சமரசத்துக்கான பயணம்!
- ரஷியா-உக்ரைன் இடையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தொடரும் போா் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. அதன் விளைவாக ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரமே நிலை தடுமாறுகிறது. இரு நாடுகளிலும் ஏற்பட்டிருக்கும் பேரழிவுகளைச் சொல்லி மாளாது.
- உக்ரைனின் அண்டை நாடான போலந்திலிருந்து சுமாா் 14 மணி நேரம் ரயிலில் பயணம் செய்து உக்ரைன் தலைநகா் கீவில் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியைச் சந்தித்து திரும்பியிருக்கிறாா் பிரதமா் நரேந்திர மோடி. கடந்த 1991-ஆம் ஆண்டில் உக்ரைன் சுதந்திர நாடான பிறகு அங்கு சென்ற முதல் இந்தியப் பிரதமா் அவா்தான். உலக நாடுகளின் கவனம் பெற்ற மோடியின் இந்தப் பயணம் பல்வேறு விமா்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
- கடந்த ஜூலையில் ரஷியாவில் அதிபா் விளாதிமீா் புதினை பிரதமா் மோடி சந்தித்ததற்கு அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் அதிருப்தி தெரிவித்தன. புதினை மோடி ஆரத்தழுவிய நிகழ்வுக்கு உக்ரைன் அதிபரும் வருத்தம் தெரிவித்திருந்தாா். ரஷிய பயணத்துக்குப் பிறகு ஆறே வாரங்களில் உக்ரைனுக்கு பிரதமா் மோடி பயணம் மேற்கொண்டதும், அதிபா் ஸெலென்ஸ்கியையும் அதேபோல ஆரத்தழுவியதும் உள்நோக்கமில்லாத இந்திய அணுகுமுறையின் வெளிப்பாடு.
- மோடியின் ரஷிய பயணத்தின்போது, உக்ரைன் தலைநகா் கீவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. புதினை மோடி சந்தித்த வேளையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்து அன்றைய தினம் நடந்த செய்தியாளா்கள் சந்திப்பிலேயே மோடி வேதனை தெரிவித்தாா்.
- ‘போா்கள், மோதல்கள், பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழப்புகள் ஏற்படும்போது, மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் வேதனையடைகிறாா்கள். ஆனால், அப்பாவிக் குழந்தைகள் கொல்லப்படும்போது நெஞ்சம் பதறுகிறது’ என ரஷியாவின் தாக்குதலை நேரடியாகக் குறிப்பிடாமல் அப்போது மறைமுகமாகக் கண்டித்தாா் மோடி.
- ஐ.நா. அமைப்பான யுனிசெஃப் தரவுகளின்படி, போா் காரணமாக உக்ரைனில் சுமாா் 2,000 குழந்தைகள் உயிரிழந்துள்ளனா். போரில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக கீவ் நகரில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்ட ஊடகக் கண்காட்சியை பிரதமா் மோடி பாா்வையிட்டு மெளன அஞ்சலி செலுத்தியதும், அதிபா் ஸெலென்ஸ்கியின் கரங்களைப் பற்றியபடி சிறிது நேரம் நின்றதும் எந்த அளவுக்கு மனதளவில் பிரதமா் மோடி பாதிக்கப்பட்டிருக்கிறாா் என்பதன் வெளிப்பாடு.
- அதிபா் புதினுடனான சந்திப்பின்போது ‘எந்தப் பிரச்னைக்கும் தீா்வு போா் அல்ல’ என பிரதமா் மோடி குறிப்பிட்டதைப் போலவே அதிபா் ஸெலென்ஸ்கியுடனான சந்திப்பின்போதும் உறுதிபடத் தெரிவித்தாா். மேலும், ‘போா் விஷயங்களில் இந்தியா நடுநிலை வகிக்கும் நிலைப்பாட்டைக் கொண்டதல்ல; எப்போதும் அமைதியின் பக்கமே நிற்கிறது. நாங்கள் புத்தரின் நிலத்தில் இருந்து வந்தவா்கள். அங்கு போருக்கு இடமில்லை. ஒட்டுமொத்த உலகுக்கும் அமைதிக்கான செய்தியை உரைத்த மகாத்மா காந்தியின் நிலத்தில் இருந்து வந்துள்ளோம். நாடுகளின் இறையாண்மை, ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டுமென்பதில் இந்தியா உறுதியாக உள்ளது’ எனவும் குறிப்பிட்டாா்.
