TNPSC Thervupettagam

சமூக ஊடகத்தை ஆக்கிரமிக்கும் நட்சத்திரச் செல்வாக்கு!

September 24 , 2024 63 days 56 0

சமூக ஊடகத்தை ஆக்கிரமிக்கும் நட்சத்திரச் செல்வாக்கு!

  • யூடியூபில் தனது சொந்த அலைவரிசையைத் தொடங்கிய 90 நிமிடங்​களுக்குள் 10 லட்சம் சந்தா​தா​ரர்​களைப் பெற்றிருக்​கிறார் கால்பந்து வீரர் கிறிஸ்​டியானோ ரொனால்டோ. மிக வேகமாக இந்த எண்ணிக்கையை அடைந்த அலைவரிசை என்னும் பெருமை அவரது அலைவரிசைக்குக் கிடைத்​திருக்​கிறது.
  • அதேவேளை​யில், இந்தச் சாதனையின் பின்னணியில் ரொனால்​டோவின் புகழ் வட்டம் முக்கியப் பங்கு​வகிப்​பதுதான் கவனிக்​கத்தக்க விஷயம். ரொனால்டோ ரசிகர்கள் அவரை யூடியூபில் வரவேற்க விரும்​பியதன் விளைவுதான் சந்தா​தா​ரர்​களின் எண்ணிக்கையில் நிகழ்ந்​திருக்கும் இந்தச் சாதனை.
  • சமூக ஊடகம் என்பது பயனாளிகளை மையமாகக் கொண்ட இணைய சேவை எனப் புரிந்​து​வைத்​துள்ள மனது, நிஜ உலகின் நட்சத்​திரச் செல்வாக்கு சமூக ஊடக வெளியிலும் பிரதிபலிப்பதை எப்படிப் புரிந்​து​கொள்வது எனப் புரியாமல் தடுமாறுகிறது. சமூக ஊடகத்தில் சராசரிப் பயனாளிகள் கணிசமான பின்தொடர்​பாளர்கள் அல்லது சந்தா​தா​ரர்​களைப் பெறுவதற்குப் பெரிதும் மெனக்கெட வேண்டி​யிருக்கும் நிலையில், நட்சத்திர அந்தஸ்து மிக்கவர்கள் சமூக ஊடக வெளிக்கு வரும்​போது, அவர்களுக்கான ஆதரவு தங்கத்​தட்டில் வைத்து வழங்கப்​படுவது குறித்து நாம் சிந்திக்க வேண்டி​யிருக்​கிறது.
  • நட்சத்​திரங்கள் நன்கு அறியப்​பட்​ட​வர்களாக இருப்​ப​தால், அவர்களுக்கான சமூக ஊடக ஆதரவும் அதிகமாக இருப்பது இயல்பானது என இதற்குப் பதில் அளிக்​கப்​படலாம். ஆனால், இந்த ஒப்பீடு எண்ணிக்கை அடிப்​படையி​லானது அல்ல: மாறாக, சமூக ஊடகத்​திலும் எண்ணிக்கை சார்ந்த அளவுகோலுக்கு ஏன் நாம் மாறிவிட்டோம் என்பதுதான் கேள்வி. நிஜ உலகில் செல்வாக்கை அளவிடு​வது​போலவே, சமூக ஊடக வெளியிலும் ஏன் செல்வாக்கை நாம் கணக்குப் போட்டுக்​கொண்​டிருக்​கிறோம்?

