TNPSC Thervupettagam
September 15 , 2024 123 days 113 0

சத்தம் போடாதே!

  • ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சியில் பெண்கள் மீதான அடக்குமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. பெண்கள் கல்வி கற்கவும் வேலைக்குச் செல்லவும் தடைவிதிக்கப்பட்ட நிலையில், தாலிபான்கள் வெளியிட்டுள்ள புதிய சட்டம் ஆப்கனின் ஒட்டுமொத்த ஆன்மாவையும் சிதைக்கும் வகையில் உள்ளது.
  • அந்தப் புதிய சட்டத்தில், பெண்களின் குரல் பொதுவெளியில் ஒலிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ‘ஒரு பெண் வீட்டைவிட்டு வெளியே வரும்போது பிறருக்குக் கேட்கும்படி அவர் சத்தமாகப் பேசக் கூடாது’ என்பதே அந்தச் சட்டத்தின் சாராம்சம். பொது இடங்களில் பெண்கள் பாடக் கூடாது, சத்தமாகப் படிக்கக் கூடாது, வீட்டுக்குள் இருந்தாலும் பெண்களின் குரல் சத்தமாகக் கேட்கக் கூடாது என்பதை தாலிபான்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். இந்தச் சட்டத்தைப் பின்பற்ற மறுப்பவர்கள், கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள் என்றும் தாலிபான்கள் தரப்பு எச்சரித்துள்ளது.
  • தாலிபான்களால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு அதிருப்தியில் உள்ள பெண்களுக்கு இப்புதிய சட்டம் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ‘நாங்கள் ஆப்கனின் குரல்... எங்கள் குரலை தாலிபான்களால் நசுக்க முடியாது’ என அவர்கள் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். புதிய சட்டத்தைக் கண்டித்துப் பாடல்களைப் பாடிச் சமூக ஊடகங்களில் பதிவேற்றிவருகின்றனர். இதை #NoToTaliban என்கிற போராட்ட இயக்கமாகவே அந்தப்பெண்கள் முன்னெடுத்துள்ளனர். இவ்வியக்கத்திற்கு ஆப்கனில் உள்ள பெண்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் வசிக்கும் பெண்களும் ஆதரவு அளித்துவருகிறார்கள்.

மௌனம் காக்கும் சர்வதேச அமைப்புகள்

  • 1996 - 2001 காலக்கட்டத்தில் தாலிபான்களின் ஆட்சி உலக அளவில் கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. இந்நிலையில் அமெரிக்க ஆதரவு பெற்ற அரசை வெளியேற்றி, 2021இல் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினர். ஷரியா சட்டத்தின் கீழ் ஆப்கனில் ஆட்சி நடத்தப்படும் என தாலிபான்கள் அறிவித்தனர். இதன் தொடர்ச்சியாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாகப் பெண்கள் மீது கூடுதலான அடக்குமுறைகள் கட்டவிழ்க்கப்பட்டன.
  • தாலிபான்களின் அடக்குமுறைகளுக்கு அடிபணியாதஆயிரக்கணக்கான ஆப்கன் பெண்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றனர். இன்றும் அயல் நாடுகளில் இருந்து தாலிபான்களை எதிர்த்து அப்பெண்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

பெண் விடுதலை வேண்டும்

  • 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் அகதிகள் அணியில் இடம்பெற்ற மனிஜா தலாஷ், பிரேக் டான்ஸிங் போட்டியின்போது, ‘ஆப்கன் பெண்களுக்கு விடுதலை அளியுங்கள்’ என்கிற பதாகையைத் தாங்கி சர்வதேச அளவில் கவனம் பெற்றார். ஆனால், சர்வதேச நாடுகள் தாலிபான்களின் செயல்களைக் கண்டிக்காமல் நட்பு பாராட்டிவருவது ஆப்கன் சமூகச் செயற்பாட்டாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. “ஆப்கனில் பெண்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரிக்க சர்வதேசச் சமூகத்தின் அமைதியும் ஒரு காரணம்” என ஆப்கன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஷுக்ரியா பராக்சாய் விமர்சித்தார்.
  • தாலிபான்களின் கட்டுப்பாடுகள், ஆப்கனின் உள்ளூர் சட்டவிதிகளை மீறுவதுடன் சர்வதேச மனித உரிமைகளை மீறுவதாக ஆப்கன் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மதமும் கலாச்சாரமும் மனித உரிமைகளைப் பறித்துவிட முடியாது என்பதில் ஆப்கன் பெண்கள் உறுதியாக உள்ளனர். பெண்களின் குரல், நீதிக்கான குரல்; அதை யாராலும் தடுக்க முடியாது என தாலிபான்களுக்குப் பதிலளித்துள்ளனர். உரிமைகளுக்காக எழுப்பப்படும் குரல், கூடுதல் சத்தத்துடனே ஒலிக்கும். இந்த முறை ஆப்கனில் இருந்து ஒலிக்க தொடங்கியுள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (15 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்