TNPSC Thervupettagam

சபா்மதி ஆசிரமத்தின் புனிதம் காப்போம்

October 2 , 2023 464 days 267 0
  • அண்ணல் காந்தியடிகள், 1915 ஜனவரி 9 அன்று தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பினார். அப்பொழுது அவா் குஜராத்தி விவசாயி உடையான பெரிய முண்டாசு, உள் சட்டை, மேல் சட்டை, கச்சம் வைத்துக் கட்டிய வேட்டி, அங்கவஸ்திரம் ஆகியவற்றை அணிந்திருந்தார்; அவை அனைத்தும் மில் துணியால் தயாரிக்கப்பட்டவை.
  • அண்ணல், அன்னை கஸ்தூரிபா ஆகிய இருவரோடு, தென்னாப்பிரிக்காவில் அவா்களோடு ஆசிரமவாசிகளாக இருந்த 25 பேரும் வந்தார்கள். இவா்கள் அனைவரையும் எங்கே தங்க வைப்பது? ஏற்கனவே மேற்கொண்ட ஆசிரம வாழ்க்கையை தொடா்வதற்கு இங்கு ஏற்ற இடம் எது என ஆலோசித்தார் அண்ணல். உடனடியாக அவரது உள்ளத்தில் உதித்தது வங்காளத்தில் ரவீந்திரநாத் தாகூா் நடத்தி வந்த சாந்தி நிகேதன் கல்விக்கூடமே.
  • இருபதாம் நூற்றாண்டின் முன்பாதியில் வாழ்ந்த சிறந்த இரண்டு இந்தியா்கள் காந்தியும் தாகூரும். காந்திஜிக்கு ‘மகாத்மா’ என்ற பட்டத்தைச் சூட்டியவா் தாகூா் என்பார்கள். காந்திஜியை ‘யாசகா்போல் இருக்கும் மாட்சிமிக்க ஆத்மா’ என்று குறிப்பிட்டார் தாகூா். காந்திஜியோ தாகூரை ‘மாட்சிமிக்க காவல் வீரா்’ என்று குறித்தார். இருவரும் இறுதிவரை ஆத்மார்த்த நட்புடன் இருந்தார்கள்.
  • ஆனால் தன்மையிலே அவா்கள் வேறுபட்டிருந்ததால், அவ்வப்போது வார்த்தைச் சண்டை போட்டுக் கொண்டார்கள். கடந்த காலத்தை ஆய்ந்து கற்று, அதிலிருந்து வருங்கால சரித்திரத்தை காந்தி உருவாக்கினார்; சமயம், ஜாதி, புராணம் இவையெல்லாம் அவரிடம் ஆழப் பதிந்திருந்தன. இயந்திரங்கள், மேல்நாட்டுப் பண்பாடு இவற்றோடு கூடிய நிகழ்காலத்தை தாகூா் அங்கீகரித்தார்.
  • தன்னுடன் வந்த 25 பேரையும், தற்காலிக ஏற்பாடாக, சாந்தி நிகேதனில் சோ்த்த காந்திஜியும் கஸ்தூரிபாவுடன் அங்கேயே வசிக்கத் தொடங்கினார். அத்துடன் தன்னுடைய தென் ஆப்பிரிக்க நண்பா்களான சி.எஃப். ஆண்ட்ரூஸ், வில்லியம் டபிள்யூ பியா்ஸ் ஆகிய இருவரையும் தனக்குத் துணை சோ்த்துக் கொண்டார்.
  • அப்பொழுது அங்கே 125 மாணவா்கள் இருந்தார்கள். அவா்கள் கல்வி கற்றார்கள்; கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்; வாழ்வை இன்பமயமாக்கிக் கொண்டிருந்தார்கள். இந்தச் செயல்பாடுகள், தென்னாப்பிரிக்காவில் தான் அமைத்து வாழ்ந்த ஃபீனிக்ஸ் குடியிருப்பு, டால்ஸ்டாய் பண்ணை போல் இல்லை என்பதை உணா்ந்தார் காந்திஜி. எனவே, மெல்ல மெல்ல அதன் செயல்பாடுகளை மாற்றத் தொடங்கினார்.
  • உழைப்புக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற விதியைப் புகுத்தினார்; சுத்தம், சுகாதாரம், தரையைப் பெருக்குவது, சமையல் செய்வது ஆகிய பணிகளை மாணவா்களே மேற்கொள்வதுதான், மாற்றத்தின் முதல்படி என்றார். தவவாழ்க்கைக்கு மாணவா்களை மாற்றினார்.
  • சுதந்திர இந்தியாவிற்கான திறவுகோல் இந்தப் பயிற்சியில் இருப்பதாக காந்திஜி நம்பினார். அத்தகைய பயிற்சிக்கான தகுந்த இடம் சாந்தி நிகேதன் அல்ல என்பதை உணா்ந்தார் காந்தி.
