TNPSC Thervupettagam

சமூக ஊடகச் சுதந்திரம்: ஜாக் டோர்ஸியின் விமர்சனம் சரியா

June 20 , 2023 572 days 300 0
  • மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது, குறிப்பிட்ட சிலரின் ட்விட்டர் கணக்குகளை முடக்கச் சொல்லி அழுத்தம் தரப்பட்டதாக ட்விட்டர் நிறுவனர்களில் ஒருவரும் அதன் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியுமான ஜாக் டோர்ஸி முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
  • அண்மையில், தனது அமெரிக்கச் சுற்றுப்பயணத்தின்போது மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர்ராகுல் காந்தி கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். முதன்முறையாக அரசுமுறைப் பயணமாக, பிரதமர் மோடி ஜூன் 20 (இன்று) அமெரிக்காவுக்குச் செல்கிறார். முக்கியமான இந்தக் காலகட்டத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த ‘பிரேக்கிங் பாயின்ட்ஸ்’ (Breaking Points) என்னும் யூடியூப் சேனலுக்கு ஜூன் 12 அன்று அளித்த பேட்டியில், ஜாக் டோர்ஸி இப்படி ஒரு கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார். ஒத்துழைக்க மறுத்தால் இந்தியாவில் ட்விட்டர் நிறுவனம் மூடப்படும்; ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டதாகவும், சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஆனால், அவர் சொல்வது முற்றிலும் பொய் என்கிறது மத்திய அரசு.

பிரச்சினையின் பின்னணி:

  • 2020 செப்டம்பரில் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்கள் பெருந்தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமானவை எனக் கூறி விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர். ஓராண்டுக்கு மேல் நீடித்த இந்தப் போராட்டத்தில், 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்தனர். பல கசப்புகளுக்குப் பின்னர் இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக 2021 நவம்பர் 19 அன்று அறிவித்தார் பிரதமர் மோடி.
  • இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது, பயங்கரவாதிகள், காலிஸ்தான்காரர்கள் எனப் பல்வேறு சாயங்கள் பூசப்பட்டன. ‘ஆந்தோலன்ஜீவி’ (தொழில் முறைப் போராட்டக்காரர்கள்) என்று பிரதமர் மோடியே பகிரங்கமாக விமர்சித்தார். மறுபுறம், சர்வதேசப் பிரபலங்கள் பலர், விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட்கள் செய்தது இந்தியாவில் அதிர்வலைகளை எழுப்பியது. ‘இது இந்தியாவை மலினப்படுத்தும் முயற்சி’ என மத்திய அமைச்சர்களும் பாஜக தலைவர்களும் ட்வீட் மூலம் பதிலடி தந்தனர். 2021 நவம்பரில் ட்விட்டர் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து ஜாக் டோர்ஸி விலகினார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் அந்தப் பதவிக்கு வந்தார். அதன் பின்னர் பெருந்தொழிலதிபர் எலான் மஸ்க், அதிரடியாக ட்விட்டரை வாங்கியது தனிக்கதை.

தொடர் சர்ச்சைகள்:

