாக மாறியிருக்கின்றன.

இதுவரை கண்டிராத கொடூர அச்சுறுத்தல்

  • அடுத்து இப்போது, ஒரு உலகமயமான வையகத்தில், நாடுகள் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த உலகத்தில் நோய்களும், பெரும் தொற்றுக்களும் இதுவரை கண்டிராத வேகத்தில் பற்றிப்பரவும் என்பதை உணர்த்துகின்ற இன்னொரு கொடூர அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
  • இந்தப் புதிய சவாலை ஒவ்வொரு நாடும் தன் அளவில் மட்டுமே எதிர்கொண்டு சமாளித்துவிட இயலாது. இதனை எதிர்கொள்வதற்கான முடிவுகளை உலக சமுதாயம் முழுவதுமே இனி எடுக்க வேண்டியிருக்கும்.
  • மனிதகுலம் அனைத்துக்கும் பொதுவான வியூகங்களை, இலக்குகளை உருவாக்கிச் செயல்படுத்துவதற்கு இதுவரையில் நாம் தவறிவிட்டோம். கடந்த 2000ஆவது ஆண்டில் ஐ.நா. சபை நிறைவேற்றிய புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளை நோக்கிய முன்னேற்றம் பெரிதும் சரிசமமற்றதாகவே இருந்துவருகிறது. இந்தக் கொள்ளை நோயும் அதன் விளைவுகளும் குறிப்பாக ஏழை மக்களை கடுமையாகத் தாக்கி, ஏற்றத்தாழ்வு விளைத்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளது.
  • பாதுகாப்பு குறித்த கருத்தோட்டம் முழுவதையும் மறுசிந்தனைக்கு உள்ளாக்க வேண்டியதே இப்போது நமக்கு அவசர அவசியத் தேவை ஆகும். பனிப் போர் முடிவுக்கு வந்த பிறகும்கூட, உலக நாடுகளின் பாதுகாப்பு என்பது பெரிதும் ராணுவக் கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு என்றாலே, நம் காதில் விழுபவை எல்லாம் ஆயுதங்கள், ஏவுகணைகள், விமானத் தாக்குதல்கள் என்கிற பேச்சுக்கள்தான்.
  • ஈரான், இராக் மற்றும் சிரியாவில், இந்த ஆண்டில் வல்லரசுகள் ஈடுபடக்கூடிய கடும் மோதல்கள் ஏற்படலாம் என்ற அளவுக்கு உலகம் ஏற்கெனவே மோதல்களின் விளிம்புக்கே சென்றுவிட்டது.   அதில் பங்கேற்றவர்கள் இறுதியில் பின்வாங்கிவிட்டபோதிலும், இது போருக்குப் போகாமலும் அதேவேளையில் போரின் எல்லை வரையிலும் இழுத்துச் செல்லும் அபாயகரமான, சிறிதும் யோசிக்காமல் செயல்படுகிற அதே கொள்கைதான்.

பணத்தை விரயமாக்கும் ஆயுதப் போட்டி

  • போர்களும், ஆயுதப் போட்டிகளும் இன்றைய உலகப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்பது இன்னுமா தெளிவாகவில்லை? போர் என்பது தோல்வியின் அடையாளம்; அது, அரசியலின் வீழ்ச்சி ஆகும்.
  • உணவு, தண்ணீர் மற்றும் தூய்மையான சுற்றுச் சூழலை வழங்குதல், மக்களின் உடல் நலத்தில் அக்கறை என மனித குலத்தின் பாதுகாப்பையே மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் முன்னுரிமைக்குரிய இலக்காக கருத வேண்டும். இவற்றை அடைவதற்குத் திட்டமிட்டு வளங்களை சேமிப்பதும் உருவாக்குவதும், வியூகங்களை வகுப்பதும் அவசியம். ஆனால், ஆயுதப் போட்டியைத் தூண்டுவதற்கு அரசுகள் தொடர்ந்து பணத்தை வீணடிக்கும் என்றால் அனைத்து முயற்சிகளும் தோல்வியுறும். ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்வதற்கு நான் ஒருபோதும் தளர்வடைய மாட்டேன்: உலக விவகாரங்கள், சர்வதேச அரசியல் மற்றும் அரசியல் சிந்தனையில் இருந்து ராணுவமயம் என்பதை அகற்ற வேண்டியது அவசியம்.
  • ராணுவச் செலவுகளைக் குறைந்தது 10% முதல் 15% வரை குறைக்க வேண்டும் என உலகத் தலைவர்களை அறைகூவி அழைக்கிறேன். புதிய விழிப்புணர்வை நோக்கி, புதிய நாகரிகத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் முதல் நடவடிக்கையாக, இப்போதைக்கு குறைந்தபட்சம் இதையாவது உலகத் தலைவர்கள் செய்தாக வேண்டும்.

நன்றி: அருஞ்சொல் (09 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்