TNPSC Thervupettagam

கோர்பசெவ் - வரலாற்றில் ஓர் அவல நாயகர்

September 2 , 2022 707 days 435 0
  • மிகெய்ல் கோர்பசெவ் இறந்துவிட்டார். அவர் உயிரோடு இருந்தபோது அமெரிக்காவிலும் மேற்கு நாடுகளிலும் ஜப்பானிலும் அவரைப் புகழ்ந்துவந்தவர்களில் பெரும்பாலோர் இப்போது  இரங்கல் தெரிவித்தனர். அவரது தாய் மண்ணான ரஷ்யாவிலோ ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த புதின் மட்டுமல்லாது, பழைய சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் இரங்கத்தக்க எச்சமாகவும் புதினின் ரஷிய பெருந்தேசியவாத்த்தை ஆதரித்துவரும் இயக்கமாகவும் உள்ள ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியினரும் பெரும்பாலான சாமானிய மக்களும்கூட சோவியத் யூனியன் தகர்ந்துவிடுவதற்கான முழுப் பழியையும் இப்போதும்கூட அவர் மீதே சுமத்துகின்றனர். அதேபோலத்தான் உலகிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளில் பெரும்பாலானவையும். அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க ஏதும் இல்லை.
  • கோர்பசெவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரானவுடன் தொடங்கிய ‘பெரெஸ்த்ரொய்கா’ (பொருளாதாரம், அரசியல் சீர்திருத்தங்கள்) , ‘கிளாஸ்னோஸ்ட்’ (வெளிப்படைத்தன்மை) ஆகியவை சோவியத் யூனியனின் இருந்த அதிகாரி வர்க்க சோசலிஸத்திற்கு மாற்றான ஜனநாயகத்தன்மை கொண்ட, மக்களின் விமர்சனங்களுக்கு செவிமடுக்கின்றஒரு  புதிய சோசலிஸ சோவியத் யூனியனை உருவாக்கும்  என்ற நம்பிக்கையை உலகெங்குமுள்ள பல்லாயிரக்கணக்கான சோசலிஸ ஆதரவாளர்களிடையே உருவாக்கியிருந்தது.
  • ‘கிளாஸ்நோஸ்ட்’, கருத்துச் சுதந்திரத்தை உத்தரவாதம் செய்து, அரசின் கடந்த கால, நிகழ்காலக் குற்றங்களையும் தவறுகளையும் வெளிப்படையாக விவாதிப்பதற்கும் பேசுவதற்கும், கிளாஸ்நோஸ்டை எதிர்த்தவர்களின் கருத்துகளுக்கும்கூட வாயப்பளித்தது. கடந்த காலத்தில் பொய்க் குற்றச்சாட்டுகளின்பேரில்  ’கங்காரு  கோர்ட்’ முறையில் தண்டிக்கப்பட்ட போல்ஷ்விக்குகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், ராணுவத் தளபதிகள், சிறுபான்மை இனக் குழுவினர் ஆகியோருக்கு அங்கீகாரமும் மறுவாழ்வும் தரப்பட்டன.
  • ஆஃப்கானிஸ்தானில் தலையிட்டதன் மூலம் எந்த சோவியத் ராணுவம் பாசிஸத்தை முறியடிப்பதில் புகழ் பெற்றிருந்ததோ அதே சோவியத் ராணுவம், பேரிழப்புகளையும் அவமானத்தையும் சம்பாதித்திருந்த நிலையில் அந்த ராணுவத்தை கோர்பசெவ் திரும்ப அழைத்துக்கொண்டது மக்களால் வரவேற்கப்பட்டது.
  • அதேபோல, அணு ஆயுதங்களால் ஏற்படக்கூடிய அபாயங்களை உணர்ந்து அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தங்களை அமெரிக்காவுடன் அவர் செய்துகொண்டதும் உலக சமாதானத்தை விரும்பியவர்களாலும் அந்த ராணுவத் தலையீட்டினால் சோவியத் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பேரிழப்புகளை ஓரளவேனும் ஈடு செய்துவிட வேண்டும் என்று விரும்பிய சோவியத் மக்களாலும் வரவேற்கப்பட்டது.
  • சோவியத் யூனியனில் கட்சிக்கோ, ஆட்சிக்கோ கட்டுப்படாத வகையில் சுயாதீனமுள்ள நீதித் துறையை உருவாக்கிய பெருமையும் அவருக்கு இருந்தது.  சோவியத் யூனியனுக்கும் சீனாவுக்கும் இருந்துவந்த பல்லாண்டுக் காலப் பகமைமைக்கு முற்றுப்புள்ளி வைத்து சீனாவுடன் நல்லுறவை உருவாக்கினார் கோர்பசெவ்.
  • கோர்பசெவின் சீர்திருத்தங்கள் ஏற்படுத்திய சில குழப்பங்களைப் பயன்படுத்தி பால்டிக் நாடுகளான ஆர்மீனியா, ஜார்ஜியா ஆகியன பிரிந்து செல்ல முடிவெடுத்தன. அங்குள்ள சுரண்டும் சக்திகளுக்கு அந்தந்த நாட்டு தேசியவாதம்  மட்டுமின்றி  நீண்ட காலம் நீடித்திருந்த வெள்ளை ரஷ்யர்களின் ஆதிக்கமும் காரணமாக இருந்தன. ஆனால், லித்துவேனியாவில் சோவியத் ராணுவம் நுழைந்து வலுக்கட்டாயமாகப் பிரிவினைச் சக்திகளை  சோவியத் ராணுவத்தின் மூலம்  ஒடுக்குவதை கோர்பசெவ் விரும்பவில்லை.
  • அதேபோல, அஜெர்பய்ஜானிலும் ஆர்மீனியாவிலும் இருந்த தேசிய வெறிக் கும்பல்களால் அந்த நாடுகளின் சாமனிய மக்கள் தேசியவாதத்தின் பெயரால் கொல்லப்படுவதைப் பெருமளவில் கட்டுப்படுத்தினார் கோர்பசெவ். மேலும் கிழக்கு ஜெர்மனி, ருமேனியா, போலந்து முதலிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்த ‘சோசலிஸ ஆட்சிகள்' மீது வெறுப்படைந்திருந்த அந்த நாடுகளின் மக்கள் அந்த அரசுகளுக்கு எதிராகக் கிளர்ச்சி  செய்தபோது, அதில் சோவியத் யூனியன் தலையிடுவதைத் தவிர்த்துடன், கிளர்ச்சி செய்யும் தங்கள் சொந்த நாட்டு மக்கள் மீது ஒடுக்குமுறையை ஏவக் கூடாது என்று அந்த நாடு அரசுகளுக்கு அறிவுரையும் வழங்கினார்.
  • அமெரிக்கா மையத்தில் இருந்த ‘நேட்டோ ‘ அமைப்புக்கு எதிராக உருவாக்கப்பட்ட ‘வார்ஸா ஒப்பந்த'த்தையும் ‘ப்ரெஸ்னெவ் கொள்கை’ என்று சொல்லப்பட்ட சோவியத் மாடலை ஏற்க மறுத்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ராணுவத் தலையீடு செய்வதற்கு சோவியத் யூனியனுக்கு இருந்த அதிகாரத்தையும் உரிமையையும் ரத்து செய்தார். இந்த அதிகாரத்தைக் கொண்டுதான் சோவியத் முன்மாதிரிக்கு மாற்றாக செக்கோஸ்லோகிய அரசாங்கம் உருவாக்கத் தொடங்கிய புதிய சோசலிஸ முன்மாதிரியை சோவியத் யூனியன் 1968இல் நசுக்கி ஒழித்தது.

