TNPSC Thervupettagam

சதத்தை நோக்கி "மனதின் குரல்'

April 17 , 2023 636 days 247 0
  • பிரதமர், மக்களுடன் உடனடி உறவை ஏற்படுத்தக்கூடிய ஓர் அற்புதமான, திறமையான பேச்சாளராக உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டவர். அவரது பேச்சில் காணப்படும் உண்மை, அனைவரும் அறிந்த அவரது நேர்மை, கடந்த ஒன்பது ஆண்டுகளாக மக்களுடன் அவர் கொண்டிருக்கும் நம்பிக்கை அடிப்படையிலான உறவு ஆகியவை வெகுஜன மக்கள் தொடர்பாளராக அவரது வெற்றிக்குப் பங்களிக்கின்றன.
  • பிரதமர் மோடியின், மக்களை மையப்படுத்திய வளர்ச்சி மாதிரிதான் அவருக்கு பரந்துபட்ட மக்களின் அன்பைப் பெற்றுத் தந்துள்ளது. மக்களுடனான தொடர்ச்சியான உரையாடல் குறித்த அவரது எளிமையான யோசனைதான், 2014-ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்ட "மனதின் குரல்' என நாம் அறியும் நிகழ்ச்சிக்கு வழிவகுத்தது.
  • கடந்த பல ஆண்டுகளாக மாதந்தோறும் இது கடைசி ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியாக மாறியுள்ளது. வானொலி உரையாகத் தொடங்கிய இது இப்போது ஒரே நேரத்தில் பல்வேறு தளங்களில் இருந்து பல மொழிகளில் ஒலிபரப்பப்படுகிறது.
  • மனதின் குரல் இரண்டு பரிமாண மோடிகளைக் காட்டுகிறது - ஒன்று, வலிமையான, சக்திவாய்ந்த, தொலைநோக்கு கொண்ட பிரதமர் மோடி; மற்றொன்று, மென்மையான, கனிவான, அன்புமிக்க குடும்பத் தலைவரான மோடி. சமீபத்தில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் அவர் தனது உரையாடலைப் பகிர்ந்து கொண்டார். அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் உறுப்புகளைத் தானம் செய்ய தைரியமாக முடிவு செய்தனர். உறுப்பு தானம் என்ற உன்னதமான கருத்தை ஊக்குவிக்க மோடி அந்த உரையாடலைப் பயன்படுத்தினார்.
  • பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பது முதல், உடல் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் வரை, இரக்கமுள்ள இதயத்துடன் சாதாரண மக்கள் செய்யும் நல்ல செயல்களுக்காகப் பாராட்டுவது வரை, இதுபோன்ற பல உதாரணங்களை மேற்கோள் காட்டலாம்.
  • பிரதமர் மோடியின் "மனதின் குரல்' அடிப்படையில் நிஜ வாழ்க்கை சம்பவங்கள் மற்றும் அனுபவங்கள் குறித்ததாகும்; இந்த நிகழ்ச்சி ஏன் பெருமளவில் பிரபலமானது, பல்லாயிரக்கணக்கான பதில்களைப் பெறுகிறது என்பதை இது விளக்குகிறது.
  • பிரதமர் மோடியின் "மனதின் குரல்' முதல் அத்தியாயம் 2014-ஆம் ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி ஒலிபரப்பப்பட்டது. மாத இறுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமைதோறும் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் இது, ஏப்ரல் 30-ஆம் தேதி 100 நிகழ்ச்சிகளை நிறைவு செய்கிறது. மனதின் குரல் என்பது மக்களுடனும், ஒட்டுமொத்த சமூகத்துடனும் தொடர்புகொள்வதற்கான புதுமையான வழி ஆகும்.
  • சுமார் 262 வானொலி நிலையங்கள் மற்றும் 375-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் சமூக வானொலி நிலையங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய வானொலி வலையமைப்பான "அகில இந்திய வானொலி' மூலம், சமூக-பொருளாதார மற்றும் கலாசார ரீதியாக பல்வேறு தரப்பு மக்களை அடைந்து, ஊக்கமளித்து பிரதமர் உற்சாகப்படுத்துகிறார்.
