TNPSC Thervupettagam

கௌரவக் குறியீடாக மாறிய கல்வி

December 2 , 2019 1823 days 827 0
  • இன்றைய பெற்றோர்களைப் பொறுத்தவரையில் எந்தப் பள்ளியில் தனது குழந்தைகள் படிக்கிறார்கள் என்பது அவர்களுக்கான கௌரவக் குறியீடாகக் கருதுவதாக நினைக்கிறேன். தனது குழந்தை நகரத்திலேயே மிகச் சிறந்த பள்ளிக்கூடத்தில் படிக்கிறான் என்ற ஒரு அற்ப பெருமிதத்துக்காக அந்தப் பள்ளி எவ்வளவு தொலைவாக இருந்தாலும் குழந்தைகளைப் பற்றி யோசிக்காமல், நீண்ட தூரம் அவர்களை அனுப்பும் பெற்றோர்களை எனக்குத் தெரியும். அவர்களைக் கேட்டால் மிக அலட்சியமாக “அந்த ஸ்கூல்ல அட்மிஷன் கிடச்சதே பெரிய விஷயம் சார்” என்பார்கள்.

குழந்தைகள் – கல்வி

  • உண்மையில் இங்கு பொறுத்துக்கொள்வது குழந்தைகள்தானே? ‘உன்னால் இவ்வளவு தொலைவு பயணித்து அந்தப் பள்ளிக்குச் செல்ல முடிகிறதா?’ என்று அவர்களிடம் எப்போதாவது கேட்டிருக்கிறோமா? நல்ல பள்ளி என்பதற்கு நாம் கொண்டிருக்கும் கற்பிதங்களுக்காகக் குழந்தைகளைக் கஷ்டப்படுத்துவதோ அல்லது கஷ்டங்களைப் பொறுத்துக்கொள்ளச் சொல்வதோ எந்த வகையில் நியாயமானது?
  • கல்வியின் நிமித்தம் நமது குழந்தைகளின் மீது நாம் திணிக்கும் எதிர்பார்ப்புகள், நிர்ப்பந்தங்கள், அதன் விளைவாக அவர்களுக்கு ஏற்படும் அலைச்சல்கள், நெருக்கடிகள், மனவுளைச்சல்கள் பற்றி நாம் எந்தவிதக் கவலைகளும் இல்லாமல் இருக்கிறோம். மதிப்பெண்களைப் பிரதானமாகக் கொண்ட கல்விமுறையில் நாம் இதைத்தான் எதிர்பார்க்க முடியும் எனும் அவலத்திலிருந்து விடுபடுவது குறித்து நாம் யோசிக்க வேண்டும்.
  • கல்வி தொடர்பாகக் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஏராளமான உளவியல் ஆராய்ச்சிகள் ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றன. குழந்தைகளின் கல்வித்திறன் என்பது கற்கும் சூழலோடு நேரடித் தொடர்புடையது. கற்கும் சூழல் குழந்தைகளுக்கு இலகுவானதாகவும் சாதகமானதாகவும் அவர்களின் வளர்ச்சியை அரவணைப்பதாகவும் இருக்க வேண்டும்.
  • அதேபோல, கல்வி என்பது மாணவரின் திறனைப் பரிசோதனை செய்வது என்ற அளவில் மட்டுமில்லாமல் அது மாணவர்களுடன் ஒரு தொடர் உரையாடலை நிகழ்த்த வேண்டும்.
  • ஒரு மாணவனுக்கு மொழியியல், மானுடத் திறன்களை வளர்ப்பது, உயர்ந்த பண்புகள், ஒழுக்கம் சார்ந்த விழுமியப் பார்வைகளை ஏற்படுத்துவது என்பதெல்லாம் கல்வியின் முதன்மை இலக்குகளாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட கல்விச் சூழலைக் கொண்டே ஒரு ஆரோக்கியமான சமூகத்தின் அடிப்படைக் கட்டுமானத்தை உருவாக்க முடியும்.
  • இப்படியான கல்விச் சூழலை உருவாக்காத வரை கல்வி என்பது அவர்களுக்குச் சுமையானதாகத்தான் இருக்கும் என்கின்றன ஆய்வுகள். இத்தகைய ஆரோக்கியமான கற்கும் சூழலில் அருகமைப் பள்ளிகள் எனும் அம்சமும் முக்கியமான பங்கு வகிக்கின்றன.