சறுக்கல்கள்

  • பொருளாதாரத் துறையில் ‘பெரெஸ்த்ரொய்கா’ தொடக்கக் காலத்தில் சில ஆதாயங்களை மக்களுக்கு ஈட்டித் தந்தது என்றாலும்,   எண்ணெய், இயற்கை வாயு ஆகியவற்றின் உலக விலை திடீரென சரிந்ததால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அந்த வெற்றிகளை மங்கச் செய்தது.
  • சோவியத் யூனியனில்  ‘நாமன்கிளேச்சுரா’ என்றழைக்கப்பட்டுவந்த அதிகாரி வர்க்கத்தினர் பல்வேறு துறைகளில் அனுபவித்துவந்த ஆதிக்கத்தை அகற்ற கோர்பசெவ் முயற்சி செய்தபோதிலும்  நாட்டில் நிலவிவந்த ஆழமான பொருளாதார  நெருக்கடியை அவர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. காலஞ்சென்ற மார்க்ஸிய அறிஞர் எரிக் ஹாப்ஸ்பாம் கூறியதுபோல, "சோவியத் யூனியனில் இருந்த பொருளாதார  நெருக்கடியைக் கடந்து வருவதற்கான வாய்ப்புகள் ஸ்டாலின் இறந்தற்குப் பிந்திய முதல் சில ஆண்டுகளில் மட்டுமே இருந்தன." ஆனால், சோவியத் அதிகாரி வர்க்கம் தான் அனுபவித்துவந்த சலுகைகளையும் அதிகாரத்தையும் சிறிதும் விட்டுக்கொடுக்காததால், அந்த வாய்ப்புக் கை நழுவிப்போயிற்று.
  • உள்ளாட்சித் தேர்தல்களிலிருந்து சோவியத் நாடாளுமன்றத் தேர்தல் வரை ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிடும் நிலைமையை மாற்றி  கம்யூனிஸ்ட் கட்சி  வேட்பாளர்களுடன் வேறு கட்சியினரும் போட்டியிடலாம் என்ற முறையை கோர்பசெவ் கொண்டுவந்தது ஜனநாயகச் செயல்பாடு என்றாலும், அது அப்பட்டமான நவதாராளவாத முதலாளியத்தைக் கொண்டுவர முடிவுசெய்திருந்த யெல்ட்சில்ன் போன்றவர்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான வழியைத் திறந்துவிட்டது.
  • கோர்பசெவின் சீர்திருத்தங்களின் காரணமாக  மனித முகம் கொண்ட சோசலிஸத்தைக் கட்டும் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கொண்ட பல மார்க்ஸிய சிந்தனையாளர்கள் உருவாகினர். ஆனால் கட்சியிலோ அரசாங்கத்திலோ  எவ்விதச் செல்வாக்கும் இல்லாதிருந்த அவர்களால் மக்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
  • ஒருபக்கம் யெல்ட்ஸின் போன்ற அப்பட்டமான முதலாளிய ஆதரவாளர்களுக்கும் மறுபக்கம், சோவியத் யூனியனில்  உருவான அரசியல், பொருளாதார, நிர்வாகக் கட்டமைப்புகளை  போல்ஷ்விஸத்தின் பெயரால் அப்படியே கட்டிக் காக்க வேண்டும் என்று விரும்பிய அதிகாரி வர்க்க சக்திகளுக்குமிடையே மாட்டிக்கொண்டு தவித்த கோர்பசெவைக் கைவிட்டு விலகினார் கம்யூனிஸ்ட் கட்சியில் செல்வாக்கு மிகுந்தவரும் பெர்ரெஸ்ட்ரொய்காவின் முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவேறுவதில் கோர்பசெவுக்கு துணையாக நின்றவருமான லிகாசெவ். அது பெரெஸ்ட்ரொகாவின் இரண்டாவது கட்டம் சோசலிஸ குறிக்கோள்களிலிருந்து விலகத் தொடங்கியதற்கான தொடக்கமாக அமைந்தது.

