- 2022 நவம்பர் 8-ம் நாள் முழு சந்திர கிரகணம். சந்திர கிரணத்தின்போது கோயில் நடையை சாத்த வேண்டும், கர்ப்பிணிகள் வெளியே செல்லக்கூடாது, சாப்பிடக்கூடாது என்றெல்லாம் கூறப்படுகிறது. இதெல்லாம் சரிதானா? அறிவியல் கூறும் உண்மை என்ன? பார்க்கலாம்.
- ஒவ்வொரு ஆண்டும் பல கிரகணங்கள் வருவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். கிரகணத்தின்போது என்ன நிகழ்கிறது என்பது மக்களுக்குத் தெரிகிறதோ, இல்லையோ, கிரகணத்தின்போது நாம் செய்ய வேண்டியவற்றை இந்த சோதிடர்களும் காணொளி ஊடகங்களும் பலமாக கூவிக்கூவி பல விஷயங்களை நம் மூளைக்குள் செலுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். பல மேட்டுக்குடி மக்கள் கட்டாய விரதம் இருக்கின்றனர். கொஞ்சம் நடுத்தர வர்க்கமும், கொஞ்சம் படித்த மக்களும், ஜோதிடர் சொலவதைக் கேட்டு, கிரகணத்தின்போது கருவுற்ற பெண்களை, வெளியேவிட மாட்டார்கள்; யாரும் சாப்பிட மாட்டார்கள், கிரகணத்தின்போது உணவு பாஷாணம்/விஷம் ஆகிவிடுமாம். அப்போது ஏதோ ஒரு கதிர் வந்து உணவை விஷம் ஆக்கி விடுகிறதாம்.
- முக்கியமாக, அனைத்துக் கோயில்களின் நடை சாத்தப்படுகிறது. கிராமத்தில் இருக்கும் சின்ன கோயில்கள் இந்த கணக்கில் வருவதில்லை. கிரகணம் முடிந்த பின், கோயில்களை கழுவி விடுகின்றனர். மக்கள் தலை முழுகிக் குளித்த பின்னரே சாப்பிடுகின்றனர். இந்த விஷயங்கள் எல்லாம் வெயிலில் வருந்தி பாடுபட்டு, உழைத்து உண்ணும், அடித்தட்டு மக்களுக்கு இல்லை. அவர்கள் அதைப்பற்றிக் கவலைபடுவதும் இல்லை. அவர்களுக்கு இவை எதுவும் தெரியாது. அது ஒரு பக்கம் இருக்க, உலகில் வாழும் அனைவரும் இப்படித்தான் செய்கின்றனரா? அப்படித்தான் பழக்க வழக்கங்களை நாமும் கடைபிடிக்க வேண்டுமா?
2022ம் ஆண்டில் கிரகணங்கள்
- 2022, நவம்பர் 8 நிகழ உள்ள கிரகணம் முழு சந்திர கிரகணம். இது இந்த ஆண்டின் கடைசி கிரகணம். 2022ம் ஆண்டில் மொத்தம் 4 கிரகணங்கள். இதில் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம். பொதுவாக ஓர் ஆண்டில் 2-7 கிரகணங்கள் நிகழலாம்.
எத்தனை கிரகணம்..எத்தனை முழு கிரகணங்கள்!
- பொதுவாக, ஒரு வருடத்தில் 2-7 கிரகணங்கள் ஏற்படலாம். இதில் 2-5 சூரிய கிரகணமும், அதிகபட்சமாக 3 சந்திர கிரகணமும் ஏற்படலாம். சில சமயம், ஒரு சந்திர கிரகணம் கூட ஏற்படாமலும் போகலாம். ஆனால், ஒரு வருடத்தில் அதிகபட்சம் 7 கிரகணங்கள்தான் வரும். இதில் 4 சூரிய கிரகணமாகவும், 3 சந்திர கிரகணமாகவும் இருக்கலாம். இந்த ஆண்டு 2022 ல் பூமிக்கோள் 4 கிரகணங்களை சந்திக்கிறது. இதில் 2 சூரிய கிரகணம்; 2 சந்திர கிரகணம், இரண்டு கிரகணங்கள் வட அமெரிக்காவின் சில பகுதிகளில் இருந்து தெரியும்.