பயனர்கள் வெளி:

  • சமூக ஊடக வெளி என்பது உரையாடல் பரப்பு என்று சொல்லப்​படு​வ​தில்​லையா? அங்கு கருத்துப் பரிமாற்​றம்தானே முக்கியம். அதைவிட முக்கியமாக, இந்தப் பரப்பு பயனர்​களுக்​கானது அல்லவா? காரணம், பயனர்கள் உள்ளடக்​கத்தை உருவாக்கிப் பகிர்வதன் மூலம், தங்களுக்குள் தொடர்​பு​கொள்ளப் பயன்படுத்தும் இணைய சேவைகளே சமூக ஊடகம் என வரையறுக்​கப்​படு​கின்றன.
  • சமூக ஊடகம் பயனர் வெளி என்பதால், இங்கு பிரபலங்களோ, நட்சத்​திரங்களோ வரக் கூடாது என்பதல்ல: அவர்கள் வரட்டும், வர வேண்டும். ஆனால், நட்சத்​திரங்களாக அல்ல, நண்பர்​களாக, பயனர்​களாக!
  • உண்மை​யில், நட்சத்​திரங்கள் அல்லது பிரபலங்கள் ரசிகர்​களோடு நேரடி​யாகத் தொடர்​பு​கொள்ள வழிவகுக்கும் என்பதே சமூக ஊடகத்தின் பலன்களில் ஒன்றாகக் கருதப்​படு​கிறது. இந்தத் தொடர்​பு​கொள்​ளுதல் உரையாடலுக்​கும், இன்னும் நெருக்கமான புரிதலுக்கும் வழிவகுக்​கும். மாறாக, நட்சத்​திரங்​களின் சமூக ஊடகப் பிரவேசத்​திலும் பயன்பாட்​டிலும் இப்போது நிகழ்வது வெற்றுக் கொண்டாட்​ட​மாகவே இருக்​கிறது.
  • இந்தக் கொண்டாட்​டத்தின் வணிக நோக்கிலான பிரதிபலிப்​பாகச் சமூக ஊடகப் புள்ளி​விவரங்கள் அல்லது எண்ணிக்கைகள் அமைகின்றன. சமூக ஊடகம் என்னும் பயனர் வெளி வணிகமய​மாக்​கப்​பட்​டிருப்பதன் விளைவு இது. சமூக ஊடகச் சேவைகள் உரையாடலுக்கான கருவியாக அல்லாமல், விளம்பர நோக்கில், அதற்கான உத்தி​களோடு பயன்படுத்​தப்​படு​வ​தால், இதில் செல்வாக்கும் வீச்சும் முக்கிய​மாகி, எண்ணிக்கை விளையாட்டாக மாறிவிடு​கிறது.

விளம்பர நோக்கம்:

