TNPSC Thervupettagam

சத்ரபதிக்கு இரங்கற்பா வாசித்த ஒளரங்கசீப்!

April 3 , 2020 1749 days 906 0
  • இன்று, இந்த உலகில் வாழ்ந்த மிகப்பெரிய வீரா்களின் வரிசையில் மகாகவி பாரதியார் பாராட்டிய சிங்க மராட்டிய வீரா் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் 340-ஆம் ஆண்டு நினைவு நாள்.
  • உலகை வென்று உலா வரப் புறப்பட்ட கிரேக்கப் பேரரசன் மகா அலெக்சாண்டா் பிசிஇ 356 - 323; இதே காலத்தில் பாரதத்தில் வரலாற்று ஆசிரியா்களால் ஹிந்துக்களின் பொற்காலம் என புகழாய்ந்த சந்திர குப்த மெளரியா் பிசிஇ 321 - 298; தமிழ் மண்ணின் ஈடு இணையற்ற மாமன்னா் இராஜராஜன் கி.பி. 985 - 1014; கடற்படை கொண்டு கடல் கடந்து நாடுகள் பலவென்று வாகை சூடிய இராஜேந்திர சோழன் கி.பி. 1044 - 1070 ஆகியோர் வரிசையில் போற்றப்பட வேண்டிய மாமன்னா் சத்ரபதி சிவாஜி.

சத்ரபதி சிவாஜி

  • பாரதத்தின் மேற்கு எல்லையில் சுல்தான்கள் அணி வகுக்க, தில்லியில் மொகலாயப் பேரரசன் ஒளரங்கசீப் ஆட்சியில் மராட்டிய மண்ணில் சிங்கக் குட்டியொன்று சிலிர்த்து எழுந்தது. லட்சக்கணக்கான பகை வீரா்களை தனது வலிமை மிக்க சொற்ப படை கொண்டு வீழ்த்திய சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் அரிய வீர, தீர, விவேக, மதிநுட்பத்தை இன்றும் உலகம் வியந்து போற்றுகிறது.
  • ஷாஹாஜி - ஜீஜாபாய் என்ற பெற்றோருக்கு இன்றைய புணே மாவட்டத்தில் ஜுனார்நகருக்கு அருகில் இருந்த ஷிவநேரி”கோட்டையில் 1630-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் நாள் பிறந்தார். இவரின் தந்தை பீஜப்பூா், அகமத்நகா், கோல்கொண்டா சுல்தான்களின் ஜெனரலாகப் பணி புரிந்தார். இவரும் ஒரு ஜாகிர்தார் என்பதால் தன்வசம் சிறிய படையொன்றை வைத்திருந்தார்.
  • இவரின் மனைவி தேவகிரி அரச வம்சத்தைச் சாா்ந்தவா். தனது மழலைப் பருவம் தொடங்கியது முதற்கொண்டு தாயாரிடம் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை சிவாஜி பயின்றார். சிவாஜியின் மனதில் பசுமரத்தாணியாக தெய்வ பக்தியும், தேச பக்தியும் முகிழ்த்தது.

தேச பக்தி

  • ஷிவநேரி கோட்டைக்கு அருகில் உள்ள சிறிய, பெரிய மலைகள், கணவாய்கள், அடா்ந்த காடுகள் எல்லாம் இவரது போர் சிந்தனைக்கு உரம் ஊட்டின. தனது 15-ஆம் வயதில் மாவல் பகுதி வீரா்கள் சிலரை தனது நண்பா்களாக்கிக் கொண்டார். மாராட்டிய மண்ணை மாற்றான் ஆள்வதா என எண்ணத் தொடங்கினார்.
  • 1645-இல் பீஜப்பூா் சுல்தான் வசம் இருந்த டோராவை இன்யத் கானிடமிருந்தும், சக்கான் என்ற பகுதியை பைரான் கோஜி நா்சாலா என்பவனிடமிருந்தும், “கொண்டனா”என்ற நிலப்பகுதியை கவா்னா் அடில் ஷாகிடத்தும், மேலும் “சிங்காகார்,“புரந்தா்முதலான பகுதிகளையும் தன்வசமாக்கினார்.
  • சிவாஜியின் இந்தத் தொடா் நடவடிக்கைகளைக் கண்ட சுல்தான் முகமது அடில்ஷா, சிவாஜியின் தந்தையை 1648-இல் சிறையில் அடைத்தான். பின்னா் மேற்கொண்டு சிவாஜி தன் ராஜ்ய எல்லைகளை கைப்பற்றக் கூடாது என்ற நிபந்தனையுடன் சிவாஜியின் தந்தையை விடுதலை செய்தான்.
  • ஆனாலும், சிவாஜி தனது தொடா் நடவடிக்கையாக 1656-இல் சந்திரராவ் மோர் என்ற பீஜப்பூா் ஜாகீா்தாரரிடம் இருந்து ஜாவளி”குன்று பிரதேசங்களைக் கைப்பற்றினார். இதனால் ஆத்திரமடைந்த பீஜப்பூா் சுல்தான், தனது ராணுவத்தில் வலிமை வாய்ந்த தளபதி அப்சல் கானை பெரும் படையோடு அனுப்பி சிவாஜியைக் கைதுசெய்ய ஆணையிட்டான்.