துரோகங்கள்

  • இப்படிப்பட்ட சூழலில் கோர்பசெவ்  மேற்கு ஐரோப்பிய சோசலிஸ ஜனநாயகவாதிகளைப் பின்பற்றி, ‘மேலிருந்து கட்டுப்படுத்தப்படும்’ அதிகாரி வர்க்க பொருளாதாரத்துக்கு மாற்றாக முதலாளிய அம்சங்கள் கொண்ட ஒரு புதிய பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தத் தொடங்கினார். அதன் பொருட்டு அவரும் அவரது ஆதரவாளர்களும் அமெரிக்காவின் உதவியையும் உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவற்றை அணுகும் நிலைக்குச் சென்றுவிட்டனர்.
  • கோர்பசெவ் என்னதான் உலக சமாதானக் கொடியை ஆட்டிவந்தபோதிலும் அமெரிக்காவோ, பிற நேட்டோ நாடுகளோ தங்கள் ராணுவக் கூட்டமைப்புகளைக் கலைக்க முன்வரவில்லை. நேட்டோ அமைப்பு கிழக்கு ஐரோப்பா நோக்கி விரிவடையாது என்ற வாக்குறுதியை கோர்பசெவ் அன்றைய  அமெரிக்க அதிபரிடமிருந்து  பெற்றது உண்மைதானென்றாலும், அப்படிப்பட்ட வாக்குறுதி ஏதும் தரப்படவில்லை என்ற பச்சைப் பொய்யை அமெரிக்க ஆட்சியாளர்களும் ஊடகங்களும் இன்று அவிழ்த்துவிட்டுக்கொண்டிருக்கின்றன.
  • மறுபுறம், சோவியத் யூனியனிலிருந்து பிரிந்துபோன (இந்தப் பிரிவினையை ஊக்குவித்தவர் யெல்ட்சின்) குடியரசுகள் நீங்கலாக சோவியத் யூனியனில் இருந்த மற்ற எட்டுக் குடியரசுகளில் பொது வாக்கெடுப்பு நடத்தி மிகப் பெரும்பான்மையான மக்கள் புதிய வடிவத்தில் சோவியத் யூனியன் நிலவுவதற்கு வாக்களிப்பு செய்ய வைத்தார்  கோர்பசெவ்.   ரஷிய குடியரசின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட யெல்ட்சினாலும்கூட அந்த வாக்கெடுப்பைத் தடுக்க முடியவில்லை.
  • அந்த வாக்கெடுப்பு 1991 மார்ச்சில் நடந்தது. அந்த எட்டுக் குடியரசுத் தலைவர்களும் அந்த வாக்கெடுப்பைப் பின்பற்றி சில புதிய நிபந்தனைகளுடன் ’இறையாண்மை பெற்ற சோவியத் குடியரசுகளின் ஒன்றியம்’ என்ற புதிய அமைப்பை உருவாக்க அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவுசெய்திருந்தனர்.
  • ஆனால், அதற்குள் இரு நிகழ்ச்சிகள் நடந்தன. சோவியத் யூனியனின் பழைய கட்டமைப்பு  அதிகாரம், நிர்வாகம் முதலியவற்றை ‘போல்ஷ்விசத்தின்’ பெயரால் தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்த பழைமைவாத அதிகாரி வர்க்கத்தினர் (ராணுவத் தளபதிகள், உளவுத் துறையினர், ஆட்சித் துறையினர்), அப்போது கிரிமியாவில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த கோர்பசெவை வீட்டுக் காவலில் வைத்துவிட்டு நெருக்கடிநிலையைப் பிரகடனப்படுத்தி ரஷ்ய நாடாளுமன்றத்தைக் கைப்பற்றவும் யெல்ட்சினைக் கைதுசெய்யவும் ஒரு  ராணுவப் புரட்சித் திட்ட்த்தைத் தீட்டினர். சோவியத் யூனியன்  கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த லட்சக்கணக்கான உறுப்பினர்களையோ, கோடிக்கணக்கான பொதுமக்களையோ திரட்டாமல் நடந்த அந்த ராணுவப் புரட்சி  இரண்டே இரண்டு நாட்கள் மட்டுமே நீடித்தது.
