TNPSC Thervupettagam

சமையல் எண்ணெய் உற்பத்தியில் இந்தியா மீண்டும் தன்னிறைவு பெறுமா?

October 21 , 2024 35 days 86 0

சமையல் எண்ணெய் உற்பத்தியில் இந்தியா மீண்டும் தன்னிறைவு பெறுமா?

  • கடந்த 1990 முதல் 1994 வரையிலான காலகட்டத்தில், எண்ணெய் வித்து பயிர்களின் சாகுபடி மற்றும் உற்பத்தியில் நம் இந்திய விவசாயிகள் கொடி கட்டிப் பறந்தனர். மேலும் சுதந்திரத்துக்கு முன்பும் இந்தியா சமையல் எண்ணெயை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்ததுடன், உற்பத்தியில் தன்னிறைவும் அடைந்திருந்தது. ஆனால் தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.
  • 70% அளவுக்கு சமையல் எண்ணெயை பிறநாடுகளில் இருந்து நாம் இறக்குமதி செய்து வருகிறோம். அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் அமெரிக்காவில் இருந்து சோயா எண்ணெயும்; உக்ரைன், ரஷ்யா, ருமேனியாவில் இருந்து சூரியகாந்தி எண்ணெயும்; இந்தோனேசியா, மலேசியாவில் இருந்து பாமாயில் எண்ணெயும் இறக்குமதி செய்யப்படுகிறது. அதனால் நீங்கள் சாப்பிடும் தள்ளுவண்டி கடைமுதல் பிஸ்கட் பிராண்டு வரை பயன்படுத்தப்படும் எண்ணெயில் 70% இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும்.
  • சமையல் எண்ணெய் துறையில் தன்னிறைவு அடைந்திருந்த இந்தியா, இப்போது இறக்குமதியை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டதற்கான காரணங்களை பார்ப்போம். இந்தியா சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டு முதல் 1970 வரை 95% அளவுக்கு சமையல் எண்ணெய் தேவையில் தன்னிறைவு அடைந்து இருந்தோம்.
  • காலநிலைக்கும் மக்களின் கலாச்சார தேர்வுக்கும் உகந்த வகையில் வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் கடுகு எண்ணெயும், தென் இந்தியாவில் தேங்காய் எண்ணெயும், மேற்கு இந்தியாவில் வேர்க்கடலை அல்லது பருத்தி விதை எண்ணெயும், ராஜஸ்தான் மாநிலத்தில் எள்ளு எண்ணெயும் உற்பத்தியாகின. இவை நாடு முழுவதும் நாம் சமையல் எண்ணெயில் தன்னிறைவு அடைவதற்கு காரணமாக இருந்தன.
  • பின்னர் 1971-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் மற்றும் அதனைத் தொடர்ந்து 1972-ம் ஆண்டு நிலவிய வறட்சியால் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் போன்றவற்றால் பால், நெய் மற்றும் எண்ணெய் ஆகியவற்றின் கையிருப்பு பெருமளவு குறைந்தது. இதனால் அப்போது நெய்க்கு மாற்றாக வனஸ்பதி ஆரோக்கியமானது என விளம்பரப்படுத்தப்பட்டது.
  • வனஸ்பதி தயாரிக்க தேவையான மூலப்பொருட்களில் ஒன்றான சமையல் எண்ணெயின் தேவை அதிகரித்ததால் அதன் பற்றாக்குறை மேலும் அதிகமானது. அதனால் வனஸ்பதி தயாரிக்க வேர்க்கடலை மற்றும் கடுகு எண்ணெய் வித்துகளை பயன்படுத்துவதில் இருந்து விலக்கு தரப்பட்டு அதற்கு மாற்றாக அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தின் பொருட்டு பாமாயில் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது.
  • இதனால் உள்நாட்டில் உற்பத்தியாகும் சமையல் எண்ணெயின் வரவு குறைய ஆரம்பித்ததுடன் 1977-ல் சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு அப்போதைய அரசு அனுமதி வழங்கியது. அதனால் 1960 மற்றும் 1970-களில் 95 சதவீத தேவையை உள்நாட்டு சமையல் எண்ணெய்மட்டுமே பூர்த்தி செய்து வந்த நிலையில், 1977-80-களில் அது 70 சதவீதம் ஆக குறைந்தது.

‘அமுல்' சமையல் எண்ணெய்:

  • இதனை உணர்ந்த அப்போதைய நிதியமைச்சர் ஹெச்.எம்.படேல், வர்கீஸ் குரியனைஅழைத்து பால் உற்பத்தியை அதிகரிக்க கூட்டுறவு நிறுவனம் (அமுல்) நிறுவியதை போலவே சமையல் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவும் வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் அவரது தலைமையில் எண்ணெய் வித்து பயிர் உற்பத்தியை பெருக்கி, தகுந்த சீரான விலை நிர்ணயம் செய்து, போதிய அளவிலான சந்தை வசதியை உண்டாக்கி ஆரம்பத்தில் 15 சதவீதம் அளவுக்கு உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
  • அதற்கு ‘ஆபரேஷன் கோல்டன் ப்ளோ' என்ற திட்டம் தயாரிக்கப்பட்டு, அமுல் நிறுவனத்தின் கீழ் 1988-ம் ஆண்டு முதல் ‘தாரா’ என்றபெயரில் சமையல் எண்ணெய் விநியோகம் செய்யப்பட்டது. சந்தையில் தாரா சமையல் எண்ணெயின் விலை குறைவாக இருந்ததுடன், சுத்திகரிக்கப்பட்ட கடலை, கடுகு மற்றும் பருத்திவிதை எண்ணெய் எனப் பலவும் அறிமுகப்படுத்திய காரணங்களால் மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.
  • அமுல் எனும் கட்டமைக்கப்பட்ட நிறுவனத்தின் கீழ் தாராவின் சந்தை மற்றும் விற்பனை 1991-92-களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. அதற்கு ஏற்றார்போல் 1986-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட எண்ணெய் வித்து தொழில்நுட்ப திட்டமானது விவசாயிகளிடையே எண்ணெய் வித்து பயிரின் சாகுபடியையும், உற்பத்தியையும் அதிகப்படுத்தி இருந்தது. இதனால் 1990-91-களில் உள்நாட்டு தேவையில் 98% இந்திய சமையல் எண்ணெய் உற்பத்தியே பூர்த்தி செய்தது.

