சகோதரத்துவத்தை முதன்மைப்படுத்தும் தீர்ப்பு
- குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் பிரிவு 6ஏ, அரசமைப்புச் சட்டத்தின்படி செல்லும் என்று உச்ச நீதிமன்ற அரசமைப்புச் சட்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்தச் சட்டப் பிரிவு வங்கதேசம் என்னும் தனிநாடு உருவாவதற்கு முன்பு, அன்றைய கிழக்கு பாகிஸ்தானிலிருந்து அசாமுக்குக் குடியேறிய மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கானது.
- அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இடம்பெற்றுள்ள ‘சகோதரத்துவம்’ என்னும் விழுமியத்துடன் இணைத்துப் பார்க்கப்பட வேண்டிய சட்டப் பிரிவு இது என்று 4:1 பெரும்பான்மையுடன் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
- பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே கிழக்கு வங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் அசாமில் குடியேறினர். தேசப் பிரிவினைக்குப் பிறகு, கிழக்கு வங்கம் பாகிஸ்தானின் பகுதி ஆகிவிட்ட பிறகும் இந்தக் குடியேற்றம் தொடர்ந்தது. 1971இல் கிழக்கு பாகிஸ்தான் ‘வங்கதேசம்’ என்னும் தனிநாடு ஆகிவிட்டது. ஆனாலும் சட்டவிரோதக் குடியேற்றங்கள் தொடர்ந்தன. 1980களில் அசாமில் சட்டவிரோதக் குடியேற்றங்களுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன.
- 1985இல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசுக்கும், அசாம் மாநில அரசுக்கும், அனைத்து அசாம் மாணவர் சங்கம், அசாம் கன சங்கிராம் பரிஷத் ஆகிய அமைப்புகளுக்கும் இடையில் அசாம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகளை அமல்படுத்துவதற்காகக் குடியுரிமைச் சட்டத்தில் இணைக்கப்பட்டதுதான் பிரிவு 6ஏ.
- இதன்படி, 1966 ஜனவரி 1 வரை அன்றைய கிழக்கு பாகிஸ்தானிலிருந்து அசாமில் குடியேறியவர்கள் இந்தியக் குடிமக்களாகக் கருதப்படுவார்கள். அந்தத் தேதியிலிருந்து 1971 மார்ச் 25 வரை அசாமில் குடியேறியவர்கள், அசாமில் தங்க அனுமதிக்கப்பட்டாலும் அவர்கள் அந்நியர்களாகவே அடையாளப்படுத்தப்படுவர். அதற்குப் பிறகு அவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டதிலிருந்து 10 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு வாக்குரிமை கிடையாது.
- இந்திய - சீனப் போர் (1962), கிழக்கு பாகிஸ்தானில் வசித்த வங்க மக்கள் மீது பாகிஸ்தான் அரசு ஏவிய ஒடுக்குமுறை ஆகியவற்றால் உயிர் பிழைக்கவும் வாழ்வாதாரத்தைத் தேடியும் அசாமில் குடியேறிய வங்க மக்களுக்கு இந்திய அரசு மனிதநேய அடிப்படையில் குடியுரிமை வழங்க முன்வந்தது.அதே நேரம், இது சட்டவிரோதக் குடியேற்றத்தை அங்கீகரிப்பதாகவும் அசாம் மக்களின் பண்பாட்டைச் சிதைப்பதாகவும் அரசியல், பொருளாதார உரிமைகளை மறுப்பதாகவும் அசாம் மக்களிடையே கடும் எதிர்ப்புணர்வு தோன்ற வழிவகுத்தது.
- சட்டவிரோதக் குடியேற்றங்களால் அசாம் கடுமையான சுமைகளை எதிர்கொண்டுள்ளது என்கிற வாதத்தை ஏற்றுக்கொண்டுள்ள நீதிமன்றம், அதற்குக் குடியுரிமைச் சட்டப் பிரிவு 6ஏ தான் காரணம் என்பதை மறுத்துள்ளது. 1971க்குப் பிறகு அசாமில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறிந்து வெளியேற்றும் பணியில் அரசு உரிய அக்கறை செலுத்தாததே இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என்று நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.
- குறிப்பிட்ட பகுதியில் தொன்றுதொட்டு வாழும் மக்களின் பண்பாடு, தனித்துவமான வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பாதுகாப்பது அவசியம். அதே நேரம், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சகோதரத்துவ விழுமியங்களின் அடிப்படையி லேயே பல லட்சக்கணக்கான மக்கள் ஆதரவற்றவர்களாவதைத் தடுப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அண்டை நாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறுவோரால் எல்லைப் பகுதி மாநிலங்களில் வாழும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு உள்ளனர். இத்தகைய ஊடுருவல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுக் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதே நேரம் போர், உள்நாட்டுக் கலவரம் ஆகியவற்றால் நம் நாட்டில் தஞ்சம் புகுந்த மக்களை மனிதநேயத்துடன் நடத்துவதும் அவசியம். அந்த வகையில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அசாம் மக்கள் மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (24 – 10 – 2024)