TNPSC Thervupettagam

சகோதர யுத்தத்துக்கான தொடக்கப் புள்ளி இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

November 17 , 2023 421 days 225 0
  • உலக வங்கியின் ஆதரவுக் குரல், ஈரானிய அரசின் ஆதரவுக் குரல் இரண்டும் சேர்ந்து நிதிப் பிரச்சினையை ஒருவாறாகத் தீர்த்துவிட்டாலும் முதல் முறையாக சட்டமன்றத்துக்குச் சென்ற ஹமாஸ் உறுப்பினர்களுக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலத்தான் இருந்தது.
  • ஆளும் கட்சியாக ஹமாஸ். ஆனால் ஜனாதிபதியாக இருக்கும் மம்மூத் அப்பாஸ், ஃபத்தாவின் தலைவர். ஃபத்தாவோ தேர்தலில் தோற்ற கட்சி. ஏற்கெனவே ஃபத்தாவுக்கும் ஹமாஸுக்கும் ஏழாம் பொருத்தம். யாசிர் அர்ஃபாத் இருந்த வரை அடித்துக் கொள்ளாமலாவது இருந்தார்கள். அவர் காலமான பின்பு இரு தரப்பும் ஜென்ம எதிரிகளாகியிருந்தார்கள். இதில் உச்சக்கட்ட அவல நகைச்சுவை என்னவெனில், ஃபத்தா இஸ்ரேலைக் கூட சகித்துக் கொள்ளத் தயார்; ஆனால் ஹமாஸ் ஆள்வதை ஒப்புக் கொள்ளவே முடியாது என்ற நிலையை எட்டியிருந்தது.

எங்களையும் கொஞ்சம் வாழ விடுங்கள்

  • இது மிகையல்ல. இஸ்ரேல் என்கிற தேசத்தின் இருப்பை பாலஸ்தீனர்கள் முழுதாக அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பேச்சுவார்த்தையின் போதும் எழுப்பப்படும் முதல் நிபந்தனையாக இருந்து வந்திருக்கிறது. அர்ஃபாத் அங்கீகரித்தார். “சரி, நீங்களும் இருந்துவிட்டுப் போங்கள். ஆனால் எங்களையும் கொஞ்சம் வாழவிடுங்கள். 1967 யுத்தத்துக்கு முன்பிருந்த பாலஸ்தீன பகுதிகளையாவது முழுதாக எங்களிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிச் செல்லுங்கள்” என்று சொன்னார்.
  • ஆனால் ஹமாஸ், இஸ்ரேலின் இருப்பை அடியோடு நிராகரித்தது. “இஸ்ரேலாவது, மண்ணாங்கட்டியாவது? யார் அப்பன் வீட்டு சொத்தை யார் அபகரித்துக் கொண்டு பட்டா கேட்பது? அதெல்லாம் முடியாது” என்று சொன்னார்கள்.
  • இன்று நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தின் தொடக்க நாட்களில் இஸ்ரேலியப் பிரதமர் ஓர் அறிவிப்பை வெளியிட்டது நினைவிருக்கும். ஹமாஸின் அத்தனை உறுப்பினர்களையும் அழித்து ஒழிக்காமல் இந்தப் போர் நிற்காது.
  • இதற்கு ஒரு பின்னணி இருக்கிறது. 2006-க்கு முன்பு வரை ஹமாஸ் இதே வசனத்தை ஒரு பாராயணம் போல தினமும் சொல்லிக் கொண்டிருந்தது. பாலஸ்தீன மண்ணை அபகரித்துக் கொண்ட யூதர்களை ஒருவர் விடாமல் வெளியேற்றும் வரை ஓயமாட்டோம்.
  • அந்த அறைகூவலால் பெருகிய வன்மம்தான் இன்று இஸ்ரேலியப் பிரதமரை அவ்வாறு சொல்ல வைத்தது.
  • கைக்குட்டை அளவு பிராந்தியம்: இருக்கட்டும். நாம் இப்போது ஃபத்தாவை கவனிக்க வேண்டும். பாலஸ்தீன அத்தாரிடி என்பது ஒரு தனி நாட்டின் ஆட்சி அதிகாரம் அல்ல. இதை முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பாலஸ்தீனம் என்கிற மண்ணில் இஸ்ரேல் என்ற தேசம் நிறுவப்பட்டு, நாட்பட்ட (வெற்றிகரமான) யுத்தங்களின் விளைவாக அத்தேசம் தனது எல்லைகளை விரித்துக் கொண்டே சென்ற பின் இப்போது மீதமிருக்கும் ஒரு கைக்குட்டை அளவு பிராந்தியம் அது. சரி. காஸாவைச் சேர்த்தால் இரண்டு கைக்குட்டைகள்.