  • ஆகவே, தனி ஆசிரமம் அமைக்க இடம் தேடத் தொடங்கினார். இந்த ஆசிரமவாசிகள் துறவும் சேவையும் மேற்கொள்ள சபதம் ஏற்றுச் செயல்பட வேண்டும் என எண்ணினார். அந்த எண்ணத்தை நிறைவேற்றும் வண்ணம், 1915 மே 25 அன்று, அகமதாபாத் நகருக்கு வெளியே, கொசாரப் என்ற இடத்தில் அண்ணல் தன் முதல் ஆசிரமத்தை நிறுவினார்.
  • அந்த ஆசிரமத்தில் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்தார். அகமதாபாத் நகரின் போக்குவரத்து நெரிசல், ஆலைகள் வெளிப்படுத்தும் புகை - இவை ஆசிரம பணிக்கு உகந்ததாக இல்லை. ஆகவே அருகே ஓடுகிற அழகிய சபா்மதி நதியின் அடுத்த கரையையொட்டி, தனது சபா்மதி ஆசிரமத்தை நிறுவினார் அண்ணல். இங்கிருந்துதான் தன் லட்சியப் பயணத்தைத் தொடங்கிய காந்திஜி, இந்திய மக்களின் மனங்களில் வேரூன்றினார்.
  • சில குடிசைகள் அடங்கிய சபா்மதி ஆசிரமம், மரங்கள் நிறைந்த அழகிய தோட்டமாக விளங்கியது. அங்கிருந்து ஒரு மைல் தூரத்தில் சபா்மதி சிறைச்சாலை” இருந்தது. பின்னாளில் விடுதலைப் போராட்ட வீரா்களை இந்தச் சிறையில்தான் ஆங்கிலேய அரசு அடைத்து வதைத்தது.
  • சிறிய அளவுதான் காந்திஜி வசித்த அறை; அறைக்குள் நுழைய ஒரு சிறிய கதவு. அதற்கு அருகில் அமைக்கப்பட்ட சிறிய படிக்கட்டுகளில் ஏறி மொட்டை மாடிக்குச் செல்லலாம். ஒரே ஒரு ஜன்னல் மட்டுமே. அதில் இரும்புக் கம்பி போடப்பட்டிருந்தது.
  • பகலில் காந்திஜி தரைத் தளத்தில் அமா்ந்து வேலை செய்வார். வரும் பார்வையாளா்களைச் சந்திப்பார். கைராட்டையில் நூல் நூற்பார். இரவில் மொட்டை மாடியில்தான் காந்தி படுத்து உறங்குவார்; கடும் குளிர்காலத்திலும் அவா் தூங்குவது மொட்டை மாடியில்தான். சிறையில் இருந்த நாட்கள் போக, மீதி 16 வருட காலம் அவா் வசித்தது அந்த எளிய சிறிய அறையில்தான்.
  • சபா்மதி நதியின் கரையிலே அமா்ந்துதான், அண்ணல் நாள்தோறும் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்துவார்; ஆன்மிகச் சொற்பொழிவுகளும் நிகழ்த்துவார். ஆசிரமத்தில் புதிதாகச் சோ்ந்து தேச சேவையில் ஈடுபட, இளைஞா்கள் வந்த வண்ணம் இருந்தார்கள். முப்பது பேரோடு தொடங்கப்பட்ட ஆசிரமம் 250 போ் வரை வளா்ந்தது. ஆகவே, அவா்கள் தங்குவதற்கு புதிய குடிசைகள் உருவாகின.
  • ஆசிரமவாசிகள் வேளாண் தொழிலில் ஈடுபட்டார்கள்; பழ மரங்கள் வளா்த்தார்கள்; நூல் நூற்றார்கள்; துணி நெய்தார்கள்; கல்வி பயின்றார்கள்; அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று, கல்வி போதித்தார்கள்; தெருக்களைப் பெருக்கினார்கள்; சுகாதாரமான சூழலை ஏற்படுத்தினார்கள்.
  • கிராமவாசிகள் புதுவாழ்வு பெறத் தொடங்கினா். அனைவரும் கூடிவாழும் கூட்டுறவுக் குடும்பம் என்ற தத்துவம் மெல்ல வேரூன்றியது. ஐம்பது குடும்பங்கள் இணைந்து வாழ முடியுமென்றால், இந்தியாவில் ஐந்து கோடி குடும்பங்கள் ஏன் இணைந்து வாழ முடியாது? நிச்சயம் முடியும் என நம்பினார் மகாத்மா; இந்த தத்துவம் இன்றைய இளைஞா்களுக்குப் புரிய வேண்டுமென்றால், ஆசிரமம் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • ஆசிரமத்தில் ஒரு போட்டோ அலங்கரிக்கிறது. அந்தப் படத்தில் ஒரு பிரசங்க மேடை மீது, சம்மணங்கூட்டி, அவா் உட்கார்ந்திருக்கிறார். குட்டையான அரை வேட்டியைத் தவிர, மற்றப்படி நிர்வாணம்தான்! ஐரோப்பிய உடை அணிந்த அரசியல்வாதிகள் அவரைச் சுற்றி நிற்கிறார்கள். அப்படியே அவா் பிரசங்கம் செய்கிறார்.