- முழு சூரிய கிரகணத்தின்போது அதன் மிக நீண்ட நேரம் என்பது 7.5 நிமிடங்கள் மட்டுமே. எப்போதும் வட, தென் துருவங்களில், பகுதி சூரிய கிரகணம் மட்டுமே. தெரியும். நிலநடுக்கோட்டு அருகே கிரகணம் நிகழும்போதுதான் முழு சூரிய கிரகணம் அல்லது முழு சந்திர கிரகணம் உண்டாகிறது. முழு சந்திரகிரகணத்தின் நீண்ட நேரம் என்பது 106 நிமிடம் 1.42 நொடிகளாக இருந்துள்ளது. மேலும் சந்திர கிரகணம் 6 மணி நேரம் கூட நீடிக்கும்.
2022ல் நிகழ்ந்த கிரகணங்கள்
- 1.2022, ஏப்ரல் 30ம் நாள் நிகழ்ந்தது பகுதி சூரிய கிரகணம். வட அமெரிக்காவில் தெரியவில்லை. பகுதி சூரிய கிரகணத்தை தென்கிழக்கு பசிபிக் பெருங்கடல், அண்டார்டிக் தீபகற்பம் மற்றும் தெற்கு தென் அமெரிக்காவிலுள்ள மக்கள் பார்த்தனர்.
- 2. 2022, மே 15ம் நாள் முழு சந்திர கிரகணம். இந்த கிரகணம் வடமேற்கு பகுதிகள் தவிர வட அமெரிக்காவில் தெரிந்தது. இந்தியாவில் தெரியவில்லை. . (6:31 P.M. PDT) மற்றும் 2:52 A.M. மே 16 அன்று EDT (மே 15 அன்று 11:52 P.M. PDT).
- 3. தீபாவளிக்கு அடுத்த நாள், 2022, அக்டோபர் 25 அன்று பகுதி சூரிய பகுதி கிரகணம். இது வட அமெரிக்காவில் தெரியவில்லை. பகுதி சூரிய கிரகணம் தெரிந்த இடங்கள்: கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஐரோப்பா, வடகிழக்கு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, மேற்கு ஆசியா, இந்தியா மற்றும் மேற்கு சீனா. தமிழகத்தில் மாலை சூரியன் மறையும் தருவாயில் மாலை 5.40க்கு மேல் தெரிந்தது.
- 4. இப்போது, 2022, நவம்பர் 8 இன்று(செவ்வாய்க்கிழமை) முழு சந்திர கிரகணம். இதனை தமிழக மக்கள் முழு கிரகணமாக பார்க்க முடியாது. ஏனெனில் சந்திரன் உதிக்கும்போதே கிரகணத்துடன்தான் உதிக்கும். வடகிழக்கு இந்தியாவில் உள்ளவர்கள் முழு சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியும் . இதனை இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷியாவின் சில பகுதிகளைத் தவிர, ஆசியா, வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றிற்கு அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் காணலாம்.
- இந்தியாவை பொருத்தவரை தில்லி, கொல்கத்தா, சிலிகுரி, பாட்னா, ராஞ்சி, கௌகாத்தி உள்ளிட்ட கிழக்குப் பகுதிகளில் மட்டுமே முழு சந்திர கிரகணத்தைக் காணலாம். தமிழக மக்கள் பகுதி சந்திர கிரகணத்தை ஒரு கீற்றுப் போல, வெட்டிப் போட்ட நகத்துண்டு போலவே பார்க்க முடியும்.
- இன்று (நவம்பர் 8) முழு சந்திர கிரகணம் நிகழும் என்றும், இதுபோன்ற நிகழ்வு அடுத்த 3 ஆண்டுகளுக்குப்பிறகுதான் நடக்கும் என நாசா குறிப்பிட்டுள்ளது. அடுத்த முழு சந்திர கிரகணம் மார்ச் 14, 2025 அன்று நிகழும் என நாசா தெரிவித்துள்ளது. இருப்பினும் அக்டோபர் 2023 இல் நிகழும் சந்திர கிரகணத்தின் சிறிய பகுதி. இந்தியாவில் காண முடியும்
எது கிரகணம்? கிரகணம் என்றால் என்ன?
