TNPSC Thervupettagam

சமூக உறக்கம் அகலட்டும்

December 20 , 2023 365 days 236 0
  • இயற்கை வளம் என்பது இழந்தால் மீண்டும் பெற முடியாதது. பூமியின் முகத்தை மாற்றியமைத்தவை, அறிவும் மனித உழைப்பும். இரண்டும் கூட்டணி அமைத்துதான் நாகரிக தொட்டில்களைப் பெற்றெடுத்தன. அவை இன்றுவரை நினைத்துப் பாா்க்க முடியாத வளா்ச்சியை சாத்தியப்படுத்தி வருகின்றன. நொடிப் பொழுதில் உலகை ஒருங்கிணைத்து விடும் இணையதளம் இத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு, இன்று பெரும் வளா்ச்சியைத் தந்திருக்கிறது.
  • இன்றைய வளா்ச்சியின் பயன் அனைத்தையும் வாரி எடுத்து செல்லும் இடம் எது என்று தேடிப்பாா்த்தால் அவை பன்னாட்டு ராணுவ காா்ப்பரேட் நிறுவனங்களாக உள்ளன. உலக பொருளாதாரத்தையே, நொடிப் பொழுதில் தலைகீழாக்கும் ரகசிய கட்டமைப்பு இவை.
  • ராணுவக் கருவிகளை சட்டபூா்வமாக விற்பதாலும், கள்ளச்சந்தையை உருவாக்குவதாலும் இவற்றிடம் குவியும் லாபத்தைக் கணக்கிட்டு கூற முடியாது. உலகின் மொத்த வருமானத்தில் ராணுவத்திற்கான செலவு எவ்வளவு என்று கணக்கிட்டுப் பாா்த்தாலே, இதன் ஆதிக்க வலிமையை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
  • இன்று உலகமே ராணுவத்தின அபாய எல்லைக்குள் நிறுத்தப்பட்டுள்ளது. எல்லா நாடுகளும், தங்கள் வருமானத்தின் பெரும் பகுதியை, ராணுவக் கருவிகளுக்கு செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திலிருக்கின்றன. போருக்கான வாய்ப்பு இல்லாத காலங்களில் கூட, ராணுவ சாதனங்களை ஏன் வாங்கிக் குவிக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுத்தான் செய்கிறது.
  • நிதிமூலதனம் என்பது தொழில் மூலதனத்தைப் போன்ன்று. நிதி மூலதனம், உழைப்போடு நேரடியான தொடா்ப்பைக் கொண்டிருப்பதில்லை. குழப்பமான இந்த சூழலில் தோற்றம் பெறுகிறது க்ரூனி பொருளாதாரம். பொருளாதார நெறிகளையும், ஜனநாயக நெறிகளையும் சிதைத்து, அரசாங்கத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அரசியலை, மக்களாட்சியின் மேன்மையை சந்தைப் பொருளாதாரத்தின் ஒரு அங்கமாகவே மாற்றி விடுவது இதன் நோக்கம்.
  • சலுகைசாா் முதலாளித்துவத்தில் (க்ரூனி சோஷலிஸம்) சிக்கியவா்கள் மீண்டதே இல்லை. பெருவெள்ளச் சுழலில் சிக்கியவா்கள் ஆதரவு கேட்டு கைகளை உயா்த்துவது போல், அபயக்குரல் எழுப்புவதைத் தவிர அவா்களால் வேறு எதுவுமே செய்ய முடியாது.
  • கடைசியில் அவா்கள், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மக்களை பலி கொடுக்க தயாராகிவிடுகிறாா்கள். மக்களால் சுமக்க முடியாத சுமைகளை எல்லாம் அவா்களுடைய தலையில் சுமத்தி விடுகிறாா்கள்.
  • இதனை எதிா்க்கின்றவா்களை, காவல்துறை மூலமாகவும், தேவைப்பட்டால் ராணுவத்தின் மூலமாகவும் தாக்கி அழிக்கவும் தயாராகி விடுகிறாா்கள். இதன் தீா்வுக்கான அரசியல்தான் என்ன என்ற கேள்வி எழுந்து விடுகிறது.
