TNPSC Thervupettagam

சக்தி பவானி மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்

December 1 , 2024 48 days 79 0

சக்தி பவானி மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்

  • தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் வறுமையை ஒழிப்பதோடு அந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் வேலை வாய்ப்புக்கும் உறுதி அளிக்கும் திட்டமாக ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம் செயல்படுத்தப் பட்டுவருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்த இரண்டு நிறுவனங்கள் இவை:

சக்தி பவானி மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்:

  • ஈரோடு மாவட்டத்தில் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் மூலம் சத்திய மங்கலம், பவானி, சென்னிமலை, தாளவாடி, பவானிசாகர் ஆகிய வட்டாரங்களின் உற்பத்தியாளர் குழுவில் உள்ள 1020 உறுப்பினர்களைப் பங்குதாரர்களாக கொண்டு 2022இல் ‘சக்தி பவானி மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ தொடங்கப்பட்டது.
  • ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தில் இருந்து ரூபாய் 30 லட்சம் மானிய நிதி பெற்று சிறுதானிய உணவகம், மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி நிலையம், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களை நேரடியாகக் கொள்முதல் செய்தல், மாட்டுத்தீவன விற்பனை, விதை - உரங்கள் விற்பனை ஆகியவை மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ராகி, மஞ்சள், வாழை, நிலக்கடலை போன்றவை விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு அதற்கு சிறந்த விலையை சந்தையில் பெற்றுக் கொடுத்து வருகிறது.
  • நேரடிக் கொள்முதலால் சரியான விலை கிடைப்பதால் உற்பத்தியாளர் குழுவில் உள்ள விவசாயிகள் நல்ல லாபம் ஈட்டிவருகின்றனர். 2023-24 நிதி ஆண்டில் 83.79 லட்சம் நிதி சுழற்சி செய்து 2.45 லட்சம் லாபம் கிடைத்துள்ளது. ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட எஸ்.பி.சிறுதானிய உணவகம், ஆறு மாதங்களில் ரூபாய் 22.60 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளது. சத்தியமங்கலம், பவானி, தாளவாடி, சென்னிமலை, பவானிசாகர் ஆகிய வட்டாரங்களில் விற்பனை மையங்கள் அமைப்பது இவர்களின் எதிர்காலத் திட்டம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

பண்ருட்டி முந்திரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்:

  • கடலூர் மாவட்டம் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம் மூலமாக பண்ருட்டி வட்டாரத்தில் பண்ருட்டி முந்திரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் 2022இல் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் 1,250 பேர் பங்குதாரர்களாக இணைந்துள்ளனர் பங்குதாரர்கள் ஒவ்வொருவரும் பங்குத் தொகையாக தலா ரூ.1000 கொடுத்து பண்ருட்டி இந்நிறுவனத்தில் இணைந்துள்ளனர்.
  • இதனுடன் 54 உற்பத்தியாளர் குழுக்கள் இணைந் துள்ளன. அதன் அடிப்படையில் இவர்களின் பங்குத் தொகையை வைத்து ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் மாநில அலுவலகம் மூலமாக பண்ருட்டி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு மானியமாக ரூபாய் 30 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த மானியத்தின் மூலமாக அவர்கள் போர்மா இயந்திரம், முந்திரி கொதிகலன் இயந்திரம், முந்திரி தோலுரித்தல் இயந்திரம் போன்றவை வாங்கப்பட்டன. இந்த இயந்திரங்களின் மூலம் முந்திரிக் கொட்டைகளை மதிப்புகூட்டி அவர்களிடமும் மற்ற வியாபரிகளிடம் முந்திரிகளாக விற்பனை செய்தும் வருகிறோம். இதன் மூலம் பண்ருட்டி முந்திரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் உள்ள பங்குதாரர்கள் இடைத்தரகர்கள் இல்லாமல் அவர்களின் பொருள்களை நல்ல விலையில் நம்மிடம் விற்பனை செய்கின்றனர். இதனால், அவர்களின் பொருளாதார நிலையும் உயர்கிறது. அதேபோல் நாமும் முந்திரியை வெளிப்புறச் சந்தையில் பங்குதாரர்களுக்கு விற்பனை செய்து தருகிறோம். நம்முடைய பண்ருட்டி முந்திரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் ‘மங்கையர்’ என்கிற பிராண்டின் மூலம் முந்திரி தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதுநாள் வரையில் வட இந்தியர்கள் மற்றும் உள்ளூர் சந்தைகளில் 10 நபர்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) போடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் முந்திரியின் தரத்தை நிர்ணயம் செய்து உடனடிப் பண பரிவர்த்தணை செய்து வருகின்றனர். இதனால் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களும் மகிழ்சியில் உள்ளனர்.
  • மேலும், இந்த நிறுவனம் பெண்களை மையமாக வைத்து வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் இதுவரை ரூபாய் 3 கோடி மதிப்பில் விற்பனை செய்யப்பட்டு ரூபாய் 2.5 லட்சம் லாபம் அடைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் எதிர்காலத் திட்டத்தின் நோக்கமாக மதிப்புக் கூட்டப்பட்ட முந்திரியை வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய EXIM CODE வாங்கப்படுள்ளது. மேலும்,
  • உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வாங்கிய முந்திரிக் கொட்டைளுக்கு நல்ல முறையில் மதிப்புக் கூட்டுதல் செய்யப்பட்டு பேக்கிங் செய்து தரமான பொருளாகச் சந்தைகளில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • பண்ருட்டி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், தமிழகத்தில் முதல் முறையாக வனத்துறையின் TAFCON எனும் நிறுவனத்தோடு தொடர்புகொண்டு குறைந்த விலையில் 350 ஏக்கர் முந்திரிக் காட்டைக் குத்தகைக்கு எடுத்திருகின்றனர். இந்தக் காட்டின் மூலம் நிறுவனப் பங்குதாரர்கள் இரட்டிப்பு லாபத்தைப் பெற்று வருகின்றனர். | இந்தத் திட்டம் குறித்த மேலதிக தகவல்களுக்கு: 1800 599 1600 / 155 330

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்