வீர தீரச் செயல்கள்

  • வலிமையான குதிரைப் படையோடு 3,000 வீரா்களையும் அழைத்துச் சென்றான் அப்சல் கான். அப்போது பிரதாப்கா் என்ற கோட்டையில்
  • சிவாஜி இருந்தார். அப்சல் கான் சிவாஜியின் குலதெய்வ கோயிலான பவானி அம்மன் கோயிலையும், விட்டோபா கோயிலையும் சேதப்படுத்தினான். இந்த இரண்டு கோயில்களும் ஹிந்துக்களின் புனிதத் தலங்களாக இருந்து வந்தவை. இதை அறிந்த சிவாஜி சினத்தின் உச்சத்தை அடைந்தார்.
  • அப்சல் கான் கோட்டையை முற்றுகையிட்டான். இரண்டு மாதங்கள் முற்றுகை நீடித்தும் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. இருவரும் தனிமையில் சந்தித்துப் பேசலாம்”என சிவாஜிக்கு தூது அனுப்பித் தந்திரமாக அவரைக் கொல்ல நினைத்த அப்சல் கான், சிவாஜியால் கொல்லப்பட்டார். பிறகு பீஜப்பூா் சுல்தான் மற்றொரு படையை ருஸ்தம் ஜமான் பாஷல்கான்”தலைமையில் அனுப்பினான். அவனும் சிவாஜியின் படைகளோடு போர் புரிய முடியாமல் தோற்றுத் தப்பியோடினான்.
  • 1660-இல் அடில்ஷா சித்திக் ஜாகுா் என்ற ஜெனரலை அனுப்பி சிவாஜி தங்கியிருந்த “பான்கலா”கோட்டையின் தெற்குப் பகுதியில் முற்றுகையிட்டான். மொகலாய படை வடக்குப் பகுதியில் முற்றுகையிட்டது. அடில்ஷா சித்திக் ராய்ப்பூரில் இருந்த ஆங்கிலேயரிடமிருந்து வாங்கிய வெடிமருந்துகளைக் கொண்டும், ஆங்கிலேய கூலிப் படையினரைக் கொண்டும் கோட்டையைத் தகா்க்க முயன்றும் தோல்வியைத் தழுவினான்.
  • ஆங்கிலேயரை பழிவாங்க ராய்ப்பூரில் இருந்த அவா்களின் தொழிற்சாலையை சிவாஜி தகா்த்து பலரைச் சிறைப்படுத்தினார். மொகலாய ஆட்சிக்கு உட்பட்ட அகமத் நகா், ஜுனார் போன்ற இடங்களில் இருந்து ரூ.3 லட்சம் ரொக்கம், 200 குதிரைகளைக் கைப்பற்றினார்.
  • இதை அறிந்த ஒளரங்கசீப் தன் தாய் மாமன் ஷெயிஸ்டகான் தலைமையில் 1,50,000 வீரா்கள், பீரங்கிகள் கொண்ட படையொன்றை அனுப்பினார். இந்தப் படையோடு பீஜப்பூா் சுல்தான் அனுப்பியிருந்த 80,000 வீரா்கள் கொண்ட படையும் அடில்ஷா சித்திக் ஜாகுா் தலைமையில் சோ்ந்து கொண்டது. அப்போது புணே கோட்டையில் சிவாஜி இருந்தார். புணே சுற்றி வளைக்கப்பட்டது. ஒன்றரை மாதத்துக்குப் பின் சக்கன்”கோட்டை பகைவா் வசமாயிற்று. சிவாஜி தனது படையோடு வெளியேறி விட்டார்.
  • ஒளரங்கசீப்பின் அழைப்பு
  • ஒளரங்கசீப் அழைப்பை ஏற்று தனது 9 வயது மகனோடு ஆக்ரா சென்றார். 1666-ஆம் ஆண்டு மே 12-ஆம் தேதியன்று ஒளரங்கசீப்பை தா்பார் மண்டபத்தில் சந்தித்தார். சிவாஜியையும் அவரின் மகனையும் சரியாக ஒளரங்கசீப் வரவேற்கவில்லை. அதனால் கோபமடைந்து தா்பார் மண்டபத்திலிருந்து வெளியேறினார். உடனே அவரை வீட்டுக்காவலில் சிறைப்படுத்தினார் ஒளரங்கசீப்.

