TNPSC Thervupettagam

சமூக மாற்றம் தேவை

December 3 , 2020 1509 days 893 0
  • ஒருவருக்கு பிறப்பு நிலையில் அல்லது வாழ்க்கையின் இடைப்பட்ட காலங்களில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டு விடும்போது அவர்கள் தங்களது திறமைகளை வேறு வகைகளில் வெளிப்படுத்துவர்.
  • அது மட்டுமின்றி அவர்கள் செய்யும் சாதனைகள் பிற மனிதர்களால் சாதிக்க முடியாதவை என்பதை  நடைமுறையில் பார்த்து வருகிறோம்.
  • கடந்த 1981-ஆம் ஆண்டினை "சர்வதேச மாற்றுத் திறனாளிகளின் ஆண்டு' என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
  •  அதனைத் தொடர்ந்து 1992-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ஆம் தேதி பன்னாட்டு மாற்றுத் திறனாளிகள் நாளாக உலக நாடுகளால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
  • வரலாற்றையே மாற்றுத்திறனாளிகள் மாற்றிக் கட்டமைத்துள்ளனர். அவர்களில் முதலில் இருப்பவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். கணித மேதை - இயற்பியலாளர் என பல முகங்களைக் கொண்ட ஐன்ஸ்டீன், தனது மூன்று வயது வரை பேச முடியாமல் இருந்தார்.
  • இதே போல், அலெக்சாண்டர் கிரஹாம்பெல் கற்கும் திறமையற்ற மாற்றுத் திறனாளி. ஆனால், இவர் கண்டுபிடித்த தொலைபேசிதான் புதிய கற்றல் முறையையே இன்று சமூகத்திற்கு வழங்கியுள்ளது.
  • சிறந்த அறிவியல் சிந்தனையாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தனது 12 வயது வரை கற்றல் திறமையற்று அவதியுற்றார். மூளைக்கோளாறு உள்ளவர் என்று கருதப்பட்ட இவரின் சாதனைகளைப் பட்டியலிட்டால் உலகம் விழித்துக்கொள்ள இவரும் காரணமாகி இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
  • முன்னாள் அமெரிக்க அதிபரான உட்ரோ வில்சன், பெரிய சாதனையாளர்களான வால்ட் டிஸ்னி, டாம் குரூஸ் ஆகியவர்கள்கூட கற்க முடியாத குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளே.
  •  ஆனால், இவர்கள் நிகழ்த்திய சாதனைகள் ஒரு சமூகத்தின் எழுச்சியாகவே உள்ளது.  தற்போது பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் நிகழ்த்தப் பெறும் சாதனைகள் சாதாரண நிலையில் உள்ளோரும் செய்ய முடியாத சாதனைகளாக உள்ளன.
  • நமது நாட்டில் 1955-ஆம் ஆண்டிலேயே மாற்றுத் திறனாளிகளுக்காக "சம வாய்ப்பு உரிமைப் பாதுகாப்பு - சமூகத்தில் முழுப் பங்கெடுப்பு' என்னும் சட்டம் இயற்றப்ட்டது.
  •  அந்த சட்டம் கடந்த 2016-இல் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் மாற்றியமைக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • "மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016'-இன் மூலம் அவர்கள் தங்களுக்கான கூடுதல் உரிமைகளையும் முன்னுரிமையையும் பெற்று வருகிறார்கள்.
  • மன இறுக்கம், பெருமூளை வாதம், மன பின்னடைவு, இவற்றுடன் வேறு பல வகை குறைபாடுகள் (மல்டிபில் டிஸ்எபிலிடீஸ்) உடையவர்களின் நலனுக்கான தேசிய அறக்கட்டளை நிறுவப்பட்டது.
  • 1999-இல் இந்தியக் குடியரசின் 50-ஆவது ஆண்டையொட்டி நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு அதன் மூலம்  மாற்றுத் திறனாளர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