- இது ஒரு வானவியல் நிகழ்வு. வானில் பல பொருட்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவை நகர்ந்து செல்லும்போது, சில சமயம் ஒன்றின் பாதையில் மற்றொன்று குறுக்கிட நேரிடலாம். அப்போது எந்த வான்பொருள் குறுக்கீட்டால் மறைடுகிறதோ அது நம் பார்வையிலிருந்து மறைக்கப்படும். இந்நிகழ்வு, சூரிய குடும்பத்துக்குள் நிகழும்போது, மறைக்கப்படும் பொருளின் பெயரை வைத்து, அதன் கிரகணம் என்று சொல்லப்படுகிறது. கிரகணம் என்பது சமஸ்கிருத சொல். இதனை நாம் சூரிய மறைப்பு, சந்திர/நிலா மறைப்பு என்றும் சொல்லலாம். சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம், முழு நிலா நாளிலும் நிகழும்.
பௌர்ணமி நிலவில்.. இருள் விழும் இரவில்..!
- 2022 இன் கடைசி கிரகணம் இன்று நடக்க இருக்கிறது. இது சந்திர கிரகணம். சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் சமயத்தில் கிரகணம் நிகழ்கிறது. முழு சந்திர கிரகணம் கொல்கத்தா மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் பார்க்க முடியும் எனவும் பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவின் பிற பகுதிகளில் தெரியும் எனவும் வானியற்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கிரகணம் எப்போது ?
- சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும், சந்திரகிரகணம் முழுநிலா நாளிலும் ஏற்படுகிறது. பூமி, தன் அச்சில் 23 1/2 பாகை சாய்ந்துள்ளது. சூரியன் தன் அச்சில் 7 பாகை சாய்வாக சுற்றுகிறது. சந்திரனும் கூட, 5 பாகை சரிவாக பூமியைச் சுற்றுகிறது. இந்த காலகட்டத்தில், பூமி, சூரியன் மற்றும் சந்திரன், இவை மூன்றும் எப்போதாவதுதான் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அப்படி அவை மூன்றும் நேர்கோட்டில் வரும்போது, ஏதாவது ஒன்று நம் பார்வையிலிருந்து மறைக்கப்படுகிறது. இதுதான் கிரகணம் என்று சொல்லப் படுகிறது.
- எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை. ஏனெனில் சந்திரன் தன் அச்சில் 5 டிகிரி சாய்வாக சுற்றுவதால், இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் சாத்தியக் கூறு அனைத்து அமாவாசை/முழுநிலா நாளிலும் ஏற்படுவது கிடையாது. எனவே, அனைத்து முழு நிலா நாளிலும் கிரகணம் ஏற்படுவதில்லை.அது போல அனைத்து அமாவாசை தினத்திலும், சூரிய கிரகணமும் உருவாவதில்லை.
சிவப்பு நிலா வானில் தோன்றும்?
- நிலா பூமியின் நிழலுக்குள் சந்திரன் மறையும்போது முழுமையாக கருப்பாகஇருக்காது. நிலாவுக்கு எப்போதும் தன் ஒளி கிடையாது. அது சூரியனிடமிருந்து பெற்ற ஒளியை இரவில், ஆசையாக புவியின் மேல் பாய்ச்சும். சந்திர கிரகணத்தின்போது, பூமி நிலவை மறைப்பதால், அப்போது சூரியனின் கதிர்கள், பூமியின் மேலுள்ள வளிமண்டலத்தின் மூலம், மறைமுகமாக நிலாவை தெரியவைக்கும். அப்போது நிலா, சிவப்பாக தெரியும். இதுதான் சிவப்பு நிலாவின் ரகசியம். சூரியன் உதிக்கும்போதும் மறையும்போதும், வளிமண்டலத்தில் கதிர்களை Rayleigh scattering விளைவால் சிதறுவதால்,ஏற்படும் சிவப்பு நிறம்தான். இப்போது முழு சந்திர கிரகணத்தின் போதும் உண்டாகிறது.
