TNPSC Thervupettagam

சத்தீஸ்கர் பயங்கரம் பழங்குடி மக்கள் மேலும் வதைபடவே வழிவகுக்கும்

April 8 , 2021 1386 days 608 0
  • சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்திலுள்ள தாரெம் பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலால் 20-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது; கடுமையான கண்டனத்துக்குரியது இது.
  • மாவோயிஸ்ட்டுகள் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த துணைநிலை ராணுவப் படையினர் மீது தாக்குதல் நிகழக் கூடும் என்று முன்பே தகவல்கள் கிடைத்திருப்பதாகச் சொல்லப்பட்டாலும்கூட இந்தத் தாக்குதலைத் தவிர்க்க முடியாமல் போயிருக்கிறது.
  • 2010-ல் 76 மத்திய ரிசர்வ் காவல் படையினர் கொல்லப்பட்டதிலிருந்து தற்போதுவரை பஸ்தார் பகுதியில் மட்டும் 175-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
  • 1960-களின் இறுதியில் தோன்றிய நக்ஸலைட்டுகள் இயக்கம் 1970-களில் ஒடுக்கப்பட்டாலும் 2004 காலகட்டத்தில் அது தீவிரமடையலானது. பின்னர் எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் விளைவாக அதன் ஆதிக்கம் குறையலானது.
  • எப்போதுமே, தங்கள் பிரதேசத்தைத் தாண்டி வளர முடியாத ஓர் இயக்கமாகவே அது இருக்கிறது. மாவோயிஸ்ட் பிராந்தியத்தில் மிகவும் பிற்பட்ட பிரதேசங்களில் உள்ள, அரசின் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் மக்கள், இந்த இயக்கத்தால் ஈர்க்கப்படுகிறார்கள்.
  • அதுதான் அந்த இயக்கம் பலம் பெறுவதற்குக் காரணம். முன்னோடி மாவோயிஸ்ட் தலைவர்கள் பலர் இறந்துபோனதற்கும், சிறையில் அடைக்கப்பட்டதற்கும் பிறகு தற்போது அந்த இயக்கம் முன்பைவிட பலவீனமடைந்திருக்கிறது.
  • தெற்கு பஸ்தார் பகுதியில்தான் அது இன்னமும் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் நிலவும் பகுதிகளில் உள்ள மக்களைச் சென்றடைவதில் சத்தீஸ்கர் அரசு பெரும் தோல்வியை அடைந்திருப்பது இந்த விஷயத்தில் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. ஒருவிதத்தில் இது ஒன்றிய அரசின் தோல்வியும்கூட. ஒரு சின்ன பிராந்தியத்தில்கூட மக்களுடன் உரையாடி, அவர்களுடைய தேவைகளுக்குக் குரல் கொடுத்து, திட்டமிட்டு வளர்ச்சியை முன்னெடுத்து, மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாத நிலையிலேயே நம்முடைய அரசு இயந்திரம் இருக்கிறது.
  • அரசியல் தோல்விக்கான விலையை நம்முடைய பாதுகாப்புப் படை வீரர்களும், பழங்குடியின மக்களும் மாறி மாறி தர வேண்டியிருக்கிறது.
  • ‘சவுத் ஏசியா வயலன்ஸ் போர்ட்ட’லின்படி இரு தசாப்தாண்டுகளில் 10,000 பேருக்கு மேல் உயிரிழக்கக் காரணமாக இருந்த இந்தப் பிரச்சினையில், அரசுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி, சமீபத்தில் சமூகச் செயல்பாட்டாளர்கள் அமைதிப் பேரணி நடத்தினர்.
  • அதன் பிறகு, இப்படியொரு தாக்குதல் நடந்திருப்பது மிக துரதிர்ஷ்டவசமானது. மாவோயிஸ்ட்டுகளின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அதற்கு வன்முறை தீர்வல்ல என்பதை அவர்கள் உணராதவரை எந்த மக்களின் பெயரால் அவர்கள் போராடுகிறார்களோ அவர்கள் மேலும் வதைபடவும், பிராந்தியத்தின் ஒடுக்குமுறைச் சூழல் மேலும் அதிகரிக்கவுமே இத்தகு சம்பவங்கள் வழிவகுக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (08 - 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்