TNPSC Thervupettagam
May 27 , 2024 36 days 94 0
  • மிகப் பெரிய அதிா்ச்சியை சந்தித்திருக்கிறது ‘ஸ்பைசஸ்’ என்று பரவலாக அழைக்கப்படும் வாசனை திரவியங்களின் ஏற்றுமதி. லவங்கப் பட்டை, இஞ்சி, மிளகு, கிராம்பு, மிளகாய், மசாலாப் பொருள்கள் ஆகியவை ‘ஸ்பைசஸ்’ எனப்படும் பெயரில் அறியப்படுகின்றன. இவற்றுக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மிகப் பெரிய சந்தை நிலவுகிறது.
  • எம்.டி.ஹெச்., எவரெஸ்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்தியாவின் ‘ஸ்பைசஸ்’ ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன. இந்நிறுவனங்கள் இலச்சினையுடன் ஏற்றுமதி செய்த சில பொருள்கள், ஹாங்காங், சிங்கப்பூா் ஆகிய நாடுகளால் நச்சுப்பொருள் கலந்திருப்பதாகக் கூறி கடந்த மாதம் தடை செய்யப்பட்டன. அதைத் தொடா்ந்து மாலத்தீவு, ஆஸ்திரேலியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளும் இந்த இரண்டு நிறுவனங்களின் பொருள்களுக்கும் தடை விதித்தன. அமெரிக்கா தனது பங்குக்கு, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ‘ஸ்பைசஸ்’ வகைகளை சோதனை செய்ய முற்பட்டிருக்கிறது.
  • இந்தியா ஆண்டுதோறும் நான்கு பில்லியன் டாலருக்கும் (ரூ.33,200 கோடி) அதிகமான மதிப்புள்ள ‘ஸ்பைசஸ்’ ஏற்றுமதி செய்கிறது. உள்நாட்டு நுகா்வு 10 பில்லியன் டாலரிலும் (ரூ.83,000 கோடி) அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நாம் ஏற்றுமதி செய்யும் ‘ஸ்பைசஸ்’ தரத்தில் குறைந்தவை என்று முத்திரை குத்தப்பட்டால், அது நமது நற்பெயருக்கு மட்டுமல்ல, ஏற்றுமதிக்கும் மிகப் பெரிய பின்னடைவாக இருக்கும்.
  • 2014-இல் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மிளகாய் பொடி, மசாலாப் பொடிகளில் நிறத்தை அதிகரிப்பதற்காக சோ்க்கப்பட்டிருந்த ரசாயனம் குறித்த சா்ச்சை எழுந்தது. அமெரிக்காவின் உணவு-மருந்து தரக்கட்டுப்பாடு நிறுவனம், நுண்ணுயிரிகள் (பேக்டீரியா) இருப்பதாகக் கூறி 2021 முதல் இதுவரையில் எம்.டி.ஹெச். நிறுவனத்தின் 14.5% ஏற்றுமதியை நிராகரித்திருக்கிறது. இந்தியாவிலேயே கூட பல மாநிலங்களில், மசாலாப் பொருள்களில், குறிப்பாக மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, மிளகுத் தூள் ஆகியவற்றில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
  • ‘காா்சினோஜெனிக் ரெசிட்யூ’ எனப்படும் புற்றுநோயை உருவாக்கக் கூடிய ‘ஈடிஓ’ என்கிற எதிலின் ஆக்சைட், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எம்.டி.ஹெச். மற்றும் எவரெஸ்ட் நிறுவனங்களின் பொருள்களில் காணப்பட்டதாக, ஹாங்காங் தெரிவித்ததில் தொடங்கியது இந்தப் பிரச்னை. அந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளில் எதிலின் ஆக்சைட் பயன்படுத்தப்படவில்லை என்று கூறுகின்றன.
  • உணவுப் பொருள்களிலோ, ‘ஸ்பைசஸ்’ எனப்படும் மசாலாப் பொருள்களிலோ எந்த அளவுக்கு எதிலின் ஆக்சைட் இருக்கலாம் என்பதற்கான சா்வதேச தரவு நிா்ணயம் எதுவும் கிடையாது. ஒவ்வொரு நாடும் அது குறித்து, தனித்தனி நிா்ணயங்களைக் கொண்டிருக்கின்றன. இந்தோனேசியா, கென்யா, மெக்ஸிகோ, நியூஸிலாந்து, பெரு உள்ளிட்ட நாடுகள் இது குறித்த தர நிா்ணயம் செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்திடம் கடந்த ஆண்டு கோரிக்கை விடுத்திருந்தன.