தாராளமயமாக்கல் கொள்கை:

  • 1994-வரை களத்தில் இறங்கி ஆடிய நாம், உலக வர்த்தக மையத்துடன் தாராளமயமாக்கல் ஒப்பந்தத்தில் அப்போதைய அரசு கையெழுத்திட, சமையல் எண்ணெயை பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துகொள்ள நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு 65% இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. அப்போதைய நிலையில் உள்நாட்டில் உற்பத்தி செய்வதைக் காட்டிலும் பிற நாடுகளில் இருந்து சமையல் எண்ணெய் இறக்குமதி செய்வது லாபமாக இருந்த காரணத்தால் உள்நாட்டில் உற்பத்தி குறைய ஆரம்பித்து, 1998-களில் மீண்டும் 30% அளவுக்கு இறக்குமதியை நம்பியிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
  • அதற்கடுத்து வந்த அரசு சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரியை 15 % அளவுக்கு குறைத்தது. அதற்கு ஏற்றார்போல் அதற்கடுத்து ஏற்பட்ட கடுகு எண்ணெயின் கலப்படம் காரணமாக டெல்லியில் அதனை உட்கொண்ட 60 பேர் உயிரிழந்ததுடன், 3,000-க்கும்மேற்பட்டோருக்கு உடல் உபாதையும் ஏற்பட்டது. இது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த அச்சம் காரணமாக மக்களிடையே சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் பயன்படுத்தும் பழக்கம் அதிகமானது..
  • இந்நிலையில், அப்போதைய வாஜ்பாய் அரசு உள்நாட்டு சமையல் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 10 லட்சம் டன் சோயாபீன் விதைகளை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்தது. இதன்மூலம் உள்நாட்டு எண்ணெய் வித்து பயிர்களின் விலை குறைய ஆரம்பித்ததுடன் அதன் பயிர் சாகுபடி பரப்பளவும் பெருமளவு குறைந்தது.
  • உலக வர்த்தக மையத்துடனான ஒப்பந்தம் மற்றும் கலப்பட புகார் காரணமாக 15 ஆண்டுகளுக்கு மேல் கட்டிக்காக்கப்பட்ட ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் கூட்டுறவு சந்தையும் நிலைகுலைந்து போனது. அமுல் நிறுவனம் 2004-ம் ஆண்டு சமையல் எண்ணெய் வர்த்தகத்திலிருந்து வெளியேறியது.
  • இதனிடையே, கடந்த 2020-ம் ஆண்டு அமுல் நிறுவனம் ஜன்மய் என்ற பெயரில் மீண்டும் சமையல் எண்ணெயை குஜராத்தில் அறிமுகம் செய்துள்ளது. பருத்தி விதை, கடுகு, வேர்க்கடலை உட்பட மொத்தம் 6 வகையான எண்ணெய்களை விற்பனை செய்து வருகிறது. இவை படிப்படியாக நாடு முழுவதும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தற்போதைய நிலையில் பெருமளவில் குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களே வெளிநாட்டில் இருந்து சமையல் எண்ணெயை இறக்குமதி செய்து நம் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன.

சுங்க வரி உயர்வு:

  • சமையல் எண்ணெய் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வைத்த கோரிக்கை காரணமாக சோயாபீன், சூரிய காந்தி உள்ளிட்ட சமையல் எண்ணெய் மீதான சுங்க வரி தற்போது 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக கச்சா பாமாயில், சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி 5.5-லிருந்து 27.5 சதவீதமாகவும்; சுத்திகரிக்கப்பட்ட மேற்கூறிய எண்ணெய் வகைகளுக்கான இறக்குமதி வரி 13.75-லிருந்து 33.75 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்ட நிலையில் சமையல் எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது. எனினும் குறைந்த வரியில் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெயின் இருப்பு தீரும்வரை விலையை உயர்த்தக்கூடாது என்று மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் எண்ணெய் சங்கங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க...

  • மேலும் இந்த வரி உயர்வு பற்றி குறிப்பிட்டு பேசிய மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் சிவராஜ் சவுகான், "இந்த நடவடிக்கையின் மூலம், இறக்குமதி குறைந்து நம் விவசாயிகள் சாகுபடி செய்யும் அனைத்து விதமான எண்ணெய் வித்து பயிர்களுக்கும் தகுந்த குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய்வதுடன் அதன் சாகுபடி பரப்பளவும் அதிகரிக்கும்" என்று கூறியுள்ளார்.
  • எனவே, அரசின் இந்த நடவடிக்கை தற்போதைய நிலையில் சமையல் எண்ணெயின் விலை ஏற்றத்துக்கு வழிவகுத்தாலும் மாதந்தோறும் 15 லட்சம் டன் வரை இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயின் அளவை குறைக்க முற்படுவதுடன் எண்ணெய் வித்து பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சிறந்த விடியலை ஏற்படுத்தும். அத்தோடு அரசும், எண்ணெய் வித்து பயிர் உற்பத்தியை பெருக்கும் வகையில் கொள்கைகளை வகுக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (21 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்