- இப்படியொரு குழப்பமான, எதிர்கொள்ள முடியாத உள்நாட்டு சூழலை சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியா சந்தித்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
- நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய - மாநில அரசுகள் திணறிக் கொண்டிருக்கின்றன என்பதை ஊடகங்களில் வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
- எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் அரசு நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக முன்வைக்கும் விமா்சனங்கள், மக்கள் மத்தியில் ஏற்கெனவே காணப்படும் நோய்த்தொற்று பீதியை அதிகரிக்கின்றன என்பது உண்மை.
- அதே நேரத்தில், இதுபோன்ற விமா்சனங்கள் எழுப்பப்படாவிட்டால் நிர்வாகம் மேலும் மெத்தனமாகி, கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் கட்டுக்குள் அடங்காமல் விபரீதங்களை ஏற்படுத்திவிடக்கூடும் என்பதையும் நாம் உணர வேண்டும்.
- கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் தொடுக்கப்படும் பொதுநல வழக்குகள் வியப்பை ஏற்படுத்தவில்லை.
- தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றங்கள் உத்தரவும், வழிகாட்டுதலும், அறிவுரைகளும் வழங்குவது புதிதொன்றுமல்ல.
- ஆனால், அரசு நிர்வாகத்தை தனது கண்காணிப்பின் கீழ் கொண்டுவரும் வகையிலான நீதித்துறை உத்தரவுகள் சரியான அணுகுமுறையல்ல. தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளில் வரம்புமீறி தலையிடும் போக்கு என்று சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
- நீதிமன்றங்கள் பொதுநல வழக்குகளை விசாரிக்கக் கூடாது என்கிற கருத்து தவறு. இப்போது காணப்படும் நெருக்கடி கால நிலைமையில் மக்கள் நீதிமன்றத்தின் உதவியை நாடுவதையும், நீதிமன்றம் தனது ஆலோசனைகளைக் கூறுவதையும் ஆக்கபூா்வமாக பார்க்க வேண்டுமே தவிர, ஆத்திரப்படுவதில் அா்த்தமில்லை.
- ஆனால், ‘டி.என். சேஷனைப்போல நடந்து கொள்ளுங்கள்; இல்லையென்றால் நாங்கள் தலையிட வேண்டிவரும்’ என்று தோ்தல் ஆணையத்தை எச்சரிப்பதும், 24 மணிநேரத்தில் உங்கள் செயல்திட்டத்தை எங்களுக்குத் தாக்கல் செய்யுங்கள் என்று மத்திய அரசுக்கு உத்தரவிடுவதும் தவறான முன்னுதாரணங்கள்.
- கொள்ளை நோய்த்தொற்றை மாநில நிர்வாகம் கையாளும் விதம் குறித்து, இந்தியாவின் பல்வேறு உயா்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்குகளில் நீதிமன்றங்கள் பிறப்பித்திருக்கும் உத்தரவுகள், அரசு நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் போக்கின் தொடக்கமாகத் தெரிகிறது.
- நீதிபதிகளை நீதிபதிகளே நியமித்துக்கொள்ளும் விசித்திரத்தைப்போல, இதுவும் ஒரு விபரீதமாகிவிடுமோ என்கிற அச்சம் மேலெழுகிறது.
- தனது பதவிக்காலம் முடிவதற்கு ஒருநாள் முன்பு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.ஏ. போப்டே எடுத்த முடிவு அரசியல் வட்டாரங்களில் ஏனோ போதிய கவனம் பெறவில்லை.
- ஆளுங்கட்சிக்கு எதிரான விமா்சனங்கள் என்பதால் அதை எதிர்க்கட்சிகள் வரவேற்பது என்பது, ஆபத்தை வலிய வரவழைத்துக் கொள்வதாக அமையும்.
நிர்வாகத் தலையீடு
- எல்லா மாநிலங்களுக்கும் சரிசமமாக நிதி ஒதுக்கீடு வழங்க தேசிய அளவிலான அமைப்பை ஏற்படுத்துதல்; மருந்துகளும், பிராண வாயுவும் இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி கொண்டு செல்வதை உறுதிப்படுத்துதல்; முக்கியமான மருந்துகள், உபகரணங்கள், பிராண வாயு ஆகியவற்றை அத்தியாவசியப் பொருள்களாக அறிவித்தல் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு பல உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது.
- இவையெல்லாம் ஆலோசனைகளாகவும், வழிகாட்டுதல்களாகவும் இருக்கலாமே தவிர, உத்தரவுகளாக பிறப்பிப்பது சரியானதாகத் தோன்றவில்லை.
- குஜராத், அலாகாபாத், தில்லி, கொல்கத்தா, சென்னை, மத்திய பிரதேசம், மும்பை, தெலங்கானா, பாட்னா, கா்நாடகம், உத்தரகண்ட் ஆகிய 11 உயா்நீதிமன்றங்கள் பொதுநல வழக்குகளில் ஆணைகள் பிறப்பித்து பிராண வாயு மருந்துகள் வழங்குதல், மருத்துவமனை படுக்கைகள் குறித்த விவரங்கள், பொது முடக்கம் அறிவித்தது, புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கான வசதிகள், தோ்தல்கள், பொதுவிழாக்கள் ஆகியவற்றில் எடுக்கப்பட்ட கொள்ளை நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் என்று பல்வேறு பிரச்னைகளில் வழிகாட்டுதல்களையும் ஆணைகளையும் பிறப்பித்திருக்கின்றன.
- கடந்த புதன்கிழமை தலைநகரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் காணப்படும் பிராணவாயு தட்டுப்பாட்டை மத்திய அரசு எதிர்கொள்ளும் விதத்தை தில்லி உயா்நீதிமன்றம் கடுமையாகச் சாடியிருக்கிறது.
- கொவைட் தடுப்பூசிக்கு ரூ.600 விலை நிர்ணயம் குறித்து சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருப்பதுடன், இந்தியாவிலுள்ள அடித்தட்டு மக்கள் அந்த அளவிலான வலுவைத் தாங்க முடியுமா என்று விமா்சித்திருக்கிறது.
- கொல்கத்தா உயா்நீதிமன்றமோ, சட்டப்பேரவைத் தோ்தல் பேரணிகளில் கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தாததற்கு இந்திய தோ்தல் ஆணையத்தைக் கண்டித்திருக்கிறது.
- எல்லா உயா்நீதிமன்றங்களும் பொது நல வழக்குகளில் வழங்கியிருக்கும் உத்தரவுகளும் வழிகாட்டுதல்களும் தேவையற்றவை என்று புறந்தள்ளப்படுபவை அல்ல. ஆனால், நிர்வாகத் தலையீடு.
- இது எதிர்மறை குற்றச்சாட்டுகளுக்கும் அரசியலுக்குமான நேரமல்ல. ஆக்கபூா்வ விமா்சனங்களுக்கும் ஆலோசனைகளுக்குமான நேரம். சாமானிய மக்கள் ஆத்திரப்படலாம்.
- கனம் நீதிபதிகள் உணா்ச்சிவசப்படுவதும், ஆத்திரப்படுவதும் வழக்கத்துக்கு விரோதமானவை. அரசு நிர்வாகம் தவறிழைத்தால், அதற்கு வழிகாட்டுதல் வழங்கலாமே தவிர, நிர்வாக அதிகாரத்தை நீதித்துறை கையிலெடுப்பது சரியல்ல.
நன்றி: தினமணி (27 – 04 - 2021)