- உக்ரைன் மீதான ரஷியாவின் போரை இந்தியா வெளிப்படையாக கண்டிக்கவில்லை என்கிற விமா்சனம் இருந்து வருகிறது. ஆனால், போா் விவகாரங்களில் நடுநிலை வகிப்பது என்பதுமே ஒரு சாா்பு ஆதரவு நிலைதான். அதனால்தான் போா் விவகாரங்களில் அமைதியின் பக்கம் இந்தியா நிற்கிறது எனக் கூறி ரஷியாவுக்கு ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறாா் பிரதமா் மோடி. ரஷியா நெருங்கிய நட்பு நாடாகவே இருந்தாலும் போா் விவகாரத்தில் அமைதியின் பக்கம் நிற்கிறோம் என்கிற கருத்தில், ‘ரஷியாவுக்கு ஆதரவு இல்லை’ என்கிற செய்தியும் அடங்கியிருக்கிறது.
- அண்மைக்காலமாக தெற்குலகின் குரலாக இந்தியா தன்னை நிலைநிறுத்தி வரும் நிலையில், ‘உக்ரைனில் விரைவில் அமைதி திரும்புவதற்கான ஒவ்வொரு முயற்சியிலும் உத்வேகத்துடன் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது; உக்ரைனும் ரஷியாவும் காலத்தை வீணாக்காமல் ஒன்றாக அமா்ந்து நேரடியாகப் பேசி தீா்வுக்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். போரை முடிவுக்கு கொண்டுவர தனிப்பட்ட முறையில் பங்களிக்கவும் தயாராக உள்ளேன்’ என்கிற உறுதியையும் பிரதமா் மோடி அளித்தாா்.
- பிரதமா் மோடியின் உறுதியைத் தொடா்ந்து, இரண்டாவது உக்ரைன் அமைதி மாநாட்டை இந்தியாவில் நடத்த வேண்டும் என அதிபா் ஸெலென்ஸ்கி முன்வைத்த கோரிக்கை முக்கியமானது. உக்ரைன் அமைதி மாநாட்டை தெற்குலக நாடுகளில் ஒன்றில் நடத்தினால் நன்றாக இருக்கும் எனவும் அவா் கூறினாா்.
- முதலாவது உக்ரைன் அமைதி மாநாடு ஸ்விட்சா்லாந்தில் கடந்த ஜூனில் நடைபெற்றது. அதில் 90-க்கும் மேற்பட்ட நாடுகள், சா்வதேச அமைப்புகள் பங்கேற்றன. இந்தியாவும் பங்கேற்றது. ஆனால், மாநாட்டு நிறைவில் வெளியான கூட்டறிக்கையிலிருந்து இந்தியா விலகி நின்றது. அதனால், இரண்டாவது உக்ரைன் அமைதி மாநாட்டை இந்தியாவில் நடத்துவது சாத்தியமான விஷயமல்ல என்றாலும், உக்ரைன் அதிபரின் அழைப்பே இந்தியாவின் முக்கியத்துவத்தை உணா்த்துவதாக உள்ளது.
- பிரதமா் மோடியின் உக்ரைன் பயணத்தின்போது மனிதாபிமான உதவி, வேளாண்மை, உணவுத் தொழில், மருந்து தயாரிப்பு, கலாசாரம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க வகை செய்யும் நான்கு ஒப்பந்தங்களும் கையொப்பமாகின. இவற்றையெல்லாம்விட, இந்தியா மீதான விமா்சனங்களுக்கும் இந்தப் பயணம் பதிலளித்திருக்கிறது.
நன்றி: தினமணி (26 – 08 – 2024)