TNPSC Thervupettagam
January 3 , 2020 1836 days 972 0
  • நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குக் காத்திருக்கும் மாதிரி விதைகள் மசோதா, பிரதமரின் கவனத்தைப் பெற்றதா, அவரின் ஒப்புதலுடன்தான் தயாரிக்கப்பட்டிருக்கிறதா என்கிற கேள்விகளை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. விவசாயிகளின் நலனைப் பாதிக்கக்கூடிய இந்த மசோதா குறித்து மக்கள் மன்றம் விரிவாக விவாதித்தாக வேண்டும்.
  • விதைகள் சட்டம் 1966, விதைகள் உற்பத்தியை முறைப்படுத்துகிறது. அந்தச் சட்டத்திற்கு மாற்றாகத்தான் இப்போது புதிய விதைகள் மசோதாவின் மாதிரி தயாரிக்கப்பட்டிருக்கிறது.

போலி விதைகள்

  • போலி விதைகளிலிருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுவதையும், தரமான, பாதுகாப்பான விதைகளை மட்டுமே சந்தைப்படுத்துவதையும் அந்தச் சட்டம் உறுதிப்படுத்துகிறது. இப்போது தயாரிக்கப்பட்டிருக்கும் மாதிரி விதைகள் மசோதா, விவசாயிகளின்  நலனைவிட விதை உற்பத்தியாளர்களின் நலனைப் பாதுகாப்பதாகத்தான் இருக்கிறது. 
  • 2001-இல் அன்றைய வாஜ்பாய் தலைமையிலான அரசால் விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக பயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
  • பரவலான வரவேற்பைப் பெற்ற அந்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட எல்லா உரிமைகளையும், பாதுகாப்பையும் இப்போது தயாரிக்கப்பட்டிருக்கும் மாதிரி விதைகள் மசோதா அகற்றிவிடுகிறது.

2001 சட்டத்தின்படி

  • 2001 சட்டத்தின்படி, கட்டாய உரிமம் என்கிற பிரிவின் அடிப்படையில் போதுமான அளவு விதைகள் கிடைப்பதையும், அதன் விலை நிர்ணயிக்கப்படுவதையும் அரசு உறுதிப்படுத்தும். இப்போதைய விதைகள் மசோதாவில், விதையின் விலையையோ, போதுமான அளவு விதைகள் கிடைப்பதையோ கண்காணித்துக் கட்டுப்படுத்தும் எந்தவிதமான பிரிவும் காணப்படவில்லை.
  • இதன் விளைவாக, பயிரிடும் பருவத்தில் விதைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, விலையை அதிகரித்து விதை விற்பனையாளர்கள் கொள்ளை லாபம் அடைய வழிகோலப்பட்டிருக்கிறது. 
  • போதுமான அளவிலான விதைகள் வழங்கப்படுவது, நியாயமான விலைக்கு விவசாயிகளுக்கு அவை வழங்கப்படுவதை சட்டப்படி உறுதிப்படுத்த வேண்டும் என்று வேளாண் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்திருக்கும் நிலையில், இந்த மாதிரி விதைகள் மசோதா தயாரிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 
  • முந்தைய 2001 சட்டப்படி, ஏற்கெனவே இருக்கும் விவசாயிகள் பயிரிடும் விதைகளைப் பயன்படுத்தி மேம்படுத்தப்பட்ட புதிய விதையை தனி நபரோ, நிறுவனமோ சந்தைப்படுத்த முற்பட்டால், சந்தைப்படுத்தப்படும் விதையிலிருந்து கிடைக்கும் லாபத்திலிருந்து ஒரு பகுதியை தேசிய விதை வங்கிக்கு வழங்க வேண்டும்.