செம்பின் நிறத்தில் முழு சந்திர கிரகணம் .!
- முழு சூரிய கிரகணத்தின்போது, சூரியன் சந்திரனின் நிழலால் மறைக்கப்பட்டு கருப்பாகத் தெரிவது போல, முழு சந்திர கிரகணத்தின்போது, சந்திரன் கருப்பாக/இருட்டாகத் தெரிவது இல்லை. சந்திரன் முழு கிரகணத்தின் போது காணாமல் ஓடிப் போவதும் இல்லை.சந்திரன் பூமியின் நிழல் வழியே நகரும்போது, பூமியின் வளிமண்டலம் மூலமாக, சந்திர மறைவுப் பிரதேசங்களில், சூரியனின் ஒளிக் கதிர்கள் பிரதிபலிக்கின்றன.
- இப்போது பூமியில் மட்டும் வளிமண்டலம் இல்லாது போயிருப்பின், சந்திரன் கன்னங்கரேல் என கரித்துண்டம்/கருப்பு நிலவாகக் காட்சி அளித்திருக்கும். பூமியின் வளிமண்டலம்தான் அதில்பட்டு சந்திரனில் சிதறும் அகச் சிவப்பு ஒளித் துகள்கள்தான். முழு சந்திர கிரகணத்தின்போது, அதனை சிவப்பான செம்பு நிலாவாகக்(copper moon) காட்டுகிறது. இதுவேதான், சூரியன் உதிக்கும்/ மறையும்போதும், அதன் சிவப்பு வண்ணத் தூரிகை கொண்டு வான் மேகத்தில் சிவப்பு-ஆரஞ்சு வண்ண ஓவியம் வரைவதன் காரணியும்..!
முழு சந்திர கிரகணம் நேரம்
- இப்போது நவம்பர் 8-ம் நாள் நிகழவுள்ள, சந்திர கிரகணம் உலகின் பல பகுதிகளில் இந்திய நேரப்படி சந்திர கிரகணம் பிற்பகல் 2.38 மணிக்கு தொடங்க உள்ளது. முழு சந்திர கிரகணம் 3.45 மணிக்கு துவங்குகிறது. கிரகண மத்திமம்/அதிக பட்சம்/கிரகண உச்சம் மாலை 4.28 மணிக்கு நிகழ்கிறது. முழு கிரகணம் மாலை 5 மணி 11 நிமிடத்திற்கு முடிகிறது. (முழு கிரகண நேரம் 85 நிமிடங்கள் ) சந்திர கிரகணம் மாலை 6 மணி 19 நிமிடத்திற்கு முடிகிறது.
எந்த இடத்தில் துல்லியமாகத் தெரியும்?
- இன்று நிகழவுள்ள சந்திர கிரகணம் ஆனது மதியம் 2:48 மணிக்கு தொடங்கி மாலை 6:19 மணிக்கு நிறைவடைகிறது. இந்த கிரகணம் ஆரம்பிக்கும் நேரத்தில் இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் தெரியும் என கூறப்படுகிறது. கொல்கத்தா உட்பட கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் உள்ளவர்கள் சந்திர கிரகணத்தின் முழு நிகழ்வையும் அனுபவிக்க முடியும் என கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் சரியாக மாலை 4:52 மணி முதல் 4:54 மணி வரை முழுமையாகத் தெரியும் என கூறப்படுகிறது.
சந்திர கிரகணம் எத்தனை மணிக்கு தெரியும்?
- முழு சந்திரகிரகணமாக இருந்தாலும் பகல் நேரத்தில் கிரகணம் நிகழ்வதால் இந்தியாவில் தெரியாது. மாலையில் சந்திரன் உதயமாகி கிரகணம் முடியும் வரை பார்க்கலாம். சென்னையில் மாலை 5 மணி 38 நிமிடத்தில் பகுதி சந்திர கிரகணத்தைப் பார்க்கலாம். சேலம் நகரில் மாலை 5 மணி 49 நிமிடத்திலும் கோவையில் மாலை 5 மணி 54 நிமிடத்திலும் மதுரையில் 5 மணி 57 நிமிடத்திலும் மும்பையில் மாலை 6 மணி 1 நிமிடத்திற்கும் பகுதி சந்திர கிரகணம் தெரியும் எனவும் கூறப்படுகிறது.
