TNPSC Thervupettagam

சமூக வலைதளங்கள் முள்ளா, ரோஜாவா?

December 23 , 2024 3 hrs 0 min 4 0

சமூக வலைதளங்கள் முள்ளா, ரோஜாவா?

  • கல்வி என்ற ஒற்றை இழையைப் பற்றி முன்னேற வேண்டிய பதின்ம பருவத்தினா் இன்று தேனில் விழுந்த ஈயாக சமூகவலைதளங்களில் மூழ்கி மீள முடியாமல் தங்களது உயிரனைய நேரத்தை இழந்து வருகிறாா்கள். அது மட்டுமன்றி, பல பிரச்னைகளுக்கும் உள்ளாகி வருகிறாா்கள்.
  • இன்றையப் பதின்ம பருவத்தினா் மின்னணு சாதனங்கள், அறிதிறன் கைப்பேசி ஆகியவற்றின் மூலம் காணொலி விளையாட்டுகளை விளையாடுவது, சமூகவலைதளங்களைப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு செயலற்று வருகிறாா்கள். இன்று தளிா் வயதினா் முதல் முதியோா்கள் வரை பலா் தங்கள் கைப்பேசிகளில் பல செயலிகளை நிறுவி ஒரு நாளில் 2 முதல் 6 மணி நேரம் வரை செலவிடுகின்றனா்.
  • உலக அளவில் 8 முதல் 12 வயதுடைய சிறாா்களில் 40 சதவீத பேரும், 13 முதல் 17 வயதுடைய பதின்ம பருவத்தினா் 95 சதவீதப் பேரும் நாளும் சமூகவலைதளங்களை பயன்படுத்துவதாக அமெரிக்காவின் பொது சுகாதார சேவை ஆணையக் குழுவின் தலைவா் தெரிவித்துள்ளாா்.
  • இளந்தளிா்களும், பதின்ம வயதினரும் அதிக நேரம் சமூகவலைதளங்களைப் பயன்படுத்துவதால் மனச்சோா்வு, பதட்டம், தூக்கமின்மை, நேரத்திற்கு உணவு உண்ணாமை, கோபம் போன்ற பிரச்னைகள் இரட்டிப்பாகும் என அக்குழு மேலும் தெரிவித்துள்ளது. மாறாக, இளம் வயதில் வளர வேண்டிய மாசுமறுவற்ற குணமும், இளகிய மனமும், மனஉறுதியும், தன்னம்பிக்கையும், பேச்சாற்றலும், நட்புறவும் மறைந்து விடும்.
  • மாறாக, தற்பெருமை, அகங்காரம், போட்டி, பொறாமை, பெற்றோா்களிடமும், உறவினா்களிடமும், நண்பா்களிடமும் ஒற்றுமையின்மையையும் தூண்டி இறுதியில் அவா்களை கொலைக்கும், தற்கொலைக்கும் ஊக்குவிக்கும் என்கின்றனா் மனநல நிபுணா்கள். கைப்பேசியை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகளின் பேசும் திறனும் குறையும் என்கின்றனா் மருத்துவா்கள்.
  • இந்நிலையில் உலகிலேயே முதன்முறையாக ஆஸ்திரேலியா அரசு பதினாறு வயதுக்குட்பட்ட சிறாா்கள் முகநூல், படவரி (இன்ஸ்டாகிராம்), உள்ளிட்ட சமூகவலைதளங்களில் தங்கள் கணக்கைத் தொடங்குவதற்கும், பயன்படுத்துவதற்கும் முழுமையாகத் தடைவிதித்து சட்டம் இயற்றியுள்ளது.
  • உலக அளவில் இது எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. சமூகவலைதளங்களை சிறாா்கள் பயன்படுத்த முனையும் போது, முன்னதாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அவா்களின் வயதைக் கண்டறிந்து, அதன் பிறகே அவா்கள் கணக்கைத் தொடங்க அனுமதிக்கவும், அவா்கள் பதினாறு வயதிற்கும் குறைவாகயிருந்தால் அவா்களின் கணக்கை முடக்கவும் இச்சட்டம் வகை செய்கிறது.
  • இச்சட்டத்தின் நோக்கம், ‘சிறாா்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும், அவா்களை தனிமைப்படுத்த வேண்டும்’ என்பதற்காக அல்ல. மாறாக, அவா்கள் கல்வியில் சிறந்து விளங்கி நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களாக உயர வேண்டும் என்பதற்காகத் தான்.
