TNPSC Thervupettagam

சந்தைப் பொருளாதாரமா? தனியார்மயம் என்பது இதுதானா?

September 25 , 2019 1934 days 998 0
  • இந்தியப் பொருளாதாரம் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பின்னடைவைச் சந்தித்து வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
  • அந்தப் பின்னடைவுகளை எதிர்கொள்ள அரசு எடுக்கும் அவசர நடவடிக்கைகள், அச்சத்தின் வெளிப்பாடாகத் தோற்றமளிக்கின்றன. அதுதான் தவறு.
  • மோட்டார் வாகனத் துறை பின்னடைவைச் சந்திக்கிறது என்பது உண்மை. இந்தியாவின் உற்பத்தித் துறை ஜிடிபியில், மோட்டார் வாகனத் துறையின் பங்கு 49%. நேரடியாகவும், மறைமுகமாகவும் அந்தத் துறை 3.7 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது என்கிற புள்ளிவிவரம் மிகைப்படுத்தப்பட்டது என்றாலும்கூட, சுமார் இரண்டு கோடி பேர் அந்தத் துறையைச் சார்ந்து வாழ்பவர்கள் என்று கருதலாம்.
  • அந்தத் துறையைச் சேர்ந்த 3,50,000 தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்கள் வேலைவாய்ப்பு இழந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

மோட்டார் வாகனத் துறை

  • மோட்டார் வாகனத் துறையின் பிரச்னைகளுக்குக் காரணம், பொருளாதார மந்த நிலைமை மட்டுமே அல்ல என்பதை நாம் (அரசும்தான்) புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முக்கியமான காரணம் மின்சார வாகனங்களின் வரவு.
  • அமெரிக்காவில் "டெஸ்லா' நிறுவனத்தின் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அங்கே உள்ள பெரும்பாலான பெட்ரோல், டீசல் வாகனத் தயாரிப்பாளர்கள் தங்களது நிறுவனத்தையே இழுத்து மூடிவிட்டனர். 
  • மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு பல சலுகைகளைதனது நிதிநிலை அறிக்கையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கி இருக்கிறார்.
  • தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மின்சார வாகன உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய வாகனம் வாங்க நினைப்பவர்களேகூட, மின்சார வாகனம் சந்தைப்படுத்தும் நாளை எதிர்நோக்கிக் காத்திருப்பதில் வியப்பென்ன இருக்கிறது?
  • இந்தியாவில் உள்ள மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தேவைக்கும் அதிகமான வாகனங்களை உற்பத்தி செய்து விட்டிருக்கின்றன. உற்பத்தி செய்துவிட்ட வாகனங்களை மின்சார வாகனங்களின் வரவுக்கு முன்னால் அவர்கள் விற்றாக வேண்டும்.
  • அதனால்தான் பொருளாதாரத்துடன் பிரச்னையை இணைத்து ஊடகங்களில் மோட்டார் வாகன விற்பனைத் தேக்கத்தைப் பெரிதுபடுத்துகிறார்கள்.