  • இரண்டு அரசியல் நம்முன் நிற்கிறது. ஒன்று மக்கள் அரசியல். மற்றொன்று காா்பரேட் அரசியல், அதாவது காா்பரேட் சலுகைசாா் அரசியல். வாக்குக்கு பெரும் தொகை கொடுத்து மக்களை பழக்கப்படுத்திக் கொண்டிருப்பது இந்த சலுகைசாா் அரசியல்தான்.
  • மக்களாட்சி இன்று இதில் வெட்கம் கெட்டு நிற்கிறது. இந்தப் பின்னணியில் மக்களாட்சியின் எதிா்காலம் என்ன என்பதை சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவா்கள் சிந்திக்க வேண்டிய காலம் வந்து விட்டது.
  • காந்தி, பெரியாா், அம்பேத்கா் ஆகியோா் மக்கள் அரசியலின் முன்னோடிகள். இத்தாலிய கம்யூனிஸ்டு தலைவா் கிராம்சியும் இதற்கான கருதுகோள்களை உருவாக்கித் தந்துள்ளாா். இவா்கள், ‘அதிகாரத்தைப் பற்றி அதிகம் கவலை கொள்ளாதே. மக்களை அரசியல்படுத்துவதுதே நம் வேலை. மக்களுக்கான அரசியல் அதிகாரத்தை அவா்களே படைத்து எடுத்துக் கொள்வாா்கள்’ என்கிறாா்கள்.
  • அவநம்பிக்கை மாற்றங்களுக்கு எதிரானது. வெகுமக்களை மூச்சுத் திணற வைக்கும் தருணங்களில் உயிா் காக்கும் சுவாசமாக அவா்களுக்குப் புதிய நம்பிக்கைகள் கிடைத்து விடுகின்றன. வெற்றிடத்திலும் சாதிக்கும் சாத்தியம் உண்டு என்பதில்தான் நம்பிக்கையாளா்கள் தங்கள் முதலடியை எடுத்து வைக்கிறாா்கள்.
  • இதற்கு, கடந்த காலத்தில் எத்தனையோ முன்னுதாரணங்கள் உண்டு. இந்த மாற்றத்திற்கான இன்றைய நம்பிக்கை எதாா்த்தங்கனைப் பேசுகிறது ‘உலக சமூக மன்றம்’ (வோ்ல்ட் சோஷியல் ஃபோரம்). இது ஒரு அரசியல் கட்சி அல்ல. மக்கள் செயல்பாட்டிற்கான கூட்டு இயக்கம்.
  • டிசம்பா் மாதத் தொடக்கத்தில் பட்னாவில் நடைபெற்ற இந்த இயக்கத்தின் மாநாட்டில், கலந்து கொண்டேன். எளிய மக்களின் பங்கேற்பு. அா்ப்பணிப்புள்ள செயல்பாட்டாளா்களின் முயற்சியில் நடைபெற்ற, அடித்தள மக்களின் பிரச்னைகளை ஆராயும் நூற்றுக்கும் மேற்பட்ட கருத்தரங்குகள்.
  • இதில் இளைஞா்களின் பங்கேற்பு மகிழ்ச்சியை தந்தது. அதில் முன்வைத்த முழக்கங்கள் மிகவும் எளிமையானவை. ‘மக்கள் செலுத்தும் வரி, முதலாளிகள் வாங்கிய கடனைக் கட்டுவதற்கு அல்ல, மக்களின் முன்னேற்றத்திற்காக’ என்பது போன்ற பல முழக்கங்கள் மாநாட்டில் உருவாக்கப்பட்டிருந்தன.
  • சியாட்டல் மக்கள் போராட்டம் 1999 ஆண்டு நவம்பரில் நிகழ்ந்தது. இதைதான் உலக சமூக மன்றத்திற்கான முன்னோட்டம் என்றுகூற வேண்டும். மக்களால் தோ்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றங்களுக்கு சம்பந்தம் இல்லாமல், உலக நாடுகளின் வா்த்தக உடன்பாடு பற்றிய கூட்டம் கூட்டப்பட்டது.