இஸ்ரேல்தான் எஜமானர்

  • அந்தப் பிராந்தியத்தில் மட்டும்தான் முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ள சில குறைந்தபட்ச அதிகாரங்களுடன் ஒரு சௌகரியம் செய்து தரப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். அவர்களுக்குள் தேர்தல் நடத்திக் கொள்ளலாம். சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கலாம். ஜனாதிபதி என்றொருவரைத் தேர்ந்தெடுத்து அமர்த்தலாம். அதெல்லாம் உண்டு. ஆனால் இஸ்ரேல்தான் எஜமானர். முன்பு பார்த்தபடி வரி வசூல்கூட இஸ்ரேல்தான் செய்யும். இந்தா உன் பங்கு என்று கொடுப்பதை வாங்கிக் கொள்ளலாம். அவ்வளவுதான்.
  • பாலஸ்தீன அத்தாரிடி எல்லைக்குள் இஸ்ரேலிய செக் போஸ்ட்டுகள் உண்டு. ராணுவம் உண்டு. கண்காணிப்பாளர்கள் உண்டு. ஒரு மாதிரி வரையறுக்கப்பட்ட சுதந்திரம் என்று இதனைச் சொல்லலாம். இஸ்ரேலுக்குக் கட்டுப்பட்டு, அவர்கள் சொல்வதை வார்த்தை மாறாமல் கேட்கும் வரை இது தொடரும். கொஞ்சம் குரல் உயர்த்தினால் அவர்கள் துப்பாக்கி உயர்த்த ஆரம்பித்துவிடுவார்கள்.
  • ஒழிகிறது, கட்டுப்பட்டு இருப்போம் என்ற நிலைக்கு ஃபத்தா வந்துவிட்டது. உயிரே போனாலும் அடங்கமாட்டோம் என்பது ஹமாஸ் தரப்பு.
  • இப்போது என்ன பிரச்சினை ஆகிவிட்டதென்றால் ஹமாஸ் அடங்கி நடக்கிற கட்சியல்ல என்பது இஸ்ரேலுக்குத் தெரியும். ஏற்கெனவே பொருளாதாரத் தடைகள் அது இது என்று என்னென்னவோ வர ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் ஹமாஸ் அமைச்சரவை தொடரும் பட்சத்தில் உள்ளதும் போச்சு என்று தன்னாட்சி சௌகரியமே பறிபோய்விடுமே என்று ஃபத்தா பயந்தது. மம்மூத் அப்பாஸ் மிகவுமே பதறினார்.
  • இந்தப் பதற்றம், இரு தரப்பு மோதலாக மிக விரைவில் வெடிக்கத் தொடங்கியது. மோதல் என்றால் சட்டமன்ற வாக்குவாதங்களல்ல. அதெல்லாம் நம் ஊர் வழக்கம். அங்கே மோதல் என்றால் அது போரின் நாகரிகச் சொல். அவ்வளவுதான்.
  • இதன் தொடக்கப் புள்ளி எகிப்து - காஸா எல்லை. Rafa Border Crossing என்று அந்த இடத்துக்குப் பெயர். இந்த எல்லை தாண்டும் விவகாரம் மிகப் பெரிய அரசியல், பொருளாதார அக்கப்போர்களை உள்ளடக்கியது. எகிப்து அரசாங்கமும் பாலஸ்தீன அத்தாரிடியும் இணைந்து அந்த எல்லையை - எல்லைக் கடப்பை நிர்வகித்து வந்தன. அதாவது பாலஸ்தீன தரப்பில் ஃபத்தா. ஆனால் இப்போது ஆட்சிக்கு வந்திருப்பது ஹமாஸ்.
  • சகோதர யுத்தத்துக்கு இது போதாது?

நன்றி: இந்து தமிழ் திசை (17 - 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்