  • இந்திய பொது சேவை ஒலிபரப்பாளரான பிரசார் பாரதி, 11 வெளிநாட்டு மொழிகள் உள்பட 52 மொழிகளில் மனதின் குரல் நிகழ்ச்சியை மொழிபெயர்த்து ஒலிபரப்புகிறது, இது நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு சேவை செய்கிறது; அதே நேரத்தில் புலம்பெயர்ந்த இந்தியருக்கும் கொண்டு செல்கிறது.
  • மனதின் குரல் இந்தியாவின் முதல் பிரத்யேக வானொலி நிகழ்ச்சியாகும், இது ஒரே நேரத்தில் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்படுகிறது. தூர்தர்ஷன் நெட்வொர்க்கின் 34 சேனல்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்கள் இந்தப் புதுமையான நிகழ்ச்சியை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஒளிபரப்புகின்றன.
  • பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் கட்டுரைகளைக் கொண்ட, நுட்பத்துடன் தொகுக்கப்பட்ட கையேடு 2022 பிப்ரவரி முதல் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்பட்டு, எண்ம (டிஜிட்டல்) முறையில் 6 கோடிக்கும் அதிகமான மக்களைச் சென்றடைகிறது.
  • நிகழ்ச்சியின் பெயரை உருவாக்குவது முதல் நிகழ்ச்சிக்கான தகவல்களைத் தேர்ந்தெடுப்பது, பிரதமரின் அழைப்புகள், குடிமக்களின் ஈடுபாடு மற்றும் பங்கேற்பு ஆகியவற்றை உள்ளடக்கி இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வோர் நிகழ்ச்சியும் தனி நபர்களின் மாற்றும் சக்தியின் மீது பிரதமரின் அசைக்க முடியாத நம்பிக்கையின் மாதாந்திர நினைவூட்டலாகவும், மக்கள் பங்களிப்பை ஊக்குவிக்கும் கருவியாகவும் அமைந்துள்ளது.
  • மனதின் குரல் மூலம் பிரதமர் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைய முடிந்தது. அவர் நாட்டுக்கான தனது பார்வையைப் பகிர்ந்து கொள்ள இந்தத் தளத்தைப் பயன்படுத்துகிறார். தேசத்தைக் கட்டமைக்கும் செயல்பாட்டில் குடிமக்களின் பங்களிப்பை நாடுகிறார்.
  • மனதின் குரல் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பிரதமருக்கும், மக்களுக்கும் இடையே நேரடித் தொடர்பை ஏற்படுத்துவதாகும். ஒவ்வொரு மாதமும், பிரதமருக்கு நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான கடிதங்கள் வருகின்றன, அவை நிகழ்ச்சியின் போது எடுத்துக் காட்டப்படுகின்றன.
  • 9 ஆண்டுகளில் 99 நிகழ்ச்சிகள் கொண்ட அதன் வெற்றிகரமான கலந்துரையாடல் தலைப்புகள்மூலம், முக்கியப் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே மனதின் குரல் ஏற்படுத்தியதுடன், சமூக மற்றும் தேசிய காரணங்களுக்காக நடவடிக்கை எடுக்கவும் தூண்டுகிறது.
  • இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று, இடைவிடாமல், தன்னலமின்றி களத்தில் பணிபுரிந்து மாற்றங்களை உருவாக்குபவர்களின் எழுச்சியூட்டும் மனிதர்களின் சம்பவங்கள், அவர்கள் தொடர்ந்து பணியாற்றுவதற்கு ஊக்கமளிக்கும் ஆதாரமாக மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான மக்களுக்கும் ஊக்கமளிப்பதாகும்.
  • அதன் தொடக்கத்திலிருந்தே, நாடு முழுவதும் உள்ள சமூகங்களை உள்ளடக்கிய சமூக இயக்கங்களை ஊக்குவிக்கும் மக்கள் இயக்கம் என்னும் பயனுள்ள கருவியாக மனதின் குரல் உருவெடுத்துள்ளது.
