TNPSC Thervupettagam

சமூக நீதி வரலாற்றில் புதிய திருப்பம்

August 9 , 2024 159 days 178 0
  • தாழ்த்​தப்பட்ட அருந்​ததியர் சமூகத்துக்குத் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட 3% இடஒதுக்கீடு செல்லும் என்று உறுதி​ செய்து உச்ச நீதிமன்றம் வழங்கி​யிருக்கும் தீர்ப்பு, சமூக நீதியை நிறுவனப்​படுத்​துதலில் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு என்பதை உறுதிப்​படுத்தி​யிருக்​கிறது.
  • சுதந்​திரத்துக்கு முன்னரே 1923இல் நீதிக்​கட்சி ஆட்சி​யினால் உருவாக்​கப்பட்ட சமூகநீதிக் கொள்கை​களின் அறுபடாத தொடர்ச்​சியின் வரலாற்றுப் பின்னணி இதற்கு ஆதாரமாகிறது. மாநில அரசின் உரிமைகள் அடிப்​படை​யிலும், மாநில சுயாட்சி - கூட்டாட்சித் தத்து​வத்தின் கண்ணோட்​டத்​திலும் பார்க்​கும்​போது, இந்தத் தீர்ப்பு இந்திய அளவில் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தது.

பின்னணி:

  • 1980களில் தொடங்கி இடஒதுக்​கீட்டுப் போராட்​டம் இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கும் ‘மக்கள்​தொகைக்கு ஏற்ப அரசியல் பிரதிநிதித்​துவம், கல்வி - வேலைவாய்ப்பு​களில் உரிய சம வாய்ப்புகளை வழங்க வேண்டும்’ என்று பல்வேறு தளங்களில் அழுத்தம் தரும் வகையில் நடந்துவந்தது.
  • ஆனால், 1990களுக்குப் பிறகு தமிழ்​நாட்டில் ஏற்பட்ட சாதிக் கலவரங்கள், அவற்றைத் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு சமூக அரசியல் மாற்றங்​களினால் தாழ்த்​தப்பட்ட அருந்​ததியர் சமூகத்தின் உள் இடஒதுக்கீடு கோரிக்கை அவ்வளவாகக் கவனம் பெறவில்லை.
  • இந்த நீண்டகாலக் கோரிக்கையை வலியுறுத்திப் பல்வேறு மாவட்​டங்​களில் அருந்​ததியர் சமூக அரசியல் அமைப்புகள் இடைவிடாது போராட்​டங்களை நடத்திவந்தன. கல்வி​யிலும் பொருளாதா​ரத்​திலும் மிகவும் பின்தங்கிய சமூகமாக இருந்​ததால் ‘வாக்கு வங்கி’யை முன்னிறுத்தி அதிகார பேர அரசியல் செய்வது சாத்தி​யமில்லாத ஒன்றாக இருந்தது.
  • 2009 இல் முதல்வர் மு.கருணாநிதி தலைமை​யிலான திமுக ஆட்சிக் காலத்தில் தாழ்த்​தப்பட்ட வகுப்பு​களில் மிகவும் பின்தங்கிய அருந்​ததியர் சமூகத்துக்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்கப்​பட்டது. அதற்கு முன் பஞ்சாப், ஹரியாணா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்​களில் தாழ்த்​தப்பட்ட சமூகங்​களில் பின்தங்கிய சமூகங்​களுக்கு இடஒதுக்கீடு தரும் உரிமை மாநில அரசுகளுக்குக் கிடையாது என்கிற நீதிமன்றத் தீர்ப்பு இதற்குத் தடையாக இருக்குமோ என்கிற குழப்பம் நீடித்தது.
  • சென்னை, திருவள்​ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட வட மாவட்​டங்​களி​லும், மதுரைக்குக் கீழ் உள்ள தென்மாவட்​டங்கள் அனைத்​திலும் கணிசமாக வாழ்ந்​து​வரும் நில உடைமை இல்லாத அமைப்​புசாராத் தொழில் செய்யும் சமூகம் அருந்​ததியர் சமூகம். அதிலும் நகர்ப்​புறங்​களில் பெரும்​பாலும் தூய்மைப் பணியாளர்களாக வாழ்ந்​து​வரும் தீண்டத்தகாத விளிம்​புநிலைச் சமூகம் என்கிற அடையாளம் அவர்களது அரசியல் பங்கேற்​புக்குப் பெரும் தடைக்​கல்லாக இருந்தது.
  • 12 தனித் தொகுதிகள் உள்பட மொத்தம் 82 பொதுத் தொகுதி​களில் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் அரசியல் சக்தியாக இருந்தும் அனைத்துக் கட்சிகளின் சார்பாக இதுவரை அதிகபட்சமாக ஐந்து சட்டமன்ற உறுப்​பினர்​களைக்​கூடப் பெற இயலாத கடைநிலை தலித் சமூகமாகவே உள்ளது.
  • மற்றொரு​புறம், 1990களில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையால் உருவான தாராளமய​மாக்கல், தனியார்​மய​மாக்கல், உலகமய​மாக்கல் ஆகியவற்றால் ஏற்பட்ட சமூகப் பொருளாதார மாற்றங்​களில் தனியார் நிறுவனங்கள், ‘திறமையின் அடிப்​படை​யிலான வேலைவாய்ப்​பு’களில் இடஒதுக்கீடு என்கிற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலையை ஏற்படுத்தின.
  • இதன் தாக்கமாக அதற்கடுத்த பத்தாண்டுகளில் பின்தங்கிய சமூகங்​களின் வளர்ச்​சியில் பொருளாதா​ரத்தின் முக்கியத்து​வத்தை உணர்த்தியது. இந்த நெருக்​கடியான தருணத்தில் அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்களை முன்னிறுத்தி, ‘சமூக மேம்பாட்​டுக்கு இடஒதுக்​கீட்டில் உள் இடஒதுக்கீடு தேவை’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அருந்​ததி​யர்கள் போராட்​டங்களை நடத்தி ஆட்சி​யாளர்​களின் கவனத்தை ஈர்க்க முயன்​றனர்.