வரலாறு பேசும் ... கிரகணம்..!
- சரித்திரம் படைத்த முழு சந்திர கிரகண நிகழ்வுகளும் உண்டு. சந்திர கிரகணம் அரிதானதுதான் என்றாலும், முழு சூரிய கிரகணம் போல அவ்வளவு அரிதானது கிடையாது. ஏனெனில் முழு சூரிய கிரகணம், உலகின் சில பகுதிகளுக்கு மட்டுமே தெரியும். ஆனால் முழு சந்திர கிரகணம், உலகில் இரவில் இருள் கவிந்த பாதி புவிப் பகுதிக்கு தெரியும். சரித்திரத்தில் பதிவுடன் எழுத்துக்களில் பதித்த முதல் முழு சந்திர கிரகணம் சீனாவில் சோயூ வம்சத்தின் (Zhou Dynasty.) சோயு-சூ புத்தகத்தில், கி.மு 1136 ம் ஆண்டு, ஜனவரி மாதம் 29 ம் நாள் நிகழ்ந்ததாய் குறிப்பிடப்பட்டுள்ளது.
போரை நிறுத்திய கிரகணம்!
- பழங்காலத்தில், கிரகணம் என்ன என அறியப்படாதபோது, அவை ஏதோ இயற்கைக்குப் புறம்பான கெட்ட நிகழ்வு என்று கருதினர். கிரேக்கத்தில் சூனியக்காரர்கள், "நாங்கள் எங்களது அற்புத சக்தியால் வானிலுள்ள சந்திரனின் ஒளியை உறிஞ்சி விடுவோம்" என சவால் விட்டனர். முழு கிரகணத்தின் போது "சந்திர ஒளி ஓடிப்போயிற்று". மக்களும் அதனைப் பார்த்து நம்பினர்.
- இது கி.மு. 425 , அக்டோபர் 9 ம் நாள் நிகழ்ந்தது. அதற்கு முன்னால் கி.மு.413, ஆகஸ்ட் 28ம் நாள் முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. இந்த கிரகணம், சைரகுயுசின் இரண்டாம் போரின்போது வந்தது. அப்போது ஏதென்ஸ்காரர்கள் வீடு நோக்கி செல்ல திட்டமிட்டனர். அவர்கள் துசிடிடெஸ்(Thucydides) என்ற மதகுருவிடம் என்ன செய்வது என்று கேட்டனர். அவர் இன்னும் 27 தினங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள் என்றார். மதகுருவின் சொல்படி எதெனியர்கள் நடந்தனர். ஆனால், சைராகுசன்ஸ்(Syracusans ) இதனை சாதகமாக எடுத்துக் கொண்டு, திட்டமிட்டு ஏதேனியர்களின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வெற்றி கொண்டனர். ஏதேனியர்கள் போரில் தோல்வியுற்றனர். யூரிமேடான் மாய்ந்தார். சந்திர கிரகணத்தின் மேலுள்ள மூட நம்பிக்கையால் ஓர் போர் ஆழ்ந்த அழிவைச் சந்தித்தது.
மக்களை மிரட்டிய கொலம்பஸ்..!
- கிறிஸ்டோபர் கொலம்பஸ் உலகை வலம் வந்தவர் என்ற தகவல் நமக்கெல்லாம் தெரியும். ஆனால், அவர் பெரிய கில்லாடி! அவர், 1503, ஜூன் 30 , ஜமைக்கா போய் இறங்கி, அங்கேயே கொஞ்ச நாட்கள் தங்கினார். அங்கிருந்த பூர்வகுடி மக்கள், வந்தவர்களை வரவேற்று உணவும் அளித்தனர். ஆனால் கொலம்பஸின் மாலுமிகள் அம்மக்களிடம் ஏமாற்றி திருடினர். இதனால் கோபம் கொண்ட மக்கள் அவர்களுக்கு உணவு தர மறுத்து விட்டனர். இந்த சமயம் பார்த்து, அப்போது முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. கொலம்பஸ் கடற் பயணத்துக்காகவும், சொந்த தேடல் மற்றும் ஆர்வத்தாலும், கால நிகழ்வுகள் குறித்த ஒரு காலண்டரை வைத்திருந்தார்.
