TNPSC Thervupettagam

கோவை ஞானி: தமிழ் தந்த கொடை

July 24 , 2020 1463 days 856 0
  • அறுபதுகளின் இறுதியில் உலகம் முழுவதும் நடந்துகொண்டிருந்த அரசியல் விவாதங்களும் புதிய இயக்கங்களும் தமிழகத்திலும் அதிர்வுகளை உண்டாக்கின.

  • மாற்றங்களுக்கான அந்த வேகம் வெறும் உணர்ச்சிகரமாக அமைந்துவிடாமல் அறிவுபூர்வமாக அதை வழிநடத்திச்சென்றவர்களில் கோவை ஞானி என்று அழைக்கப்படும் கி.பழனிசாமி (1935 - 2020) முதன்மையானவர்.

  • தமிழாசிரியர், கவிஞர், திறனாய்வாளர், இதழாசிரியர் என்று அவரது இடைவிடாத இயக்கத்தில் தமிழின் வழிவந்த உயிர்நேயத்தை அடிப்படையாகக் கொண்டு கலை, இலக்கியம், அரசியல், பண்பாட்டுத் துறைகளை வளப்படுத்தியவர்.

  • உலகளாவிய மார்க்ஸியப் பார்வையில் தமிழ்த் தேசியத்துக்கு விரிவான உள்ளடக்கம் கொடுக்க முற்பட்டவர். பெண்ணியம், சூழலியம், தலித்தியம் சார்ந்தும் அந்த விவாதங்களை விரித்தெடுத்தவர்.

  • மெய்யியல் தளத்தில் தீவிர விவாதங்களை நடத்தியதோடு மட்டுமின்றி, மனித உரிமைக் களத்தில் தனது நண்பர்களோடு கைகோத்து நின்றவர்.

  • தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் இதுவரை நிலவிவந்த சகிப்புத்தன்மைக்கும், வெவ்வேறு கோட்பாடுகளைப் பின்பற்றுவோர்களுக்கு இடையிலான இணக்கத்துக்கும் ஞானியும் அவரது நண்பர்களும் ஏற்படுத்திய முன்னுதாரணங்களும் ஒரு முக்கியக் காரணம்.

  • தொழில்நகரமான கோவை தொழிற்சங்க நடவடிக்கைகளாலும் போராட்டங்களாலும் புகழ்பெற்றிருந்த நாட்களில் அங்கே ஒரு அறிவியக்கத்தைக் கட்டமைத்து தமிழகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஞானி.

  • காய்தல் உவத்தல் அற்று அனைவரோடும் நட்பு பாராட்டியவர் அவர். இனங்கண்டுகொண்ட சிறந்த படைப்புகளைப் பாராட்டத் தயங்காதவர். சமகாலத் தோழர்கள் முதல் இளந்தலைமுறையினர் வரை அனைவரோடும் அவரது உரையாடல்கள் தொடர்ந்தன.

  • தமிழ்ச் சூழலில் ஞானி அளவுக்கு இளம் தலைமுறையினரை உற்சாகப்படுத்தி எழுதத் தூண்டிய மூத்த திறனாய்வாளர்கள் வேறு யாரும் இல்லை. எப்போதும் அவரை மொய்த்துக்கொண்டிருந்த இளைஞர்களின் பட்டாளமே அதற்குச் சான்று.

  • நீரிழிவு நோயால் பார்வையை இழந்த பிறகும் ஏறக்குறைய முப்பதாண்டுகள் அவரது வாசிப்பும் கருத்துப் பகிர்வுகளும் இதழியல் பணிகளும் தொடர்ந்தன என்பதே அவரது தளராத ஊக்கத்துக்கும் வாசிப்பு ஆர்வத்துக்குக் காரணம்.

  • கோவையின் முதன்மை அடையாளங்களில் ஒருவரான ஞானியின் மரணம், தமிழ் அறிவுலகத்துக்கு மிகப் பெரும் இழப்பு. கவிஞர், திறனாய்வாளர், இதழாசிரியர் என்று பன்முக ஆளுமையாக மட்டுமின்றி பல்வேறு அறிவுத் துறைகளிலும் தாக்கத்தை உருவாக்கியவர் அவர். அரசியல் வெளியிலும் பண்பாட்டுத் தளத்திலும் அவர் முன்னெடுத்துச் சென்ற அறிவுசார் உரையாடலை சமூகப் பொறுப்போடும் உயிர்களை நேசிக்கும் உள்ளன்போடும் பின்தொடர்வதே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலி.

நன்றி: தி இந்து (24-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்