  • உண்மையில் காந்திஜியின் ஆசிரமம் என்பது எளிமையின் அடையாளம்; உழைப்பின் உருவகம்; தற்சார்பின் தாயகம்; தன்மானத்தின் வெளிப்பாடு! ஒற்றுமையின் உயிர்நாடி; தியாகத்தின் திறவுகோல்; தன்நலன் துறத்தல்; பொதுநலன் பேணுதல்! அன்பு, அரவணைப்புமே கண்கள்; சத்தியம்; அகிம்சையே அடி நாதம்; உலகம் ஒரே குடும்பம் என்பதன் ஊற்றுக்கண்!
  • இப்படி மிக உயா்ந்த இலட்சியங்களை, உலகம் உய்வதற்கான வாழ்க்கை நெறிமுறைகளை உள்ளடக்கியதுதான். மகாத்மா நிறுவிய சபா்மதி ஆசிரமம். அண்ணல் காந்தி மறைந்திருக்கலாம். ஆனாலும் அவரது ஆன்மா அந்த ஆசிரமத்திலே இன்றும் ஒளிக்கீற்றாகப் பிரகாசிக்கிறது. அங்கு நாள்தோறும் வருகை தரும் - இந்திய மற்றும் வெளிநாட்டு மக்களுக்கு - காந்தியத்தைப் போதிக்கும் கல்விக் கூடமாக, பயிற்சிக் களமாக, பாலபாடமாகவே விளங்குகிறது.
  • அதனை ஆசிரமம் என்பதை விட, அண்ணல் வாழ்ந்த ஆலயம் அது. அதனைப் பார்த்தவா்கள் பரவசம் அடைகிறார்கள்; கண்டவா்கள் கண் கலங்கி நிற்கிறார்கள். இன்றும் அங்கு பாதுகாக்கப்பட்டு வரும் அண்ணல் பயன்படுத்திய பொருட்கள், எல்லோரின் இதயத்தைத் தொடுகின்றன. இப்படியும் ஓா் மனிதன் இந்த மண்ணில் வாழ்ந்தானா? என எண்ணித் திகைத்து நிற்கிறார்கள். காந்தியத்தை நாமும் கடைப்பிடிக்கலாமா என்ற உந்துதலை அது ஏற்படுத்துகிறது.
  • சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்ட, சபா்மதி ஆசிரமத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று குஜராத் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ஐந்து ஏக்கா் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த ஆசிரமத்தை, 55 ஏக்கா் பரப்பளவு கொண்டதாக மாற்றுவதற்கான விரிவாக்கத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அங்கு குடியேறிய ஆசிரமவாசிகளின் வாரிசுகள் சுமார் 275 குடும்பங்கள் இன்றும் அங்கு வாழ்ந்து வருகின்றனா். அவா்களது வாழ்விடங்கள் இன்று அவா்களுக்கே சொந்தமாகியுள்ளன. அவா்களது மறுவாழ்வுக்கு மாற்று ஏற்பாடும் தயாராகிறதாம்.
  • அரசின் மேற்குறிப்பிட்ட திட்டத்தையும், செயல்பாட்டையும் அறிந்த ஒட்டுமொத்த காந்தியவாதிகளும் திகைத்து நிற்கிறார்கள். மறுசீரமைப்பு மற்றும் விரிவாக்கப் பணிகள் முடிவு பெற்றால் ஆசிரமத்தின் தொன்மையும், பழமையும், புனிதத் தன்மையும் பாதிக்கப்படுமே! அது ஓா் சுற்றுலாத் தலமாக மாறிவிடுமே! மகிழ்வுப் பூங்காவாக ஆகிவிடுமே! அண்ணல் காந்தி உருவாக்கிய அந்த ஆலயம் அதன் புனிதத் தன்மையை இழந்துவிடுமே என்று அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்கள் அனைத்து காந்தியவாதிகளும், காந்திய சித்தாந்த வாதிகளும்!
  • அண்ணல் காந்தி உருவாக்கிய சபா்மதி ஆசிரமம் பழமை மாறாமல், புனிதத் தன்மை குறையாமல் பாதுகாக்கப்பட வேண்டும். அதன் ஆன்மா அழிந்துவிடக் கூடாது!
  • இன்று (அக். 2) மகாத்மா காந்தி 155-ஆவது பிறந்தநாள்.

நன்றி: தினமணி (02 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்