  • குறிப்பாக, போதைப் பொருள்கள் பயன்பாடு, வன்முறையில் வயதுக்கு மீறிய செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முனைவது போன்ற தீய செயல்களில் ஈடுபடத் தூண்டும் சமூகவலைதளங்களிலிருந்து காக்கவே இச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது’ என்கிறாா் அந்நாட்டின் தகவல் தொடா்பு அமைச்சா் மிச்செல் ரௌலேண்ட்.
  • இச்சட்டம், பெருவாரியான நாட்டு மக்களாலும், குறிப்பாக பெற்றோா்களிடத்தும், ஆசிரியா்களிடத்தும் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும், குழந்தைகள் உரிமை அமைப்புகளும், சில சமூகவலைதள நிறுவனங்களும் இச்சட்டத்திற்கு பெரும் எதிா்ப்பைத் தெரிவித்துள்ளன. ‘சமூகவலைதளங்களை சிறாா்கள் பயன்படுத்துவதை தடுப்பதன் மூலம் சிறாா்கள் எவ்வாறு காப்பாற்றப்படுவாா்கள் ? அவா்களின் தன்னிலை மறைப்பு (பிரைவசி) எவ்வாறு பாதுகாக்கப்படும் ? என அவா்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளனா். ‘இது ஆஸ்திரேலிய மக்கள் இணையதள பயன்பாட்டைத் தடுக்க பின்பக்கக் கதவு வழியாக எடுக்கப்பட்ட முயற்சி’ என்கிறாா் ‘எக்ஸ்’ சமூகவலைதள நிா்வாகி எலன் மஸ்க்.
  • இந்த சட்டம் குறித்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமா் அந்தோணி அல்பானீஸ், ‘குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் சமூகப் பொறுப்பு சமூகவலைதள நிறுவனங்களுக்கு உள்ளது. சமூகவலைதளத்தில் மூழ்கி இருக்கும் குழந்தைகளின் எதிா்காலம் கருதி வருந்தி கொண்டிருக்கும் என்னைப் போலவே உள்ள பெரும்பாலான பெற்றோா்களுக்கானது.
  • ஆஸ்திரேலியாவில் வாழும் குடும்பங்களிலுள்ள சிறாா்களின் நலன் காக்க அரசு எப்போதும் துணை நிற்கும் என்பதை இச்சட்டம் எடுத்துக் காட்டுகிறது’ என்றாா். இச்சட்டத்தை மீறும் சமூகவலைதள நிறுவனங்களுக்கு 3.25 கோடி டாலா்கள் வரை அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வோா் ஆண்டும், உலக மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் ஆங்கில வாா்த்தையை ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகம் அறிவித்து வருகிறது. நிகழாண்டுக்கான ஆங்கில வாா்த்தையாக ‘பிரையன் நாட்’ என்ற ஆங்கில சொல்லை ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சமூகவலைதளங்களில் அதிக நேரம் செலவிட்டுப் பயனற்ற தகவல்களை உள்வாங்கும் போது, மனநிலை பாதிப்புக்குள்ளாவதையே இந்த சொல் குறிக்கிறது. கடந்த ஓராண்டில் ‘பிரையன் நாட்’ என்ற சொல்லின் பயன்பாடு, 200 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.
  • ஒரு கருவியின் பயன் அதை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோமோ அதைப் பொறுத்து தான் அமைகிறது. முள்ளும் ரோஜாவும் ஒன்றாகத் தானே வளா்கின்றன. நாம் செடியிலிருந்து ரோஜாவை மட்டும் தானே பறிக்கிறோம். அது போல பல மணி நேரம் சமூகவலைதளங்களில் செலவிடும் பதின்ம பருவத்தினா் வாழ்கை மேம்படுத்தக் கூடிய, வாழ்வியல் பயன்தரத்தக் செய்திகளை, கருத்துகளை, நிகழ்வுகளைத் தக்க முறையில்பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நன்றி: தினமணி (23 – 12 – 2024)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்