TNPSC Thervupettagam

சங்க இலக்கியம் போற்றும் தைத் திருநாள்

January 14 , 2021 1468 days 1282 0
  • மனித வாழ்வானது பல பண்பாடு மற்றும் நாகரிகங்கள் சார்ந்து செயல்பட்டு வருகின்றது.  இதில் பண்டிகைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.  அதிலும், தமிழர்களின் உயிர்ப்பாய், உணர்வின் உறுதியாய் இன்று வரை திகழ்வது தைப்பொங்கல் மட்டுமே.

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை.(குறள்:1031)

  • பல தொழில் செய்து  சுழலும் இவ்வுலகத்தில் ஏர்ப்பிடிக்கும்  தொழிலை பின்பற்றி தான் உலகம் சுற்ற வேண்டியிருக்கிறது. துன்பங்கள்  பலயானும் உழவுத் தொழிலே உலகத்தில் சிறந்தது என்பது வள்ளுவன் வாக்கு.
  • விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு  வாழும் மக்கள், தங்கள்  உயிரின் அடிப்படையாய் இருக்கும் பயிர்களை அறுவடை செய்யும் காலத்தில்  இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கலிட்டு அக்காலத்தில் வழிப்பட்டு வந்தனர். காலப்போக்கில் அதை அனைத்து மக்களும் இருளை நீக்கு ஓளி வீசும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடி மகிழத் தொடங்கினர்.
  • உண்ணும்  உணவுக்காக பல இடம் செல்லாமல் தன் உணவை தானே தயாரித்து  கொள்வதற்கு பயிரிட தொடங்கப்பட்டது தான் ஆதி விவசாயம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, சொல்லாலும் பொருளாலும் சுவை மிகுந்த இலக்கியங்களைக் கொண்டிருந்த செந்தமிழ் மொழியைப் பேசிய மக்கள் ஈடு இணையற்ற பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்களாயிருந்தார்கள்.
  • அவர்கள், அறிவியல் முதிர்ச்சியால் உலகத்திற்கே  வழிகாட்டியவர்கள், விண்ணையும், மண்ணையும் ஆராய்ந்து வியப்புமிக்க நூல்களை ஆக்கியவர்கள், வானிலைக் கணக்கீட்டு வல்லமையால் கோள்களின் அசைவுகளைக் குறியீடு செய்தவர்கள். நட்சத்திரங்களையும் அவற்றின் நடமாட்டங்களையும் அவற்றின் பலாபலன்களையும் மிகத் துல்லியமாக ஆராய்ந்து கணித்தவர்கள். உலகுக்குப் பயன்தரும் முடிவுகளை அளித்தவர்கள். அவர்கள்தான், கதிரவனின் ஒளியினால்தான் பயிர்கள் வளர்கின்றன என்றும், காய்க்கின்றன என்றும் கண்டுபிடித்தவர்கள்.
  • அதனால்தான் கழனி விளைந்து கதிரைப் பறித்ததும் கதிரவனுக்கு நன்றி செலுத்தினார்கள்.  புதுப்பானையில் பொங்கலிட்டுப் படைத்து வணங்கினார்கள்.  மருத நிலத்தில் வாழ்ந்த மக்கள் தைப்பொங்கலை மிக விமரிசையாக கொண்டாடினர். செந்நெல், வெண்நெல் என இந்நிலத்தின் அடையாளமாகத் திழ்ந்த நெல்மணிகளைக் கொண்டு கரந்தப்பாலினை சேர்த்து பொங்கல் வைத்து  நெல்லரி பறையிசையில் சூரியனையும் மற்றும் மருத நில கடவுளான இந்திரனையும் வழிப்பட்டனர். இதை முற்காலச் சோழர் காலத்தில் இந்திரவிழா என்ற பெயரிலும் மனதுருக வழிபட்டனர்.
  • சங்க இலக்கியம் சான்றுகள்: தைத்திருநாளை போற்றும் வகையில் சங்க இலக்கியத்தில் பல்வேறு பாடல்கள் மற்றும் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை

முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்,

மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்,

மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி

வான்கேழ் இரும்புடை கழாஅது, ஏற்றிச்,

சாந்த விறகின் உவித்த புன்கம்,

கூதளங் கவினிய குளவி முன்றில்,

செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்

ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல்,

நறைநார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி,

வடிநவில் அம்பின் வில்லோர் பெரும!

