- சமூக ஊடகங்களில் இந்தியர்கள் அதிக நேரம் செலவழிப்பதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. "தி குளோபல் ஸ்டாட்டிஸ்டிக்ஸ்' என்ற நிறுவனம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் இந்தியர்கள் சராசரியாக தினமும் 7 மணி 19 நிமிடங்கள் இணையத்தைப் பயன்படுத்துவதாகவும் அதில் 2 மணி 30 நிமிடங்கள் சமூக ஊடகங்களில் நேரத்தை செலவழிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
- இந்தியாவில் மொத்த இணையப் பயனர்களின் எண்ணிக்கை 65.8 கோடியாகவும், செல்லிடப்பேசி இணையப் பயனர்களின் எண்ணிக்கை 60.1 கோடியாகவும் உள்ளது. சமூக ஊடகப் பயனர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 4.2 சதவீதம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு 1.9 கோடி பேர் சமூக வலைதளங்களில் புதிதாக இணைந்துள்ளனர்.
- தொழில்நுட்ப புரட்சி யுகத்தில் செல்லிடப்பேசி பயன்பாடு தவிர்க்க முடியாததாகிவிட்டதுடன் குக்கிராமங்கள் வரை அதன் பயன்பாடு ஆழமாக வேரூன்றிவிட்டது. செல்லிடப்பேசி, இணையப் பயன்பாடு ஆகியவை வாழ்க்கையை எளிமையாக்கி உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. இன்று பெரும்பாலானோர் வீட்டில் அமர்ந்தபடியே சில நிமிடங்களில் ரயில் பயணச் சீட்டை முன்பதிவு செய்துவிடுகின்றனர். இப்போது, வேண்டிய விவரங்களை இணையத்தில் ஒரு சில நிமிடங்களில் நம்மால் பெற முடிகிறது.
- நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே தும்பிபெட்டு கிராமத்தில் வசிக்கும் இருளர் இனத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி இந்த ஆண்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார். இந்த இனத்தில் இருந்து மருத்துவப் படிப்பில் சேரும் முதல் மாணவியான இவர், 4}ஆவது முயற்சியில்தான் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்க வசதி இல்லாததால் "யூ டியூப்' விடியோக்களை பார்த்து படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்தம் மேற்கொள்வது, ஆதார் அட்டை பெறுவது, திருத்தம் மேற்கொள்வது, கல்விக் கட்டணம் கட்டுவது, பான் அட்டை பெறுவது, அரசின் கல்வி உதவித் தொகை பெறுவது போன்ற எண்ணற்ற விஷயங்களுக்கு நேரில் செல்லாமலேயே வேலையை முடிக்க முடியும் என்ற நிலையை இணையப் பயன்பாடு உருவாக்கி உள்ளது.
- இது ஒருபுறம் இருப்பினும், சமூக வலைதளங்களில் இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் மூழ்கிக் கிடப்பது பல்வேறு விதமான சிக்கல்களையும் உருவாக்கி வருகிறது. பேருந்திலோ, ரயிலிலோ ஏறியவுடன் அருகில் இருப்பவர் யார் என்பது பற்றி அறியும் சிறிய அக்கறை கூட இல்லாமல் உடனடியாக காதில் "இயர்போன்' மாட்டிக் கொண்டு வேறு உலகத்துக்கே சென்றுவிடுகின்றனர்.
- இன்னும் சில மாணவர்கள், இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போதுகூட நேரத்தை வீணடிப்பதில்லை. அப்போதுகூட செல்லிடப்பேசியைப் பார்த்துக் கொண்டு வருவதுடன் "சாட்' செய்வது போன்ற பல செயல்களில் ஈடுபடுகின்றனர்.
- சமூக வலைதளங்களில் யார் யாரோ பதிவிடும் மருத்துவக் குறிப்புகளையும்கூட சிலர் முயற்சி செய்து பார்க்கின்றனர். இது சில நேரங்களில் உடல் உபாதைகள் அதிகரிக்க வழிவகுப்பதுடன் விபரீதமாகவும் ஆகிவிடும் என்பதைப் பலரும் அறிவதில்லை.
- திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த மின்னூர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் செங்காந்தள் மலர் செடியின் கிழங்கை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும் என சமூக வலைதளத்தில் வந்த விடியோவை பார்த்து அதைச் சாப்பிட்டதில் உயிரிழந்துவிட்டார்.
- இப்போது பெற்றோர்களும் குழந்தைகளுக்குப் பொறுமையாக உணவு ஊட்ட முடியாததால் செல்லிடப்பேசியை அவர்களிடம் கொடுத்துவிடுகின்றனர். பிறந்த ஓரிரு மாதங்களிலேயே செல்லிடப்பேசி பழக்கமாகிவிடுவதால் 4,5 வயதுக் குழந்தைகள்கூட கண்ணாடி அணியும் நிலை ஏற்பட்டு விடுகிறது.
- மற்றொருபுறம், சமூக வலைதளங்களில் ஏற்படும் பழக்கத்தால் ஒருவர் யார் என்று அறிந்து கொள்ள முடியாத நிலையிலும் மோகத்துக்கு ஆள்பட்டு வழிமாறி சென்று அவதிப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
- கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர், ஒரு நடிகையின் படத்தை முகப்புப் படமாக வைத்து வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவரை பல ஆண்டுகள் ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பெற்று வந்துள்ளார். அந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டும் என அந்த இளைஞர் ஆர்வத்துடன் கோவைக்கு வந்தபோதுதான் முகப்புப் படத்தில் இருந்த பெண் அல்ல என்பதும் தான் ஏமாற்றப்பட்டதையும் அறிந்தார்.
- இப்போது, வங்கி விவரங்கள், பான் கார்டு அப்டேட், பரிசுப் பொருள்கள், வேலைவாய்ப்பு என பல இணைப்புகள் (லிங்க்குகள்) செல்லிடப்பேசிக்கு வருகின்றன. தப்பித் தவறி அந்த இணைப்புக்குள் செல்பவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து லட்சக்கணக்கான ரூபாயை மோசடி நபர்கள் எடுத்து விடுகின்றனர்.
- இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதால், இணைய வழி (சைபர்) குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த "ராஜு அண்ட் ஃபார்ட்டி தீவ்ஸ்' என்ற படக்கதைகள் கொண்ட புத்தகத்தை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
- கள்ளக்குறிச்சி மாவட்டம், தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி கடந்த ஜூலையில் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தகவல்களால் கலவரம் வெடித்ததை எளிதில் மறந்துவிட முடியாது. எந்த ஒரு விஞ்ஞான கண்டு பிடிப்புமே நன்மைகளும், தீமைகளும் நிறைந்ததாகவே உள்ளது. வளர்ச்சியைத் தடுக்கவும் முடியாது. அதனால் ஏற்படும் சில பின் விளைவுகளைத் தவிர்க்கவும் முடியாது. அதனால்...
நன்றி: தினமணி (15 – 11 – 2022)