  • ரஷ்ய நாடாளுமன்றக் கட்ட்டத்தை நோக்கிச் சென்ற ஒரு ராணுவ டாங்கியின் மீது ஏறி நின்று அந்த ராணுவப் புரட்சியை எதிர்த்து முழங்கிய யெல்ட்ஸின் பெரும் வீரராக ரஷ்ய மக்களால் பார்க்கப்பட்டார். சோவியத் ராணுவத்தின் மிகப் பெரும் பகுதி அந்த ராணுவப் புரட்சியாளர்களுடன் ஒத்துழைக்க மறுத்தது. கைதுசெய்யப்பட்ட அவர்கள் விசாரணைக்குப் பிறகு தண்டிக்கப்பட்டனர்.
  • இது ஒருபுறமிருக்க எட்டுக் குடியரசுகள் சேர்ந்த புதிய ஒன்றியம் ஏற்படுவதைத்  தடுக்க யெல்ட்சின் சந்தர்ப்பவாத உக்ரெய்ன், பைலோரஷியா  குடியரசுத் தலைவர்களுடன் கூட்டுச் சேர்ந்து ‘சுதந்திர அரசுகளின் கூட்டமைப்பு’ என்ற அமைப்பை உருவாக்கி சோவியத் யூனியன் சரிந்து விழுவதற்குக் கால்கோள் இட்டார். எந்த ஆதரவும் அதிகாரமும் இல்லாமல் போன கோர்பசெவ் சோவியத் நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டத்தில் யூனியனைக் கலைத்துவிடுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டியவரானார்.
  • சோசலிஸ நாட்டை உருவாக்க எத்தனையோ இன்னல்களையும் தியாகங்களையும் செய்த அந்த நாட்டு உழைக்கும் மக்கள் உருவாக்கிய செல்வங்களைக் கொள்ளையடிக்கவும் தொடங்கினர். யெல்ட்சினும் அவரது தீவிர ஆதரவாளர்களிலொருவருமான புதின் போன்றவர்களும்.
  • அரசியல் செல்வாக்கு அனைத்தையும் இழந்திருந்த, சோவியத் பொருளாதாரம் சந்திந்திருந்த நெருக்கடிக்கு சந்தைப் பொருளாதாரத்தில் தீர்வு தேடிய கோர்பசெவுக்கு அந்தக்  கொள்ளையடிப்புகளைத் தடுத்து நிறுத்தும் சக்தி சிறிதும் இருக்கவில்லை. எனினும், எந்த லட்சியத்தை முன்னிட்டும் சோவியத் யூனியனில் உள்நாட்டுப் போருக்கான சாத்தியப்பாடும் ரத்தக்களரியும் நிகழ்வதற்கு தான் எவ்வகையிலும் பொறுப்பானவராக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் அவர். யெல்ட்சினின் தலைமையிலிருந்த தீவிர வலதுசாரி முதலாளியப் பாதையாளர்கள்ராணுவப் புரட்சியை நடத்தித் தோல்வியடைந்தவர்கள் ஆகியோரும் சேர்ந்துதான் சோவியத் யூனியனின் தகர்வை உத்தரவாதப்படுத்தினர்.
  • சோவியத் யூனியனை எட்டுக் குடியரசுகள் மட்டுமே கொண்ட புதிய ஒன்றியமாக மாற்றும் கோர்பசெவ் திட்டம் நிறைவேறியிருந்தால் அந்த ஒன்றியம் அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் இன்று உக்ரெய்ன் மூலம் ரஷியாவுக்கு எதிராக நடத்தி வரும் மாற்றாள் போருக்கு (proxy war) வாய்ப்பிருந்திருக்காது.