  • பதிவு​களும் பகிர்​வு​களும் ஒரு தொழில்​முறைத்​தன்​மையோடு, திட்ட​மிட்டு மேற்கொள்​ளப்​படு​கின்றன. எல்லா​வற்றிலுமே மேற்பூச்சும் அலங்காரமும் மட்டுமே மின்னுகின்றன. மனம் திறந்த உரையாடலுக்குப் பதிலாக எழுதித் தயார் செய்யப்​பட்டு, ஒத்திகை பார்க்​கப்பட்ட பதிவுகள் தொழில்முறை வல்லுநர்​களின் மேற்பார்​வை​யில், விளம்பரக் கலைஞர்​களின் உதவியோடு பகிர்ந்​து​கொள்​ளப்​படு​கின்றன.
  • சமூக ஊடக வெளியிலும், நட்சத்​திரங்கள் புகழ் மகுடங்​களோடு மட்டுமே வலம்வரு​கின்​றனர். பயனர்களோ ரசிகர்​களாகிக் கைத்தட்​டலைத் தொடர்​கின்​றனர். சமூக ஊடகத்தின் நெடிய வரலாற்றில் நாம் வந்தடைந்​திருக்கும் கட்டம் இதுதான்.
  • அதேநேரம், சமூக ஊடகம் என்பது பாரம்பரிய ஊடகங்​களில் இருந்து வேறுபட்ட தன்மை கொண்டது எனச் சொல்லப்​படுவதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதுவரையான வெகுமக்கள் ஊடகங்கள், மேலிருந்து கீழே தகவல் அளிக்கும் வகையில் செயல்​படும் இயல்பு கொண்டவை. ஓரிடத்தில் இருந்து எண்ணற்​றவர்​களுக்குத் தகவல் அளிக்கும் செயல்​முறையைக் கொண்டவை.
  • வெகுமக்கள் ஊடகத்தின் - ஒன்றில் இருந்து பலருக்கான (one-to-many) தகவல் கடத்தும் முறைக்கு மாறாக, ஒரே நேரத்தில் பலர் பலரோடு (many-to-many) தொடர்​பு​கொள்ள வழி செய்வதே சமூக ஊடகத்தின் தனித்​தன்​மை​களில் ஒன்றாகக் கருதப்​படு​கிறது. ஆனால், மேற்கண்​டதில் நிகழ்வது கடத்துதல் அல்ல பகிர்வு என்பது கவனிக்​கத்​தக்கது.
  • அதோடு சமூக ஊடகத்தின் மற்றொரு ஆதார அம்சமாகச் சொல்லப்​படுவது அதன் பங்கேற்​புத்​தன்மை. பயனர்கள் இதில் கருத்துத் தெரிவிக்​கலாம், உரையாடலாம், வாதிடலாம், புதிதாக உருவாக்​கவும் செய்ய​லாம். பயனர்கள் ஒத்த கருத்து​களாலும், ஒருமித்த ஆர்வத்​தா​லும், ஒன்று​திரண்டு தங்களுக்கான சமூகத்தை அமைத்​துக்​கொள்ள வழிவகுப்பதே சமூக ஊடகத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகக் கருதப்​படு​கிறது.

பயனர்களே கேளுங்கள்!

  • இந்தப் பயனர் சமூகங்​களின் செல்வாக்கை உணர்ந்தே ரசிகர்​களுடன் உரையாடச் சமூக ஊடக வெளிக்கு, அவர்கள் முன் தங்கள் இருப்பை உணர்த்த பிரபலங்கள் வருவதாகக் கொள்ளலாம். இந்த இடத்தில், வலுவான இணையச் சமூகங்​களில் ஒன்றாகக் கருதப்​படும் ‘ரெட்​டிட்​’(Reddit) தளத்தில், அடிக்கடி நிகழ்த்​தப்​படும் ‘ஆஸ்க் மீ எனிதிங்’ (AMA) இணையச் சந்திப்புகளை நினைத்துப் பார்ப்​பதும் பொருத்தமாக இருக்​கும்.
  • பிரபலங்​களும் நட்சத்​திரங்​களும் எந்த முன்நிபந்​தனையும் இல்லாமல், திறந்​தமனதோடு, ரசிகர்கள் (பயனர்கள்) கேட்கும் எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்கத் தயார் எனும் மனநிலையில் வந்து நிற்பதே இந்த இணைய உரையாடலின் முக்கிய அம்சம். அமெரிக்க அதிபர் உள்ளிட்ட தலைவர்​களும், முன்னணித் தொழில் முனைவோரும் ரெட்டிட் சமூகத்தின் முன்னால் ‘உங்கள் கேள்வி​களைக் கேளுங்கள்’ என வந்து பதில் சொன்னது உண்டு.
  • இப்படிப் பயனர்களை மையமாகக் கொண்ட சமூக ஊடக வெளி, மெல்ல வணிக நோக்கம் மேலோங்கும் ஊடக வெளியாக மாற்றப்​பட்​டிருக்​கிறது. இதில் நட்சத்​திரங்​களும் பிரபலங்​களும் வர்த்தக எதிர்​பார்ப்புடன், வணிக உத்தி​களோடு வருவது கவலைகொள்ள வைக்கிறது.
  • நட்சத்​திரங்கள் வருகை மட்டும் அல்ல, முன்னணி இயக்குநர்கள் அல்லது நடிகர்​களின் படங்களுக்கான முன்னோட்டக் காட்சிகள் வெளியானால்​கூடச் சில மணி நேரத்தில் இத்தனை பார்வைகள் என எண்ணிக்கைக் கணக்கு கொண்டு பார்ப்பது வணிக நோக்கம்​தானே. இந்தப் பார்வை குவிவதில் சமூக ஊடக மேடைகளின் அல்காரிதம்கள் பங்களிப்பும் இயல்பான ஒன்று​தானா?