அருகமைப் பள்ளிகளும் சமூக இணக்கமும்

  • “அருகமைப் பள்ளிகளை உருவாக்குவதன் வழியாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் பல்வேறு மொழி, இன, மத, சாதிப் பின்னணியைச் சார்ந்தவர்களை ஒரே வகுப்பறையில் அமரவைக்க முடியும். அப்போது வகுப்பறை என்பது அந்தப் பகுதியின் வேறுபட்ட பின்னணியைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணையும் இடமாக இருக்கும்.
  • இதன் வழியாக மொழி, மத, சாதிரீதியான பிரிவினைகளுக்கு இடையேயான இணக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த முடியும். வகுப்பறையில் ஏற்படும் இந்த இணக்கத்தை சமூகத்துக்கு மிக எளிதாகக் கடத்த முடியும். ஒரு மேம்பட்ட சமூக இணக்கத்தையும் சகிப்புத்தன்மையும் நாம் அருகமைப் பள்ளிகளை உருவாக்குவதன் வழியாகத் திட்டமிடலாம்” என்கிறார் கோத்தாரி.
  • அருகமைப் பள்ளிகளுக்கான வரையறையாக ஆரம்பப் பள்ளிகள் ஒரு கிமீ-க்குள்ளும், நடுநிலைப் பள்ளிகள் மூன்று கிமீ-களுக்குள்ளும், மேல்நிலைப் பள்ளிகள் ஐந்து கிமீ-களுக்குள்ளும் இருக்க வேண்டும் என்று தெளிவாக இதற்கான திட்டத்தை முன்மொழிந்து சென்றிருக்கிறார் கோத்தாரி.
  • 2009-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அனைவருக்கும் கட்டாயக் கல்வி சட்டத்துக்குப் பிறகுதான் கோத்தாரி ஆணையத்தின் அருகமைப் பள்ளிக்கான பரிந்துரைகளைப் பின்பற்ற அனைத்து தனியார் பள்ளிகளும் அறிவுறுத்தப்பட்டன.
  • இந்தச் சட்டத்தில், தனியார் பள்ளிகளுக்கு இன்னொரு நிபந்தனையும் விதிக்கப்பட்டது. அதாவது ஏழை எளிய, விளிம்புநிலை, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு அவர்களின் அருகில் இருக்கும் பள்ளிகளில் 25% இடங்கள் கொடுக்க வேண்டும். இந்த 25% இடங்களுக்கு மட்டும் அருகமைப் பள்ளிகளுக்கான பரிந்துரைகளைத் தனியார் பள்ளிகள் முழுமையாகக் கடைப்பிடிக்கின்றன.
  • இந்தச் சட்டத்தின் வழியாகத் தங்களது பள்ளியில் சேர்க்க வேண்டுமென்றால், குழந்தையின் வசிப்பிடம் பள்ளியிலிருந்து ஒரு கிமீ-க்குள் இருக்க வேண்டும் என்பதை ஒரு வடிகட்டும் வழியாகத்தான் தனியார் பள்ளிகள் பின்பற்றுகின்றன. மிச்சமிருக்கும் 75% இடங்களில் இந்தப் பரிந்துரைகள் பின்பற்றப்படுவதில்லை.

நெருக்கடியில்லா சூழல் வேண்டும்

  • 2007-ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் கல்வி மறுசீரமைப்பு என்ற பெயரில் செயல்படாத பள்ளிகள் மூடப்பட்டன. அந்தப் பள்ளியில் படித்துவந்த மாணவர்கள் நீண்டதூரப் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர். இது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அப்படி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்ட மாணவர்களிடம் ஒரு ஆய்வு செய்யப்பட்டது.
  • அந்த ஆய்வில் நீண்டதூரப் பள்ளிக்கு மாற்றப்பட்ட மாணவர்களில் இருபது சதவீதத்தினர் மேற்படிப்பைப் பாதியிலே நிறுத்திவிட்டதாகவும், மிச்சமிருக்கும் மாணவர்களின் படிக்கும் திறன் குறைந்திருப்பதாகவும், அதுமட்டுமல்லாமல் மாணவர்களிடையே ஏராளமான குழுச் சண்டைகளும், மோதல்களும் நிகழ்வதாகவும் ஆராய்ச்சி முடிவு சொல்கிறது.
  • இந்த ஆய்வில் கிடைக்கப்பட்ட படிப்பினைகளைக் கொண்டு கல்வி மறுசீரமைப்பு என்ற பெயரில் அமெரிக்கா முழுவதும் பள்ளிகள் மூடப்படுவதைக் கண்டித்து கல்வியாளர்கள் போராடத் தொடங்கியிருக்கிறார்கள். இங்கும்கூட நிறைய அரசுப் பள்ளிகள் மூடப்படுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
  • இப்படி மூடப்படும் பள்ளிகள் பொதுவாகவே தொடக்கப் பள்ளிகளாகவே இருக்கின்றன. பள்ளிகள் ஒருங்கிணைப்பு என்ற பெயரில் தொடக்கக் கல்வி பயிலும் சிறுவர்களை அருகே உள்ள ஊருக்கு அனுப்பும் நிலைதான் கிராமப்புறங்களிலும் இருக்கின்றன.
  • ஏராளமான அலைச்சல், அது தரும் மனவுளைச்சல், காத்திருப்பு, நெரிசல் பேருந்துப் பயணம், தினமும் காலையில் எழுந்தவுடன் நேரத்துக்குப் பேருந்தைப் பிடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் என்று இது தரும் நெருக்கடிகள் ஏராளம். காலையில் எந்தப் பரபரப்புமின்றி, மிக சாவகாசமாக எழுந்து வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் பள்ளிக்கு நடந்தே செல்லும் ஒரு மாணவனுக்கு நிச்சயம் அந்தப் பள்ளி எந்தவித நெருக்கடியையும் கொடுக்காது.
  • இலகுவான கல்விச் சூழலை அருகமைப் பள்ளிகளின் வழியாக நமது குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அப்படியான கல்விச் சூழல்தான் ஆரோக்கியமான வளர்ச்சியை நமது குழந்தைகளுக்குக் கொடுக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (02-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்