  • இந்தியா தொடர்பாக, ட்விட்டர் நிறுவனம் சர்ச்சைக்குள்ளாவது புதிதல்ல. 2018இல் இந்தியா வந்திருந்த ஜாக் டோர்ஸி, சமூகச் செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்களுடனான சந்திப்பின் போது ‘பிராமணிய ஆணாதிக்கத்தைத் தகர்ப்போம்’ (Smash Brahminical Patriarchy) எனும் வாசகம் அச்சிடப்பட்ட பதாகையைத் தன் கையில் வைத்திருந்தது சர்ச்சையானது. வலதுசாரிகள் பலர் ஜாக் டோர்ஸியைக் கடுமையாகக் கண்டித்தனர். அன்றைய தேதிக்கு இந்தியாவில் 32.6 கோடி பயனாளர்களைக் கொண்டிருந்த ட்விட்டர் நிறுவனம், அந்த எதிர்ப்பை எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஜாக் டோர்ஸி அதற்கு நேரடியாக வருத்தம் தெரிவிக்கவில்லை என்றாலும், அவருடன் இந்தியா வந்திருந்த, ட்விட்டரின் சட்டம், கொள்கை தொடர்பு பிரிவின் தலைவர் விஜய கட்டே, அந்தப் பதாகை ஜாக் டோர்ஸிக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு என்று சொல்லிச் சமாளித்தார்.
  • கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைக்க ட்விட்டர் நிறுவனம் மறுப்பதாக மத்திய அரசு அதிருப்தியில் இருந்த காலகட்டத்தில்தான், 2020இல் அப்ரமேய ராதாகிருஷ்ணா, மயங்க் பித்வாத்கா ஆகியோர் ‘கூ’ (Koo) என்னும் செயலியை அறிமுகப்படுத்தினர். உடனடியாக, மத்திய அமைச்சர்களும் பாஜகவினரும் அதில் தங்கள் கணக்கைத் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது. 2021 ஜனவரியில் நடந்த விவசாயிகள் பேரணியைத் தொடர்ந்து, 300 ட்விட்டர் கணக்குகள் முடக்கப் பட்டன. தொழில்நுட்பப் பிரச்சினைகளேஇதற்குக் காரணம் என ட்விட்டர் தரப்பிலிருந்து சொல்லப்பட்டது. ஆனால், கிஸான் ஏக்தா மோர்ச்சா, ட்ராக்டர் 2 போன்ற விவசாய அமைப்புகள், விவசாயிகளுக்கு ஆதரவாகச் செய்தி வெளியிட்டுவந்த ‘கேரவன்’ இதழ் போன்றவற்றின் கணக்குகள்தான் முடக்கப்பட்டிருந்தன. அதே நாள் மாலையில் இந்தக் கணக்குகள் மீதான முடக்கம் நீக்கப்பட்டது.

புதிய மாற்றங்கள்:

  • எலான் மஸ்க் வசம் சென்ற பின்னர், இந்தியா உள்பட – எல்லா நாடுகளிலும் அந்தந்த அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளை ட்விட்டர் நிறுவனம் தயக்கமின்றிப் பின்பற்றுவதாக விமர்சனங்கள் உண்டு. பிபிசி நேர்காணலில் (ஏப்ரல் 12), குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப் படத்தின் இணைப்புகள் பதிவிடப்படுவதைத் தடைசெய்தது குறித்த கேள்விக்குப் பதிலளித்த மஸ்க், “இந்தியா விதிக்கும் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதா அல்லது எனது ஊழியர்கள் சிறைக்குச் செல்ல அனுமதிப்பதா என்னும் கேள்வி எழுந்தால், நான் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதையே தேர்ந்தெடுப்பேன்” என்று பதிலளித்திருந்தார்.
  • இப்போதும் அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்களின் ட்விட்டர் கணக்குகள் தேடுபொறியில் பிரதானமாகத் தெரியாத அளவிலான ஏற்பாடுகள் செய்யப் படுவதாகப் புகார்கள் இருக்கின்றன.

குற்றச்சாட்டின் நம்பகத்தன்மை:

  • எனினும், தனது சமீபத்திய குற்றச்சாட்டுக்குக் காத்திரமான ஆதாரங்களை ஜாக் டோர்ஸி வெளியிடவில்லை. யாரிடமிருந்து எந்த வடிவத்தில் இப்படியான அழுத்தம் தரப்பட்டது என்பதைப் பற்றியும் தெரிவிக்கவில்லை. டோர்ஸி குறிப்பிட்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் ட்விட்டர் நிறுவனத்தைச் சேர்ந்த யாரும் சோதனைக்கு உள்ளாக்கப்படவில்லை, கைது செய்யப் படவில்லை என்று மின்னணு-தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியிருக்கிறார். 2020 முதல் 2022 வரை ட்விட்டர் நிறுவனம் இந்தியச் சட்டங்களைப் பல முறை மீறியதாகக் கூறியிருக்கும் அவர், இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியச் சட்டதிட்டங்களுக்கு உள்பட்டுச் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.
  • ஆனால், ஜாக் டோர்ஸியின் குற்றச்சாட்டு உண்மைதான் என்று பாரதிய கிஸான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் கூறியிருக்கிறார். பொய் சொல்ல வேண்டியஅவசியம் ஜாக் டோர்ஸிக்கு ஏன் வரப்போகிறதுஎன மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் கேள்வி எழுப்பியிருக்கிறார். 2021இல் ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப் பட்டதற்கு அரசின் அழுத்தமே காரணமாக இருக்கக்கூடும் என்றுகாங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது.

