TNPSC Thervupettagam

சமையல் எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்துமா அரசு

June 2 , 2021 1334 days 552 0
  • கடந்த ஓராண்டில் சூரியகாந்தி எண்ணெய், பாமாயில், வனஸ்பதி, கடலை எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய்களின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டிருப்பது சாமானிய மக்களைக் கவலைக்குள் ஆழ்த்திவருகிறது.
  • கடந்த ஆண்டு மே மாத விலையுடன் ஒப்பிடும்போது சூரியகாந்தி எண்ணெயும் பாமாயிலும் 50%-க்கு மேல் விலை உயர்ந்துள்ளன.
  • சமையல் எண்ணெய்களின் மாதாந்திர சராசரி விற்பனை விலையானது கடந்த 11 ஆண்டுகளில் கண்டிராத மிகப் பெரும் விலை உயர்வைச் சந்தித்துள்ளது.
  • உணவு தானியங்கள், காய்கறிகள் மட்டுமல்லாது சமையல் எண்ணெய்களின் பயன்பாடும் இந்தியர்களின் தினசரி உணவுப் பழக்கத்தில் முதன்மையானவை.
  • கரோனா பெருந்தொற்றின் காரணமாக ஏற்கெனவே பெரும்பாலானவர்களின் குடும்ப வருமானம் குறைந்திருக்கும் நிலையில், சமையல் எண்ணெய் விலை உயர்வு அவர்களது அன்றாட உணவுச் செலவை அதிகப்படுத்தியிருக்கிறது.
  • இந்தியாவில் அனைத்து வகை சமையல் எண்ணெய்களின் மொத்த உள்நாட்டுத் தேவை ஆண்டொன்றுக்குச் சுமார் 240 லட்சம் டன்கள் என்ற நிலையில், அவற்றில் பாதியளவுகூட இங்கு உற்பத்தியாகவில்லை.
  • கூடுதல் தேவையைப் பூர்த்திசெய்திட வெளிநாடுகளிலிருந்தே சமையல் எண்ணெய் இறக்குமதியாகிறது. இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து பாமாயிலும் உக்ரைன், அர்ஜெண்டினாவிலிருந்து சூரியகாந்தி எண்ணெயும் பெருமளவில் இறக்குமதி செய்யப் படுகின்றன.
  • 2019-20-ல் மட்டும் 133.5 லட்சம் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டுத் தேவையில் இது ஏறக்குறைய 56%. இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.61,560 கோடி.
  • தேவையில் பாதிக்கும் மேலாக வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதும், கடந்த சில மாதங்களில் சர்வதேசச் சந்தையில் சமையல் எண்ணெய் விலை உயர்ந்திருப்பதும் சில்லறை விலையிலும் எதிரொலிக்கிறது.
  • தாவர எண்ணெய்களிலிருந்து உயிரி எரிபொருட்கள் தயாரிக்கப்படுவதும் சமையல் எண்ணெய்களின் விலை உயர்வுக்கு ஒரு முக்கியக் காரணியாகியிருக்கிறது.
  • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் சமீபத்திய அறிக்கைகளின்படி, அர்ஜெண்டினா உள்ளிட்ட பல நாடுகளில் சமையல் எண்ணெய் உற்பத்தி எதிர்பார்க்கப்படுவதைக் காட்டிலும் குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது. இது இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் சமையல் எண்ணெய் அளவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதிக்கு விதிக்கப்படும் கூடுதல் சுங்க வரிகளைக் குறைத்தாலும், அதனால் சர்வதேச விலை உயருமே தவிர, சில்லறை விலை குறைய வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
  • எனவே, குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு அனைத்து வகை சமையல் எண்ணெய்களும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
  • அது பெயரளவுக்கானதாக இல்லாமல் வழங்கப்படும் சமையல் எண்ணெயின் அளவும் உயர்த்தப்பட வேண்டும்.
  • அதே நேரத்தில், உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவை எட்டியதுபோலவே, தாவர எண்ணெய்களின் உற்பத்தியிலும் சுயசார்பு நிலையை உறுதிப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்து உடனடியாகச் செயல்படுத்திட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (02 - 06 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்