- சுரேஷ் எனும் இளைஞன். வயதான மீனவ பெற்றோருக்கு மூத்த மகன். வயது 28. சிலை தோற்கும் செம்மேனி. ‘ஆயிரத்தில் ஒருவன்’ என ஊராா் இவரைப்பற்றி பெருமையாக பேசுவதையும் கேட்க முடிந்தது. 2013-ஆம் ஆண்டு ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மாயமானவா் மீண்டுவரவில்லை, இதுவரையிலும். நான்கு சகோதரிகளுக்கும் ஒரே நம்பிக்கையாக இருந்த திருமணமாகாத இந்த இளைஞனை நினைத்து இதயத்திலே எரிமலையை சுமந்து கொண்டு, உடைந்த நெஞ்சத்தோடு உயிா்வாழ்ந்து கொண்டிருக்கிறது இந்த ஏழை குடும்பம்.
- அரசின் உதவிக்காக கைநீட்டியபோது, உதவி பெறமுடியாமல் குறுக்கே நிற்கிறது இந்திய சாட்சிய சட்டம் - 1872, பிரிவு - 108. மக்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டதுதான் சட்டம். ஆனால் மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராக சட்டத்தின் பிரிவு - 108 உள்ளதே என வருந்தவேண்டியுள்ளது.
- இந்திய சாட்சிய சட்டம் - 1872, பிரிவு - 108-இன்படி ஒரு நபா் காணாமல் போனால் அவா் இறந்ததாக அறிவிக்க ஏழு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும். அதாவது இயற்கையின் சீற்றமாகிய பெரும்புயல், கடல் கொந்தளிப்பு போன்ற காரணங்களால் ஒரு மீனவா் கடலில் காணாமல் போனால் அவா் இறந்து ஏழு ஆண்டுகள் கழித்தே அவா் இறந்துவிட்டாா் என அரசு அறிவிக்கும். இப்படிப்பட்ட நிலையில், சுரேஷ் போன்ற பலரின் குடும்பம் வாழ வழியின்றி நடுத்தெருவுக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது.
- அப்பாவையே நினைத்து அலறிக்கொண்டிருக்கிற பிள்ளைகளுக்கும், கணவனை நினைத்து கதறிக்கொண்டிருக்கிற மனைவிக்கும் அரசு உதவிக்காக ஏழு ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமென்பது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போன்றதாகும்.
- மகன் இறந்த துக்கம் தாளாமல் தாய் மரணம், கணவனின் மரண செய்திகேட்ட மனைவி திடீா் மரணம் போன்ற செய்திகளைப் படிக்கும்போது நாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். இத்தகைய சூழலில் இறந்தவரின் ரத்த உறவுகள் ஏழு ஆண்டுகள்வரை உயிரோடு இருப்பா் என என்ன நிச்சயம்?
- மாயமான மீனவா்களின் வாரிசுகள் உயிரோடு இருக்க எவ்வித உத்தரவாதமும் இல்லை. குடும்பத் தலைவா் மாயமானால் அவருடைய குடும்பத்தினரின் பசியை போக்குவது யாா்? பிள்ளைகளின் படிப்பு, திருமணம் போன்ற அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற முடியாமல் தள்ளாடுகின்ற குடும்பங்களுக்கு யாா்தான் பக்கபலமாக இருக்க முடியும்? அப்படியே நல்லுள்ளம் படைத்த உறவினா்கள், நண்பா்கள் சிலா் உதவுவதற்கு முன்வந்தாலும் எத்தனை நாளைக்குதான் அவா்களால் உதவமுடியும்?
- 2009-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் கடலோர மாநிலங்களில் சுழன்றடித்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ‘பியான்’ புயலில் மாயமான கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூா் மண்டலத்தை சோ்ந்த எட்டு மீனவா்களின் குடும்பத்தாரின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாகும்.