வருமான வரிக் குறைப்பு

  • புதிய வாகனங்களை வாங்குவதற்கு அரசுத் துறைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டிருக்கிறது; வாகனங்களுக்கான வருமான வரிக் குறைப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை வாங்கும் வாகனங்களுக்கு 30% அனுமதிக்கப்பட்டிருக்கிறது; வாகனங்களுக்கான பதிவுக் கட்டண உயர்வு கைவிடப்பட்டிருக்கிறது.
  • இத்தனை சலுகைகளும் போதாதென்று, ஏற்கெனவே வாராக்கடனில் மூழ்கிக் கிடக்கும் வங்கிகளுக்கு மேலும் ரூ.70,000 கோடி மூலதன முதலீடு செய்ய இருக்கிறது மத்திய அரசு. இதன் மூலம், புதிய மோட்டார் வாகனம் வாங்குபவர்களுக்குக் கடனை வாரி வழங்க வழிகோலப்பட்டிருக்கிறது. 
  • நடுத்தர மக்களுக்கு மோட்டார் வாகனம் என்பது வாழ்நாள் முதலீடு. கடனை வழங்கி தேவையில்லாமல் வாகனம் வாங்கவும், தங்களது வருவாயை வட்டியாகச் செலவழிப்பதும் ஊக்குவிக்கப்படுகிறது.  
  • விளம்பரங்களால் அவர்கள் வாகனங்களை மாற்ற தூண்டப்படுகிறார்கள். சிக்கனத்தை அறிவுறுத்த வேண்டிய அரசு, ஊதாரித்தனத்தை ஊக்குவித்து தனியார் நிறுவனங்கள் லாபமடைய வழிகோலும் அவலத்துக்குப் பெயர்தான் சந்தைப் பொருளாதாரம் என்று தோன்றுகிறது.
  • அத்துடன் நின்றுவிட்டிருந்தால் கூடத் தேவலாம். அதைவிடப் பெரிய மக்கள் விரோத நடவடிக்கையை, மோட்டார் வாகனத் தயாரிப்பாளர்களுக்காக மத்திய அரசு மேற்கொள்ள இருப்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது.
  • 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பழைய மோட்டார் வாகனம் வைத்திருந்தால், அதன் மறு பதிவுக் கட்டணத்தை ரூ.600-இல் இருந்து ரூ.15,000-ஆக 25 மடங்கு உயர்த்த உத்தேசித்திருக்கிறது அரசு. அதுவே பொது வாகனமாக இருந்தால், ரூ.1,000-ஆக இருப்பது, ரூ.20,000-ஆக உயர்த்தப்பட இருக்கிறது.
  • அதே நேரத்தில் பழைய வாகனங்களை உடைத்தெறிந்து (ஸ்கிராப்பிங்) புதிய வாகனம் வாங்கினால் வரிச்சலுகை வழங்கப்படவும், அந்தச் சலுகையை இன்னொருவருக்கு வழங்கும் உரிமையை அளிக்கவும் மத்திய சாலை  போக்குவரத்துத் துறை அமைச்சகம் பரிந்துரைத்திருக்கிறது.

சந்தைப் பொருளாதாரம்

  • சந்தைப் பொருளாதாரம் 1991-இல் அன்றைய நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டபோது, மக்களின் வரிப் பணத்தில் அரசுத்துறை நிறுவனங்கள் ஏன் இழப்பில் இயக்கப்பட வேண்டும் என்றும், தனியார் துறையினரின் வர்த்தகப் போட்டியால் நுகர்வோர் பயன்படுவார்கள் என்பதும்தான் கூறப்பட்டது.
  • தக்காளி விவசாயிகளும், பால் உற்பத்தியாளர்களும் விலை கட்டுப்படியாகாமலோ, விற்பனை இல்லாமலோ போனால் தெருவில் கொட்டுகிறார்களே, அப்போது உதவிக்கு வராத அரசு, இப்போது மக்களின் வரிப் பணத்தில் மோட்டார் வாகன உற்பத்தியாளர்களின் இழப்பை ஈடுகட்ட வேண்டிய அவசியம் என்ன என்கிற சாமானியப் பொது ஜனத்தின் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்களேன்.
  • உற்பத்தித் தேக்கம் வந்துவிட்டது, அதிக உற்பத்தியாகி விட்டது என்றால் அந்த நிறுவனங்கள் விலையைக் குறைத்து விற்கட்டுமே. மக்கள் வரிப் பணத்தில் அதை ஈடுகட்டக் கோருகிறார்களே, அதை அரசும் ஏன் ஏற்றுக்கொள்கிறது? இதற்குப் பெயர்தான் சந்தைப் பொருளாதாரமா? தனியார்மயம் என்பது இதுதானா? 
  • "நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்...' என்று மகாகவி பாரதி அன்று பாடியது இன்றைக்குப் பொருந்துகிறது பார்த்தீர்களா?

 

நன்றி: தினமணி (25-09-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்