உரையாடல் எங்கே

  • ஒரு கிரிக்கெட் வீரர் யூடியூப் அலைவரிசை மூலம் ரசிகர்​களைச் சந்திக்​கும்​போது, அவரது புகழையும் செல்வாக்கை​யும்விட, கிரிக்கெட் கள அனுபவங்​களை​யும், வல்லுநர் பார்வையையும் நேரடி​யாகப் பகிர்ந்​து​கொள்ள வருகிறார் என்பதைத்தானே முக்கிய​மாகக் கருத வேண்டும். அவர் பகிர்ந்​து​கொள்ளும் கருத்​துதான் முதன்​மை​யானதே தவிர, அவருடைய பகிர்​வு​களுக்கான பார்வை​யாளர் எண்ணிக்கை அல்ல; அதோடு, ரசிகர்​களின் கருத்து​களுக்கு அவர் பதில் கருத்து அளித்து உரையாடு​வதுதான் இன்னும் முக்கியம்.

நிற்க, இந்த அலசல் ரொனால்டோ யூடியூப் சாதனை தொடர்​பானது அல்ல:

  • ரொனால்​டோவுக்கு முன்னரே எண்ணற்ற நட்சத்​திரங்களை நாம் சமூக ஊடகத்தில் எண்ணிக்கை கொண்டு அளவிட்டு மகிழ்ந்​திருக்​கிறோம். இதை முன்னெடுப்​ப​தி​லும், ஊக்கு​விப்​ப​திலும் முன்னணிச் சமூக ஊடக சேவைகளுக்குப் பங்கிருக்​கிறது. விளம்பர நோக்கமும் லாப வேட்கையுமே அவற்றின் இலக்காக இருக்​கலாம். அதற்கு அல்காரிதம்கள் துணைநிற்​கலாம்.
  • இது சமூக ஊடகத்தின் ஆதாரத்​தன்மை மாறி, அவற்றின் வளர்ச்சிப் பாதை தடம்மாறுவதன் அடையாள​மாகவும் அமைகிறது. மக்கள் போராட்​டங்​களுக்கு வழிவகுத்த சமூக ஊடகங்கள், இப்போது அரசியல் கட்சிகளின் பிரச்​சாரக் கருவிகளாக மாற்றப்​பட்டு வருவதையும் இங்கு பொருத்​திப்​பார்க்க வேண்டும். மற்றொரு பக்கம் இன்னும் பலரால், துவேஷம் சார்ந்த கொள்கைகளை​யும், சதிக் கோட்பாடு​களையும் முன்னெடுக்கப் பயன்படுத்​தப்​படுவது இன்னொரு வேதனை.
  • எல்லாப் பயனாளி​களும் சமூக ஊடகங்​களில் புழங்​கு​வ​தால்தான் நட்சத்​திரங்​களும், அரசியல் தலைவர்​களும், இன்னும் பிறரும் அவர்களைத் தேடிச் சமூக ஊடகங்​களுக்கு வருகை தருகின்​றனர். ஆனால், அவர்கள் பயனர்களை வென்றெடுப்பதை எண்ணிக்கைக் கண்கொண்டு பார்க்கப் பழகுவ​தால், புதிய ஊடகத்தின் தன்மையோடு அறிமுகமான சமூக ஊடகத்தின் ஆற்றலைப் பயனர்கள் கைநழுவ விட்டுக்​கொண்​டிருக்​கின்றனர் என்கிற பெருவருத்தமே மேலிடுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்