                                                                      (புறம்:168)

  • என்று புறநானூற்றில் 168 ஆவதாக இடம்பெறுகின்ற பாடலிலே கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் என்ற புலவர் புதிர் உண்ணுகின்ற செய்தியைப் பதிவு செய்துள்ளார். புதிதாகக் கறந்து நுரையெழும்பும் தீம் பாலிலே புத்தரிசியையிட்டு, சந்தனக்கட்டைகளை விறகாகக் கொண்டு அடுப்பெரித்து ஆக்கிய பொங்கலைப் பலரோடு பகிர்ந்து உண்ணுகின்ற வழக்கத்தை அழகாகச் சொல்கின்றார் புலவர். இந்த பாடலின் மூலம் மருத நிலம் மக்கள் மட்டுமின்றி தை மகளை வரவேற்று நன்றி விழாவை குறிஞ்சி நில மக்களும் கொண்டாடினர் என்று அறியப்படுகிறது.
  • அத்தகைய தொன்மைச் சிறப்பு வாய்ந்த பொங்கல் பண்டிகை உழவர்களுக்கு மட்டும் உரியதல்ல. உழுவார் உலகத்தார்க்கு அச்சாணியானவன் என்கின்றார் வள்ளுவர். எனவே, கதிரவனுக்கு நன்றிசெலுத்தும் பொங்கல் உலகத்திற்கே பொதுவானது. அதனை ஒரு பண்டிகையாகக் கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

வலங்கு செந்நெல் கதிர்வேய்ந்த வாய்

கரும்பின் கொடிக்கூரை சாறு கொண்டகளம்

போல் வேறுவேறு பொலிவு தோன்ற குற்றானா

உலக்கையால் கலிச்சுமை வியாலங்கன்

                                                    (புறம்:22)

  • என்ற புறநானூற்றுப் பாடல் தைத்திருநாளில் செந்நெல்லினை அறுத்து கரும்பினைக் கட்டி அந்த இடத்தில்  நெல்லோடு வேயப்பட்ட நெல்லந்தாள் கூரை வீடும்,  கருப்பஞ்சருகு வேய்ந்த கூரை வீடுகளும் தனித்தனியே விழாக் கொண்டாடப்பட்ட களம் போலப் பொலிவுடன் காட்சி தருகின்றன என்று கூறுகிறார் குறுங்கோழியூர் கிழார்.  
  • வரலாற்றுச் சான்றுகள்: பழங்காலப் பெண்கள் தை மாதத்தில் நோன்பிருந்த செய்திகளை சங்க இலக்கியங்கள் சில குறிப்பிட்டிருக்கின்றன. தை மாதத்தில் நோன்பிருந்து, வைகை ஆற்றில் நீராடி, சிறந்த கணவர் வாய்க்கப்பெற வேண்டும் என பெண்கள் வேண்டியதாக 'பரிபாடல்' கூறுகின்றது.

'தீயெரிப் பாலுஞ் செறிந்த முன் பூற்றியோ

தாயருகா நின்று  தவத் தைந்நீராடல்

நீயுரைத்தி வையை நதி'

                    (பரிபாடல்:11)

"பைதுஅற விளைந்த பெருஞ்செந் நெல்லின்

தூம்புடைத் திரள்தான் துமிந்த வினைஞர்"

  • என அறுவடை செய்யும் உழவரைப் பற்றி பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது. இவ்வாறு உழவைப் போற்றிய பண்டைத் தமிழர் அறுவடை விழாவைக் கொண்டாடியிருப்பர் என்பதை உறுதியாக நாம் நம்பலாம்.

"புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்

பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து'

                                                 (சிலப். 5:68}69)

  • சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாவின் துவக்கத்தில், காவல்பூதத்திற்கு, புழுக்கலும், நோடையும், விழுக்குடை மடையும், பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து வழிபட்டதாக, குறிப்பிடப்படுகிறது. இதில் புழுக்கல் என்பதுதான்  பொங்கலாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. இதன் மூலம் பொங்கல் வைத்து வழிப்படும் முறை சங்க காலத்திலிருந்தே தமிழரின் மரபாய் திகழ்ந்து வருகிறது.

மதுக்குலாம் அலங்கல் மாலை

மங்கையர் வளர்த்த செந்தீப்

புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்

                                                                  (சீவக. சிந். 1821)

  • சீவக சிந்தாமணி என்னும் காப்பியத்திலும் பொங்கல் பற்றிய  குறிப்பு இடம்பெறுகின்றது.  செந்தீ மூட்டிப் புதுப் பானையில் இனிய பாலொடு கலந்த சோற்றைப் பொங்கலாகப் பொங்கிடும் பாவையரின் பழக்கம் புலப்படுத்தப்படுகிறது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு அளவில் நடைபெற்ற பொங்கல் இடும் முறையாக இதனை நாம் கருதலாம்.புழுக்கலும், நோலையும் விழுக்குடை மடையும்.

பெண்களின் நோன்பு பற்றிய தகவல்களை  கலித்தோகை பாடல் நமக்கு எடுத்துரைக்கிறது.

