TNPSC Thervupettagam

சந்திரயான்-3 சாதனையில் பெண்கள்

August 27 , 2023 316 days 269 0
  • சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதால் ஒட்டுமொத்த உலகின் பார்வையும் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் நான்காவது நாடாக இந்தியா இந்த மகத்தான சாதனையைப் படைத்திருக்கிறது.
  • இந்த வரலாற்றுச் சாதனைக்குப் பின்னால் இஸ்ரோவின் தலைவர் சோம்நாத், திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநர் உண்ணி கிருஷ்ணன் நாயர் உள்ளிட்ட ஆண் விஞ்ஞானிகள் மட்டும் இல்லை. பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இதற்குப் பங்களித்துள்ளனர்.
  • குறிப்பாக கே.கல்பனா, எம்.வனிதா உள்பட 54 பெண் விஞ்ஞானிகளும் இந்தத் திட்டத்துக்காக இரவு பகலாக உழைத்திருக்கின்றனர். அவர்களில் பலர் பல்வேறு ஒருங்கிணைப்புப் பிரிவு களின் இணை மற்றும் துணைத் திட்ட இயக்குநர்கள், திட்ட மேலாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். நிலவின் முகத்தைக் காட்டிய இவர்களைப் பற்றிய சிறிய அறிமுகம்.

எம்.வனிதா

  • தமிழகத்தை சேர்ந்த இவர் சந்திரயான்-2 திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் பொறியாளரான இவர், சந்திரயான் திட்டத்தில் பணியாற்றிய முதல் இந்தியப் பெண் என்கிற பெருமையைப் பெற்றார். ஆனால், அந்தத் திட்டம் வெற்றியைப் பெறாததால் இவர் மீது கவனம் குவியாமல் போய்விட்டது. இருப்பினும் அத்திட்டத்தின் தோல்வியில் இருந்து பெற்ற அனுபவங்களைக் கொண்டு சந்திரயான்-3 திட்டத்தை மெருகேற்ற இவர் உதவியுள்ளார்.
  • பெங்களூரு யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத் துணை இயக்குநரான இவர் நிலவைக் குறித்து நீண்ட காலமாக ஆய்வில் ஈடுபட்டுவந்தார். கார்டோசாட்-1, ஓஷன்சாட்-2, மேகா-டிராபிக்ஸ் உள்ளிட்ட திட்டங்களில் துணைத் திட்ட இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். 2013 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அமைந்த மங்கள்யான் திட்டத்தில் தனது முத்திரையைப் பதித்தார். சந்திரயான் - 3 திட்டத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்கியதைத் துல்லியமாகப் படம்பிடித்து அனுப்பியது இவர் வடிவமைத்த சந்திரயான் 2 திட்டத்தின் கேமராதான் என்பது குறிப்பிடத்தக்கது.

கே.கல்பனா

  • ஆந்திரத்தைச் சேர்ந்த இவர் சந்திரயான்-3 திட்ட துணை இயக்குநராகப் பணியாற்றினார். சந்திரயான்-2, மங்கள்யான் திட்டங்களில் பணியாற்றியபோது கிடைத்த அனுபவத்தை இதில் சிறப்பாகப் பயன்படுத்தினார். சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியால் வரலாற்றில் தனது பெயரைப் பதித்துள்ளார். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் ஆழமான அறிவைக் கொண்டுள்ள இவர் சந்திரயான் -3 திட்டத்தை நிமிடவாரியாகக் கண்காணித்தார் என்கின்றனர் இஸ்ரோ பொறியாளர்கள்.
  • கரோனா பெருந்தொற்றுக் காலத்தில்கூடத் தினமும் ஆய்வகத்துக்குச் சென்று பணிகளைக் கவனித்தார் அவர்.
  • இந்தத் திட்டத்தின் வெற்றிக்குப் பின் அவர் பேசுகையில், “சந்திரயான் 2 அனுபவத்துக்கு பின் இந்த விண்கலத்தை உருவாக்கத் தொடங்கியபோது மிகவும் கவனமாகப் பாணியாற்றினேன். முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரை ஒவ்வொரு நாளும் மறக்க முடியாத தருணமாக இருந்தது. திட்டத்தின் மறுசீரமைப்பு, ஒருங்கிணைப்பு, சோதனைகள் ஆகியவற்றை உன்னிப்பாக மேற்கொண்டோம்” எனத் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