  • அத்துடன் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நாடு முழுதும் மாற்றுத் திறனாளர்களுக்குத் தேவைபடும் செயற்கை உறுப்பு உதவிகளைக்  கண்டறிந்து அவற்றை மத்திய அரசின் நிறுவனமான "அலிம்கோ' (ஆர்ட்டிபிஷியல் லிம்ப் மேனுபாக்சரிங் கம்பெனி) மூலம் இலவசமாகவே வழங்கி வருகிறது.
  • அது போலவே, தமிழக அரசும் மாற்றுத் திறனாளிகளின் நலன் காப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.
  • ஏற்கனவே உள்ள சட்டம் வலுப்பெறும் வகையில் தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நல உரிமை விதிகள் 2018 அரசாணை வெளியிட்டது.
  • மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் அவர்களுக்கான உதவிகள், நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அத்துறைக்கென  மூத்த நிலை அதிகாரிகள்  நியமிக்கப்பட்டு மாற்று திறானளிகளுக்கான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
  • நமது நாட்டில் கடந்த 2016 வரை மாற்றுத் திறனாளிகளுக்கான வரையறையில் ஏழு வகையினர் மட்டுமே இருந்தனர். 2016 மாற்றுத் திறனாளிகள் நல உரிமை சட்டத்தின்படி 21 வகையான குறைபாடு உடையவர்கள் மாற்றுத் திறனாளர்கள் என வகைப்படுத்தப்பட்டனர். அந்த குறைபாடு உடையவர்களும் அரசின் நலத் திட்ட பயன்களைப் பெற்று வருகிறார்கள்.
  • அதாவது, தவழும் மாற்றுத்திறனாளிகள், தொழு நோயால் பாதிக்கப்பட்டவர், பெருமூளை வாதம், குள்ள வாதம், தசைச் சிதைவு பாதிப்பு,அமில வீச்சினால் பாதிப்பு, பார்வைக் கோளாறு, பார்வையின்மை, குறைந்த அளவு பார்வை, பேச்சுத் திறன் குறைபாடு, கேட்கும் திறன் குறைபாடு, கேட்கும் மற்றும் பேசும் குறைபாடு, குறிப்பிட்ட கற்றல் திறன் குறைபாடு, மன இறுக்கக் குறைபாடு, மன நோய் குறைபாடு,  நடுக்கம், பலவை திசு இறுக்கம் போன்ற நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு, ரத்தம் உறையாத் தன்மை, ரத்த அழிவு சோகை, ரத்தம் சம்பந்தமான நோய்கள் போன்ற 21 வகையான குறைபாடுகளை (40 சதவீதத்திற்கும் அதிகமான குறைபாடு இருக்க வேண்டும்) மாற்றுத் திறனாளிகள்  பட்டியலில் சேர்த்து அவர்களுக்கான உதவிகளை அரசு அளித்து வருகிறது. 
  • சமீபத்திய அரசின் ஆணைப்படி கல்வியில் 5%, வேலை வாய்ப்பில் 4% ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. மாற்றுத் திறனாளர்கள் சுயதொழில் செய்திட தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு நிதிக் கழகம் மாநில முகமையாகச் செயாலாற்றி வருகிறது. இக்கழகம் வகைப்படுத்தப்பட்ட பல்வேறு தொழில்களுக்கு வட்டி மானியத்துடனான கடனுதவிகளை அளித்து வருகிறது. 
  • அரசும், தொண்டு நிறுவனங்களும் மாற்றுத் திறனாளர்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கின்றன. ஆனாலும், மாற்றுத் திறனாளிகளின் வாழ்வியலைப் புரிந்து செயல்படும் அளவுக்கு இந்த சமூகம் இன்னும் கட்டமைக்கப்படவில்லை.
  • விரைவில் அவ்வாறு கட்டமைக்கப்படும் என்று நம்புகின்றனர் மாற்றுத் திறன் கொண்ட நம் சகோதர சகோதரிகள்.

இன்று (டிசம்பர் 3)  உலக மாற்றுத் திறனாளர்கள் நாள்.

நன்றி :தினமணி (03-12-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்