TNPSC Thervupettagam

சயனைடு மரணங்கள்

June 20 , 2023 573 days 352 0
  • மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், மதுவில் சயனைடு கலந்து கொல்லப் பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த மாதம் தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுக் கூடத்தில் மது அருந்திய இருவர் இறந்தது சர்ச்சையானதை அடுத்து, அவர்கள் உட்கொண்ட மதுவில் சயனைடு கலந்திருந்ததாகக் காவல் துறையினர் தெரிவித்திருந்தனர்.
  • மனிதர்களைத் தாக்கப் பயன்படுத்தப்படும் அமிலத்தைப் போலவே சயனைடு பயன்பாட்டையும் தீவிரக் கண்காணிப்புக்கு உள்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவசரத்தையும் இவ்விரு நிகழ்வுகளும் உணர்த்துகின்றன.
  • மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர் பிரதான சாலையில் இரும்புப் பட்டறை வைத்திருந்த பழனிகுருநாதனும் அவரிடம் பணியாற்றிய பூராசாமியும் திடீரென உயிரிழந்தனர். டாஸ்மாக்கில் வாங்கிய தரமற்ற மதுவை அருந்தியதால்தான் அவர்கள் உயிரிழந்திருப்பதாக உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு கலந்திருந்தது தடயவியல் பரிசோதனை மூலம் உறுதிசெய்யப்பட்டது.
  • இதையடுத்து, காவல் துறை விசாரணையில் பழனிகுருநாதனின் மாற்றாந்தாய் மகன்கள் இருவரும் சொத்துத் தகராறு காரணமாக அவரைக் கொல்வதற்காக, பொற்கொல்லரிடமிருந்து சயனைடை வாங்கி அதை மதுவில் கலந்து கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
  • தஞ்சாவூர் நிகழ்விலும் கொலையாளிகள் டாஸ்மாக் மதுக் கூடத்துக்கு அருகில் இருந்த பொற் கொல்லரிடமிருந்தே சயனைடு வாங்கியிருக்கக்கூடும் என்று காவல் துறையினர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • மனிதர்களின் உயிரைப் பறிக்கக்கூடிய ஆபத்துமிக்க வேதிப்பொருளான சயனைடு, தங்க நகைத் தயாரிப்பு உள்ளிட்ட சில முக்கியத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. மருந்துகள்-அழகுசாதனப் பொருள்கள் சட்டம் 1940, சயனைடு வைத்திருப்பது, விற்பனை செய்வது ஆகியவற்றுக்கான கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
  • இச்சட்டத்தின்படி சயனைடு போன்ற ஆபத்தான வேதிப்பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அவற்றை வாங்குவோர் யார், என்ன நோக்கத்துக்காக வாங்குகிறார்கள் ஆகிய தகவல்களைப் பதிவு செய்துவைக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் இதைச் செய்வதில்லை என்று காவல் துறையினர் கூறுகின்றனர்.
  • தங்க நகை விற்பனையில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் சயனைடை வாங்கிப் பயன்படுத்துவதற்கான உரிமத்தைப் பெற்றிருக்கின்றன. அந்நிறுவனங்கள் மூலமாக நகை தயாரிப்பில் ஈடுபடும் பொற்கொல்லர்களுக்கு சயனைடு வழங்கப்படுகிறது.
  • இப்படித் தொழில் காரணங்களுக்காகச் சயனைடை வைத்திருக்கவும் பயன்படுத்தவும் அனுமதிக்கப்படும் பிரிவினர், அதை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பது முழுமையாகக் கண்காணிக்கப் படுவதில்லை. 2021இல் கோயம்புத்தூரில் 62 வயது முதியவர் ஒருவர் மதுவில் சயனைடு கலந்துகொடுத்து மூன்று பேரைக் கொன்றிருக்கிறார்.
  • 2019இல் சென்னையில் ஒருவர் தனது காதலிக்குக் குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்துக் கொன்றார். அவர் மும்பையைச் சேர்ந்த மருந்துக் கடைக்காரரிடமிருந்து சயனைடை வாங்கியது பின்னர் தெரியவந்தது.
  • இப்படியாக சயனைடின் மூலம் கொலைகள் அவ்வப்போது அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. சிலர் சயனைடை வைத்து தற்கொலையும் செய்துகொள்கிறார்கள்.
  • பெண்கள் மீது அமிலம் வீசி முகத்தைச் சிதைக்கும் கொடூரச் செயல்கள் அதிகரித்ததன் காரணமாக, 2013இல் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மத்திய அரசு, அமிலத்தை ‘விஷம்’ என்று கருதி, அதன் விற்பனை மீதான கட்டுப்பாடுகளையும் கண்காணிப்பையும் வலுப் படுத்துவதற்கான சட்டத் திருத்தத்தை மேற்கொண்டது.
  • அதேபோல், சயனைடு விற்பனையையும் கண்காணித்து ஒழுங்குபடுத்துவதற்கான ஏற்பாடுகள் இருப்பதை உறுதிசெய்வது அரசாங்கத்தின் கடமை. அதற்கேற்ப, இருக்கும் சட்டங்களை வலுப்படுத்துவது அல்லது புதிய சட்டங்களை உருவாக்குவது காலத்தின் கட்டாயம்.

நன்றி: தி இந்து (20  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்