சமூக அக்கறை கொண்ட கேபி
- பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு ‘கேப்ரியல் தாமஸ்' என்கிற பெயரைத் தெரியாதவர்கள் குறைவு. ஏனென்றால் தடகளத்தில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று உலகத்தை ஆச்சரியப்பட வைத்தவர். தடகளத்தையும் தாண்டி, மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவராக ஆச்சரியத்தை அதிகப்படுத்தியிருக்கிறார், கேபி.
- ஆப்ரிக்க அமெரிக்கரான கேபி தாமஸ் படித்த, வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்பாவுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். அம்மா கல்லூரிப் பேராசிரியர். அதனால், படிப்பிலும் விளையாட்டிலும் இயல்பாகவே ஆர்வம் வந்துவிட்டது. பள்ளியில் சக மாண வர்களுடன் சேர்ந்து ஓடிக் கொண்டே இருப்பார். அவர்களுக்கு கேபியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் ஒரே குறிக்கோள். ஆனால், வெற்றி பெறுவது என்னவோ கேபியாகத்தான் இருக்கும்.
- சற்று வளர்ந்த கேபிக்கு சாஃப்ட் பாலும் சாக்கரும் விருப்பமான விளையாட்டுகளாக மாறின. ஒருமுறை தொலைக்காட்சியில் அமெரிக்காவின் புகழ்பெற்ற தடகள வீராங்கனை ஆலிசன் ஃபெலிக்ஸ் ஓடியதைக் கண்டபோது, தானும் ஒரு தடகள வீராங்கனையாக வேண்டும் என்கிற எண்ணம் உருவானது. அன்றிலிருந்து ஓட ஆரம்பித்த கேபி, தான் பங்கேற்ற போட்டிகளில் எல்லாம் வெற்றி வாகை சூடினார். பள்ளியில் கேபிக்குச் செல்வாக்கு அதிகரித்தது. ஒவ்வோர் ஆண்டும் விளையாட்டிலும் படிப்பிலும் சிறந்த மாணவியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டதால், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் நியுரோ பயாலஜி படிக்கும் வாய்ப்பு கேபிக்குக் கிடைத்தது.
- “படித்த, வசதியான சூழலில் வளர்ந்தாலும் எங்களைப் போன்ற ஆப்ரிக்க அமெரிக்கர்கள் ஒடுக்கப்படு வதை அறிந்தே இருந்தேன். எல்லாருக் கும் கடினமாக முயற்சி செய்தால் ஒரு விஷயத்தை அடைய முடியும் என்றால், நாங்கள் மிக மிகக் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். அதனால் ஆப்ரிக்க அமெரிக்கப் பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். உலகமே நம்மை வீழ்த்த முயற்சி செய்தாலும் துணிவுடன் நம் முயற்சியைத் தொடர வேண்டும். வானமே நமக்கு எல்லை” என்கிறார் கேபி தாமஸ்.
- 2018ஆம் ஆண்டு பட்டம் பெற்றவுடன் தடகளத்தில் கவனத்தைக் குவித்தார் கேபி. இரண்டு ஆண்டுகள் கடினப் பயிற்சியின் காரணமாக, 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குள் நுழைந்தார். ஆனால், தசைவலி காரணமாக அவரால் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.
- உடல் நலக் குறைவோடு மனநலனும் பாதிக்கப்பட்டதைத் தானே உணர்ந்து, அதிலிருந்து மீண்டு வரவேண்டும் என்று கேபி நினைத்தார். அப்போதுதான் உடல் ஆரோக்கியத்திலும் மருத்துவத்திலும் நிறம் காரணமாக ஒதுக்கப்படும் மக்களைக் கண்டார். சமூகத்தில் இப்படி ஒடுக்கப்படும் மக்களுக்காகத் தான் பணியாற்ற வேண்டும் என்று முடிவுசெய்தார். பொது சுகாதாரத்தில் முதுகலைப் படிப்பை மேற்கொண்டார்.
- ஒரு பக்கம் படிப்பு, இன்னொரு பக்கம் பயிற்சி என உழைத்த கேபி, கிடைக்கும் ஓய்வு நேரத்தில் மருத்துவமனைகளில், குறிப்பாகக் காப்பீடு இல்லாத மக்களுக்குப் பணியாற்றவும் ஆரம்பித்தார். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, மனநலன் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கிவந்தார்.
- 2023ஆம் ஆண்டு வேர்ல்டு அத்லெடிக் சாம்பியன்ஷிப்ஸ் போட்டியில் தங்கமும் வெள்ளியும் வென்றார். 2024ஆம் ஆண்டு தி வேர்ல்டு அத்லெடிக் ரிலேஸ் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். அதனால் ஒலிம்பிக்கில் இந்த முறை தங்கம் வெல்வோம் என்கிற நம்பிக்கை கேபிக்கு அதிகமாக இருந்தது.
- 2024 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்று, மிகுந்த நம்பிக்கையோடு பாரிஸுக்குச் சென்றார். “ஒவ்வொரு நாள் இரவும் நான் எல்லைக்கோட்டைத் தாண்டி ஓடுவது போலவும் தங்கப் பதக்கம் வெல்வது போலவும் கனவு கண்டுகொண்டிருந்தேன். முதல் தங்கம் வென்றபோது என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. கனவா, நிஜமா என்றுகூட ஒரு நொடி யோசித்தேன். என் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதற்கு என் நண்பர்களோ குடும்பத்தினரோ அருகில் இல்லையே என்று நினைத்தேன். அடுத்தடுத்து மூன்று தங்கப் பதக்கங்களை வென்று, என் நாட்டுக்குப் பெருமை சேர்த்ததில் நிறைவாக இருந்தது” என்கிறார் கேபி தாமஸ்.
- 27 வயதாகும் கேபி தாமஸ், இன்னும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் வரையே விளையாடுவார். பிறகு ஒரு மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரியாகவோ அல்லது ஆரோக்கியத்துக்கான அவரது அறக்கட்டளையின் இயக்குநராகவோ செயல்படுவார்.
- “பல காரணங்களுக்காக விளையாடு கிறேன். ஆனால், நான் விளையாட்டை ஒரு வேலையாக எடுத்துக்கொள்ள என்றுமே நினைத்ததில்லை. படிப்பா, விளையாட்டா என்கிற நிலை வந்தபோது, நான் விளையாட்டைக் கைவிட விரும்பினேன். என் அம்மாதான் இரண்டையும் சமாளிக்க என்னால் முடியும் என்று நம்பிக்கை அளித்தார். அதனால் இன்று விளையாட்டில் நான் நினைத்ததைச் சாதித்துவிட்டேன். சமூகத்துக்குச் செய்வதற்கு எனக்கென்று ஒரு கடமை இருக்கிறது. அதைத்தான் வாழ்நாள் முழுவதும் தொடர இருக்கிறேன்” என்கிறார் கேபி தாமஸ்.
நன்றி: இந்து தமிழ் திசை (22 – 09 – 2024)