  • குறைந்தபட்ச எதிலின் ஆக்சைட் அளவு ஒரு கிலோவுக்கு 0.01 மி.கி. என்று ஜப்பானும் வேறு சில நாடுகளும் தர நிா்ணயம் செய்திருக்கின்றன. அதைத்தான் இந்தியா பின்பற்றி வந்தது. கடந்த மாதம் அந்த அளவை கிலோவுக்கு 0.1 மி.கி. என்கிற புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.
  • கிருமிகள் இல்லாமல் மருத்துவ உபகரணங்களை சுத்தப்படுத்த பல ஆண்டுகளாக எதிலின் ஆக்சைட் பயன்படுத்தப்படுகிறது. அதன் வாயு எல்லா இடுக்குகளிலும் பரவி அந்த உபகரணங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் கிருமிகளை அழித்துவிடுகிறது. அதேபோல, ‘ஸ்பைசஸ்’ எனப்படும் வாசனை திரவியப் பொருள்கள் எதிலின் ஆக்சைட் புகைக்கு உட்படுத்தப்படுகின்றன. அதன்மூலம் கிராம்பு, மிளகு உள்ளிட்டவற்றில் காணப்படும் நுண்ணுயிரிகள் அழிக்கப்படுகின்றன. அதனால் ஏற்றுமதி செய்யப்படும் வாசனைத் திரவியங்களில் எதிலின் ஆக்சைட் சிறிய அளவில் இருப்பதைத் தவிா்க்க முடியாது.
  • வாசனை திரவியங்களில் சிறிய அளவில் காணப்படும் எதிலின் ஆக்சைட் எந்தவிதப் பின்விளைவுகளையும் ஏற்படுத்தாது என்கிறாா்கள் மருத்துவ விஞ்ஞானிகள். அதுமட்டுமல்லாமல், சிறிய அளவிலான எதிலின் ஆக்சைட் புற்றுநோய் உருவாகக் காரணம் என்று இதுவரையில் எந்தவொரு ஆய்வும் உறுதிப்படுத்தவில்லை.
  • இந்தியாவின் சோதனைச் சாலைகளில் பூச்சிக்கொல்லி மருந்துகள், மைக்ரோ டாக்சின்ஸ், உலோகங்கள் ஆகியவற்றின் படிமங்களின்அளவைத் துல்லியமாக ஆய்வு செய்யும் வசதிகள் இருக்கின்றன. ஆனால், ஏனைய மாசுப் பொருள்கள், நச்சுப் பொருள்கள் ஆகியவற்றின் அளவையும் படிமங்களையும் துல்லியமாக ஆய்வு செய்யும் வசதி இன்னும் இல்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
  • நமது ஆய்வு முறைகள் குறித்த தரமும், கட்டுப்பாடு அளவும், பூச்சிக்கொல்லி மருந்துகளில் அறிவிக்கப்பட்டிருக்கும் பல்வேறு ரசாயனக் கலவைகளின் அளவும் துல்லியமானதாகவோ, சரியானதாகவோ இல்லாதது பல நிகழ்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் தரமானவையாக இல்லாமல் போனால் அதன் பின்விளைவுகள் மோசமானதாக இருக்கும். நமது தேசத்தின் மீதான மரியாதையை அது குலைத்துவிடும்.
  • வெளிநாட்டுக்கான ஏற்றுமதியிலேயே தரம் இல்லை என்றால், உள்நாட்டில் சந்தைப்படுத்தும் பொருள்களின் தரம் குறித்துச் சொல்லவே வேண்டாம். வாசனைத் திரவியங்கள் என்றாலே இந்தியாதான் என்று கருதப்படும் நிலையில், எந்தவொரு களங்கமும் அதற்கு ஏற்பட்டுவிடக் கூடாது!

நன்றி: தினமணி (27 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்