பிற மாநிலங்​களில்...

  • இதே சமயத்தில், இதே மாதிரியான கோரிக்கையை ஆந்திரப் பிரதேசத்தில் மந்த கிருஷ்ண மாதிகாவின் தலைமை​யிலான மாதிகா இடஒதுக்கீடு போராட்ட இயக்கமான – ‘தண்டோரா’ வலுவாக முன்னெடுத்தது. இதையடுத்து, 2001இல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமை​யிலான தெலுங்கு தேசம் அரசு, தாழ்த்​தப்பட்ட சமூகங்களை ஏ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாக வகைப்​படுத்தி, இடஒதுக்​கீட்டு அரசாணைகளைப் பிறப்​பித்தது.
  • இந்த வகைப்​படுத்​துதல் ஆந்திர, கர்நாடக மாநில தலித் அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்​பியது. ஒன்றுபட்ட தலித் சமூகங்​களைப் பிரித்​தாளும் சூழ்ச்சி என்று விமர்​சனமும் எழுந்தது. இந்த இடஒதுக்​கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்​றத்தில் வழக்குத் தொடுக்​கப்​பட்டது (சின்னையா வழக்கு). அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வகைப்​பாட்டின் அடிப்​படை​யிலான இடஒதுக்​கீட்டை வழங்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை; எனவே, இந்த இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்​பானது என்று தீர்ப்பு வழங்கியது.
  • அதன் அடிப்​படை​யில், தாழ்த்​தப்பட்ட மக்களில் சமூக பொருளாதாரத் தளங்களில் மிகவும் பின்தங்கிய வகுப்​பினருக்குத் தனி இடஒதுக்கீடு வழங்குவது குறித்துப் பெரும் விவாதங்கள், ஆலோசனைகள் நடத்தப்​பட்டு வந்தன. இதற்கெல்லாம் முன்மாதிரியாக 1975 முதல் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்​களில் சமர், வால்மீகி, மசாபி சமூகங்​களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்ட வழக்கும் பல ஆண்டு காலமாக விசாரணையில் இருந்தது.
  • ஏற்கெனவே, பிற்படுத்​தப்​பட்​டோருக்கான மண்டல் குழுவின் பரிந்​துரையில் பல சமூக - அரசியல் மாற்றங்​களைக் கண்ட உத்தரப் பிரதேசம், பிஹார், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட முக்கிய வட மாநில சமூக, அரசியல் அமைப்புகள், தாழ்த்​தப்பட்ட மக்களுள் பின்தங்கிய சமூகத்​தவர்களான ‘மகாதலித்’ குறித்த உரையாடலைத் தொடங்கி, அரசியல் கட்சிகளுக்குள் அவர்களுக்கான உரிய பிரதிநிதித்​துவம், அதிகாரத்தில் பங்கு உள்ளிட்ட அம்சங்களை விவாதத்துக்கு உள்படுத்தின.
  • 1980களில் தொடங்​கப்பட்ட உள் இடஒதுக்கீடு கோரிக்கையை 2000க்குப் பிறகு, பல்வேறு அரசியல் இயக்கங்கள் தீவிரப்​படுத்தின. இந்த இக்கட்டான அரசியல் சூழலில்தான் தமிழ்​நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளை உரையாட​வைத்து, சமூகநீதிக் கோட்பாட்டின் மீது கொள்கை அடிப்​படை​யிலான ஆதரவு அளிக்​குமாறு கேட்டுக்​கொண்டு தேசிய, மாநிலக் கட்சிகளை அருந்​ததியர் சமூக இயக்கங்கள் அணுகின.