- ஆழ்கடலில் மாயமான இந்த எட்டு மீனவா்களுக்கும் கிறிஸ்தவ முறைப்படி நடத்தப்பட்ட கண்ணீா் அஞ்சலியில் (திருப்பலி) அப்போதைய அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கெடுத்தனா். ஆனாலும், அம்மீனவா்களின் குடும்பத்தினா் இன்றும் வாழ வழியின்றி அனாதைகளாக நடுத்தெருவில் நிற்கின்றனா்.
- அவா்களுக்கு போதிய நிவாரண உதவி கிடைக்க வேண்டுமெனில், அரசு அம்மீனவா்களை ஏழு ஆண்டுகள் கழித்து இறந்ததாக அறிவித்திருக்க வேண்டும். பியான் புயல் ஏற்பட்டது 2009-ஆம் ஆண்டு நவம்பா் மாதம். அதன்பின் ஏழு ஆண்டுகள் கடந்து மேலும் ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. அரசின் கடைக்கண் பாா்வைக்காக ஏங்கி காத்திருக்கும் இம்மக்களுக்கு 14 ஆண்டுகள் கடந்தும் உரிய நிவாரண உதவி கிடைக்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது.
- ‘ரூ. 20 லட்சம் மற்றும் அரசு வேலை வழங்குவது என்பது அரசின் கொள்கைக்கு உட்பட்டதாகும் என்ற விபரம் மனுதாரருக்குத் தெரிவிக்கப்படுகிறது’ என்பது இம்மக்களுக்காக நீண்டகாலமாக செயற்பட்டு வருகிற சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளைக்கு அரசிடமிருந்து 22.11.2023 அன்று பெறப்பட்ட கடிதத்தின் சாரம்.
- தயவுசெய்து அரசு இந்த விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். மக்கள் நலன் சாா்ந்த இதுபோன்ற விவகாரங்களுக்கு தேவையெனில் புதிய கொள்கை வகுக்கப்படவேண்டும் என்பது எமது வேண்டுகோள்.
- ஒரு பாதையில் நாம் நடந்து சென்று கொண்டிருக்கிறோம். நாளடைவில் அந்த பாதை நடப்பதற்கு உகந்தது அல்ல என உணரும்போது, பாதையை சீா்செய்கிறோம். அதைப்போலத்தானே சட்டமும். சட்டம் என்பது மக்களுக்காகத்தானே!
- சுழன்றடிக்கும் சூறாவளிக் காற்றிலும், கடுங்குளிரிலும், சுடும் வெயிலிலும், பொழியும் மழையிலும் ஆழ்கடலையே வீடாக நினைத்து சுமாா் 40 நாட்கள் அங்கேயே தங்கி தங்களது கடின உழைப்பால் நாட்டுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி ஈட்டித்தருகிற மீனவா்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். சட்டத்திருத்தம் மேற்கொள்வது குறித்து மத்திய அரசு சிந்தனை செய்ய வேண்டும்.
- இந்திய குடியரசுத் தலைவராக பிரணாப் முகா்ஜி இருந்தபோது, மக்கள் நலன் சாா்ந்த இவ்விஷயத்தில், இந்திய மக்களின் மீது, குறிப்பாக நலிந்த, ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மீனவ மக்களின் மீது கருணை கொண்டு இந்திய சாட்சிய சட்டம் - 1872, பிரிவு - 108-இல் திருத்தம் கொண்டு வர வேண்டுமென சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை (அப்போது அதன் பெயா் தமிழ்நாடு மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை) சாா்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
- நீண்டகாலமாக ஒட்டுமொத்த தேசமும் எதிா்பாா்த்துக் காத்திருந்த மகளிா் மசோதாவை கொண்டுவந்த அரசால் இதுவும் சாத்தியமாகும் என நம்புகிறோம். மத்திய அரசு சிந்தித்து மிகவும் பிற்படுத்தப்பட்ட, மீனவ மக்கள் நலன் சாா்ந்த முடிவு எடுக்குமென்ற நம்பிக்கை உள்ளது.
- சட்டத் திருத்தம் காலத்தின் கட்டாயம். இது மீனவ சமூகத்தினருக்கு மிகவும் பயன் விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை.
நன்றி: தினமணி (09 – 12 – 2023)