விவாதத்துக்குரிய விஷயம்:

  • விவசாயிகளின் போராட்டத்தை முடக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது ஊடகங்களில் விரிவாகவே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. எனவே, விவசாயிகளுக்கு ஆதரவான குரல்கள் - சமூக வலைதளங்களிலும் முடக்கப்பட்டது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான் என்றே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன. எனினும், விவசாயிகளுக்கு ஆதரவான பல பதிவுகள் இன்றும் சமூக வலைதளங்களில் காணக் கிடைப்பதையும், அந்தக் கணக்குகள் முடக்கப்படவில்லை என்பதையும் மத்திய அமைச்சர்களும் பாஜகவினரும் சுட்டிக் காட்டுகின்றனர். விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீராங்கனைகளின் தொடர் போராட்டம் உள்ளிட்டவற்றின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை ஒருபுறம் மத்திய உளவுத் துறை உன்னிப்பாகப் பார்த்து தகவல் திரட்டியது. அதுபோலவே, ‘பிபிசி-யின் ஆவணப்படம், ஜாக் டோர்ஸிபேட்டி போன்ற வெளிநாட்டு சக்திகளின் குற்றச்சாட்டுகளின் பின்னணியையும் உளவுத் துறை கண்டிப்பாகக் கவனிக்க வேண்டும். உலக அரங்கில் வளர்ந்துவரும் இந்தியாவின் மதிப்பைச் சீர்குலைக்கும் நோக்கங்கள் இதன் பின்னால் இருந்தால் அதற்கான எதிர் நடவடிக்கைகளைக் கண்டிப்பாக எடுத்தாக வேண்டும்’ என்பது வலதுசாரி ஆதரவாளர்களின் கருத்து.
  • ‘பிரேக்கிங் பாயின்ட்ஸ்’ பேட்டியில், இந்தியா மீது மட்டுமல்லாமல் துருக்கி மீதும் இதே போன்ற விமர்சனத்தை ஜாக் டோர்ஸி முன்வைத்திருக்கிறார். எனினும், மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாமீதான விமர்சனம் பெரும் விவாதத்துக்கு வழிவகுத்திருக்கிறது. சமூக வலைதளக் கணக்குகள் மட்டுமல்ல,பல்வேறு காரணங்களுக்காக ஒட்டு மொத்தமாக இணையம் முடக்கப் படும் நிகழ்வுகளும் இந்தியாவில் அதிக அளவில் நடைபெறுகின்றன; மணிப்பூர் சமீபத்திய உதாரணம். மேலும், இந்தியாவில் ஊடகச் சுதந்திரத்தின் நிலை குறித்த விமர்சனங்கள் தொடர்கின்றன. ‘எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள்’ (Reporters Without Borders) அமைப்பு இந்த ஆண்டு வெளியிட்டிருக்கும் பட்டியலில், ஊடகச் சுதந்திரத்தில் இந்தியா 161ஆவது இடத்தில் இருக்கிறது. இப்படியான சூழலில், ஊடகங்கள், சமூக ஊடகங்களில் கருத்துச் சுதந்திரம் தொடர்பான ஆக்கபூர்வ விவாதங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம்!

நன்றி: தி இந்து (20  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்