- அதில் முக்கிய நிகழ்வுகள் குறிக்கப் பட்டிருக்கும். அதன்படி, அப்போது வரும் முழு சந்திர கிரகணம் அறிந்து, இதன் மூலம் அந்த மக்களை மிரட்ட திட்டமிட்டார். அவர்களின் தலைவனைக் கூப்பிட்டு, "கடவுள் உங்கள மேல் கோபம் கொண்டிருக்கிறார். இரவின் ஒளியை/ சந்திரனை உங்களிடமிருந்து பிடுங்கிக் கொள்ளப் போகிறார்" என்றார். தலைவர் இதனை நம்பவில்லை. முழு சந்திர கிரகணம் வந்தது. ஊர் இருண்டது. சந்திரன் மறைந்தான்; ஊர் மக்கள் கொலம்பசிடம் வந்தனர். அவரின் குழுவுக்கு உணவும், உதவியும் செய்வதாக ஒப்புதல் வாக்குமூலம் தந்தனர். பின் வழக்கம்போல், பூமியின் நிழல் விலகியதும், சந்திர ஒளி ஜமைக்கா மேல் விழுந்தது. மக்கள் மகிழ்ச்சி கொண்டனர். எப்போதும் மெலிந்தோரை வலியோர் ஏமாற்றுவது தொடர்ந்து கொண்டே இருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
ஜோதிடமும் தவறான நம்பிக்கைகளும்
- கிரகணத்தின்போது சில நட்சத்திரங்களுக்கு தோஷம் இருக்கும், அவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும், குளித்துவிட்டு கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்றெல்லாம் கூறப்படுகிறது.
- அதுபோல, கிரகண நேரத்தில் சமையல் செய்ய கூடாது, முக்கியமாக சாப்பிடக்கூடாது, நகம் வெட்டவோ முடி வெட்டவோ கூடாது, எந்த வேலையும் செய்யக்கூடாது. கிரகண கதிர்கள் தாக்காமல் இருக்க உணவுப் பொருட்களில் தர்பையை போட்டு வைப்பது, கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் நோயாளிகள் கிரகண நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
அறிவியல் உண்மைகள்
- ஆனால், உண்மையில் இந்த ஜோதிடர்கள் சொல்வதுபோல, கிரகண நேரத்தில் எந்தவித சிறப்பு/மர்ம கதிர்களும் சந்திரன் அல்லது சூரியனிடமிருந்து வருவது இல்லை என்பது அறிவியல் பூர்வமான உண்மை. சூரிய கிரகணத்தின்போது நிலவின் நிழல் சூரியனை மறைக்கிறது. இதனை நாம் பூமியிலிருந்து பார்க்கிறோம். சந்திர கிரகணத்தின்போது பூமியின் நிழல் சந்திரனை மறைக்கிறது. இதில் எந்த மாயமோ மந்திரமோ, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கதிர்களோ உருவாவது இல்லை.
- இந்த பிரபஞசத்தில் அனைத்தும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன.அது போல சந்திரனும் நகர்ந்து செல்வதாலேயே இந்த நிலைமை. நட்சத்திர பரிகாரம் என்று கூறப்படும் நிலையில், இந்த விண்மீன்களுக்கும் பூமியிலிருந்து சுமார் 384,400 கி.மீ தொலைவில் மட்டுமே உள்ள சந்திரனுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? அவை வந்து இதனை என்ன செய்யும்? இப்போது அந்த விண்மீன்கள் எந்த இடத்தில் இருக்கின்றன என்ற தகவல் கூட ஜோதிடர்களுக்குத் தெரியவே வாய்ப்பு இல்லை.
- அதுபோலவே பூரம் விண்மீன் சிம்ம ராசியில் உள்ளது. இது பூமியிலிருந்து 2.23, 36 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. பூராடம் தனுசு விண்மீன் தொகுதியிலு உள்ளது. இதுவும் 25,640 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.
