TNPSC Thervupettagam

சதுப்புநிலங்கள் - நிலப்பரப்பைக் காக்கும் அரண்கள்

February 12 , 2023 547 days 281 0
  • நாம் வாழும் இப்புவியின் மொத்த நிலப்பரப்பில் 6 சதவீதம் மட்டுமே சதுப்புநிலத்தால் நிரம்பியுள்ளது.
  • இருப்பினும், இப்புவியில் வாழும் அனைத்து தாவர, விலங்கு இனங்களில் 40 சதவீதம் சதுப்புநிலங்களில் வாழ்கின்றன.
  • இதிலிருந்தே சதுப்புநிலங்களின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துகொள்ளலாம்.
  • இந்த முக்கியத்துவத்தை உலக மக்கள் அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2ம் தேதி உலக சதுப்புநில நாள் எனக் கொண்டாடப்படுகிறது.

பல்லுயிர் சரணாலயம்

  • இயற்கையாக உருவானது, மனிதனால் உருவாக்கப்பட்டது எனச் சதுப்புநிலங்கள் இருவகையாகப் பிரிக்கப்படுகிறது. ஏரிகள், ஆறுகள், நிலத்தடி நீர்நிலைகள், சதுப்புநிலங்கள், ஈரமான புல்வெளிகள், முகத்துவாரங்கள், அலையாத்தி காடுகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை. மீன் வளர்ப்பு குளங்கள், நெல் வயல்கள், நீர்த்தேக்கங்கள், உப்பளங்கள் போன்றவை மனிதனால் உருவாக்கப்பட்டவை.
  • இவற்றில், கடலுக்கும் நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் கடலோர பகுதியில் உருவான சதுப்புநிலங்கள் பல்லுயிர் பெருக்கத்திற்கான சரணாலயமாக விளங்குகின்றன. அரிய வகை பறவைகள், விலங்குகள், தாவரங்கள், பூச்சிகள் ஆகியவற்றுக்கு இவை புகலிடமாகவும் திகழ்கின்றன.

நன்மைகள்

  • நமது உடலைச் சுத்தப்படுத்தும் சிறுநீரகத்தைப் போன்று, இந்தப் பூமிக்கான சிறுநீரகங்களாகச் சதுப்புநிலங்கள் செயல்படுகின்றன. மழைக்காலங்களில் நீரைச் சேமிக்கவும், வெள்ளத்திலிருந்து சுற்றியுள்ள நிலப்பரப்பைப் பாதுகாப்பதிலும் சதுப்புநிலங்கள் ஆற்றும் பணி அளப்பரியது.
  • பெருமழை பொழியும்போது சதுப்புநிலங்கள் பெரும் நீர் உறிஞ்சியைப் போலச் செயல்பட்டு மழைநீரை உள்வாங்கித் தேக்கிவைத்துக்கொள்கின்றன. தட்பவெப்பநிலையை ஒழுங்குபடுத்துதல், கார்பனை உறிஞ்சிக்கொள்ளுதல், நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாத்தல், மண் அரிமானத்தைத் தடுத்தல், வெள்ளப் பெருக்கினைத் தடுத்தல் ஆகிய பல நன்மைகளை இவை வழங்குகின்றன.

காப்பது நம் கடமை

  • 1971இல் ஈரானில் உள்ள ராம்சர் எனும் நகரில் சதுப்புநிலங்களைப் பாதுகாக்கும் "ராம்சர் ஒப்பந்தம்" கையெழுத்தானது. அந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிப்ரவரி 2ம் தேதியைக் குறிக்கும் விதமாகவே அந்த நாளில் 'உலக சதுப்புநில நாள்' கொண்டாடப்பட்டு வருகிறது.
  • தெற்காசியாவிலேயே அதிகமான ராம்சர் தளங்கள் இந்தியாவில்தான் உள்ளன. தமிழ்நாட்டில் 14 சதுப்புநிலப் பகுதிகள்-நீர்நிலைகள் ராம்சர் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. இந்நிலையில், இயற்கையின் அரிய கொடையாகத் திகழும் சதுப்புநிலங்களைக் காப்பதும், சீரழிந்த சதுப்புநில பகுதிகளை மீட்டெடுப்பதும் நம் அனைவரின் கடமையாக இருக்க வேண்டும்.

நன்றி: தி இந்து (12 – 02 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்