TNPSC Thervupettagam

சர்வதேச அமைதி: நிலைநாட்டும் வழி

April 16 , 2024 270 days 211 0
  • இஸ்ரேல் மீது ஈரான் ஏப்ரல் 14 அன்று நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல், மத்தியக் கிழக்குப் பிராந்தியத்தில் ஒரு புதிய போருக்கான தொடக்கமோ என்கிற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் உள்ள தங்கள் துணைத் தூதரகத்தில், ஏப்ரல் 1 அன்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேலைக் குற்றம்சாட்டிவந்த ஈரான், அதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
  • விஷயம் இப்போதைக்கு முடிவுக்கு வந்தாலும், ‘இஸ்ரேல் திருப்பித் தாக்கினால், பெரும் பலத்துடன் திருப்பியடிப்போம்’ என அந்நாடு சூளுரைத்திருக்கிறது. இஸ்ரேல் நிச்சயம் திருப்பித் தாக்கும் என்பதை ஈரான் அறிந்திருக்கிறது என்றாலும், நிழல் யுத்தத்திலிருந்து வெளியே வந்து நேரடியான போருக்கு அந்நாடு தயாராகிவிட்டது என்பதையே இத்தாக்குதல் உணர்த்துகிறது.
  • காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஆறு மாதங்களைத் தாண்டி தொடரும் நிலையில், வரலாற்றில் முதல் முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது ஈரான்.
  • பாலஸ்தீனர்களின் இன அழிப்புக்கு மேற்குலகின் நிபந்தனையற்ற ஆதரவு இஸ்ரேலுக்கு எரிபொருளாக அமைகிறது. ஐ.நா. எவ்வளவு முயன்றும் இதுவரை போர்நிறுத்தத்துக்கு இஸ்ரேல் முன்வரவில்லை. காசாவின் 23 லட்சம் மக்கள்தொகையில் 90% பேர் இடப்பெயர்வுக்கு உள்ளாகியிருக்கின்றனர்; கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 33,000 ஐக் கடந்துவிட்டது.
  • சர்வதேச அளவில் எழுந்திருக்கும் எதிர்ப்புகளுக்கு இடையிலும் இஸ்ரேலின் தாக்குதல் இலக்கு காசாவைத் தாண்டி சிரியா, லெபனான் என நீண்டுகொண்டே செல்கிறது. இஸ்ரேல் மீதான ஹமாஸின் அக்டோபர் 7, 2023 தாக்குதலைத் தொடர்ந்து மேற்கு ஆசியா - மத்தியக் கிழக்குப் பகுதியில் எழுந்த புவி அரசியல் நெருக்கடி, பிராந்தியப் போராக மாறிவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கையாக அமெரிக்கா எல்லா விதமான ஆதரவையும் இஸ்ரேலுக்கு வழங்கிவந்தது. எனினும், ஜெனீவா உடன்படிக்கை, வியன்னா உடன்படிக்கை உள்ளிட்ட சர்வதேச உடன்படிக்கைகளை மதிக்காமல் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்கள், நிலைமையை மேலும் சிக்கலாக்கியிருக்கின்றன.
  • ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட போர்நிறுத்தத் தீர்மானங்களை மேற்குலகின் உதவியுடன் முறியடித்துவந்த இஸ்ரேல், ஈரானின் தாக்குதலைத் தொடர்ந்து ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இது இஸ்ரேலின் இரட்டை நிலைப்பாட்டை மட்டுமல்லாமல், ஈரானின் தாக்கு தலைக் கண்டித்திருக்கும் மேற்குலகின் இரட்டை நிலைப்பாட்டையும் மீண்டும் ஒரு முறை அம்பலப்படுத்தியிருக்கிறது.
  • இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவின் பிடிவாத அணுகுமுறை, அமெரிக்காவை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது. ஒரு பெரும் சண்டைக்கு அமெரிக்காவை இழுத்துவிட நெதன்யாஹூ முயற்சிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கவலை தெரிவித்துள்ளார்.
  • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில் உரையாற்றிய பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டர்ஸ், “அமைதியை நிலைநாட்ட வேண்டிய கூட்டுப் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. அது பிராந்திய அமைதியாக இருக்கட்டும் அல்லது சர்வதேச அமைதி, பாதுகாப்பாக இருக்கட்டும். ஆனால் அந்தக் கூட்டுப் பொறுப்பு இப்போது குறைத்து மதிப்பிடப்படுகிறது. இந்தத் தருணத்தில் மத்தியக் கிழக்குப் பிராந்தியமோ இந்த உலகமோ இன்னொரு போரைத் தாங்காது” எனப் பேசியிருக்கிறார்.
  • இஸ்ரேலின் பிடிவாதம் முடிவுக்கு வராமல் மத்தியக் கிழக்கில் அமைதி திரும்புதல் சாத்தியமில்லை; மத்தியக் கிழக்கை நோக்கிய மேற்குலகின் அயலுறவில் மாற்றம் ஏற்படாமல், சர்வதேச அமைதியும் சாத்தியமில்லை. இந்த நிலைப்பாடுகளில் மாற்றம் வந்தால்தான் குட்டர்ஸ் வலியுறுத்தும் கூட்டுப் பொறுப்பு அர்த்தம் பெறும்!

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்