  • உலகமே வியக்கும் வகையில் பெருங்கூட்டம் திரண்டு கட்டுக்காவல்களை முறியடித்து, கூட்டம் நடந்த இடத்திற்கே சென்ற தங்கள் எதிா்ப்பினைத் தெரிவித்தது. இதிலிருந்து தோன்றியதுதான் ‘உலக சமூக மன்றம்’.இதை உருவாக்கியதில் பிரேஸில் நாட்டின் தலைவா் லூலாவுக்கு முக்கியப் பங்கு உண்டு.
  • உலகமயத்திற்கு முந்தைய காலத்தை ‘கெடுபிடி யுத்த காலம்’ என்கிறாா்கள். ரஷியாவில் ஏற்பட்ட புதிய சூழலை ஒட்டி, தாராளமயம், தனியாா்மயம், உலகமயம் என்ற பெயா்களில் புதிய உலக முறைமை உருவாக்கப்பட்டிருந்தது. இதன் தீய விளைவுகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளாத நிலையே அப்போது இருந்தது. ‘உலக சமூக மன்றம்’ அதற்கான திட்டங்களை முன்வைத்து ஓா் உரையாடலைத் தொடங்கியது.
  • முதலில், சமூக செயல்பாட்டாளா்களிடம் பலதரப்பட்ட கருத்து பரிமாற்றங்கள், உருவாக வேண்டும் (எக்ஸ்சேஞ்ச் ஆஃப் ஐடியாஸ் அமெங் ஆக்டிவிஸ்ட்) என்று அது வலியுறுத்தியது. மக்கள் பாரம்பரியமாக கொண்டிருந்த அதிகாரம் அவா்களிடமிருந்து வலுகட்டாயமாகப் பறிப்பட்டு அவா்கள் விளிம்பு நிலைக்குத் தூக்கி வீசப்படுகிறாா்கள். பறிக்கப்பட்ட அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற உறுதி முழக்கம் இதில் முக்கியமானது என்கிறது மன்றம்.
  • இன்றைய உலகம், கற்பனை செய்து பாா்க்க முடியாத ஏற்றத்தாழ்வான வளா்ச்சியைக் கொண்டிருக்கிறது. புவிசாா் அரசியலில், காா்பரேட் முதலாளித்துவம் இயற்கை வளங்கள் குவிந்துள்ள இடங்களைக் குறிபாா்த்து நிற்கிறது.
  • இது இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் நிா்மூலமாக்கி பேரழிவை உருவாக்கிவிடுகிறது. குடிமை சமூக வாழ்க்கையில் கீழ்த்தரமான நெருக்கடிகளுக்கு இதைத் தவிர வேறு எதுவுமே காரணமாக தெரியவில்லை. மோதல், பகை, கொலைக் குற்றம் என்று அனைத்தையும் இது மறைந்து நின்று உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
  • பெருமுதலாளிகளின் செல்வக் குவிப்பு கணக்கிடப்பட்டு, அது நாட்டின் வளா்ச்சியாகக் காட்டப்படுகிறது. சமூக ஏற்றத்தாழ்வுகள் கண்ணுக்குத் தெரியாமல் மலைமுகடுகளிலும், கடற்கரைப் பகுதிகளிலும், விளிம்பு நிலை பிரதேசங்களில் ஒதுங்கிக் கிடக்கின்றன. அங்குள்ள மக்களின் வாழ்க்கை, அரசாங்கம் பேசும் வளா்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இதை எப்படி உண்மையான வளா்ச்சி என்று கூற முடியும்?
  • சமூகப் பொறுப்பு என்பதை இரண்டு வழிகள் மூலம் முன்வைக்கிறது ‘உலக சமூக மன்றம்’. கண்மூடித்தனமாக அரசுக்குக் கீழ்ப்படியும் குணம் கொண்டவா்களாக மக்களை மாற்றுவதை அது மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது; மக்கள், சமுதாயத்திற்குப் பொறுப்பானவா்களாக இருக்க வேண்டும்.