  • அதற்கு நேர்மறையான ஆதரவு கிடைத்தது, உள் இடஒதுக்கீடு கோரிக்கை வலிமைபெற முக்கிய​மானதாக அமைந்தது. 2009இல் அன்றைய முதல்வர் மு.கருணாநிதியால் ‘உள் இடஒதுக்​கீடு’ குறித்த கருத்​தாக்கம் அனைத்துக் கட்சி​யினர் மத்தியில் முன்வைக்​கப்​பட்டு, பெரும்​பான்மை ஆதரவுடன் உருவானது.
  • ‘ஆந்திரப் பிரதேச மாநில வகைப்​பாட்டுச் சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்​பானது’ என்றும், மாநில அரசின் அதிகார வரம்புக்குள் வராது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்​பளித்​து​விட்ட பிறகு, அதை மீள்பார்​வைக்கு எடுத்துக்​கொண்டு எதிர்​காலத்தில் எந்தச் சட்டச் சிக்கல்​களுக்கும் இடமளிக்​காமல் அரசமைப்புச் சட்டத்தின் வரையறைகளுக்கு உள்பட்டு, உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து விரிவாக ஆலோசிக்​கப்​பட்டது.
  • அதற்கு ஆதாரமாக அரசின் பல்வேறு துறைகளில் இருந்து தாழ்த்​தப்பட்ட அருந்​ததி​யர்​களின் பிரதிநிதித்​துவம் குறித்த தரவுகளின் அடிப்​படையில் நடைமுறைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, ‘உள் இடஒதுக்​கீட்டை’ சாத்தி​ய​மாக்​கியதுதான் சமூக நீதிக் கொள்கையின் வழிவந்த தலைமையின் வரலாற்றுத் தனிச் சிறப்பு. அந்தச் சமூக மேம்பாட்டு அக்கறை​யுடன் கூடிய அரசியல் பார்வைதான் தற்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடித்​தளமாக அமைந்திருக்கிறது.
  • ஜனநாயகத்தில் விமர்​சனத்துக்கு உள்படாத கொள்கைகள் எதுவும் இல்லை. அருந்​ததி​யருக்கான உள் இடஒதுக்கீடு சார்ந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் அதற்கு விதிவிலக்​கல்ல. இருப்​பினும், அதன் நியாயத்தைப் புரிந்து​கொண்ட அநேக அரசியல், சமூக அமைப்புகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றிருக்​கின்றன.
  • கூட்டுச் சமுதாயத்தில் பின்தங்கிய சமூகத்தின் முன்னேற்​றமும் முக்​கியம் என்​ப​தைப் புரிந்து​கொள்ள வேண்டும். அதேவேளை, ‘இடஒதுக்​கீடு’ என்ப​து சமூக நீதிக் கோட்​பாட்​டின் சட்​டரீதியான செயல்​திட்​டத்​தின் ஒரு பரிமாணம் மட்​டுமே. கடைநிலை தலித் சமூகத்துக்கு இதுவே சர்வரோக நிவாரணி அல்ல. இது​குறித்த புரிதல் சமூகத்​தில்​ உரு​வாவது​ம்​ அவசி​யம்​!

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்