வையெயிற்றவர் நாப்பண் வகையணிப் பொலிந்து நீ தையில் நீராடி தவம் தலைப் படுவையோ”

                                            கலித்தொகை (59:12-13)

  • பெண்கள் உலக நன்மைக்காக நோன்பிருந்து நீராடியது போல நல்ல கணவன் தமக்குக் கிடைக்க வேண்டுமென தைத்திங்களில் நீராடி வீடு வீடாகச் சென்று பாடி தாம் பெற்றதை பிறர்க்கும் கொடுத்தனர். இதுபோல் பல சான்றுகள் உள்ளன. ஒவ்வொரு காலத்திலும் பெயர்கள் தான் மாறியுள்ளதே தவிர வழிமுறையும், வழிப்பாட்டு முறையும் மக்களிடம் மாறவில்லை. அதேபோல் அறுவடைத் திருவிழாவில் தான் பொங்கல் வைத்து வழிப்பட்டு வந்தனர். காலப்போக்கில் அறுவடைத் திருவிழாவை தான் தைப்பொங்கலாய் இப்பொழுது நாம் கொண்டாடி வருகிறோம்.
  • உழுதல் மற்றும் உழுதல் முறையை குறித்து நம் சங்க இலக்கிய பாடல்கள் எடுத்து உரைக்கின்றது. அதேபோல் அறுவடைகாலத்தில் மக்களில் வழிப்பாட்டு முறைகளை உவமையாய் வைத்து வந்துள்ள பாடல்கள் ஏராளம்.  உலகத்தில் பல நாடுகள்  அறுவடை  முடிந்து இயற்கைக்கு நன்றி சொல்லும் சடங்குகள் நடைமுறையில் இருக்கின்றன.
  • கிரேக்க, ரோம, எகிப்திய,  கலாசாரங்களில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுவடை விழாக்களை கொண்டாடியிருக்கின்றனர். ஜப்பானியர்கள் "டோரினோய்ச்சி' என்ற பெயரிலும் . கொரியாவில் "சூசாக்' எனும் பெயரிலும்,  அறுவடை  திருநாள் கொண்டாப்பட்டு வருகின்றன. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் 3 நாள்கள் விழா நடைபெறுகிறது. இறந்து போன உறவினர்களை நினைவுக்கூரும் நிகழ்வுடன் ஆரம்பிக்கும் இந்த விழா நல்ல விளைச்சலைத் தந்த இறைவனுக்கும்,  இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விதமாக இருக்கிறது. கனடாவில் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கள்கிழமையும், சீனாவில் ஆகஸ்ட் நிலா விழா என்ற பெயரிலும் அறுவடை திருநாள் கொண்டாடப்படுகிறது.
  • இந்திய அளவில், தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகம், ஆந்திரத்தில் மகாசங்கராந்தி என்ற பெயரிலும், ஜனவரி 13-ல் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் லோஹ்ரி என்ற பெயரிலும் அறுவடை திருவிழாக்கள் நடைபெறுகின்றன. ஜனவரி 14, 15-ல் அசாம் மாநிலத்தில் மாஹ் பிகு என்ற பெயரில் நெல் அறுவடைத் திருவிழா  மற்றும்  புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
  • "முப்பது கோடி முகமுடையாள் - உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் - இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் - எனிற் சிந்தனை ஒன்றுடையாள்'என்ற பாரதியார் பாட்டிற்கு ஏற்ப மொழியாலும்,கலாசாரத்திலும் பிரிந்திருந்தாலும்  நாம் சிந்கனையில் ஒன்றுப்பட்டு தான் இருக்கிறோம். அதற்கு உலகம் முழுவதும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் அறுவடை திருவிழாக்கள் சிறந்த சான்று.
  • "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற கருத்துக்கு இணையாக  தமிழர் பண்டிகையான பொங்கலை கொண்டாடி இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நாம் நம் நன்றியை செலுத்துவோம்.

புது வாழ்வு பொங்கட்டும்.....

மார்கழி  கழிந்து

தத்தி தத்தி வந்த தைமாதத்தில்

தித்திக்கும் வெல்லத்தில் பொங்கல் வைத்து

மகிழ்ச்சி வெள்ளம்  பொங்க

பொங்கலோ பொங்கல்

என்று குலவையிட்டு

அவரை துவரை எல்லாம் படையலிட்டு

கரும்பினை தோரணத்திற்கு ஊடே

பொங்கும் பொங்கலை பார்க்கையில்

இறைவனிடம் இறைஞ்சுவோம்

என்றென்றும் மக்கள் மனதில் அன்பும்

பொங்கட்டுமென்று!

நன்றி: தி இந்து (14 – 01 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்