- ராகு என்ற கோள் எதுவும் சூரிய குடும்பத்தில் கிடையாது இது ஒரு கற்பனைக் கோள். இதனை துணைக்கு இழுக்கிறார்கள் ஜோதிடர்கள்.
- கர்ப்பிணி பெண்கள் கிரகணத்தின்போது வெளியே வரக்கூடாது என்று தவறான நம்பிக்கை கொண்டு பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கிப் போடுகிறார்கள். ஏன் தெரியுமா? அந்த பெண்கள் மீது கதிர்கள் பாய்ந்து கருப்பையில் இருக்கும் கருவின் உருவை சிதைக்குமாம். வின்னம் ஏற்படும் அதாவது பாதிப்பு ஏற்படும் என தவறான நம்பிக்கை விதைகளை இன்னும் விதைத்துக்கொண்டே இருக்கின்றனர். உண்மையில், அப்படி எதுவும் கிடையாது.
- நானும் கருவுற்று இருக்கும்போது சூரிய சந்திர கிரகணத்தைப் பார்த்தேன். குழந்தை நன்றாகவே பிறந்து இப்போது மகனுக்கு 45 வயது ஆகி நல்லபடியாகவே இருக்கிறார். எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணை சூரிய கிரகணத்தில் வெளியே அழைத்துப் போனேன். அவரும் நல்லபடியாகவே குழந்தை பெற்று இருக்கிறார்.
- கடந்த கரோனா காலத்தில் வந்த வளைய சூரிய கிரகணத்தை ஒரு பெண்ணிடம் காட்டினேன். அவர் கருவுற்று இருந்தது தெரியாது. அவருக்கும் தெரியாது. மாலை டாக்டரிடம் மருத்துவ சோதனைக்கு சென்றால், அவர் கருவுற்று இருப்பதை உறுதி செய்து, நீ சூரிய கிரகணத்தைப் பார்த்ததால் குழந்தை குறையுடன் பிறக்கும் என்பதால் கருச் சிதைவு செய்துவிட கூறியிருக்கிறார். படித்தவர்களும் தவறான நம்பிக்கையில் இவ்வாறு செய்வது அதிர்ச்சியாக உள்ளது.
- கடந்த சூரிய கிரகணத்தின்போது சில மாநிலங்களில் அரசு விடுமுறை விடப்பட்டது. ஆனால் அதேநேரத்தில் கிரகணத்தின்போது சில கோயில்கள் மூடப்படாமல் உள்ளன. அந்தநேரத்தில் தான் பக்தர்களை வரச்சொல்கிறார்கள்.
- இதுபோல பலவித தவறான நம்பிக்கைகளை உடைக்க அறிவியல் இயக்கம் மற்றும் சில தன்னார்வல அமைப்புகள் செயல்பாடுகள் செய்து கொண்டு இருக்கின்றன. அறிவியல் விழிப்புணர்வு மக்களிடையே கொண்டு செல்லுதல் அவசியம், இதுதான் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.
- இன்று பல கோயில்களில் கிரகணத்தின்போது நடை சாத்திவிடுகின்றனர். கோயிலுக்குள் உள்ள சாமிக்கும் கிரகணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. கிரகணத்தின் போது எவ்வித கதிரும் கோயிலுக்குள் நுழைந்து கடவுளைப் பாதிப்படையச் செய்வதில்லை. இந்த கதிர்கள் எந்த உணவுப்பொருளின் மீதும் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எப்போதும் இருக்கும் சந்திர கதிர்தான் இப்போதும் நம் கண்ணுக்குத் தெரியும். அறிவியல் ரீதியாக சூரிய சந்திர கிரகணத்தின் போது அந்த இடங்களிலிருந்து எவ்வித கதிர்களும் வருவதில்லை. அறிவியல் இல்லாவிட்டால் இந்த உலகில் நாம் இல்லை. அறிவியல் படி வாழ்வோம். வாழ்நாளை நீட்டிப்போம்.
- அறிவியல் பார்வை, மனப்பானமைதான் உலகை உய்ய வைக்கும்.
- கட்டுரையாளர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவர்
நன்றி: தினமணி (09 – 11 – 2022)