வளர்மதி

  • தமிழகத்தை சேர்ந்த இவர் இஸ்ரோவின் செயற்கைக் கோள் உருவாக்கக் குழுவில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். ரிசாட்-1 செயற்கைக்கோளின் திட்ட இயக்குநராக இருந்து, அதை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினார். இதேபோல ஐ.ஆர்.என்.எஸ்.எஸ், சரல், ஜிசாட்-7, ஜிசாட்-14 ஆகிய செயற்கைக் கோள்களின் உருவாக்கத்திலும் முக்கியப் பங்காற்றியுள்ளார். மங்கள்யான் திட்டத்தின் வெற்றிக்கும் இவர் கடினமாகப் பாடுபட்டார்.

ரிது கரிதால்

  • இந்தியாவின் ராக்கெட் பெண்மணி என அறியப்படும் இவர், இஸ்ரோவில் விண்வெளிப் பொறியாளராகப் பணியாற்றுகிறார். மங்கள்யான் திட்டத்தின் துணை இயக்குநராகத் திறம்படச் செயல்பட்டார். சந்திரயான் - 3 திட்டத்தில் துணைச் செயல்பாட்டு ஆலோசகராக இருந்தார். செவ்வாய், நிலா குறித்து ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அனுராதா டி.கே.

  • மூத்த விண்வெளிப் பொறியாளரான இவர் 1982இல் இஸ்ரோவில் இணைந்தார். ஜிசாட்-12, ஜிசாட்-10 போன்ற செயற்கைக் கோள்களின் வெற்றிக்குப் பாடுபட்டுள்ளார். இஸ்ரோவில் செயற்கைக் கோள் திட்ட இயக்குநராகப் பொறுப்பை ஏற்ற முதல் பெண் விஞ்ஞானி என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.

மௌமிதா தத்தா

  • இவர் அகமதாபாத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் ஸ்பேஸ் அப்ளிகேஷன்ஸ் மையத்தில் பொறியாளராகப் பணியாற்றுகிறார். இமேஜிங் ஸ்பெக்ட்ரோ மீட்டர்களில் உள்நாட்டுத் தயாரிப்பில் அதிகக் கவனம் ஈர்த்துள்ளார். 'மேக் இன் இந்தியா' உள்நாட்டுக் கண்டுபிடிப்பிலும் உற்பத்தியைப் பெருக்குவதிலும் அக்கறை கொண்டுள்ளார். மங்கள்யான் திட்டத்தில் திட்ட மேலாளராகப் பணியாற்றினார்.

டெஸ்ஸி தாமஸ்

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) அக்னி-IV ஏவுகணைக்கான திட்ட இயக்குநராகப் பணியாற்றினார். இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செய்து முடித்ததால் இந்தியாவின் ‘அக்னி புத்ரி’ என அழைக்கப்பட்டார். பின்னர் இஸ்ரோவில் இணைந்து ஏரோநாட்டிகல் சிஸ்டம்ஸ் டைரக்டர் ஜெனரல் என்கிற உயரிய பதவியை அடைந்தார்.

வி.ஆர். லலிதாம்பிகா

  • பொறியாளரான இவர் இஸ்ரோவின் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் துணை இயக்குநராக இருந்தார். பின்னர் பெங்களூரு மையத்துக்கு வந்து அட்வான்ஸ்டு லாஞ்சர் டெக்னாலஜிஸ் துறையில் ஆய்வுகளை மேற்கொண்டார். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒழுங்கமைப்பு இயக்குநராகத் திறம்படப் பணியாற்றுகிறார்.
  • இவர்களைத் தவிர பெண் விஞ்ஞானிகள் பலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தச் சாதனைத் திட்டத்துக்குப் பங்களிப்பு செய்துள்ளனர்.

நன்றி: தி இந்து (27 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்