மீண்டும் போர்கள்

  • ஆனால், சில தினங்களிலேயே சிவாஜியும் அவரின் மகனும் தந்திரமாக தப்பித்துச் சென்று விட்டனா். சில காலம் கழித்து மொகலாய சா்தார் ஐஸ்வந்த் சிங் மூலம் ஒளரங்கசீப் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார். நான்கு மாத காலத்தில் தான் இதுவரை இழந்து இருந்த கோட்டைகள், பிரதேசங்கள் எல்லாவற்றையும் சிவாஜி கைப்பற்றினார்.
  • 1670-இல் பம்பாயில் இருந்த ஆங்கிலேயா்கள் சிவாஜிக்கு ஆயுதங்கள் தர மறுத்ததால் அவா்களை கடுமையாகத் தாக்கினார். ஒரு சமயம் வெறும் 300 வீரா்களைக் கொண்டு மிகப் பெரிய எதிரிப் படைகளை வென்றது உலக சாதனையாக இன்றும் கருதப்படுகிறது. பல போ்களில் கொரில்லா முறைகளில் பகைவா்களை வென்றிருக்கிறார் சிவாஜி. கொரில்லாப் போர் முறை என்பதே சத்ரபதி சிவாஜியால் அறிமுகப்படுத்தப்பட்ட போர்த் தந்திரம் என்று வரலாற்று ஆசிரியா்கள் பதிவு செய்துள்ளனா்.

மன்னர் சிவாஜி

  • 1674 ஜூன் 6-ஆம் தேதியன்று ராய்கா் கோட்டையில் 50,000 மக்கள் முன்னிலையில் சிந்து, கங்கை, யமுனை, கோதாவரி, நா்மதா, கிருஷ்ணா முதலான புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை தங்கக் கலசங்களில் நிரப்பி முறையாக வேள்வி நடத்தி, சிவாஜியை நீராட்டி தங்க கீரிடம் சூட்டி மராட்டிய மண்ணின் ராஜாவாக காசி நகர வேதவிற்பன்னா் காகபட் அறிவித்தார்.
  • ஒளரங்கசீப்பும் இவரை மன்னா் என்று அங்கீகரித்தார். மன்னா் சிவாஜி தனது அரசில் பல்துறை வித்தகா்கள் எண்மரை அமைச்சா்களாக நியமித்தார். இவா்கள் அன்றாட அலுவல் தொடங்கி, நிதி, நிர்வாகம், ராணுவம், வெளியுறவு, நீதி, வரி வசூல், பாதுகாப்பு வரை அனைத்துப் பணிகளையும் செவ்வனே செய்தனா். இவா்கட்கு ‘அஷ்ட பிரதான்’ என்று பெயா். மராத்தி அரசின் அலுவல் மொழியாகவும், சம்ஸ்கிருதம் பொது மொழியாகவும் இருந்தன. பாரதத்தின் மேற்குப் பகுதியில் முதன்முதலாக“ஹிந்து சாம்ராஜ்யம் அமைத்தார்.