மாதிரி விதைகள் மசோதா

  • இப்போதைய மாதிரி விதைகள் மசோதாவின்படி, விதை உற்பத்தியாளர்கள் தாங்கள் பதிவு செய்யும் புதிய விதையின் மூலம் குறித்த தகவலை பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதனால், சந்தைப்படுத்தப்படும் புதிய விதையின் மூலம் கிடைக்கும் லாபத்தை, புதிய ஆராய்ச்சிகளுக்காக தேசிய விதை வங்கிக்கு அவர்கள் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. எடுத்துக்காட்டாக, பாரம்பரிய ஆற்காடு கிச்சிலி சம்பா நெல் ரகத்தின் விதையை அடிப்படையாகக் கொண்டு, சிறிய மாற்றங்களுடன் புதிய ரக நெல் விதையைச் சந்தைப்படுத்தலாம். 
  • இதில் ஆபத்து இருக்கிறது. நமது அனைத்து பாரம்பரிய விதைகளும், மரபணு மாற்றப்பட்ட புதிய ரகமாக மாற்றப்படும். அந்தப் பயிரினத்தின் மூலம் குறித்தோ, பாரம்பரியம் குறித்தோ எந்தவிதமான தகவலும் இல்லாமல் போகும். எந்தவித அனுமதியும் பெறாமல், விதை ஆராய்ச்சிக்குப் பங்களிப்பும் நல்காமல் விதை வணிகர்கள் லாபம் ஈட்டுவதற்கு இந்த மசோதா வழிகோலக்கூடும். 
  • ஆண்டாண்டு காலமாக நமது விவசாயிகளும், அரசுத் துறை பயிர் ஆராய்ச்சி நிறுவனங்களும் வெற்றிகரமாக உருவாக்கிச் சந்தைப்படுத்திய புதிய ரக விதைகள் அனைத்தும், சட்டப்படி தனியார் விதை உற்பத்தியாளர்களால் சொந்தம் கொண்டாடப்படும் அவலத்துக்கு இந்த மசோதா நிறைவேற்றம் வழிகோலப் போகிறது.
  • தரமற்ற விதைகளை, முறையற்ற நிறுவனங்கள் சந்தைப்படுத்தும்போது பழுதான விதைகளால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். மகசூல் குறைகிறது. அப்படிப்பட்ட நிகழ்வுகளில் விவசாயிகளைப் பாதுகாப்பதற்கு 2001 சட்டத்தின்படி, இழப்பீடு கோரும் உரிமை இருக்கிறது. 
  • புதிய மாதிரி விதைகள் மசோதாவின்படி, இந்தச் சட்டத்தின் அடிப்படையில் விவசாயிகள் பழுதான விதைக்காக இழப்பீடு கோர முடியாது. அவர்கள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகித் தங்களுக்கு வழங்கப்பட்ட விதை வீரியமற்றது என்பதை நிரூபித்து இழப்பீடு பெற வேண்டும். 
  • அதாவது, அரசு தனது பொறுப்பைக் கைகழுவி, இழப்பீடு பெறுவதை விவசாயிகளின் தலையில் சுமத்துகிறது. 

மோசமான அம்சங்கள்

  • இந்த மாதிரி விதை மசோதாவின் மிக மோசமான இரண்டு அம்சங்கள் பேரதிர்ச்சி அளிக்கின்றன. விதை நிறுவனங்களின் தவறுகளுக்கான அபராதம் மிக மிகக் குறைவாக இருப்பது, அவர்களைப் பொறுப்பேற்காமல் காப்பாற்றுவதாக இருக்கிறது. இரண்டாவதாக, எந்த ஒரு புதிய சட்ட மசோதா தயாரிக்கப்படும்போதும் அது குறித்த அச்சத்தையோ, தவறுகளையோ எழுப்பும் உரிமை மக்களுக்கு வழங்கப்படும். 2001 சட்டத்தில் அது இருந்தது. புதிய விதை மசோதாவில் அது இல்லை. 
  • இந்த மசோதா அரசின் ஒப்புதலுடனும், புரிதலுடனும்தான்  தயாரிக்கப்பட்டிருக்கிறதா அல்லது அதிகார வர்க்கமும், விதைஉற்பத்தியாளர்களும் கூட்டாக நடத்துகின்ற சதியா என்கிற வலுவான சந்தேகம் எழுகிறது. விவசாயிகளின் நலனை அரசு பேண விரும்புவது உண்மையானால், இந்த மாதிரி மசோதா கைவிடப்பட வேண்டும்.

நன்றி: தினமணி (03-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்