  • நிகழ்ச்சியில் பிரதமர் வெளியிட்ட சமூகச் செய்திகள் சில மணி நேரங்களில் சமூக ஊடக ட்ரெண்டாகவும், சில வாரங்களில் வெகுஜன இயக்கமாகவும் மாறி விடுகின்றன.
  • தூய்மை இந்தியா இயக்கம், பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், கரோனா தடுப்பூசி, இல்லந்தோறும் மூவண்ணக் கொடி ஆகியவை இதற்கு சில புகழ்பெற்ற எடுத்துக்காட்டுகள்.
  • சமீபத்தில், மனதின் குரல் 88-ஆவது அத்தியாயத்தில், நீர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், குடிமக்கள் தங்கள் பகுதியில் அமிர்த நீர்நிலைகளைக் கட்டுமாறு வலியுறுத்தினார். சில மாதங்களுக்குள், அந்தச் செய்தி ஒரு வெகுஜன இயக்கமாக மாற்றப்பட்டது. அரசாங்க அமைப்புகளின் உதவியுடன் உள்ளூர் மக்களால் உருவாக்கப்பட்ட ஏராளமான அமிர்த நீர்நிலைகள் நாடு முழுவதும் தோன்றின.
  • அதைத் தொடர்ந்து, 92-ஆவது நிகழ்ச்சியில், உத்தர பிரதேசத்தின் லலித்பூரில் உள்ள பகத் சிங் அமிர்த நீர்நிலை மற்றும் கர்நாடகத்தின் பில்கேரூரில் உள்ள அமிர்த நீர்நிலை போன்ற பல்வேறு அமிர்த நீர்நிலைகளைக் குறிப்பிட்டு, குடிமக்களின் உடனடி முயற்சிகளை பிரதமர் பாராட்டினார்.
  • நாட்டின் தேசிய மற்றும் உலகளாவிய வெற்றிகளை முன்னிலைப்படுத்துவதில் மனதின் குரல் கவனம் செலுத்துகிறது. 89-ஆவது நிகழ்ச்சியில், இந்தியாவில் உள்ள யூனிகார்ன் நிறுவனங்களின் எண்ணிக்கை 100-ஐ எட்டுவதை பிரதமர் எடுத்துக்காட்டினார்; 91-ஆவது நிகழ்ச்சியில் இல்லந்தோறும் மூவண்ணக் கொடி பிரசாரத்தின் பெருந்திரளான பங்கேற்பையும், நாடு தழுவிய வெற்றியையும் கொண்டாடியது.
  • மேலும், இதுபோன்ற பல எடுத்துக்காட்டுகள் மனதின் குரல் ஒரு வானொலி நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், இந்தியாவின் முழுமையான வளர்ச்சியின் பிரதிபலிப்பாக பொதுமக்கள் பங்கேற்பின் வெளிப்பாடாக மாறியுள்ளதைக் குறிக்கின்றன.
  • மனதின் குரல் மூலம், ஒவ்வொரு நிலையிலும் மக்களுக்கு நலத் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை எடுத்துச் செல்லவும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பிரதமர் ஒரு வழிமுறையை வெற்றிகரமாக நிறுவியுள்ளார். அது மட்டுமின்றி, மேலும் மேலும் பலரை பயனாளிகளாக ஆக்குவதற்கு இந்தத் திட்டங்கள் சாமானிய மக்களுக்கு எவ்வாறு பயனளிக்கின்றன என்பதையும் விளக்கும் வெற்றிக் கதைகளைப் பிரதமர் பகிர்ந்து கொள்கிறார்.
  • கரோனா தொற்றுநோயின்போது அது குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்துவதிலும், தடுப்பூசி போடுவதற்கு அவர்களை ஊக்குவிப்பதிலும் முக்கியப் பங்காற்றியது.
  • இந்தியாவின் தடுப்பூசி திட்டம் - அதன் வெற்றிக்கு, "மனதின் குரல்' மிகப் பெரிய அளவில் உதவியுள்ளது. மனதின் குரல் நம் வாழ்வில் எவ்வாறு முக்கியத்துவம் பெற்று பொருந்துகிறது என்பதற்கு இந்த ஒரு சான்றே போதுமானது.

நன்றி: தினமணி (17 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்