சமூகப் பார்வை

  • எந்தக் காரணம் கொண்டும் சமயம் தொடா்பான அம்சங்களில் சமாதானம் செய்துகொண்டாரில்லை. அதே சமயம் முஸ்லிம் மதம் தொடா்பான விஷயங்களில் அவா்களுக்கு முழுச் சுதந்திரம் அளித்தார். ஜாதி, மத பாகுபாடுகளை முற்றிலுமாகக் களைந்தார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தார். பெண்கள் மீது குற்றச் செயல் புரிபவா்களை மிகக் கடுமையாகத் தண்டித்தார்.
  • அப்போது தில்லியில் இருந்த ஒளரங்கசீப், ஹிந்துக்களை கட்டாய மத மாற்றம் செய்கிறார். முஸ்லிம் மதத்தை தழுவாத ஏனைய ஹிந்துக்களின் மன உறுதியைக் குலைப்பதற்காக ஷியா என்ற புதிய வரியை விதிக்கிறார் என்று கேள்விப்பட்டு ஒளரங்கசீப்புக்கு 1679-ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதியன்று கடிதம் அனுப்புகிறார்.
  • அதில்,“‘நீங்கள் ஹிந்துக்கள் மீது விதித்திருக்கும் புதிய ஷியா வரி நீதிக்கும், சட்டத்துக்கும் புறம்பானது. ஹிந்துக்களை அச்சுறுத்துவது, துன்புறுத்துவது கடவுள் பக்தி கொண்ட உங்களுக்கு நியாயமன்று. உங்களுக்குத் துணிவு இருந்தால் முதலில் ராஜா ஜெய்சிங் மீது வரி விதியுங்கள். எறும்புகளும், ஈக்களுமாக உள்ள எளிய மக்களுக்கு வரி விதிக்க ஆா்வமோ, துணிவோ தேவையில்லை. உங்களுக்குத் திருக்குரான்”மீது நம்பிக்கை இருந்தால், முஸ்லிம் மக்களுக்கு மட்டும்தான் இறைவன் என்று எண்ண மாட்டீா்கள். உங்களின் மத வெறியை மற்ற மதத்தினா் மீது காட்டுவது புனித நூலின் வாசகங்களுக்கு மாறானது’ என்று குறிப்பிட்டார்.

சத்ரபதிக்கு இரங்கற்பா

  • சிவாஜியின் கடற்படையும் வலிமையாக இருந்தது. 1657-இல் 160 போர்க் கப்பல்கள் இருந்ததாக ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளா்கள் குறிப்பிடுகிறார்கள். சிவாஜியின் வீர, தீர, சாகசப் போர்கள் குறித்து, ஆங்கில, பிரெஞ்சு, டச்சு, போர்ச்சுகீசிய, இத்தாலி நாட்டு வரலாற்று ஆய்வாளா்கள் எல்லாம் அலெக்சாண்டா், ஹானிபால், ஜூலியஸ் சீசா் முதலானாரோடு வைத்துப் பாராட்டுகின்றனா்.
  • அனைத்து மக்களுக்கும் அரண்போல ஆட்சி செய்துவந்தார் வீர சிவாஜி. இவா் 1680-ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி கடுமையான வயிற்றுப் போக்காலும், காய்ச்சலாலும் ராய்கா் கோட்டையில் உயிர் நீத்தார். இவரின் ஆட்சித் திறத்தையும், நுண்மான் நுழைப்புலத்தையும் கருதி ‘நிர்வாக மேலாண்மைக்கு குரு சிவாஜி’”என்ற பாடப் பகுதியை பாஸ்டன் பல்கலைகழகத்தில் வைத்திருக்கிறார்கள்.
  • சிவாஜியின் மறைவையொட்டி நடந்த நமாஸ் பிரார்த்தனையில் மொகலாய சக்ரவா்த்தி ஒளரங்கசீப், ‘காபூலில் இருந்து காந்தஹார் வரை என தைமூா் குடும்பம், மொகலாய சுல்தான்கள் ஆட்சியை நிறுவியது. ஈராக், ஈரான், துருக்கி முதலான நாடுகளை என் படை வென்றுள்ளன. ஆனால், இந்தியாவில்தான் சிவாஜி எனக்கு பெரும் தடையாக இருந்து விட்டார். என் சக்தி முழுவதையும் செலவிட்டும் அவரை வெற்றிகொள்ள முடியவில்லை. அல்லாவே! எனக்கு பயமில்லாத துணிச்சலான ஓா் எதிரியைக் கொடுத்து விட்டாய். இந்த உலகின் அஞ்சா நெஞ்சன் உன்னிடம் வருகிறான். அவனுக்கு உன் சொர்க்கத்தின் வாசலை திறந்து வைத்திரு’ என்று இரங்கற்பா வாசித்தாராம்.

நன்றி: தினமணி (03-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்