கம்யூனிஸ்ட்டுகளுக்கான கேள்வி

  • சோவியத் யூனியனின் சோசலிஸ முயற்சிகள் தோல்வியடைந்தற்கும் அந்த மாபெரும் நாடு சிதறுண்டு போனதற்குமான அரசியல், பொருளாதார, வரலாற்றுக்  காரணங்களை ஆழமாகக் கற்றுணர்வது லெனின் தலைமையில் நடந்த மாபெரும் நவம்பர் புரட்சியின் லட்சியங்களை எதிர்காலத்தில் நிறைவேற்ற விரும்பும் இன்றைய கம்யூனிஸ்ட்டுகள் செய்ய வேண்டிய முக்கிய கடமை. வரலாற்றில்  சில தனிமனிதர்கள் முக்கியப் பாத்திரம் வகிக்கின்றனர். ஆனால், அவர்கள் மட்டுமே வரலாற்றை உருவாக்குவதில்லைஅதன் திசை மார்க்கத்தைத் தீர்மானிப்பதில்லை என்பதை உணர்வதோடுசோவியத் யூனியன் இரண்டே இரண்டு நாளில் தகர்ந்து விழுந்தது எவ்வாறு, அந்தத் தகர்வுக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் ஏன் ஒரு சிறிய எதிர்ப்புப் போராட்டத்தைக்கூட நடத்தவில்லை என்ற கேள்விகளுக்கும்  விடை காண்பது மேலும் முக்கியமானது.
  • சோவியத் யூனியனின்  தகர்வுடன் வரலாறு முடிந்துவிடவில்லை. முடிந்துவிட்டது என்று கூறிய பிரான்ஸிஸ் ஃபுகயாமாகூட அந்தக் கருத்தை நிராகரித்துவிட்டார். கோர்பசெவ் வரலாற்றில் தோன்றி மறைந்த ஓர் அவல நாயகர்களிலொருவர். அவ்வளவுதான்!

நன்றி: அருஞ்சொல் (02 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்