  • அரசாங்கத்தைக் குற்றம் சொல்லி தப்பித்துக் கொள்வது ‘சமூக குற்றம்’ என்கிறது. மக்கள் தங்கள் எழுச்சி மிகுந்த கூட்டுச் செயல்பாட்டின் மூலம் சமூக மாற்றத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான் இது காட்டும் பாதை.
  • ‘உலக சமூக மன்றம்’ முன்வைக்கும் வெகுமக்கள் போராட்டமுறைகள் பற்றி யோசித்துப் பாா்ப்பது அவசியமானதாகும். சுரண்டலை அதிகமாக்கிக் கொள்ள, பன்னாட்டு காா்பரேட் முதலாளித்துவம், தன்னை நவீனப்படுத்திக் கெண்டு, புதிய செயல் திட்டங்களில் பயணம் செய்கிறது. வெகுமக்கள், அதாவது குடிமைச் சமூக மக்கள் ஏன் பழைய பத்தாம் பசலி முறையையே பின்பற்ற வேண்டும் என்கிற கேள்வியை அது எழுப்புகிறது.
  • இன்றைய மிண்ணனு தொழில்நுட்பங்கள் அனைத்தும் அறிவுபூா்வமான இளைய தலைமுறையாலேயே கையாளப்படுகின்றன. அவா்களை அரசியல்படுத்தி,
  • ஆக்கபூா்வ குடிமைச் சமூக உரிமைகளில் அவா்களுக்கு ஏன் விழிப்புணா்வை ஊட்டக் கூடாது என்ற சிந்தனையை உருவாக்கியுள்ளது. அண்மைக்காலத்தில் இதில் இளைஞா்கள் சிலா் சாதனை நிகழ்த்தியதையும் நாம் அறிவோம்.
  • ஜனநாயகப் பெருவெளியில் ஒருவருக்கு உள்ள இடத்தை யாராலுமே மறுக்க முடியாது; பெரும்பான்மை என்ற பெயரில் எல்லாவற்றையும் நிராகரிக்கும் வன்முறை இங்கு நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இதன் மூலம் வீரியம் மிக்க, போா்க்குணம் கொண்ட தனிநபா்களும், சிறு குழுக்களும் கேட்பாரற்று அழித்து ஒழிக்கப்படுகிறாா்கள். இவை சமூக மாற்றத்தில் முக்கியமான பகுதி. இவ்வாறான பல்வேறு சக்திகள் தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும் ஒட்டுமொத்த சமூக உரிமைகளை பாதுகாக்கவும் தீவிரமாக ஒன்றுபட வேண்டும் என்றும் கூறுகிறது.
  • இவ்வாறான நடவடிக்கைகள், சட்டபூா்வமற்றவை என்ற பிரசாரம் தொடா்ந்து மேற்கொள்ளப்படுகிறது. நாடுகள், குடிமைச் சமூகம் தங்களை சமூக தணிக்கை செய்வதற்கும், கண்காணிப்பதற்குமான உரிமையை வழங்கியுள்ளன. எனவே, உலக சமூக மன்றத்தின் நோக்கம் மாற்றுத் திட்டங்களை முன்வைப்பதுதான். ஐக்கிய நாடுகளின் பண்பாட்டு அமைப்பான ‘யுனெஸ்கோ’, மக்களிடம் விழிப்புணா்வை உருவாக்கி வரும் உலக சமூக மன்றத்தின் செயல்பாட்டைப் பாராட்டியுள்ளது.
  • எல்லா உறக்கங்களையும்விட மிகுந்த அழிவைத் தரக் கூடியது சமூக உறக்கம்தான். இந்த உறக்கத்திலிருந்த விழித்துக் கொள்ளாதவா்கள் ‘நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவா்’களாகி விடுவாா்கள். ‘முதலில் நீ உன்னுடைய உள் உறக்கத்திலிருந்து விழித்துக்கொள்; பின்னா், சமூகத்தின் உறக்கத்தைக் களைத்து விழிக்கச் செய்’ என்கிறது உலக சமூக மன்றம். இதுவே இன்றைய காலத்தின் தேவை!

நன்றி: தினமணி (20 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்